———————————————————
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பத்திரிகைத் துறையில் இயங்கிவரும் நண்பர் மணாவை நீண்ட காலமாகவே எனக்குத் தெரியும்.இதுவரை பல நூல்களை எழுதியிருக்கும் மணா அண்மையில் எழுதிய " கலைஞர் என்னும் மனிதர்" என்கிற நூல் தமிழக முதல்வர் அவர்களால் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கலைஞரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருந்தாலும்,இந்த நூல் எந்த விதத்தில் வித்தியாசப் பட்டிருக்கிறது ?
பத்திரிகையாளர் ஒருவர் தனது நீண்ட கால கலைஞருடனான அனுபவத்துடன் திருக்குவளை துவங்கி சென்னை ராஜாஜி அரங்கு வரை கலைஞர் வாழ்க்கையை எளிமையாக அவர் வழியாகவும்,அவருடைய உறவினர்கள்,நெருங்கிய நண்பர்கள் வழியாகவும் சொல்கிறார். எவ்வளவு சிரமங்களுக்கிடையே அவரது முன்னேற்றம் அமைந்திருந்தது என்பதை நெகிழ்வுடன் சொல்லும் ' கலைஞர் என்னும் மனிதர்' கட்டுரை ஓர் உதாரணம்.காவல்துறை தரும் செய்திகளுடன் நெருக்கமான நண்பர்கள் மூலமாக வரும் செய்திகளுக்கு கலைஞர் கொடுத்த முக்கியத்துவம் மலைக்க வைக்கிறது. கலைஞரின் மனசாட்சி என்று அழைக்கப்பட்ட முரசொலி மாறனைப் பற்றிய கட்டுரையில் விரிந்திருக்கும் அனுபவங்கள் முக்கியமானவை. கலைஞரிடம் பல சந்திப்புகளில் மணா எடுத்துள்ள நேர்காணல்களுடன் நண்பர் ப்ரியன் கலைஞரிடம் இறுதியாக எடுத்த பேட்டியுடன்,நடிகர் சிவகுமார் எடுத்த விரிவான பேட்டியும் சிறப்பு. கலைஞர் நள்ளிரவில் கைதான போது நடந்த அடக்குமுறையையும்,அத்துமீறல்களையும் காலத்தின் சாட்சியத்தைப் போல வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள என்னுடைய கட்டுரையும் இதே நூலில் இருக்கிறது. 350 பக்கங்களைக் கொண்ட இந்த நூலின் சிறப்பு அதன் அழகான வடிவமைப்பும்,ஏராளமான வண்ணப் புகைப்படங்கள். அதோடு அருமையான நடையில் கலைஞரைப் பற்றி எத்தனை செய்திகள்? கலைஞரை நேசிக்கும் பலரும் கண்டிப்பாக இந்த நூலையும் இதன் உள்ளடக்கத்திற்காக நேசிப்பார்கள்.(தொடரும்)
மணா மணா
No comments:
Post a Comment