Sunday, December 17, 2023

*பெரியார் கலைஞர் பணிகளை இந்த தமிழ் மண் மறுக்கவில்லை. ஆனால். பெரியாரும் கலைஞரும் மட்டுமே தமிழகம் இல்லை. இன்னும் சில ஆளுமைகள் உண்டு என்ற புரிதல் இங்கு இல்லை*

*பெரியார் கலைஞர் பணிகளை இந்த தமிழ் மண் மறுக்கவில்லை. ஆனால்.
பெரியாரும் கலைஞரும் மட்டுமே தமிழகம் இல்லை.
இன்னும் சில ஆளுமைகள்
உண்டு என்ற புரிதல் இங்கு இல்லை*
———————————
பெரியாரும் கலைஞரும் மட்டுமே இல்லையெனில் தமிழகமே இல்லை என்று இப்போது காணாததை கண்டது போல சொல்லிக் கொண்டிருப்பது பம்மாத்து வேலை. 

இன்றைக்கு பலர் விசுவாசமாக இருக்கிறேன் என்கிற பெயரில் பெரியாரும் கலைஞரும் இல்லை என்றால் தமிழகமே இல்லை என்கிற மாதிரி பேசுகிறார்கள்.

இவர்களுக்கு எந்த நிலையிலும் படிநிலை வளர்ச்சி தேவையில்லை  விசுவாசிகளுக்கு அன்றன்றைக்கு பேசுகிற பேச்சு நம்மை அவர்கள் கவனிக்க ஏதுவாக இருக்கும் என்ற முறையில் படு அபத்தமாகவும் ஊடகங்கள் வழியாக வெட்டிப் பேச்சாவும் மாறிக்கொண்டிருக்கறது.

முன்னோர்கள் இட்ட பாதையில் அதை கொண்டு செல்ல பின்னால் ஆட்சிக்கும் கவனத்திற்கும் வந்தவர்கள் தான் இவர்கள் என்பதை மறந்து விட்டு அதாவது சமூக சீர்திருத்தங்களின் வரலாற்று பரிணாமங்களை யார் எவர் எக்காலங்களில்முன்னிலைப்படுத்தினார்கள் என்பதற்கான தொடக்கத்தில் கேள்விகளை வைக்காமல் இன்றைய பலாபலன்களுக்காக கலைஞர் பெரியார் என்று மோஸ்தராகப் பேசித் திரிவது அறிவுடைமையாக இருக்காது.

#ஓமந்தூர்_ராமசாமிரெட்டியார் அவர்கள் முதல் முதல்வராக இருந்த காலத்தில்  தாழ்த்தப்பட்டோரின் ஆலய பிரவேசத்திற்கு அடிக்கல் நாட்டினார். சமூக நீதி இடை ஒதுக்கீடு….தமிழ் வழி கல்விமுக்கியத்துவம்படுத்தப்பட்டது.கலைகளஞ்சியம் என பல தீர்வுகள் கண்டார் விவசாயிகளின முதல்வர் ஓமந்தூர்.

இரண்டாம் முதல்வர்  இராஜபாளையம் #பி_எஸ்_குமாரசாமிராஜா அவர்களின் காலத்தில் தமிழ்நாடு முழுக்க அணைகள் மிகச் சிறப்பாக கட்ட திட்டமிடல் என.. 

தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு முதல் வைஸ்ராயாக இருந்து பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் ஆன #ராஜாஜி காலத்தில் தான் மெட்ராஸ் என்கிற ஸ்டேட் அத்தாரிட்டி பெறப்பட்டு . சென்னையை தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என பிரதமரை எச்சரித்த பெரியாரின் நண்பர் ராஜாஜி. மணியம்மையை திருமனம் செய்ய ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் பெரியார்.

பின,#காமராஜர் காலத்தில் பலவிதமான கல்வி மருத்துவம் விவசாய முறைகள் போக மாணவர்களுக்கான மதிய உணவு போன்றவை வெகு சிறப்பாக வேகமாக வளர்ச்சிக்கென நடை முறைப்படுத்தப்
பட்டன.

இடதுசாரி கட்சியின் தலைசிறந்த தலைவர்களில்  ஒருவரான #ஜீவா அவர்கள் மாற்றுச் சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் கலை இலக்கியங்கள் குறித்து தமிழகம் முழுக்க பரவலான வர்க்க ரீதியான கருத்துகளை  உருவாக்கி அதை பரப்புவதற்கான பல  அமைப்புகள் உருவாக காரணமாக இருந்தார்.

#சேலம்_வரதராஜீலுநாயுடு, #பசும்பொன்தேவர், #கக்கன் #காயிதேமில்லத் என 
பலர் …..

மொழி வழி மாநில பிரிவினையின் போது 1950 களில் தமிழகத்திற்கு தேவையான எல்லைகளை வகுப்பதில் அல்லது தமிழகத்துக்கு சொந்தமான நிலப்பரப்புகளை கோரிப் பெறுவதில் #ம_பொ_சிவஞானம் அவர்களின் போராட்டத்தை யாரும் மறக்க இயலுமா?

வளர்ச்சி பாதையில் 1967க்கு பின் #அண்ணா காலமும் உண்டு

பெரியார்,கலைஞர், ஆளுமைகளின் பணிகளை இந்த தமிழ் மண் மறுக்கவில்லை. ஆனால் பெரியார்,கலைஞர் மட்டுமே அல்ல.

பின் காலத்தில் #எம்ஜிஆர்…..
என தமிழக வளர்சசியில் பங்குண்டு

இத்தகைய நெடுநாள் வளர்ச்சி போக்குகளில் உழைத்த அதற்காக தியாகம் செய்த பலரையும் மறந்து விட்டு கலைஞர் பெரியார் என்று இப்போது ஊதுகுழலைஊதிக்கொண்டிருப்பவரகள் அல்லது இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதில் இவர்கள் எதை யாரிடமிருந்து  பெற விரும்புகிறார்கள்.

அக்காலத்தில் அவரவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில்  வாரிசு அரசியலை தவிர்த்து இவர்கள் தமிழக வளர்ச்சிக்கு  பெரிதும் ஏன் வாழ்நாள் முழுக்க உதவியிருக்கிறார்கள் அந்தப் பட்டியல் மிக நீண்டது. பெரியாரும் கலைஞரும் மட்டுமே இல்லையெனில் தமிழகமே இல்லை என்று இப்போது காணாததை கண்டது போல சொல்லிக் கொண்டிருப்பது பம்மாத்து வேலை.

1979 லிருந்து கலைஞர் என் பெயர் சொல்லி தான் அழைப்பார். நான் கலைஞருடன் நெருங்கி பழகியவன். ஓரளவுக்கு திராவிட இயக்க போக்குகளின் வளர்ச்சி பாதையில் அதன் நினைவுகளில் அதன் வரலாற்று பக்கத்தில் எனக்கும் இடம் உண்டு என்பதோடு  அதன்  கருத்துகளில் நடைமுறைகளில் உழைத்தவன்  என்கிற முறையில் இதை நான் சொல்ல வேண்டியது அவசியமாய் இருக்கிறது. கலைஞர் முரண்படுவார் நானும் எனது கருத்துக்களை தேவையான இடத்தில் சொல்லுவேன் இது எல்லாம் நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும் என்றெல்லாம் கூட விவாதிப்பார்.

அப்படி எல்லாம் இருந்தாலும் அவரது அணுகுமுறை வேறு. ஆனால் இன்றைய முதல்வரின் ஆட்சியில் விமர்சன பூர்வமாக அணுகும் என்னை போன்றவர்கள் இப்போது கட்சிக்கு தேவையில்லை.
மாறாகப் புகழ் பாடிகளும் துதிபாடிகளும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஒவ்வொரு அரசும் தனக்கான நலத்திட்டங்களைக் கொண்டு வரத்தான் செய்யும். அதை ஊதி பெருக்கிக் கொண்டிருப்பதை விட தமக்கான அரசு காலத்தில் மேலும் கடமைகளைச் செய்து கொண்டிருப்பது தான் நல்லது. அதை விட்டுவிட்டு  தங்களுக்கு தாங்களே பேனர் வைத்துக் கொண்டு இருப்பது நல்லது அல்ல .

இன்றைக்கு #பெரியார்_கலைஞர் மட்டுமே என்று பேசுபவர்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து ஓமந்தூர் ராமசாமி முதல்வராய் இருந்த கால முதல் இன்று வரை எத்தனை நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை தெரிந்து கொண்டு வந்து பிறகு பேச வேண்டும்.

 எனது அரசியல் வாழ்க்கையில் என்னை பொறுத்தவரையில் #ஓமந்தூர் அவர்கள் தான் எனக்கு ரோல் மாடல். தனி நபர் விளம்பர அரசியலில் பிரச்சாரங்கள் எதுவுமே இன்றி சுய நலமற்று தன்னுடைய கடமையைச் செய்தவர்.

#தமிழ்நாடு_அரசியல்
#Tamilnadupoltics

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-12-2023.


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...