Monday, December 25, 2023

#*வாழ்வதன் போலித்தனங்களை விட்டு கனவுலகில்சற்றேனும் உண்மையாக இருந்து*……

#*வாழ்வதன் போலித்தனங்களை
விட்டு கனவுலகில்சற்றேனும் உண்மையாக இருந்து*……
————————————
*அவரவர்க்கு பார்க்க வாய்ப்பது அவரவர் மேகங்களே….@Tk Kalapria*
 
மனிதராகப் பிறந்தவர்கள் யாரும் ஒரே நேரத்தில் நிகழ் உலகத்திலும் மறுபக்கத்தில் கனவுலகத்திலும் தான் வாழ்கிறார்களோ என்கிற அய்யம் தோன்றி  என்னுடைய முழு வாழ்நாளையும் இந்நாட்களில் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது.

தமிழ்ச்சிறுகதையின் திருமூலர் என்று வர்ணிக்கப்பட்ட மௌனி யாரின் நிழல்கள் நாம்? எவருடைய சாயயைகள் நமது வாழ்க்கை? என்றெல்லாம் இருத்தலியல் சிக்கலுக்கு உள்ளாகி மறைந்து போயிருக்கிறார். நெடுங்காலமாக  மனித வாழ்க்கை குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.

இருப்பிற்கு பொறுப்புத் துறப்பைத் தராமல் எந்தப்பொறுப்புக்கும்  பிரதிநிதித்துவம் அல்லது தலைமைத்துவம் தாங்க முடியாது என்பது உறுதியானது.

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நான் மிக பெரும் தலைவர்களோடு நெருங்கி பழகி இருக்கிறேன்.

நிகழ் வாழ்க்கையில் அவர்களுடைய செயல்பாடுகள் அல்லது மனித தத்துவங்களில் இருந்த எளிமை இவற்றோடு நான் உறவு கொண்டிருக்கிறேன் என்றாலும் கூட அவர்கள் மேல் நான் வைத்த மதிப்பு மரியாதை  மக்கள் மீது அவர்கள் கொண்ட பரிவு  மேலும் தன்னை முன்னிறுத்தாமல்  கடமையை மட்டுமே செய்து விட்டுப் போன தொண்டுகள் யாவற்றிற்கும் நான் ஒரு சாட்சியாக இருக்கிறேனோ என்கிற ஐயமும் கூட எனக்கு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக பெருந்தலைவர் காமராஜர் என் கனவில் வருகிறார்.
“என்ன கோவில்பட்டி தம்பி!மாணவர்கள் போராட்டம் (1972 நினைவுகள்)எப்படி நடந்து கொண்டிருக்கிறது” என்று கேட்கிறார்.

பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் சிக்மகளூரில் இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நிற்கும்போது அன்றைய கர்நாடக முதல்வர் தேவராஜ் அர்ஸ் அவர்களை இந்திரா அம்மையார் சந்தித்து தனக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இன்றைய காங்கிரஸ் தலைவர் கார்கே நிறைய கோப்புக் கட்டுகளோடு ஜீப்பில் வந்து  அங்கே இறங்குகிறார்.  அங்கே நானும் நெடுமாறனும் நின்று கொண்டிருக்கிறோம்.

அன்றைய பொது நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ்நாட்டு நிலவரங்களை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் ஆங்கிலத்தில் நெடுமாறனிடம் கேள்வியாகக் கேட்கிறார்.
நானும் அதற்கான ஆவனங்களை கையில் வைத்துக்கொண்டிருக்கிறேன் இது உண்மையில் நடந்ததா அல்லது கனவில் நடந்ததா.

இன்னொரு பக்கத்தில் எம்ஜிஆரும் பிரபா சந்தித்துக் கொள்ளும் ஏற்பாட்டின் போது என்னிடம் எம்ஜிஆர் அவர்கள் “என்ன உங்களது தம்பி என்ன சொன்னாலும் சாப்பிட மறுத்து விட்டு நெருக்கடி நிலைமைகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். முதலில் அவரை சாப்பிடச் சொல்லுங்கள் என்று சிரித்தவாறே சொல்கிறார்.
இதுவும் ஒரு கனவாகத் தான்…

அன்றைய முதல்வர் ஜெயலலிதா இன்றைக்கு வந்து என்னிடம் நேரில் கேட்பது போல  “என்ன உங்களுக்கு வடசென்னை தொகுதியில்  நிற்க வாய்ப்பு கொடுத்தும்  நீங்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றம் செல்லவில்லை “என்று  கேட்கிறார்.

இத்தகைய மன ஓட்டத்தில் ஒருமுறை கவிதா ஹோட்டலில் எப்போதும் தங்கிப் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் அருமை கவிஞர் கண்ணதாசன் 
 என்னை பார்த்து” என்ன நைனா ” என்று அன்புடன் வினவுகிறார்.

கலைஞர், என் நல விரும்பிமுரசொலி மாறன், தமிழநாடு காங்கிரஸ தலைவர் ராகி மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர்
பி.ஜி. கருத்திருமன் என சில தமிழக வரலாற்று நாயகர்கள், சக முக்கிய ஆளுமையான நண்பர்கள் எனது கனவு உலகில்…. இப்படி பல காலமாக வைகறை பொழுதில்

நம்பவே முடியவில்லை நேற்றைய கனவில்  தமிழ்நாடு விவசாயகள் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு வந்து  தம்பு என என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

கனவு மெய்ப்பட வேண்டும் என்று என்பார்கள்.
எனக்கு யாவும் கனவிற்குள் மெய் பட்டு கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை இன்றைய அரசியல் மக்கள் சமூக வாழ்வு யாவும் கனவில்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பேன். அதில் மிகச் சிறந்த பழம் கனவுகளைக் கொன்று புதைத்து விட்டார்கள்.

ஒரு காலத்தில் இந்த சமூகத்தை அற்புதமாக மாற்றிய மாபெரும் தலைவர்கள் நம்மை விட்டு மறைந்து போனாலும்  உண்மையில் இதை மெட்டாஃபிஸிக்ஸ் என்று சொல்லுவார்கள். சுருக்கமாகச் சொன்னால் இறந்த பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகையினாலே அவர்கள் இப்பொழுதும் நமது வந்து கனவில் நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையான லட்சியவாதிகள் அவை நிறைவேறும் வரை அமைதி அடைய மாட்டார்கள். என்பதைத்தான் இந்த கனவில் நானும் அவர்களுடன் வாழ்ந்து பார்க்கிறேன்.
ஒருமுறை ஜெயப்பிரகாஷ் நாராயணன்  கனவில்…..

நிறைய  விஷயங்களை அவருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வாழ்நாளில் நான் சந்தித்த அத்தனை தலைவர்களுடன் இந்த கனவுலகில் நான் இப்போதும் வாழ்ந்தும் கொண்டு வருகிறேன். அந்த திருப்தி உள்ளது.

நிகழ் உலகத்தில் வாழ்வதன் போலித்தனங்களை விட கனவுலகில் சற்றேனும் உண்மையாக இருந்து அதை உணர்வது முக்கியமானது என்று கருதுகிறேன். அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வாய்ப்பு இருக்கிறது கடந்த ஒன்றரை மாதம் காலங்களாக இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அரசியலுக்கு மாற்றாக ஒரு அறம் சார்ந்த கூட்டு நல்லெண்ணங்களின் அடிப்படையில் நான் இந்த கனவுகளை மதிக்கிறேன்.
அவை  கடந்த ஒன்றை மாதங்களாக  மீண்டும் மீண்டும் வந்து என்னை இதப் படுத்தி அற்புதமான நிதானத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு வகையில் அவை யாவும் நிறைவேறிய கனவாகவும் இன்னும் நிறைவேற வேண்டிய அவசியத்தையும் கொண்டிருக்க கூடும். அத்தகைய கனவுகள்  தொடர்ந்து எனக்குள்ளே வந்து கொண்டிருப்பது   மகிழ்ச்சியானது மட்டுமல்ல ஒரு மனிதத் தன்மைக்கு ஒரு இதமான -அருட்கொடையுமாக இருக்கிறது.

#சிலசிந்தனைகள்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-12-2023.


No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...