Monday, December 4, 2023

#ChennaiRains | #ChennaiFloods | அன்றும் இன்றும் என்றும் என்ற அவல நிலை..

#ChennaiRains | #ChennaiFloods  | அன்றும் இன்றும் என்றும் என்ற அவல நிலை..
———————————————————-
வருடா வருடம் மார்கழி இசை கச்சேரி, ஜனவரி புத்தககண்காட்சி போல, டிசம்பர் மாதங்களில் சென்னையில் இந்த புயல், மழைவெள்ளம் அடித்துப்பிடித்து கூடிகொண்டும் வந்து கொண்டும் பிறகு போய்க்கொண்டும் தான் இருக்கிறது.

சென்னைக்கு  ‘மிக்ஜாம்’ புயல்
சென்னைக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில் ‘மிக்ஜாம்’ புயல் உள்ளது; 

இது தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகர்ந்து நாளை (டிச.5) முற்பகல் நெல்லூர்- மசூலிபட்டினம் இடையே தீவிர புயலாக கடக்க கூடும்.

இன்று,4-12-2023…

தொடர்ந்து சென்னை மழை வெள்ள நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது.சென்னை மாநகரத்தில் மழைநீர் வழிந்தோட வடிகாலோ, நீர்வழிப்பாதைகள் முறையாக இல்லை; நீரதேங்கி வடிவதற்கு எதற்கு 4,000 கோடி…. அதன் பயன்பாடு என்ன ஆனது? தண்ணீர் தேங்காமல் சிறந்த நகரக் கட்டமைப்பு  முக்கியம்.

சென்னையில் வெள்ள அபாயத்தை குறைக்கும் ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை- மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

https://www.maalaimalar.com/news/district/final-report-submitted-to-cm-mk-stalin-advisory-committee-on-flood-risk-reduction-in-chennai-583443











தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் எல்லாம் வெள்ளம் புகுந்துவிட்டது.




சென்னையில் தரதரவென கார்களை இழுத்து சென்ற கொடூர வெள்ளம் - அடுத்தடுத்து சென்ற கார்கள்  என அதிர்ச்சி காட்சிகள். ஏரி, குள போல நீர் நிற்கின்றன.தற்போது பயம் மழை வெள்ளம் அல்ல; ஏரி நீர் திறப்பதால் பெருகும் வெள்ளம்தான். அது நிகழாமல் இருக்க வேண்டும்.

நானும் 1972 லிருந்து இதை பார்த்து வருகிறேன். தொடர்ந்து இதே நிலைதான். அப்போது #இந்திரா அம்மையாரின் மகன் #சஞ்சய்காந்தியுடன் நான் காங்கிரஸ் மாணவர் அணியில் இருந்த நேரம்.
அப்போதும் இதே போல் ஒரு கடும் மழையில் சென்னை கோட்டூர்புரம், பட்டினப்பாக்கம் (Foreshore Estate) பல பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்க  அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சஞ்சய் காந்தியுடன் சென்ற நாங்கள் உடைகள் உணவு மருந்து பொருட்கள் எல்லாம் வழங்கினோம்.

அப்பகுதியில் குடியிருந்த மத்திய முன்னாள் அமைச்சர் மறைந்த சி சுப்பிரமணியம் அவர்களின் வீட்டிற்குள் நீர் புகுந்து அவரது வரவேற்பு அறையில் பெருகி புத்தக அலமாரி அனைத்தையும் நனைத்துக் கவிழ்த்து வீணாக்கியது. ஏராளமான அரிய புத்தகங்களை அவ்வெள்ளம் அடித்துக் கொண்டு போனதை பார்த்தோம். மிகுந்த கவலையாகி போய்விட்டது.

சென்னையின்  நகர உள் கட்டுமானம் பலநூறு வருடங்களாக ஒரே மாதிரி தான் ஒரே வகையில் தான் இருக்கிறது. பத்து குடும்பங்கள் ஓரிடத்தில் வசதியாக இருக்கக்கூடிய இடத்தில் 100 200 குடும்பங்கள் வாழக்கூடிய அடுக்ககக் கட்டுமானங்கள் மள மளவென்று பெருகி சென்னை மாபெரும் கான்கிரீட்  குடி வாழ் காடுகளாய் நிறைந்து விட்டது .என 2015 என தொடர் இந்த சிக்கல் இன்று வரை… இனியும் தொடரும் …..
•••
சென்னை என்ற ஒரு வீங்கி பெருத்து வெடிக்கத்தயாராக உள்ள ஒரு மாநரகத்தின் (எழுத்துப்பிழை அல்ல) இன்றைய அவல நிலைக்கு வெறுமனே ஆட்சியாளர்களை மட்டுமே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

30 லட்சம் பேர் வரை வாழும் கொள்ளளவு கொண்ட ஒரு நரகத்தில் , சுமார் 1 கோடி மக்கள் நிரந்தரமாக வசிப்பதும் தினசரி சுமார் 20லட்சம் பேர் மாநரகத்தின் உள்ளே வந்து செல்வதும் ஆகமொத்தம் 1.2கோடி பேரை தாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?

இத்தகைய அவலநிலை ஏற்படப்போவதை 1980களிலேயே கணித்த அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் தலைநகரை திருச்சி-தஞ்சைக்கு நடுவே கட்டமைக்க முடிவு செய்தார்... ஆனால்  காலங்காலமாக தமிழனின் குடியை கெடுத்தவர்கள் அன்றும் அந்த திட்டத்தை கெடுத்தார்கள்...

1990களில் உலகசந்தைமயமாதலுக்கு தேசம் திறந்துவிடப்பட்ட பிறகு சென்னையின் பல்தொழில் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலை அடைந்தது.. அதனையொட்டி தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் மக்கள் மிகவேகமாக சென்னையில் குடியேற ஆரம்பித்தனர்.. 2000களில் மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடையத் தொடங்கிய பின்னர் சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது...

 உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி கற்போர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் அதிகரிக்க அதிகரிக்க .. அவற்றுக்கு இணையாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வந்து தொடங்கப்பட்ட தொழில்களை மாநிலம் முழுவதும் பரவலாக்காமல் தங்களது சொந்த நலன்களுக்காக சென்னையிலேயே முடக்கினர்... விளைவு தமிழகம் முழுவதும் படித்தவர்கள் வேலை தேடி இந்த நரகத்துக்கே வரவேண்டிய நெருக்கடி...

20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் தொடங்கிய மாநரகம் கூடுவாஞ்சேரி, வண்டலூர் எல்லாம் தாண்டி காட்டாங்குளத்தூரிலேயே தொடங்கும்அளவு விரிவடைந்துவிட்டது... இதில் காஞ்சிபுரம் வரை சேர்த்து கிரேட்டர் சென்னை ஆக்கப்போகின்றனராம்... 

மக்கள் தொகை பெருகப்பெருக அதற்கேற்ப மின்சாரதடம், தொலைதொடர்புதடம், குடிநீர்குழாய், மெட்ரோ, வடிகால் என்று சென்னை நரகத்தின் சாலைகள் வருடக்கணக்கில் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலைமை...  

நீர்நிலைகளை அரசியல், பணபலம் மிக்கவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள, நீர்வழித்தடங்களை எளிய மக்கள் எடுத்துக்கொள்ள... பூமி தோன்றிய காலம்தொட்டே பெய்யும் மழைநீர் தன்வழித்தடம் காணாமல் திகைத்து தேங்கி நிற்க..

இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு நிற்க..

வருடத்தின் மூன்றுமாத மழைக்காலம் கடந்துவிடுகிறது... அதன்பிறகு மழையை மறந்து அவரவர் வேலைகளைபார்க்க கிளம்பி விடுகின்றனர்.. 

சென்னையின் மழைநீர் வடிகால் பிரச்சினையும் சரி.. தீபாவளி பொங்கலுக்கு ஏற்படும் பயண நெருக்கடிகளும் சரி ஒருபோதும் தீர்க்க முடியாதவை...

மனிதர்கள் வாழும் தகுதியை இழந்துவிட்ட.. ஒரு கைவிடப்பட வேண்டிய நரகம்தான் சென்னை. இந்த வரிகளுக்காக பதிவர் விமர்சிக்கப்படலாம்..  ஆனால் செங்கல்பட்டுக்கு தெற்கே ஏதோ ஒரு ஊரில் பிறந்து 20 வயதுவரை வாழ்ந்து பின்னர் சென்னை சென்றவர்களை கேட்டுப்பார்த்தால் இந்த வரிகளின் உண்மை விளங்கும்..
..
ஐடி உள்ளிட்ட சேவை நிறுவனங்களை திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட.. நகரங்களிலும், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை கடலூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட துறைமுக நகரங்களிலும் அமைத்தால் சென்னையை காப்பாற்றலாம்.. இல்லையென்றால் அந்நகரை இயற்கையே கைவிட வைக்கும்...

-Thanjai Rajesh

ஒரு காலத்தில் கடல் புறத்தில் பேக் வாட்டருடன் சதுப்பு நிலங்களும் திருவல்லிக்கேணி சதுப்புநிலம் சென்னையில் பள்ளிக்கரணையில் இருக்கும் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது. பள்ளிக்கரணையிலிருக்கும் இந்த சதுப்புநிலம்தான் சென்னையின் ஒரே சதுப்புநிலம்; இதை ராம்சார் பகுதியாக அறிவிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.பள்ளிக்க்ரணை சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. இது இந்திய அரசால் 1985-86-ல் செயல்படுத்தப்பட்ட தேசிய சதுப்புநில பாதுக்காப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 94 சதுப்புநிலங்களில் ஒன்று, மேலும் தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒன்று. தமிழகத்தின் மற்ற இரண்டு சதுப்புநிலங்கள் கோடியக்கரை வனஉயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவா என்று இன்று நாம் சொல்லுகிற இடத்தில் இருந்து முழுக்க அல்லிகள் நிறைந்த குளங்களும்  குட்டைகளும் ஈர சத சதப்புமாய் இருந்த இடம் தான் சென்னை .இந்த சில சுயநல வாதிகள் ஆக்கிரமித்து அழித்து வருகின்றனர்.

பிரிட்டிஷார் தஙகளின் கடற்கரைத் துறைமுகங்களை அமைக்க சென்னைப் பட்டணத்தை சென்னப்ப நாயக்கரிடம் 17 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய  அந்த கடற்கரையோர சதுப்பு பகுதி தான் அவரது பெயரிலேயே சென்னை பட்டணம் என்று மாற்றப்பட்டது.

 வடசென்னை  தென் சென்னை மவுண்ட் ரோடு திருவல்லிக்கேணி தாம்பரம் ஆந்திர பார்டர் என சென்னை நகரம் எவ்வளவு தான் விரிவு கொண்டு இருந்தாலும் மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகளில் இன்னமும் மக்கள் தொகை அதிகமாக அங்கேதான் குடி இருக்கிறது‌. அந்த பகுதிகளை விட்டு யாரும் வெளிப்புறத்தில் செல்வதில்லை. நீர் வடிய பக்கிங்காம் கால்வாயும் செயல்பாட்டில் இல்லை.

அதனால் மேலும் நெருக்கடிகளை வெள்ள நேரத்தில் எதிர்கொள்ள வேண்டியிருப்பது தொடர் கதையாகி இருக்கிறது. ஏரிகள் பெருக்கெடுத்தாலும் சென்னையைத் தாக்குகின்றன. ஏரிகள் வற்றி போனாலும் குடிதண்ணீர் பஞ்சம் வருகிறது.

எத்தனை திட்டங்களைப் போட்டாலும் சென்னையின் வெள்ளக்கால வேதனைகளுக்கு விமோசனம் இல்லை! அதிமுக ஜெயித்து வந்தால் இதே நிலைதான் திமுக அவர்களை எந்தவித முன் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறை கூறுவார்கள். இப்போது இவர்கள் வந்தாலும் எந்த முன் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனால் சென்னை வாழ் மக்கள் படும் பாடு வார்த்தையில் சொல்லி மாளாது.

நீர் வழிகளை ஆய்ந்து கண்டறிந்து அதற்கான ஒரு பெரும் திட்டத்தை செயலாற்றவில்லை எனில் சென்னை மாநகரம் ஏறக்குறைய பழைய சதுப்பு சகதியாகத்தான் மாறும். கடல் நீர்மட்டம் உயர்கிற நாளில் இது அவசரமான செயல் திட்டத்தை நோக்கி நிற்கிறது.இதற்கென அதிக நவீன நீர்வழித் திட்டங்கள் வடிகால்களை  உருவாக்கி மக்களின் துயர்களைப் போக்க வேண்டும். ஆற்றல் மிகுந்த அரசாங்கங்களை தவிர இதைச்
செய்ய வேறு யார் இருக்கிறார்கள்.

இது ஒரு மழைக்காலத்தின் 60 வருட போராட்டம்.தேவை  உண்மையான நேர்மையான செயல் திட்டங்கள். இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள் எல்லாம் இரண்டு ஆண்டுகளிலோ அல்லது ஐந்து ஆண்டுகளிலோ  திட்டமிட்டு முடிக்கும் வேலை அல்ல குறைந்தபட்சம் 10 முதல்20 ஆண்டுகள் ஆகும் என்னும் நிலையில் எந்த அரசுயோம் இதைச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு ஆட்சி மட்டுமே நோக்கம்….

ஒரு அரசு தொடங்கினால் இன்னொரு அரசு அதைக் கிடப்பில்டி போடும் அதன் பிறகு இன்னொரு அரசு இதைக் கிடையில் போடும் ஒன்றும் நடக்க போவதில்லை.

ஓட்டை பணம் கொடுத்தோமாம் அதை வாங்கி  ஆட்சிக்கு வந்தோமா முடிந்த   அளவு அடிச்சு மாத்தலாமா அதை வைத்து மீண்டும் பணம் கொடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பார்களா அல்லது இது போன்ற தொலைநோக்கு திட்டங்களை போடுவார்களா?

பருவநிலை மாற்றங்களை
எதிர் கொள்ள தக்க
மீண்டெழும் விரிதிறன் கட்டமைப்புகள் 
நகரமயமாக்கல் இன் அடிப்படை தேவை!
இயற்கையை வெல்ல முடி யாது. கவனமாக இருங்கள்.இயற்கை
கருணை மிக்கது.

••••

சென்னை என்பது பல ஊர்களின் தொகுப்பு, இந்த ஊர்கள் எல்லாம் பன்னெடுங்காலமாக விவசாய உற்பத்தியில் இருந்தவை, தொண்டை மண்டலத்தைச் சார்ந்த இந்த ஊர்களில் இருப்பது போல பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தமிழ்நாட்டில் பிற எந்த பகுதிகளிலும் கிடையாது . காரணம் தமிழகத்தில் மூன்று மாதங்கள் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் அதிகமான நீர் பிடிப்பு பகுதிகள் இந்த பகுதிகளுக்குள் வருகின்றன, எனவே இந்த அதிகப்படியான நீரை தேக்கி அதற்கு ஏற்ற ஒரு உற்பத்தி முறையை இந்த பகுதியில் உள்ள ஊர்கள் பன்னெடுங்காலமாக தன் அனுபவத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்றன, 

ஒரு ஏரி அந்த ஏரி நிரம்பி மறுகால் போனால் அது சென்று சேருவது இன்னொரு எரி அது நிரம்பி அடுத்த ஏரி பிறகு அந்தந்த ஊர்களில் உள்ள குளங்கள இப்படியாக சென்னை நகரின் மேற்கிலிருந்து கிழக்காக கடல் மட்டத்தை நோக்கி இறங்கி வேளச்சேரி மாதிரி சதுப்பு நிலக்காடுகளுக்குள் புகுந்து கடலில் கலக்கிறது..

இது ஒரு சிஸ்டம் அன்றைக்கு இருந்த உற்பத்தி முறைக்கும் அந்த மக்கள் தொகைக்கும் ஊர்களின் தொகுப்பிற்கும் நில அமைப்பிற்கும் ஏற்றார் போல ஏரிகளையும் சிறிய பெரிய நீர் வழித்தடங்களையும் அமைத்து எவ்வளவு பெருவெள்ளம் வந்தாலும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு வாழ்க்கை முறையை அனுபவத்தில் கட்டி இருக்கிறான். 
அந்த சமூக அமைப்பில் குறைகள் இருந்துச்சுன்னா, இருந்துச்சு,
 ஆனா அவனை விட நாகரிகமான சமூகம் என்று சொல் சொல்லிக் கொள்ளும் நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய நவீன அரசுகள் அவனை விட சிறப்பாக நீரை கையாண்டிருக்கின்றனவா?

செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் அதிலிருந்து அடையாறு ஆற்றில் வழியும் நீர் தடத்தில் அனகாபுதூர் 18 மீட்டர் இன்னும் கொஞ்சம் கிழக்காக கீழ இறங்கி கரையின் இருபுறங்களில் இருக்கும் நந்தம்பாக்கம் நெசப்பாக்கம் 15 மீட்டர் இன்னும் கிழக்காக இறங்கினால் நந்தனம் கோட்டூர்புரம் 11 மீட்டர் இப்படியாக இறங்கித்தான் அடையாறு ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது..

இதே போல மேலே கிழக்கே கூவம் ஏரி 61 மீட்டர் அது கிழக்காக கீழ இறங்கி மதுரவாயல் 16 மீட்டர் நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டு 11 மீட்டர் இன்னும் கீழிறங்கி சிந்தாதிரிப்பேட்டை 8 மீட்டர், இந்த வழித்தடங்களில் எல்லாம் பல்வேறு ஏரிகள் சிறு குளங்களை நிரப்பி கீழ் இறங்கி இறுதியாக கடலில் கலக்கிறது,

இன்னும் மேலே சென்றால் பூண்டி ஏறி 37 மீட்டர் அங்கிருந்து இறங்கி சோழவரம் ஏரி 16 மீட்டர் இதிலிருந்து கொசஸ்தலை ஆறு 11 மீட்டர் உயர மணலி எண்ணூர் என்று இறங்கி கடலில் கலக்கிறது, இப்படியாக கடல் மட்டத்தை கணக்கிட்டு ஏரிகளும் நீர் வழித்தடங்களும் அமைக்கப்பட்டு நீரைப் பெற்று கடலில் நீரை வெளியேற்றும் அமைப்பாக இருந்து வந்திருக்கிறது..

இப்படி முறையாக இருந்த ஏரிகளும் அதன் நீர் வழித்தடங்களும் அன்றைக்கு இந்த ஊர்களில் இருந்த மக்கள் தொகைக்கும் அதன் விவசாய நிலங்களுக்கும் ஏற்றவை, இன்றைக்கு நவீன அரசு புதிய குடியேற்றம், நகரமயமாக்கல் நடந்து சென்னை உருவாகி விட்டது..

அன்றைக்கு ,இன்றைய தியாகராய நகர் வயல் வெளியாய் இருந்திருக்கிறது,இந்த ஊர்களில் இருந்த விவசாய நிலங்கள் எல்லாம் இன்றைக்கு குடியிருப்புகள், பிளாட்டுகள் ,அப்பார்ட்மெண்டுகள், அப்போதிருந்த நீர்பிடிப்பு நிலங்கள்க முழுவதும் இன்றைக்கு கான்கிரீட் நிரப்பப்பட்டு இருக்கிறது, 
அப்போ அந்த  பரப்பில் விழும் மழை நீரும் வழிந்து கொண்டு இந்த ஆற்றை நோக்கி தான் வரும், இது  நகரமாகும் போது இன்னும் அதிக நீரை வெளியேற்ற வேண்டிய தேவை இந்த ஆறுகளுக்கு வந்துவிடுகிறது.
 இந்த அடிப்படை அறிவு நமக்கு இருந்தால் இந்த ஆறுகளை, இன்னும் விரிவுபடுத்தி விட்டு புதிய குடியேற்றங்கள் அதற்கு ஏற்றார் போல அமைக்கப்பட்டு இருக்கும்..

ஆனால் நாம் என்ன செய்தோம், நவீன அரசாக நம்முடைய அரசுகள் என்ன செய்தன.
 ஏற்கனவே இருக்கும் ஆறுகளை எல்லாம் சுருக்கி பல நீர்வழித்தடங்களை அழித்து, நீர்பிடிக்கும் ஏரிகளையும் அழித்து, காசை வாங்கிக்கொண்டு கையெழுத்தா போட்டு தள்ளிவிட்டனர்.அது கடந்த 50 
ஆண்டுகளில் அதிகமாக நடந்தது.

இப்போ வடகிழக்கு பருவமழையின் மொத்த நீரும் அதன் வழித்தடங்கள் மறுக்கப்பட்டு எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கங்கே தேங்கி மருகி திரின்றன....இறைத்து வெளியேற்ற வேண்டிய நிலையில பல பகுதிகள் உள்ளன.

350 ஆண்டுகளுக்குள் உருவான ஒரு புதிய நகரை கட்டுவதற்கான எந்த நீண்ட கால திட்டங்களையும் அறிவையும் நாம் இன்னும் உள்வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்..அங்கங்கே புதிய புதிய பெரிய பல மாடி கட்டிடங்கள் உருவாகி விட்டன,இன்றைக்கு அந்த கட்டிடத்தை அடைய படகில் போக வேண்டிய நிலை.

எத்தனை லட்சம் மக்களுக்கான நீரை நாம் எங்கிருந்து கொண்டு  வரப்போகிறோம், ஏற்கனவே உருவாக்கப்பட்ட இந்த ஏரிகளை நீர் வழித்தடங்களை தொந்தரவு செய்யாமல், இத்தனை லட்சம் மக்களை எப்படி குடியேற்ற போகிறோம் .என்ற சிந்தனையின்றி உருவாக்கப்பட்ட இந்த புதிய குடியிருப்பு பகுதிகளை திட்டமிட்டு கட்டாததால் இன்று சந்திக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
அவர்களுக்கான சாலைகளை சாக்கடை வசதிகளை எப்படி அமைக்க போகிறோம். என்ற புரிதலோடு ஒரு புதிய நகரை நாம் உருவாக்கி இருக்கிறோமா,?
கிழக்கிந்திய கம்பெனி சென்ற பிறகு நமக்கான புதிய அரசுகள் வந்துவிட்ட இந்த 75 ஆண்டுகளிலாவது , நாம் அதை நோக்கி நகர்ந்து இருக்கிறோமா?

அப்படி ஒரு புரிதல் நம்முடைய அரசுகளுக்கு இருந்திருந்தால் இன்றைக்கு இந்த பெரு மழையில் இத்தனை லட்சம் மக்கள் இவ்வளவு அவதிக்கு உள்ளாவார்களா?

500 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் கடல் மட்ட உயர அறிவோடு ஏரியையும் அதன் வழித்தடங்களையும் அமைத்திருக்கிறான் .
ஆனால் நம்முடைய அரசுகள் அமைத்துக் கொண்டிருக்கும் பாதாள சாக்கடை திட்டங்கள், நீர் வெளியேற்றும் அமைப்புகள், இந்த அறிவோடு புரிதலோடு ஒருங்கிணைவோடு அமைக்கப்படுகின்றனவா ? அப்படி அமைக்கப்பட்டால் இப்படி முட்டி நீரில் லட்சக்கணக்கான மக்கள் அவதியுறுவார்களா?

சென்னைக்குள் போடப்பட்டிருக்கும் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மீட்டர் உயர்ந்து கொண்டிருக்கின்றன, குறைந்தபட்சம் சாலைகளை தோண்டி போடும் சிந்தனை வரக்கூட எத்தனை ஆண்டுகள் பிடிக்கிறது, 
இந்த சாலைகள் எத்தனை நீர்வழிதடங்களை மறித்து இருக்கின்றன..

இப்போது கூட ஒரு நீண்ட கால செயல் திட்டம் உள்ளதா? குறைந்தது அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு தாங்கும் அளவிற்காவது எந்த திட்டத்தை யாவது நம்முடைய அரசுகள் முன் வைக்கின்றனவா?

ஒவ்வொரு ஆட்சியும் வருகிறது. ஒவ்வொரு ஆட்சியிலும் உலக வங்கியிடம்  4000, 5000 கோடி கடன் வாங்கி ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, 
அடுத்த ஆட்சியில் இன்னொரு கடன், இன்னொரு திட்டம் ஆனால் எதுவும் பிரச்சனையை தீர்க்கவில்லை..

பிரச்னையின் மையத்தை நோக்கி அதை விவாதிக்காத அதை நோக்கி நீண்டகால நோக்கில் திட்டங்களை வகுக்காதா செயல்படுத்தாத எந்த திட்டங்களும் எத்தனை ஆயிரம் கோடிகளில் நிறைவேற்றப்பட்டாலும்,  எப்படி பலனை தரும் .
எப்போது நம்முடைய அரசுகள் அதை புரிந்து கொள்ளும்? 

ஜாதிகள் பற்றி திராவிட மாடலுக்கு ஒரு பார்வை இருக்கிறது .
எல்லா சாதிகளும் சமம் என்ற சமூக நீதிக் கொள்கை இருக்கிறது.
 சூப்பர் பாராட்டலாம் .அதனோடு இணைந்து நிற்கலாம்.
 சமூகத்தில், அதிகாரத்தில் ,கல்வியில், வேலை வாய்ப்பில் ,இட ஒதுக்கீட்டில், திராவிட மாடலுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது சூப்பர்,

 ஆனால் திராவிட மாடலில் சுற்றுச்சூழலுக்கான கொள்கை என்ன? 
இந்தச் சென்னை நகருக்கான திராவிட மாடலின் நீர் விநியோக திட்டம் என்ன?.இத்தனை மழை நீர் கிடைக்கிற ஊரில் எதற்கு கடல் சுத்திகரிப்பு திட்டம். ?ஆயிரம் கோடிகள் செலவு ஏன்?. நாம் என்ன  துபாய் போல் அரபு நாடா?.

 பாலிசி என்ன? 

திராவிட மாடல் என்று நாம் ஒன்றை சொல்கிறோம் என்றால் அதற்கென்று திட்டமிட்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கை இருக்கலாமா வேண்டாமா,? ஏரிகள், ஆறுகள், குளங்கள், சாலைகள் ,குடிதண்ணீர் ,விளையாட்டு மைதானங்கள், புதிய குடியேற்றங்கள், நீர் வழித்தடங்கள், கழிவுநீர் வெளியேற்றம், பற்றியெல்லாம திராவிட மாடலுக்கு என்று தீர்மானகரமான ஒரு பார்வை வேண்டுமல்லவா? அதனை மக்களுக்கு தெரிய வைத்து அவர்களது ஒத்துழைப்போடு இனி வரும் காலத்தில் கடைப்பிடிக்கலாமே.
அதைப்பற்றி ஒரு மக்கள் கூட்டம் கேள்வி எழுப்ப விவாதிக்க வேண்டுமா கூடாதா?ஆலோசனை சொல்லும் அறிஞர் குழு எதற்கு என்றால் அரசியல் பேசுகிறோம் என்பீர்கள். புயல், மழை ,இயற்கை சீற்றத்தால், ஓர் மக்கள் அரசுக்கு கெட்ட பெயர் வரத்தேவையில்லைவரும் முன் காக்க  , இதனை பரிசீலிக்க வேண்டுகிறேன்.


#*சென்னை வெள்ளம் திமுக அரசின் நிர்வாக தோல்விகள்*.. 

#*திருப்புகழ்
IAS பெருநகர வெள்ள இடர்தணிப்பு மேலாண்மைக்கான குழு*…⁉️

அன்று ரூ 633 கோடி இன்று,ரூ.4000 கோடி என்னாச்சு? விடியல்- மாடல்⁉️

கடந்த ஆண்டு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு IAS அவர்களின் சகோதரான திருப்புகழ் IAS தலைமையிலான  பெருநகர வெள்ள இடர் தணிப்பு, மேலாண்மைக்கான குழு ஒன்றை அமைத்தது திமுக அரசு.. அக்குழு அரசுக்கு சமர்பித்த இடைக்கால அறிக்கை… நடவடிக்கை என்ன?

#ChennaiFlood #ChennaiRain 
#ksrpost
6-12-2023,



📸 Watch this video on Facebook https://m.facebook.com/story.php?story_fbid=2449284748585798&id=100005128898963&mibextid=v7YzmG



#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-12-2023.




No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...