Saturday, August 28, 2021

#நூறு_நாட்கள்_வேலைத்_திட்டம்

 #நூறு_நாட்கள்_வேலைத்_திட்டம்

———————————————————
கடந்த25.08.2021 ல இந்து தமிழ் திசையின் தலையங்கத்தில் சொல்லப்பட்டது.
நூறு நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், வெளிப்படைத் தன்மையை நடைமுறைப்படுத்திய முன்னோடி மாநிலம், பெண்கள் அதிக அளவில் இந்தத் திட்டத்தில் பங்கேற்ற மாநிலம் என்ற பெருமைகளைப் பெற்றிருந்த தமிழ்நாடு, இதே திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த முறைகேடுகளில் முதலிடம் பிடித்திருக்கிறது என்பது தலைக்குனிவு. மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையின் கீழ் சமூகத் தணிக்கைக் குழுக்களால் நாடு முழுவதும் 2.65 லட்சம் கிராமங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறையேனும் நடத்தப்பட்ட தணிக்கைகளிலிருந்து குறைந்தபட்சம் ரூ.935 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. முறைகேட்டின் உண்மையான அளவு இன்னும் மூன்று அல்லது நான்கு மடங்காக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
2017-18 முதல் 2020-21 வரையிலான நான்கு நிதியாண்டுகளைப் பற்றிய விவரங்களிலிருந்தே இத்திட்டத்தில் நடந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. லஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயர்களில் பணம் செலுத்துதல், அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்குதல் ஆகியவற்றின் வழியாகவே பெரும் பகுதி முறைகேடுகள் நடந்துள்ளன. முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்ட தொகையில் ரூ.12.5 கோடி, அதாவது 1.34% மட்டுமே இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் நடத்தப்பட்ட 37,527 தணிக்கை அறிக்கைகளிலிருந்து ரூ.245 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது. மீட்கப்பட்ட தொகை ரூ.2.07 கோடி. முறைகேடு செய்யப்பட்ட தொகையில் இது வெறும் 0.85% மட்டுமே. இரண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ஒருவர் மீதுகூட முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.
ஆந்திரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட 180 ஊழியர்கள் பணிநீக்கமும் 551 ஊழியர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தொகை ரூ.6,749 மட்டுமே. சமூகத் தணிக்கைக் குழுக்களின் அறிக்கைகளிலிருந்தே இந்த விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்பது அதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.
நூறு நாட்கள் வேலைத் திட்டம்தான் கரோனா காலகட்டத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் பாதுகாத்து, கோடிக்கணக்கானவர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து காப்பாற்றியுள்ளது. அதன் காரணமாகத்தான், மத்திய அரசு 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீட்டை 2021-22ல் ரூ.73,000 கோடியாக உயர்த்தியுள்ளது. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்படும்பட்சத்தில், உடனடியாக வழக்கு பதிவுசெய்வதும் அத்தொகையை மீட்பதற்கான நடவடிக்கைகளைச் செய்வதுமே முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
இத்திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஊதியம் நேரடியாக அளிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த முறையையும் தற்போது முறைகேட்டுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டுமெனில் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அலுவலர்களின் முழுமையான செல்வாக்கிலிருந்து இத்திட்டத்தை விடுவித்து சமூகத் தணிக்கையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
••••
இது குறித்து பல முறை பதிவுச்செய்துள்ளேன். தினமணியிலும் எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. தமிழ் இந்து நாளேட்டில் தலையங்கமாக வந்துள்ளது. வெறும் மண் அள்ளிப்போட்டு பயனற்ற திட்டமாகத்தான் தொடர்கின்றது. இதனால் விவசாயமும் அழிகின்றது. அரசு தருகின்ற இந்த நிதியால் எந்த தொலைநோக்கு பயன்பாடும் இல்லை என்று தெளிவாக சொல்லமுடியும்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் என அறிவிக்கப்பட்டது ஒருபுறம் மகிழ்ச்சிதான், அறிவிக்கப்பட்ட நோக்கம் வெற்றிபெறுகிறதா? என்பதை களப்பணிச்செய்து ஆய்வு நடத்தி முறைப்படுத்த வேண்டியது அவசியம் அவசரமானது. இதனால் கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. மாகாத்மா காந்தி பெயரில் உருவாக்கப்பட்ட இந்த 100 நாள் வேலை திட்டம் கடந்த காலங்களில் எப்படி நடந்தது என்பதை கிராமப்புறங்களுக்குச் சென்று நேர்மையாக கவனித்திருந்தால் வேதனையான விடயங்கள் தான் வெளிப்படுத்திருக்கும். 100 நாள் வேலையில், வேலைக்கு வருபவர்களும் ஏதோ வந்தோம், சென்றோம் என்று தான் இருந்தனர். அந்த ஊதியத்திலும் இடைத்தரகர்களுக்கு 20, 30 ரூபாய் சென்றுவிடும். விழலுக்கு இறைத்த நீராக இந்த பணி இருந்தது. இந்த திட்டத்தின் நோக்கங்களும் அதனால் கிடைக்கின்ற பயன்பாடுகளும் என்ன என்பதை ஆய்வு நடத்த வேண்டும். அதை சீர்படுத்தக்கூடிய வகையில் கண்காணிப்பு அமைப்பும் வேண்டும். கிராமப்புறங்களில் விவசாய வேலைகளும் பாதிக்கபடக்கூடாது. இதை 75-வது விடுதலை நாளில் நாடுமுழுவதும் அரசு நிர்வாகம் இது குறித்துச் சிந்தித்து பரிசீலனை செய்யவே இந்த பதிவு. குறை சொல்ல அல்ல.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-8-2021.

No comments:

Post a Comment

2023-2024