Saturday, August 21, 2021

#ஆழ்வார்களும்_பாரதியும்:

 #ஆழ்வார்களும்_பாரதியும்:

———————————————————-
குலம் தரும் செல்வம் தந்திடும் துயரமெல்லாம் தீரும். நிலம் தரம் செய்யும், நீள் விசும்பருளும் அருளுடன் பெருநிலம் அளிக்கும் வலம் தரும், மற்றும் எல்லா வகை நல்லனவும் செய்யும். பெற்ற தாயைப் போல் நமக்கு அனைத்தையும் அளிக்கும். நலம் தரும் அச்சொல்லே நாராயணா வென்னும் நாமமாகும் என்று ஆழ்வார் உணர்ச்சி பொங்க அழுத்தமாகக் கூறுகிறார்.

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீண் விசும் பருளும்
அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்

என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
அட்ட புய கரத்தானைப் பாடும் போது,

கலைகளும் வேதமும் நீதி நூலும்
கற்பமும் சொற் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால் அருள் செய்து நீண்ட
மலைகளும் மாமணியும் மலர் மேல்
மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவரார் கொல் என்ன
அட்டபுயகரத் தேனென்றாரே

என்று பாடுகிறார்.
ஆழ்ந்த பொருள் நிறைந்த இப்பாடல் மனித குலத்தை உய்விக்க வழி காட்டும் பாடலாகும்.
இன்னும் சடகோபனார் என்னும் நம்மாழ்வார் பாடுகிறார்.

கொன்று உயிர் உண்ணும் வியாதி
பகை பசி தீயன வெல்லாம்
நின்று இவ்வுலகில் கடிவான், நேமிப்பிரான்

என்று, உயிரைக் கொல்லும் வியாதி, பகை, பசி முதலிய தீயனவெல்லாம் நீங்க வேண்டும் என்று ஆழ்வார் திருமாலை வேண்டுகிறார்.

நம்மாழ்வார் தனது ஆறாம் திருவாய் மொழியில் ஒப்பிலியப்பனைப் பற்றி மிகவும் அழகாகப் பாடியுள்ள பத்து பாடல்களும் உலகின் அத்தனை நன்மை தீமைகளையும் அறிந்து அந்தத் திருவிண்ணகர் வாழ்வான் நம்மைக் காப்பான் என்று கூறுகிறார்.
நல் குரவும் செலவும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமாள் என்னை ஆழ்வானை
என்றும்,

கண்ட வின்பம் துன்பம்,
கலக்கங்களும் தேற்றமுமாய்
தண்டமும் தண்மையும்
தழலும் நிழலுமாய்
கண்டு கோடற்கரிய
பெருமான் என்னை ஆள்வான்
என்றும்,

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய்
நிலனாய், விசும்பாய்
என்றும்,

புண்ணியம் பாவம் புணர்ச்சி
பிரிவு என்றி வையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்
இன்மையாய் அல்லனாய்
எனவும்

கைத்தவம் செம்மை கருமை வெளு
மையுமாய்
மெய், பொய், இளமை, முதுமை புதுமை
பழமையுமாய்
என்றும்

மூவுலகங்களுமாய் அல்லனாய்
உகப்பாய் மினிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ வையாய்
ப்புகழாய்ப் பழியாய்
எனவும்,

பரஞ்சுடர் உடம்பாய்,
அழுக்குப் பதிந்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும்
கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும்
திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என்றும்,

வன் சரண் சுரர்க்காய்,
அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்
தன் சரண் நிழற் கீ
ழுலகம் வைத்தும் வையாததும்
எனவும்

என்னப்பன் எனக்காய் இகுளாய்
என்னைப் பெற்ற வளாய்
பொன்னப்பன் மணியப்பன்
முத்தப்பன் என் அப்பனுமாய்
எனவும்

நிழல் வெயில், சிறுமை பெருமை
குறுமை, நெடுமையுமாய்
சுழல்வன நிற்பன மற்று
மாயவை அல்லனுமாய்
மழலைவாய் வண்டு வாழ்
திருவண்ணகர் மன்னுபிரான்
என்றும் போற்றி ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.

ஆழ்வார் கண்ணனுடன் இணைந்து ஒன்றாகி விடுகிறார். அவ்வாறு கண்ணனோடு ஐக்கியமாகி விடும் போது உலகில் உள்ள அனைத்தும் ஒன்றாகி விடுகிறது. தெருளும், மருளும் மாய்ந்து விடுகிறது. அந்த ஏக நிலையை நம்மாழ்வார் அடைகிறார். அந்த ஒருமை நிலை உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பது ஆழ்வாரின் விருப்பமாகும்.

உளரும் இல்லை யல்லராய்
உளராயில் லையாகியே
உளரெம் மொருவர் அவர் வந்தென்
உள்ளத்துள்ளே உறை கின்றார்
வளரும் பிறையும் தேய் பிறையும்
போல அசைவும் ஆக்கமும்
வளரும் கடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்தோமே
(-திருவாய்மொழி 8-8)
என்றும் பாடுகிறார்.
ஆழ்வார்களைப் போலவே பாரதியும் உலகின் மீதும், உலக மக்கள் மீதும் மாளாத அன்பு கொண்டு, உலகம் முழுவதிலும் அன்பும் பொறையும் விளங்க வேண்டும், துன்பமும், மிடிமையும் நோவும் சாவும் நீங்கி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று பாடுகிறார்.
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும், மிடிமையும், நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயி ரெலாம்
இன்புற்று வாழ்க
என்பேன்,
என்று பாரதி பாடுகிறார்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21.08.2021

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...