Thursday, August 19, 2021

#நளபாகம்_தி_ஜானகிராமன்

 #நளபாகம்_தி_ஜானகிராமன்

——————————————————-


1. ‘’அவர் என்னமோ ஆச்சரியம் ஆச்சரியம்கறாரே! எனக்கு எல்லாம் ஆச்சரியமாத்தான் இருக்கு. நாமள்ளாம் எங்கே எங்கேயோ இருக்கோம். எப்படி இப்படி ஒண்ணா சேர்ந்தோம். இப்படியெல்லாம் பேசிண்டிருக்கோம்…. நாமள்ளாம் யாரு? ஏன் இப்படி சேர்ந்துண்டோம். இதெல்லாமும் ஆச்சரியமாத்தான் இருக்கு… உங்களுக்கெல்லாம் பல ஊரு பல மனுஷாள்ளாம் பார்த்துப் பழகிப் போச்சு. எனக்கு இதுவே ஆச்சரியமாத்தான் இருக்கு. நாமள்ளாம் யார், ஏன் இப்பாடி ஒன்றாச் சேர்ந்திருக்கோம் இன்னிக்கி’’.

2. ‘’நாலைந்து நாள் அய்யங்காரோடு சுற்றியதில் இந்த ஊர் ஒரு தனி ரகம் என்று தெரிந்தது. காமேச்வரன் பார்க்காத பம்பாயா, ஸ்ரீநகரா, டில்லியா, கல்கத்தாவா, மதுரையா, அகமதாபாதா, திருவனந்தபுரமா, கோழிக்கூடா, பங்களூரா – ஆனால் அத்தனை ஊர்களிலும் இல்லாத ஒரு கவர்ச்சி இந்த நல்லூருக்கு. ஊருக்கு மிகப் பழைய பெயர் விச்வநாத நாயக்கன் பேட்டையாம். அது எப்படி நல்லூர் ஆக ஆயிற்று என்று புரியவில்லை. அய்யங்காருக்குச் சரித்திரம் தெரியாது’’.
3. ‘’ஹோட்டலில் வேலை செய்த சில நாட்கள் – ரயிலில் வத்ஸனைப் பார்த்து – அவரிடம் படித்தது – பலவித சமையல்களுக்குத் தற்பேத்தி பண்ணிக்கொண்டது – அவர் கண்ணை மூடிய பிறகு சில காலம் சும்மா அலைந்தது – யாத்திரை ஸ்பெஷல்களில் பார்த்த நூற்றுக்கணக்கான முகங்கள் – ரயில் தங்கின ஊர்களில் பார்த்த பல தேசத்து, பல உடை, பல மொழி மனிதர்கள் – பெண்கள் – எல்லாவற்றையும் ஒரு நோட்டம் விட்டுப் பார்த்தான். பல சிரிப்புகள், பல அழகுகள் – பல உடல் வாகுகள்…எல்லாம் சுருக்காகவும் அதேசமயம் சொப்பனத் தேய்வாகவும் நினைவில் வந்தன. எத்தனையோ நடைகள், கண்கள், உருவங்கள், வெகுளிப் பேச்சுகள் – இரு சொல் அலங்காராப் பேச்சுகள் – தொனிப் பேச்சுகள் – அததற்கேற்ப மாறும் கண்கள், கன்னச் சதைகள், முக – கை – தோள் அசைவுகள், நிதானங்கள், அவசரங்கள் – எத்தனை எத்தனையோ – இதுகள் எல்லாம் எந்த ஊரோ, என்ன விசாலமோ – இப்போது என்ன செய்கிறதுகளோ…ஆனால் அப்படி அப்படியே அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் ஞாபகம். இல்லை இப்படீ… எப்போதாவது வாரம், மாசம் என்ற வரும் பத்திரிகைகளில் கதைகள் படித்ததுண்டு. காதல் – காமம் – சிலது நன்றாக – அசட்டுப் பிசட்டென்று – என்னென்னவோ இருக்கும். அவனுக்கு சஞ்சலம், ஏதும் அலைந்ததாக ஞாபகம் இல்லை. என்ன இது! இது என்ன மனித உடம்பா? மனித மனசா! எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லையா?...உபதேசம் பண்ணும் போது வத்ஸன் ஏதோ சொன்னார் – இந்தப் பிரபஞ்சத்திலே சௌந்தர்யத்தின் பராகாஷ்டை. பரம உச்சம் லலிதைதான். அவள் சாயல் தான் மலையிலெ, சமுத்திரத்திலெ, மேகத்திலெ, மழையிலெ, மூணாம் பிறையிலெ, அஷ்டமி சந்திரனிலெ, அருணோதயத்திலெ, உச்சீவெயில்லெ, புலி – சிங்கத்தோட அழகிலெ, நாயோட அழகிலெ – எங்க பார்த்தாலும் வீசறது. ஒரு சாயல்தான். அப்படின்னா லலிதை எப்படியிருப்ப பார்த்துக்கோ. அதைப் பார்த்து அதையே பார்த்துக் கரைஞ்சு போகணும். மத்ததெல்லாம் பார்த்தா உடம்பு கரையும் – ஊன் கரையும் – உள்ளே மூளியாகும், மூக்கு கண்களெல்லாம் பள்ளமாப் போய், கை கால்லாம் குறையறது பாரு – அந்த மாதிரி… - வத்சன் இதைச் சொன்னது ஒரு தடவைதான். முதல் உபதேசத்தின் போது, பிறகு அவர் செய்த தற்பேத்திகள் ஒரு கூடை. ஆனால் முதல் தடவை சொன்ன இதை மட்டும் அவர் மீண்டும் சொல்லவில்லை. அவனுக்கு எல்லா தடவைகளிலும் அது தொக்கி நிற்கிறாற்போல் ஒரு பிரமை’’.
4. ‘’மகாபாரத காலத்துக்கு முன்னாலேயே நடந்திருக்கு இது. ஒரு ரிஷிக்குப் பிள்ளை இல்லேன்னா, இன்னொரு ரிஷியை கூப்பிட்டு சந்ததி உண்டாக்கச் சொல்றது வழக்கமா இருந்திருக்கு. ஒரு ரிஷி தன் சம்சாரம் மலடின்னு தெரிஞ்சிண்டு, இன்னொரு ரிஷியோட சம்சாரம் மூலமா குழந்தையைப் பெத்து, அந்த குழந்தைய எடுத்திண்டு போறதும் நடந்திருக்கு. அந்த மாதிரி ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனோட சம்சாரத்தை யாசகம் கேட்டான் கொஞ்ச நாளைக்கு. அவளுக்கு ஏற்கனவே பிள்ளை இருந்தது. அவளுக்கு சம்மதம் இல்லெ. புருஷன் நிர்ப்பந்தம் பண்ணினான். தர்மம் அறுந்து போகக் கூடாதுங்கறதுக்காக அவன் சந்ததியை விரும்பறான். அதனாலெ உன்னைக் கேட்கிறான். நீ அவனுக்கு ஒரு குழந்தையைப் பெத்துக் கொடுக்கறது பெரிய உபகாரம்னு வற்புறுத்தறான் அவளை. அப்படி ஒரு வழக்கம் இருந்தாலும் அவளுக்குப் பிடிக்கலெ அது. புருஷனோ நிர்ப்பந்தம் பண்றான்’’.
5. ‘’நீர் கூட தான் நளபாகமா என்னென்னமோ பண்ணிப் போட்டிருந்தீர் புதுசு புதுசா – ஒண்ணுகூட சேர்ந்தால், தாளிச்சால், கொஞ்சம் கூட வறுத்தால், குத்திக் கிளறாமல் நாசுக்காகப் புரட்டினால் – அப்படி இப்படின்னு புதுசு புதுசா என்னென்னமோ பண்றீர். புதுசு புதுசா பேர் வைக்கிறீர், புதுசு புதுசா ருசி. ஆனா அது எல்லோருக்கும் பிடிக்கணும்னு என்ன முடை? வத்தல் குழம்பு எல்லாருக்கும் பிடிக்குமா? கோதுமை அல்வா, தேங்காய் சட்னி எல்லாம் நாம விழுந்து விழுந்து சாப்பிடறோம். ஆனா சைனாக்காரன் இந்த ரண்டையும் பார்த்தா முகத்தைச் சிணுக்கிப்பான்னு ஒரு கோலாலம்பூர் ஆசாமி சொன்னார் எங்கிட்ட ஒரு தடவை. அவன் நண்டு, பாம்பு, மீனு எல்லாம் கவுச்ச வாடையைக்கூட ரசிச்சிண்டு சாப்பிடுவானாம்’’.
(காலச்சுவடு பதிப்பகம்)
18-8-2021.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...