Monday, December 18, 2023

#திருநெல்வேலி, #தூத்துக்குடி, #தென்காசி #கன்னியாகுமரியில் கனமழை: #பெரும்வெள்ளம். #தென்தமிழகம் ஊழிபெருமழை வெள்ளம்வடிந்து இயல்புவாழ்க்கை திரும்ப வேண்டும்

#திருநெல்வேலி, #தூத்துக்குடி, #தென்காசி #கன்னியாகுமரியில் கனமழை: 
#பெரும்வெள்ளம். 
#தென்தமிழகம் ஊழிபெருமழை 
வெள்ளம்வடிந்து
இயல்புவாழ்க்கை திரும்ப வேண்டும்

#தாமிரபரணி கரையோர கிராமங்களில் வெள்ளம் வர தொடங்கி இருக்கிறது 
குளங்கள் உடைந்து ஊர் நடுவே ஆற்றின் திசைக்கு வேகம் எடுக்கிறது பல கிராமங்களில்

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1871 இல் 29.2 செ.மீ மழை பதிவு..



1992 இல் பெருமழை, வெள்ளக்காடனது. தற்போது நேற்று இரவு  அங்கு 30 செமீ மழை பதிவாகியுள்ளது…. அதன் பின் நான்கவது பேய் அடை மழை.



தமிழ்நாட்டின் தென்பகுதி கடும் மழையால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தேனி-விருதுநகர் தெற்கே திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி என அது கன்னியாகுமரி வரை கடந்த மூன்று நாட்களில் கொட்டிய அதிகமான பெருமழையால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையைப் போல இதுவும் ஒரு பேரிடர் விஷயமாக மாறிவிட்டது.

இந்த கடும் மழையில் சாத்தூர் வைப்பாறு பெருகி வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதைத் தொடர்ந்து இருக்கன்குடி அணை. முத்தளாபுரம்  பாலம் உள்ளிட்ட அங்குள்ள கிராமங்கள்  -விவசாயம் பாதிப்பு.  சிவகாசி, கோவில்பட்டி, தூத்துக்குடி திருச்செந்தூர், சாத்தான்குளம்,ஶ்ரீவைகுண்டம்,  சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி,களக்காடு, வள்ளியூர் வரை குமரி மாவட்டங்களும் இக்கொடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வாழ்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது ஆற்றங் கரையோரப் பகுதி வாழ் மக்களுக்கு இன்னும் சொல்லொணாத் துயரங்கள். 153 வருடங்களுக்கு முன்பாக பெய்த இது மாதிரியான ஒரு பேய் மழைதான் தான் இப்பொழுது மீண்டும் பெய்கிறது என்கிறார்கள்.

காயல்பட்டினம் போன்ற சமவெளிப் பகுதியில் ஒரே நாளில் 932 மி.மீ மழை பெய்திருப்பது  வியப்பளிக்கிறது. இது அங்கு பெய்யும் ஓராண்டு மழை அளவைவிட அதிகம்.  அது வழக்கமாக புயல் தாக்கும் பகுதியுமில்லை. புயல், சூறைக்காற்று வராத பகுதி. வீரபாண்டியன்பட்டிணம் சதுப்புநிலம் கடலையும் தாக்காட்டிவிடும். ஆனால் இந்த மழைநீர் எங்கே போகும்? தரவுகளின் அடிப்படையில் இயங்கும் நீர் மேலாண்மை இத்தகைய எதிர்பாராத அளவுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பேரழிவாகிவிடும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்று நிகழும் என்று சமாதானம் கூறப்பட்டாலும் மனம் அச்சம் கொள்கிறது. காலநிலை மாற்ற அபாயத்தினால் வருங்காலத்தில் இந்தக் கால இடைவெளி குறையும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது. இதே அளவு மழை சென்னை போன்ற பெருநகரில் பெய்தால் நிலைமை என்னவாகும்? பெய்யாது என்பதற்கு யார் உறுதிமொழி வழங்க முடியும்?

1992 கடும் மழை, வெள்ளம் என பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதை போல 1992-ம் ஆண்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள், அதற்கு முன் இல்லாத வகையில் கடும் வெள்ளப் பாதிப்புகளை சந்தித்தது. 1992-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புயல்வெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.

இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது. அணைகள் உடையும் அபாயத்தை தவிர்க்க அன்று நள்ளிரவில் அணையை திறந்துவிட்டனர்.
2 லட்சம் கன அடி நீர்
3 அணைகளில் இருந்து திறக்கப்பட்ட வெள்ளத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையும் சேர்ந்துகொண்டதில் தாமிரபரணி ஆற்றில் 2.04 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. 

கடந்து போன அந்த மழையும் இந்தப் புத்தாயிரம் ஆண்டில் பெய்துள்ள இந்த மழையும் குறிப்பாக திருநெல்வேலியை உலுக்கி போட்டுள்ளது.

1992 இல் திமுகவின் நெல்லை மாவட்டம் வைகோ அவர்களின் பொறுப்பில் இருந்த போது மாவட்டச்  செயலாளராக  
 டி ஏ கே லட்சுமணன் பணியாற்றி வந்த வேளையில் இதே போன்ற ஒரு கடும் மழை காலத்தில் நாங்கள் அனைவரும் நிவாரணப்பணிகளை மேற்கொண்
டோம். முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலு, மைதீன்கான்,  பாளை குருநாதன் ஆலங்குளம் முருகையா, தூத்துக்குடி என். பெரியசாமி என பலர் களத்தில் அங்கே களப்பணியில் இருந்தோம். இடையில் ஒரு நாள் இன்றைய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வழக்கில் PFC கோர்ட்டில் சென்னை வந்து ஆஜர் ஆகிவிட்டு, கலைஞரை சந்தித்து விட்டு மாலை Nellai Express  நெல்லை திரும்பி நினைவுகள் உண்டு.

தேவையான மருந்து பொருட்கள் உணவு பொட்டலங்கள் என்று பகுதிவாரியாக பல இடங்களுக்கு சென்று அதை விநியோகித்தோம்.

நகராட்சி கட்டிடங்களிலும் நெல்லை பாபநாசம் போன்ற இடங்களில் பல சினிமா தியேட்டர்களிலும் மக்களை தங்க வைத்து அவர்களுக்கான முதல் உதவிகளை செய்ததும் உண்டு.
அந்நேரத்தில் நகராட்சி பகுதிகளில் நிறைய வெள்ளத்தில் அடித்து வந்த மலைப் பாம்புகள் போக  மேற்கு மலைத் தொடர்ச்சியில் இருந்து  வேரோடு விழுந்து உருண்டு வந்த மரங்கள் என நகரம் முழுக்க ஒரே வெள்ளக்காடாக இருந்தது.

வெள்ளம்  வடிந்த நாட்களுக்கு பின்னரும் மலை பாம்புகள் அங்கேயே தங்கி முட்டையிட்டு  அவை வெளியே வந்து  திரிந்ததை அன்னாள் செய்தித்தாளில் பிரசுரித்தார்கள்.

அந்த நேரத்தில் தான் கூடங்குளம் அணுஉலை கூடாது என்கிற போராட்டமும் வலுத்திருந்தது .

150 வருடங்கள் ஆயிற்று இன்று பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. இம்மாதிரியான காலங்களில் பெருகி ஓடிவரும் தாமிரபரணி நீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி அவற்றை சேகரிக்கக் கூடிய திட்டங்கள் உருவாகவில்லை.

தாமிரபரணி கருமேனிஆறு நம்பியாறு ஆகிய  நதிகளை இணைக்கும் திட்டமும் சரியாக முடிவுக்கு வர வில்லை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பெருக்கெடுத்து பாய்ந்து வரும்  தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் யாவும் விரைந்தோடி புன்னக்காயிலில்வங்கக் கடலில் கலந்து விடுகிறது.

இப்படியாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை,ராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுரி  என பல மக்கள் வாழும் பகுதிகள் பாழாகும் விவசாயம்  தொழில் மற்றும் அவர்களின் இருத்தல் யாவும் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும்  கதை ஒரு தீர்க்க முடியாத தொடர்கதை ஆகவே இருக்கிறது.

இந்த வெள்ளம் வடிய இன்னும் ஒரு வார காலமாகலாம். இயற்கையை மிஞ்ச இங்கு யாரும் இல்லை. அது வருடம் தோறும் தன்னுடைய கோர நாட்டியத்தை ஆடி விட்டு தான் போகிறது. இப்படியான இயற்கையிடமிருந்து நாம் பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். விஞ்ஞான பூர்வமான சிந்தனைகளோடு இந்த தொடர் மழை குறித்த முன்னெடுப்புகளை அதாவது எதிர்காலத்தில் இப்படியான பேரிடர்கள் வரும்போது முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை தொடங்கி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான செயல் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மற்றல்லாது நிவாரணப் பணிகளை உடனே தொடங்குவது இன்றைய மக்களுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருவேளை தற்காலிகமான ஆறுதலாக அமையலாம்.

இப்படி எத்தனையோ பேரழிவுகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்த மனித குலம் பிழைத்துத் தழைத்திருப்பதற்கான காரணம் மனிதனின் ஆற்றலோ கூருணர்வோ அல்ல. அவை இரண்டாம் பட்சமே. மனிதரின் ஒருங்கிணைக்கும் செயல் திறனே (organising skills) முதன்மைக் காரணம். ஒற்றைச் செயலை இலக்காக்கிப் பல பேரைக் கூட்டி,குவியச்செய்யும் திறனே அவனை வலுவான விலங்காக்குகிறது. பிற உயிர்களிடமிருந்து அவனைத் தனித்துக் காட்டும் இயல்பு அதுதான்.

பருவநிலை மாற்றம் குறித்து
இங்கு எவரும் கவலைகொள்வதில்லை.

அதன் தாண்டவகாலங்களில்
பேசுவதோடு அரசும் நிறுத்திக்கொள்கிறது ...

விழிப்புணர்வோ
மாற்றுவேலைத் திட்டமோ
மேற்கொள்ளாதவரை வேறுவழி ...?

நெல்லை....கன்னியாகுமரி.... தென்காசி...  தூத்துக்குடி மக்களுக்காக...

#TuticorinRains #Kanniyakumari #TirunelveliRains #Tenkasi #TNRains

#தென்தமிழகம்_ஊழிபெருமழை_வெள்ளம்
#தாமிரபரணி
#nellai_rain
#nellaifloods
#திருநெல்வேலி #வைப்பாறு
#தூத்துக்குடி

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-12-2023


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...