Saturday, December 30, 2023

*இலவசங்களால் பேரழிவு:-* #*இலவசம் முக்கியம் அல்ல, இலக்குகள் முக்கியம்*. *இலவசம் என கொடுக்க அரசியல் கட்சிகளின் தலைவர்களின் அப்பன் வீட்டு பணம் அல்ல. அது மக்கள் வரிப்பணம்*. -கேஎஸ்ஆர்.

இன்றைய (30-12-2023)தினமணயில் 
#*இலவசம் என்னும் பேரழிவை* என்ற எனது கட்டுரை……

*இலவசங்களால் பேரழிவு:-*
#*இலவசம் முக்கியம் அல்ல, இலக்குகள் முக்கியம்*.

*இலவசம் என கொடுக்க அரசியல்  கட்சிகளின் தலைவர்களின் அப்பன்  வீட்டு பணம் அல்ல. அது மக்கள் வரிப்பணம்*.
•••
‪அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தகுதி இல்லாத அரசு ஆனால் இலவசங்களை வாரி வாரி வழங்குகிறது.    ஒரு ஊரில் தார் ‬
‪சாலைகள் ஒழுங்காக இருக்கிறதா? தூய்மையான குடிநீர் கொடுக்கப்படுகிறதா? சுகாதாரம் அந்த ஊரில் பேணப்படுகிறதா? ‬
•••

-கேஎஸ்ஆர்.
————————————
பல அரசியல் காரணங்களால் இலவசங்களை தடுக்க அரசு ஆர்வம் காட்டுவது இல்லை. அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் மட்டும் தேர்தல் அறிக்கையில் முன்மொழிவதில்லை. வாக்காளர்களை கவர்ந்திழுக்க அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அத்தகைய சூழல் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான போக்கா என்பது மிக கவலைக்குரிய விஷயமே! எனவே நீதித்துறை போன்ற வலிமை வாய்ந்த அமைப்புகள் இதை எதிர்க்க முன் வர வேண்டும்.

அரசு  விவசாயம், கல்வி, மக்கள் நல் வாழ்வுக்கு மருத்துவ துறைகளுக்கு இலவசங்கள் அவசியம் வழங்க வேண்டும்.  எதிலும் இலவசம் என்பது நாட்டின் நலன் பாதிக்கபடும். சாலை வசதிகள் என அடிப்படை வசதிகள் வழங்க வளமான வருவாய்களுக்கு தடைகள்,சிக்கல்கள் ஏற்படும். இங்கு பல்பொடி, செருப்பு ,டிவி என பல இலவசங்கள் என  ஆட்சியாளர்கள் வழங்கினர்.

கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள்     தேர்தல்களில்  வாக்குறுதிகளை அளித்து வாக்காளர்களை கவர்ந்து வந்த நிலையில், கடந்த  33 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளின் தன்மை மாறிவிட்டது. தற்போதைய வாக்குறுதிகள் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு பதிலாக பணமும், இலவசமும் தான் முதன்மையாக உள்ளது.

இதனால் கடனை அடைக்க அரசு தனது வருமானத்திலிருந்து செலவிட வேண்டியுள்ளது. இது தவிர, அரசு ஊழியர்களுக்கு, இந்த வருமானத்தில் இருந்து சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் மிஞ்சுவதில்லை. எனவே அரசு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் மாநில அரசின் கடன்சுமை அதிகரித்து பொருளாதார நெருக்கடியும் அதிகரிக்கிறது

அரசியலில் “இலவசம்” என்ற சொல் யாரையும் விட்டுவிடவில்லை, பெண்கள் விவசாயிகள் மாணவர்கள் சிறுபான்மையினர் என சமூகத்தில் பின்தங்கியிருக்கும் அனைவருக்கும் என்ற போர்வையில், இலவச மின்சாரம் குடிநீர் இலவச பயணச்சீட்டு போன்ற இலவசங்களை அறிவிப்பது தற்போது பொதுவான நிகழ்வாகிவிட்டது.

மத்திய பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதில் தொடங்கி இலவச மின்சாரம், கேஸ் சிலிண்டர் மானியம், பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், வேலையில்லா இளைஞர்களுக்கு 3000 ரூபாய் என இலவச திட்டங்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தலை எதிர்கொள்ளும் பல மாநிலங்களும் இதுபோன்ற திட்டங்களை அளிப்பது வழக்கமே. கட்சிகள் அரசியல் சித்தாந்தத்தை தாண்டி அறிவிக்கும் இலவசங்கள் வாக்காளர்களை வற்புறுத்தும் முயற்சியே தவிர மக்களின் வாழ்வில் நிரந்தர முன்னேற்றத்தை  தரவில்லை.

2016-ம் ஆண்டில் நிதி மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மறுஆய்வு செய்ய என்.கே.சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு 2017 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது அதன் மொத்தக்கடன் 2023 க்குள் 20 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தது.

அவற்றில் ஜிஎஸ்டிபி- கடன் அளவு என்பது பஞ்சாபில் 48.98 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 42.37 சதவீதமாகவும், மேற்குவங்கத்தில் 37.39 சதவீதமாகவும், பீகாரில் 36.73 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 27.27 சதவீதமாகவும் உள்ளது.

மாநில அரசு நிறுவனங்களின் மீதான கடன் மற்றும் மாநில அரசு அளிக்கும் உத்திரவாதங்களை சேர்த்தால் மாநிலங்களின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக CAG தெரிவித்துள்ளது. சமீபத்தில் RBI வெளியிட்ட 'பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாநிலங்களின்' பட்டியல் நம்மை பதற வைக்கிறது. அதற்கு இலவசங்கள் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக, இலவச திட்டங்களுக்கு அதிக செலவு செய்யும் இரண்டாவது மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. மொத்த வரி வருவாயில் 45.5 சதவீதத்தை பஞ்சாப் மாநிலமும் 30.3 சதவீதத்தை ஆந்திர பிரதேசமும் இலவசங்களுக்காக செலவு செய்து வருகிறது. ஜிடிபி யின் அடிப்படையில் பார்த்தால் ஆண்டுதோறும் இலவச திட்டங்களுக்காக பஞ்சாப் 2.7 சதவீதத்தையும், ஆந்திர பிரதேஷ் 2.1 சதவீதத்தையும் செலவு செய்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலம் 28.8 சதவிகிதமும், ஜார்கன்ட் மாநிலம் 26.78 சதவிகித தங்களது வரி வருமானத்தையும் இலவசத் திட்டங்களுக்கு செலவிடுகிறது என்பது கவனிக்கப்படவேண்டியது.

ஒரு மாநிலம் தனது வரி வருவாயின் பெரும்பகுதியை இலவச திட்டங்களுக்காக செலவிடும்போது, உட்கட்டமைப்புக்கான செலவு மட்டும் பாதிக்கப்படுவதில்லை!  அடிப்படை சமூக பணிகளான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பிற அத்தியாவசியங்களும் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். உட்கட்டமைப்பு பற்றாக்குறை முதலீட்டை பாதிக்கும் அதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும். எனவே, மாநிலங்கள் வழங்கும் இலவச திட்டங்களை சரி செய்து நாட்டின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவது அவசியமே!

அதிகரித்து வரும் கடன் சுமையால் நாட்டின் பொருளாதார மதிப்பீடு அளவு பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் நாம் புதிய முதலீடுகளை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் நம் நிறுவனங்களும் அரசாங்கமும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்குவதற்கு அதிக வட்டி விகிதத்தை செலுத்த வேண்டியிருக்கும். கடன் அதிகரிப்பு நிதி ஏற்றத்தாழ்வை உருவாக்குவதோடு இல்லாமல், மாநில அரசாங்கங்களில் நலத்திட்டங்களின் செயல்பாட்டுத் திறனையும் பாதிக்கும் என்பது கவனித்தில்கொள்ள வேண்டியது.

இலவசம்  வேண்டாம்! இலக்குகள் முக்கியம்!!

மக்களுக்கான இலவசங்களைத் தருகிற அரசு எப்படி ஒரு நல்லரசாகும்.

இப்படியான இலவசங்களுக்கெனப் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் பணம் யாருடைய பணம்? இது மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெறப்பட்ட தொகை தானே?இலவசத்தை கொடுத்து விட்டு  தங்களது ஓட்டு  வங்கியைப் பெருக்கிக் கொள்வது என்ன வகையான தந்திரம்? இல்லை  இலவசங்களை எல்லாம் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்கிறார்களா? அப்படியெல்லாம் சொத்தை விற்று கொடுக்கக் கூடியவர்களா  இன்று ஆட்சி நடத்துகிறார்கள்.எனக்குத் தெரிந்து இந்த அரசியல் வாழ்விற்காக மக்கள் நலனுக்காக பிரதியுபகாரம் ஏதுமற்று சொத்து பத்துகளை இழந்த தேசத் தியாகிகள் முதற்கொண்டு தொண்டுள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் பலரையும் நாம் உதாரணம் காட்ட முடியும்.

மக்கள் வரி என்பது யாருடைய சொந்த சம்பாத்தியமும் இல்லை.
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையை என்று எடுத்துக் கொடுப்பதற்கு. அது பொதுநலனுக்குரியது.  இப்படி மேலும் மேலும் மக்களை இலவசங்களுக்குள் ஆற்றுப்படுத்துவது அவர்களை எதிர்பார்க்க வைப்பது எதையாவது கொடுத்துவிட்டு அவர்களின் உளவியலை திருப்தி படுத்துவது போன்ற  போக்குகள் அரசியலின் ஆணிவேரை அசைப்பதோடு எதிர்காலத்தில் ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமைக்கு கொண்டு போய் விட்டு விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசு அதன் போக்கில் இருக்க தன் உழைப்பில் தொழிலில் வணிகத்தில் சேர்த்த பணத்தை சொந்தமாகப் போட்டு பொருட்களை வாங்கி வீடடில் சேகரிக்கும் மக்கள் அதை எவ்வாறு பல காலம் பாதுகாத்து வாழ்ந்து வந்தார்கள் என்பதைப் பல தலைமுறைகளாக கண்ட இந்த சமூகத்தை இலவசங்களால் அவமானப் படுத்துகிறார்கள்.  இவர்கள் கொடுக்கும் இலவச பொருட்கள்  மிக்ஸி கிரைண்டர் சேலை வேட்டி எதுவும உருப்படி இல்லாத மலிந்தவையாக இருப்பதால் மக்கள் ஒன்றுக்கும் உதவாத அவற்றை அலட்சியப்படுத்தித் தூக்கி எறியும் நிலையை தான்  கிராமம் நகரம் தோறும் பார்க்கமுடிகிறது. போக தேர்தல் நேரத்தில் பணம் மது போன்றவற்றை இலவசமாக விநியோகித்து தான் ஒரு தன்மானமிக்க தொகுதியை ஓட்டு வங்கியாக மாற்றுகிறார்கள்.

இதன் மற்றொரு பக்கத்தில்  அவர்கள் மீது எண்ணிலடங்கா வரிச் சுமைகளை சூடம் வாங்கினால் புடவை வாங்கினால் குடம் வாங்கினால் கோழி வாங்கினால் ஓட்டலுக்கு போனால் சாப்பிட்டால்  பெட்ரோல் டீசல் அனைத்திற்கும் பல வகையான வரிகளை ஏற்றி  இலவசங்களுக்கான தொகையை ஈடு செய்து கொள்வது மோசடி அன்று வேறு என்ன?

தங்கள் கையை அறுத்தா கொடுக்கிறார்கள்? நோகாமல் பல திட்டங்களில் பலவகையில் குடும்பச் சொத்துக்களை பெருக்கிக் கொள்ளும் இந்த அரசியல் பண்பு இறுதியில் இலவசங்களை தூவி மக்களின் கண்ணை மறைப்பது கேவலமானது.

மக்களும் அரசு ஏதாவது இலவசமாக கொடுக்கும் என்று பிரச்சார நாட்களிலும் தேர்தல் நேரங்களிலும் காத்திருப்பதோடு அதன் மீது கேலி பேசிக்கொண்டு அதை வாங்கி தின்று கழித்தோ ஒரு நாள் கூத்து என்று தூக்கிப்போட்டு விட்டோ  போகிறார்கள். இது அவர்களின் உளவியலை ஒரு  பொறுப்பற்ற இடத்தில் பாதிக்கிறதா இல்லையா? இதற்கும் உண்மையான  பற்றுறுதிகளுக்கும்  மக்கள் மான்மியத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

காசு கொடுத்தால் ஓட்டு! அதன் வழியே கிடைப்பது அரசு அதிகாரம். அந்த அதிகாரம் தன் குடும்பமும் சுற்றமும் ஏக போக வசதிகளைப் பெறக் கிடைக்கும் வாய்ப்பு.

இந்த வட்டத்துக்குள் இன்னும் எத்தனை காலம் தான் அரசியல் நடத்துவார்கள்.

மக்கள் உணர வேண்டும் இது மக்கள் நலத்திற்கான ஆட்சி அல்ல சில குறிப்பிட்ட குடும்பங்கள் வளர்வதற்கான ஆட்சி முறை தான் நடக்கிறது.

தன்மானமும் சுய மரியாதையோடு உழைக்கும் மக்கள்  வாழ்ந்து வளர்ச்சிகண்ட இந்த மாபெரும் தமிழ் சமூகத்தில் பயனற்ற ஆகாத வெற்று போலி இலவசங்களை  அறிவிப்பது ஒரு கேலிக்கூத்தான நடைமுறை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. உலகின் பல ஜனநாயக நாடுகளில் மக்களுக்கான வாக்கு உரிமை என்பது  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்  அதன் வாக்குறுதிகளில் நடைமுறைகளில் தவறுமே எனில்  அதை  திரும்ப பெற  பதவியிறக்க வைக்கும் அளவிற்கு தகுதி வாய்ந்த உரிமைகள் உடையது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களையெல்லாம் எல்லாம் இலவசம் கொடுத்து ஒருபோதும் ஏமாற்ற முடியாது.

இங்கே தான் ஐந்து வருடம் தலையெழுத்தை போல அனுபவிக்க வேண்டி இருக்கிறது.
அவர்கள் ஆடி முடித்து அனைத்தையும் பெருக்கிக் கொண்டு அடுத்த தேர்தலுக்கு தயாராகும் போது இந்த மக்களுக்கான ஏமாற்றம் ஒரு சுழற்சி முறையில் தான் நீடிக்கிறது.

சங்க இலக்கியம் தொட்டு கடந்த பல மன்னராட்சிகளில் கூட இலவசமாக யாரும் எதையும் பெற மாட்டார்கள் !வாழ்வில் அடிப்படையில் தன்னிடம் உள்ள ஒன்றை கொடுத்து தான் ஒன்றை பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு மானமும் ரோசமும் உள்ள ஒரு சமூகத்தை இலவசங்களால் இழிவாக்கிக் கொண்டிருப்பது அல்லது அவர்கள் உழைப்பை மதிக்காதிருப்பது
அல்லது ஆசை காட்டி மோசம் செய்து வாக்குகளை பெறும் போக்கன்றி இந்த அரசு தருவதாக சொல்லும் இலவசங்களை  தர்மம் என்றும் நியாயம் என்றும் எப்படி விளக்குவது

இது நாட்டு மக்களின் நலனுக்கு உகந்தது அல்ல. மீண்டும் மீண்டும் அவர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும் இந்த இலவசங்களை மறுப்பதும் நியாயமான உரிமைகளை கோரிப் பெறுவது தான் மக்களுடைய தன்மானமிக்க நடவடிக்கையாக இருக்க முடியும்! இத்தகைய தவறான  ஆசைக காட்டும் ஆட்சி முறைகளைக் களையக் கூடிய உரிமையும் வலிமையும் அவர்களிடம் இருக்கிறது என்பதைத்தான் நாம் ஜனநாயகத்தின் உண்மையான அற நெறிமுறை என்கிறோம்.

ஆட்சிக்கு இலவசம்  முக்கியம்   அல்ல, இலக்குகள் முக்கியம்.

மக்களின் மனித ஆற்றல், வளமை,உழைப்பு மறந்து அவர்களை ஏமாளி ஆக்கும் வகையில் இலவச வலை உறுதியான கயிறுகளால் முடிச்சிடப்பட்டு பின்னப்பட்டிருக்கிறது.


வாக்குகள் மட்டுமல்ல வளமையும் அறமும் தியாகமும் முக்கியம்.

இப்படியான பண்பு ஏதுமற்றவர்கள் ஏதேனும் வணிகம் செய்யப் போய்விடலாம். பொழுதுகளைப் போக்கிக் கொண்டு சொத்துக்களைப் பெருக்கி கொண்டு தன் மனம் போன போக்கில் அரசாள நினைக்க கூடாது.இலவசம் என கொடுக்க அரசியல்  கட்சிகளின் தலைவர்களின் அப்பன்  வீட்டு பணம் அல்ல. அது மக்கள் வரிப்பணம்.

-அரசியலார்.

#இலவசம் #freebies 

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
30-12-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...