#நகுலனின் இறுதிச் சடங்குகள் திருவனந்தபுரம் தைக்காடு பொது மயானத்தில் நடைபெறும் என்று சொல்லப்பட்டது. அங்கே சென்று காத்திருந்தேன். நகுலனின் நண்பரும் மலையாள எழுத்தாளருமான ஜி.என்.பணிக்கரும் உடனிருந்தார். மறைந்த ஆத்மாவை எழுத்தாளராக அறிந்தவர்கள் நாங்கள் மட்டுமாக இருந்தோம். மற்றவர்களுக்கு அவர் துரைசாமி சாராக மட்டும் அறிமுகமாகியிருந்தார். யாருக்கான இறுதிச் சடங்கு என்று என்னிடம் கேட்டவரிடம் ‘நகுலன் சாருக்கானது’ என்றேன். ‘’ மன்னிக்க வேண்டும். இது டி,கே,துரைஸ்வாமி சாருக்கென்று நினைத்தேன்’’ என்றார். இருவரும் ஒருவரே என்று அரும் பாடுபட்டு நிரூபிக்க வேண்டியதாயிற்று. ஆனால் இறுதிச் சடங்கு கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டு கரமனை துளு பிராமண மயானத்தில் நடத்தப்பட்டது. உயிருடன் இருந்திருந்தால் நகுலன் அதற்கு இசைந்திருக்க மாட்டார் என்று தோன்றியது.
இரண்டாவது சந்திப்பில் நகுலனிடம் கேட்ட கேள்வி எப்போதும் நினைவில் இருக்கும். ‘’ சார், திரிசடை உங்கள் சகோதரி. அவருடைய இயற் பெயர் சாந்தா. கே. சாந்தா. ஆனால் உங்களுக்கு மட்டும் எப்படி இரட்டை இனிஷியல் வந்தது. டி.கே.யின் விரிவாக்கம் என்ன?’’
என் கேள்விக்கு நகைச்சுவைத் துணுக்கைக் கேட்டதுபோல நகுலன் பெரும் சிரிப்புச் சிரித்தார். பிறகு பேசினார். ‘’ சிலரையெல்லாம் பேரைச் சொல்லாம இனிஷியலைச் சொல்லிக் கூப்பிடுவோமில்லையா? க.நா.சுப்ரமணியத்த கே.என்.எஸ்னுதான் சொல்லுவோம். அந்த மாதிரி என்னை எப்படிக் கூப்பிடுவா? என் பெயர் கே.துரைஸ்வாமி. அப்பா பேரு கிருஷ்ணன். அதனால கே. அப்ப என்னைக் கே.டி.ம்பா இல்லையா? அதனாலதான் டி.யை மொதல்ல போட்டேன். அப்பாவோட ஊரு. திருவனந்தபுரம். இந்த ஊருதான் நான் கேடியாகாமக் காப்பாத்திச்சு’’ என்று மீண்டும் சிரித்தார். இதை ஆவணப் படத்திலும் சொல்லியிருக்கிறார்.
இப்போதும் புதிய இலக்கிய நண்பர்களிடம் நகுலனைப் பற்றிப் பேசும்போது அவருடைய இயற் பெயரைச் சொல்ல நேர்ந்தால் ‘’திருவனந்தபுரம் கிருஷ்ணன் துரைசாமி… டி.கே.துரைசாமி’’ என்று நீளமாகவே சொல்வேன். ஒரு நகரம் எழுத்தாளனால் நினைக்கப்படுகிறது என்பதைப் பாராட்டவே அதைச் செய்கிறேனா? இல்லை, பின்வரும் அவரது கவிதையை நினைவுகூர்கிறேனா?
இப்பொழுதும்
அங்குதான் இருக்கிறீர்களா
என்று
கேட்டார்
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்
என்றார்.
-கவிஞர் சுகுமாரன்
நன்றி: திணைகள்
No comments:
Post a Comment