Thursday, January 5, 2023

*அன்னம் - அகரம் வெளியிட்ட கிராவின் முழுத் தொகுப்புகள்*.



—————————————
அன்னம் - அகரம் வெளியிட்ட கிராவின் முழுத் தொகுப்பு நூல்களை தஞ்சையிலிருந்து கதிர் அனுப்பி வைத்திருந்தார். இன்று (05.01.2023) கையில் கிடைத்தது. சிவகாசியில் காலண்டர் வேலை அதிகமாக இருந்ததால், அங்கே இந்நூல்கள் அச்சடிப்பது தாமதமாகி,  முழுத் தொகுப்பும் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்று கதிர் கூறினார்.




#ksrpost
5-12-2022.

‘ஸ்ரீமத் மகாபாரத அம்மானை’ என்ற நூல் 1933 - இல் மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளி வந்துள்ளது.

‘ஸ்ரீமத் மகாபாரத அம்மானை’ என்ற நூல் 1933 - இல் மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இந்த நூலை மதுரகவி பி.நடராஜபிள்ளை அவர்கள் திருத்தி அமைத்து வெளியிட்டுள்ளார். 

மதுரை விவேகானந்தா அச்சகத்தில் பழ.நெடுமாறனுடைய பாட்டனார் மறைந்த கிருஷ்ணனார் அவர்கள் மூலமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
 மதுரை மேலமாசி வீதியில் பழ.நெடுமாறனுடைய பாட்டனார்,  பழ.நெடுமாறனின் தந்தை பழநியப்பனார் பொறுப்பில் அந்த அச்சகத்தை நடத்தி வந்தார். பாரம்பரியமாக விவேகானந்தர் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் விவேகானந்தா காலண்டரின் வயது நூற்றாண்டுக்கும் மேலானது. அதே போல திருநெல்வேலி வாக்கிய தமிழ்ப் பஞ்சாங்கமும் இங்கு அச்சடிக்கப்படுவதுண்டு. விவேகானந்தா காலண்டரும் திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கமும் சிறு வயதிலிருந்தே  எங்கள் வீட்டில் வாங்குவதைத் தொடர்ந்து பார்த்துள்ளேன்.

நெடுமாறனுடைய தந்தையார் பழநியப்பனார் மதுரையில் திருவள்ளுவர் கழகத்தைத் தொடங்கியவர். அதுமட்டுமல்ல, பி.டி.ராஜனுடன் இணைந்து அழகர்கோவிலில் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலையை நிர்மாணித்தவர். இந்த நூலின் பதிப்பாளரான எம்.பழனியாண்டி அண்ட் கோ நிறுவனத்தின் புத்தகக் கடை, இன்று வரை மதுரை புதுமண்டபத்தில் இயங்கி வருகிறது.
Ancient MaduraiEnga Madurai

#ksrpost
#கேஎஸ்ஆர்
5-1-2023


Wednesday, January 4, 2023

#*எஸ்.எஸ்.வாசன்* ஆனந்தவிகடன், ஜூவி

#*எஸ்.எஸ்.வாசன்* 
(04 ஜனவரி 1903
26 ஆகஸ்ட் 1969) 

1926-ல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' 1928-ல் எஸ். எஸ். வாசன் வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்தார்.90 ஆண்டுகளாக  ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவர் மறைவுவரை மாநிலங்களவை உறுப்பினராகப் (எம்பி)பதவி வகித்தார்.



ஆனந்தவிகடன், ஜூவி போன்றவை பாலசுப்பிரமணியன், மதன்,  ராவ், சுதாங்கன், அசோகன் ஆகியோர் இருந்த காலத்தில் சோபித்தன.  கி.ராவை ஜூவியில் ‘கரிசல் காட்டு கடுதாசி’யை எழுத வைத்ததில் அடியேனுக்கு முக்கிய பங்கு உண்டு. பின் கி.ரா. சில தொடர்களையும் எழுதினார். மாதம் ஒருமுறை பாலசுப்பிரமணியனை சந்திப்பது வாடிக்கையாகவும்   இருந்தது. 



 இன்றைக்கு விகடனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது யார் அங்கே பத்திரிகையாளர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது இந்த இதழ்களும் அப்போது போல ஜொலிக்கவும் இல்லை; சோபிக்கவும் இல்லை. சொல்ல வேண்டியது என் கடமை.

#ksrpost
4-1-2023

#*கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வே: பாதிப்பை உணராத தமிழகம்*!

#*கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வே:
பாதிப்பை உணராத தமிழகம்*! 
என்ற எனது கட்டுரை இன்றைய (4-1-2023)
தினமணியில்……
—————————————
கண்ணகி கோவில் சிக்கலைக் குறித்து தேனியிலிருந்து பேசிய நண்பர்கள் கண்ணகி கோயில் பிரச்னை மட்டுமல்ல, முல்லைப் பெரியாறு பிரச்னை, தற்போது கேரள அரசு அத்துமீறி தமிழக பகுதிகளில் நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து வேதனையோடு குறிப்பிட்டனர். தேனி பகுதியில் போராட்டங்களும் நடந்துள்ளன. தமிழக அரசு இதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இதுவரை சரியாக எடுக்கவில்லை என்றும் கூறினர்.

ஒருமாதத்துக்கு முன்பே எனது சமூக வலைதளங்களிலும் என்னுடைய காணொலி சேனலிலும் இது குறித்து கருத்துத் தெரிவித்து இருந்தேன். ஆங்கில இந்து, தமிழ் இந்து  போன்ற நாளேடுகளில் மட்டும் இல்லை, ஜீனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய வார ஏடுகளும் டிஜிட்டல் குறித்தான எனது கருத்தை வெளியிட்டிருந்தன.
தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இந்த பிரச்னை சரியாகப் பிடிபடவில்லை என்று தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து அவர் பேசும்போது, கேரள அரசு அளந்து முடிந்த பிறகு நாங்கள்  உட்கார்ந்து பேசுவோம் என்கிறார். கேரள அரசு அனுப்பிய தாக்கீது கூட, எங்களைப் போன்றவர்கள்இது குறித்து கருத்துகள் தெரிவித்தபின்தான் அவருக்கே தெரிய வருகிறது. என்ன சொல்ல?
தமிழக – கேரள எல்லைப் பகுதியில் எந்தவித டிஜிட்டல் ரீசர்வே பணிகளும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தரப்பில் முதலில் கூறப்பட்டது. இது குறித்து வருவாய்த் துறை செயலர் விளக்கச் செய்திக்  குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை வட்டத்தினைச் சேர்ந்த  சின்னக்கானல், சதுரங்கப்பாறை,சாத்தான்பாறைகிராமங்களில் டிஜிட்டல் நில அளவைப் பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படஉள்ளதாகவும், கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமையப் பெற்று உள்ளதால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளைச் சரி பார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனிமாவட்டம் நிலஅளவைப் பதிவேடுகள் துறை
உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.   
மேற்படி கூட்டு ஆலோசனைக் கூட்டம்நடத்துவதற்கான தேதியினை முடிவு செய்து அந்த தகவலினை கேரளா மாநிலம் தொடு புழாமறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு வரைவு மூலம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுவரை தமிழக – கேரள இரு மாநில பொது எல்லையில் எவ்விதமான  டிஜிட்டல் நில அளவைப்  பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும்,தமிழக வனச் சரகர்கள் இருமாநில பொது எல்லையில்  கேரள அரசினால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட வேண்டும் என்று தேனி மாவட்ட  நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலரின்  செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமாநில வருவாய்த்துறை, வனத்துறை அதிகாரிகளின் மூலம் ரீ சர்வே செய்வதுதான் முறையானது.
கேரள அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வேயினால்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் பறி போகும் அபாயம் உள்ளதாக பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
கேரள அரசின் நில அளவைப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில்,  கேரள அரசு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட14கேரள எல்லையோர மாவட்டங்களிலுள்ள  200 கிராமங்களில் டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் இடங்களை அறிவித்திருக்கிறது. இந்த சர்வே பணியில் தற்காலிகமாக தேர்வுசெய்யப்பட்ட 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள், 4 வருடங்களில் தொடர்ச்சியாகப் பணி செய்து டிஜிட்டல் ரீ சர்வே பணியை முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.
கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளாவின் 15 தாலுகாக்களில்  தமிழகத்திற்குச் சொந்தமான  நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும், தமிழகத்தின்எல்லையோர மாவட்டங்களில் அதிக அளவில்  தமிழக வன நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் கூறி ‘பெரியாறு வைகை பாசன சங்கத்தினர் ’  தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், திருவிதாங்கூர்,கொச்சி, மலபார் மாகாணங்களுக்கும், தமிழகத்திற்கும் எந்த முரணும் இல்லாததால், 1956 -இல் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழக - கேரள எல்லைகள்  முழுமையாகப் பிரிக்கப்படவில்லை.
பசல் அலி தலைமையிலான கமிஷன் (1956) மொழிவாரியாக மாநில எல்லைகளைப்  பிரிக்கச் சொன்னது. ஆனால் முறையாக, கமிட்டிகொடுத்த வரையறையின் அடிப்படையில்‘தமிழக கேரளா எல்லைகள்’பிரிக்கப்படவில்லை. கடந்த 1956 - இல் தெற்கே நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு பகுதிகள் என பல பகுதிகளை கேரளாவிடம் நாம் இழந்திருக்கிறோம். அதைப் போலவே கர்நாடகத்தில் கொள்ளேகால், குடகுபகுதிகள், கோலார் போன்ற தமிழக எல்லையோர பகுதிகளைத் தமிழகம் இழந்தது. ஆந்திரத்தில் நெல்லூர் மாவட்டத்தில் சில பகுதிகள், திருப்பதி, காளஹஸ்தி, சித்தூர் மாவட்டத்தில் சில பகுதிகளை இழந்தோம்.
மத்திய அரசு பண்டித நேரு அமைத்த பசல் அலி குழுவில் தமிழகப் பிரதிநிதிகள் யாரும் இடம் பெறவில்லை. கே.எம்.பணிக்கர் கேரளாவைச் சேர்ந்தவர். குன்ஸ்ரூ வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்ல, பிரதமர் நேருவின் அலுவலகத்தில் அன்றைக்கு கிருஷ்ணமேனன், மத்தாய் மற்றும் எம்.ஜி.மேனன் போன்றோருடைய லாபி கேரளாவுக்கு சாதகமாக, அழுத்தமாக இருந்தது. இதனால் ஏற்கெனவே கேரளாவிடம் தமிழகம் தனக்கு உரிமையான பல பகுதிகளை 1956 - இல் இழந்துள்ளது.
தமிழக - கேரள எல்லையின் தூரம்  822 கிலோ மீட்டர்.  அதில் பாதியைக் கூட இதுவரை இரு மாநில அரசுகளும் அளக்கவில்லை. இப்படி எல்லைகள் அளக்கப்பட்டு சரியான வரையறை செய்யப்படாதநிலையில், தமிழக – கேரள அரசுகளின் கூட்டுமுயற்சியாக இல்லாமல், கேரள அரசு மட்டும் இந்த டிஜிட்டல் ரீ சர்வே செய்யும் முயற்சியில் இறங்கினால், தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள மிகப் பெரிய நிலப்பரப்புகளை தமிழகம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
2017 - இல் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் தேவிகுளம் சப் கலெக்டர் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு சர்வேயில், கம்பம் மெட்டில் உள்ள கேரள போலீஸ் சோதனைச்சாவடி தமிழக எல்லைக்குள் வருகிறது என இரு மாநில அதிகாரிகளும் இணைந்து அளவீடு செய்தனர். ஆனால், இன்று வரைக்கும் கேரளா சோதனைச்சாவடியின் இடம் கேரள எல்லைக்குள் மாற்றப்படவில்லை. இப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட கேரள அரசின் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால், சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் வரையுள்ள, தமிழகப் பகுதிகளை இழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மூணாறில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்துவதற்கு கொடுக்கப்பட்ட 5 சென்ட் நிலத்தையும் தற்போது கோளா அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கேரளாவிற்கு சொந்தமான நிலம் தமிழக அரசால் அவர்களுக்கு  கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை கேரளாவின் சொத்து.  குற்றாலத்தில் 64 ஏக்கர் நிலம் கேரளா அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்  இருக்கிறது. செங்கோட்டை அருகே 24 ஏக்கர் நிலம் கேரள வனத்துறையினரின் வசம் உள்ளது. தமிழக அரசுக்கு கேரளாவில்  ஒரு துண்டு நிலம் கூட இல்லை.
தேவிகுளம் தாலுகாவில் உள்ள டாடா வசம் உள்ள  கண்ணன் தேவன் தேயிலை தோட்டங்களை மறு அளவீடு செய்ய வேண்டும் என்ற கடந்த 2004 - ஆம் ஆண்டு கேரள தமிழர் கூட்டமைப்பு ஒரு  கோரிக்கையை முன் வைத்தது. கோரிக்கை சட்டமன்றத்தில் விவாதமாக எழுந்த நிலையில், கடந்த 2006 - ஆம் ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில், அன்றைக்கு கேரள மாநில முதல்வராக இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன்  சட்ட மன்றத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி டாட்டா வசமுள்ள நிலங்களைசர்வே செய்ய  மூத்த  ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடைய மேற்பார்வையில் ஏஜென்சி நியமித்து ஓராண்டுக்குள் மறு அளவீடு செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்புநடைமுறைப்படுத்தப்படவில்லை.

1956- இல் நடத்தப்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின் போது தமிழக, கேரளா எல்லையோர கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை நாணல் காடுகளாகவும், அட்டைக் காடுகளாகவும் வகைப்படுத்தி, அதில் மலையாளிகளை வலுக் கட்டாயமாக குடியேற்றினர். அப்படி குடியேற்றப்பட்டவர்கள்,  தமிழக -கேரள எல்லையில் உள்ள, தமிழகத்திற்கு சொந்தமான வனநிலங்களை வருவாய் நிலங்களாக மாற்றி, கேரளாவில்அந்த நிலங்களுக்கான பட்டாவை முறையாகப் பெற்று தங்களுக்குரியதாக மாற்றிக் கொண்டுவிட்டனர்.  
இப்படிப்பட்ட பல சிக்கல்கள் இருக்கும்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களை மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார். இது உண்மையிலேயே கண்டனத்திற்கு உரியது.
1905-இல் மீன் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகள். 1966 - இல் நடத்தப்பட்ட மறுஅளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகள் எனஎதைப் பற்றியும் கவலைப்படாமல், டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப் போகிறோம் என்று கேரள மாநில அரசு அறிவித்திருக்கிறது.
கேரள அரசு இது தொடர்பாக ஒரு விரிவான தீர்வு சட்டத்தைத் தயாரித்து வருவதாகவும், அதன் வரைவு வரவிருக்கும். சட்டமன்றத் தொடருக்குப் பின்னர், பொது விவாதத்திற்கு வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் அறிவித்திருக்கிறார். 
இப்போது புதிய மறு அளவீட்டின் விவரங்களை Real Time Kinematic இயந்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக இயங்கும் CORS குறிப்பு நிலையங்களின் நெட்வொர்க் போன்ற சேவைகளின் மூலம் உடனடியாக இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கேரள அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல, தாசில்தாருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நில மறு அளவீடு தொடர்பாக கொடுக்கப்பட்ட உரிமைகளை கேரள மாநில அரசு ரத்து செய்திருக்கிறது.  
கேரள அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக, பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர், கேரள அரசு நடத்தும் சர்வேயால் தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் குறித்து தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று  தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை சந்தித்து கேட்டுக் கொண்டனர். அதுமட்டுமின்றி,  இது தொடர்பான தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மனுவாக அளித்தனர். 
கேரள அரசு நடத்தும் டிஜிட்டல் ரீ சர்வே முறை குறித்து தொடர்ந்து
அச்சம் நிலவி வந்த நிலையில், தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தை உள்ளடக்கிய ஆனைக்கல்லுக்கும் பாப்பம்பாறைக்கும் இடைப்பட்ட பகுதி இடம் கேரள அரசுக்கு சொந்தமானது என்று போர்டு வைக்கப்பட்டது. அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,டிஜிட்டல் ரீ சர்வே தொடங்கி பல நாட்கள் ஆகியும் தமிழக அரசு அதன் மீது எந்த கவனமும் செலுத்தவில்லை என்ற அதிருப்தியை தமிழக மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. “தமிழக அரசின் மீது நாங்கள் வைத்துள்ள. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
டிஜிட்டல்  சர்வே தொடர்பாக, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எங்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை” என்று  பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.  
“இடுக்கி மாவட்டத்தில் டிஜிட்டல் ரீ சர்வேக்காக 18 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அரசுக்கு முறைப்படி தெரிவித்தோம். அதில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் பாறத்தோடு, சாந்தம்பாறை, சதுரங்க பாறைஆகிய மூன்றும் பட்டியலில் இருக்கிறது என்பதையும் அறிவித்தோம். தேவாரம் கிராமத்தை ஒட்டி இருக்கும் சாக்கலூத்து மெட்டு டிஜிட்டல் சர்வே அளவீட்டிற்குள் வருகிறது என்பது தெரிந்தும், தமிழக எல்லையில் உள்ள வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. 
ஜமீன் ஒழிப்பிற்கு பிறகு, ஜமீன்தார்கள் கைவசம் இருந்த நிலங்கள் அத்தனையும் வனத்துறைக்கு ஒரு பகுதியும், வருவாய்த்துறைக்கு ஒரு பகுதியும் பிரித்துக்
கொடுக்கப்பட்டது.ஜமீன்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை இரண்டு துறைகளுமேமுறையாகப் பராமரிக்கவில்லை” என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழகத்தின் வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய துறைகள் முறையாக பதிவேடுகளைப் பராமரிக்காததால், ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களை கேரளா Double Entry (இரட்டை பதிவு) மூலம் கையகப்படுத்தி வைத்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 
வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, ஜமீன் பட்டா அடிப்படையில்தான்.இன்றைக்கும் ஒரு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால், சுதந்திரத்திற்கு பிந்தைய யூடிஆர் எனப்படும் ‘அ’ பதிவேட்டின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவதில்லை. ஜமீன் பட்டா அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதை  தமிழக வருவாய்த்துறை செயலாளர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய மாநிலத்தை கேரளா அரசு தன்னிச்சையாக சர்வே செய்வதற்கு அது ஒன்றும் தனித்தீவு அல்ல. தமிழகம் மற்றும் கர்நாடகாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு மாநிலம். 
காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் கர்நாடகாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரள மாவட்டங்கள். மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் எல்லையை கேரளா டிஜிட்டல் ரீ சர்வே செய்யும்போது, கர்நாடக மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல், எல்லையை அளக்க முடியாது. அதே நடைமுறையை ஏன் தமிழகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களிலும், டிஜிட்டல் ரீசர்வேகுழு கடைப்பிடிக்க வேண்டும்.  
தமிழகத்தோடு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கேரளாவில் உள்ள 16 தாலுகாக்களான, கட்டக்கடை, நெய்யாற்றின் கரை, நெடுமங்காடு, புனலூர், கோணி, பீர்மேடு, உடுமஞ்சோலை, தேவிகுளம், சித்தூர், பாலக்காடு, மன்னார்க்காடு, நிலம்பூர், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான், பத்தேரிஆகியவற்றில் கேரளா நடத்தவிருக்கும் ரீ  சர்வே பணிகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட 15 தாலுகாக்களில் எல்லையை அளவீடு செய்வதற்கு முன் இரண்டு மாநில கூட்டு கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றில் எதைப் பற்றியும் கவலைப்படாமல், கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே செய்து முடித்த பிறகு அதைப் பற்றி இருதரப்பினரும் பேசுவோம் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கூறியிருப்பது, பொறுப்பான, அக்கறையான பேச்சாகஇல்லை.
ஏற்கெனவே கேரளாவிடம் பலவற்றை நாம் இழந்திருக்கிறோம். தெற்கே குமரி மாவட்டம் நெய்யாறு அணையில் தொடங்கி செண்பக வல்லி, அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு,கொங்கு மண்டலத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம் திட்டம் வரை பத்துக்கும் மேலான நதிநீர்ச் சிக்கல்களில் கேரளா பிடிவாதமாக உள்ளது. தமிழகத்துக்கு வர வேண்டிய நீர்வரத்தும் இதனால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. நதிநீர்ச் சிக்கல்கள், கண்ணகிக் கோவில் பிரச்னை, தமிழக எல்லையோரங்களில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுதல் என பல தொடர் சிக்கல்களை கேரளா உருவாக்கி வருகிறது.
கடந்த 2002 - இல் எதிர்கட்சித் தலைவராக  இருந்த அச்சுதானந்தன் தென்காசி அருகே உள்ளே தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ள செங்கோட்டை அடவி நயினார் அணையை இடிக்க கடப்பாரை மண்வெட்டியோடு வந்தது எல்லாம் உண்டு. அதே காலகட்டத்தில் குமரிமாவட்டம் களியாக்கவிளை எல்லையோரப் பகுதிகளில் உள்ள தமிழக கிராமங்களிலேயே கேரள அரசு தனது ரேஷன் கார்டுகளை வழங்கியதும் உண்டு. கடந்த 7 - 8 ஆண்டுகளுக்கு முன்னால் அட்டப்பாடி பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேற வேண்டும்என்று சிக்கலும் எழுந்தது.
அண்டை மாநிலத்துக்கு கேரளா ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றாலும் கேரள சட்டமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் கொடுக்க வேண்டும் என்று ஒரு வினோதச் சட்டத்தையும் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். எந்தவொரு மாநிலமும் இதுபோன்ற சட்டத்தை இதுவரைஇயற்றியதில்லை. இப்படியான சூழலில் திரும்பவும் தமிழகப் பகுதிகளில் விவசாய நிலங்களை அபகரிக்கக் கூடிய டிஜிட்டல் ரீ சர்வே செய்ய கேரள அரசு முனைந்துள்ளது. இது கண்டனத்துக்கு உரியதாகும்.
அரிசி, பருப்பு, காய்கறிகள், சிமெண்ட், தமிழ்நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிற மணல் முதலிய அத்தனையையும் பெற்றுக் கொண்டு, இவ்வளவு நெருக்கடிகளைத் தமிழகத்துக்குக் கேரளா ஏற்படுத்துகிறது.கேரளாவின் இந்தபிடிவாதப் போக்கு நல்லதல்ல.
இந்திய துணைக் கண்டத்தில் கூட்டாட்சி என்ற சமஷ்டி முறைக்கு ஏற்றவாறு மாநில அரசுகள் நடந்து கொண்டால்தான், ‘பன்மையில் ஒருமை ’ ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது உண்மையும் ஆகும்; உறுதியும் ஆகும்.
தமிழக முதல்வர் இதில் நேரடியாக கவனத்தைச் செலுத்தி கேரளாவின் மறு நில அளவையால் தமிழ்நாடு பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

கட்டுரையாளர்:அரசியலார்

#கேரளாவின்_டிஜிட்டல்_ரீ_சர்வே

#K.S.Radhakrishnan #கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்

#ksrpost
4-1-2023




Tuesday, January 3, 2023

ஜே.கிருஷ்ணமூர்த்தி.

இன்று,  ஜே.கிருஷ்ணமூர்த்தியின்
இல்லமான வசந்தவிகாருக்குச் சென்றேன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்
3-1-2023.




#K.S.Radhakrishnan #கேஎஸ்.இராதாகிருஷ்ணன் #கேஎஸ்ஆர் #தமிழக அரசியல். #நினைவுகள்…

#K.S.Radhakrishnan #கேஎஸ்.இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்
#தமிழக அரசியல்.
#நினைவுகள்….
#ksrpost
3-1-2023


https://youtu.be/qNXAyTWbACQ


#*அஞ்சா சிங்கம் கட்டபொம்மன் பிறந்தநாள்*

#*அஞ்சா சிங்கம் கட்டபொம்மன் பிறந்தநாள்*
—————————————

இன்றைக்கு எங்கள் தெற்குச் சீமையின் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள். காலையிலிருந்து பல்வேறு பணிகளில் இருந்ததால் அவரை குறித்து விரிவான பதிவுகள் உடனடியாக செய்ய முடியவில்லை. 

veerapandiya kattabomanan
அழகிய வீரபாண்டியபுரம் என்னும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சி புரிந்து வந்த ஜெகவீர பாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம் பெற்றிருந்தார். 

இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம். பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு என்னும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. 
ஜெக வீரபாண்டியனின் மறைவிற்குப் பின் அரச கட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன். 

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீரகட்டபொம்மன், ஆறு முகத்தம்மாள் தம்பதியர்.

இவர்களின் புதல்வரே வீர பாண்டியன் என்ற இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

நான் பதிப்பாசிரியராக கொண்டு உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட ஜெகவீர பாண்டியனாரின் 'பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' இன்ற இரண்டு பகுதிகள் அடங்கிய விரிவான நூலுக்கு நான் எழுதிய பதிப்பாசிரியர் உரையிலேயே கட்டபொம்மனின் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளலாம். 
எனது பதிப்பாசிரியர் உரையிலிருந்து சில பகுதிகள்...  
 வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் பராக்கிரமும் ஆளுமையும் வெள்ளையர்களை அஞ்ச செய்த பெருமைகளையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கெட்டிபொம்மு என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கட்டபொம்மன் என்று பெயர் வழங்கப்பட்டது. தந்தை ஜெகவீரகட்டபொம்மனுக்குப் பின்பு 1790 பிப்ரவரி 2- ஆம் தேதி 30 வயதில் மன்னனாக முடிசூட்டப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தளவாய் குமாரசாமி (ஊமைத்துரை), துரைசிங்கம் (சுப்பையா) என்ற தம்பியர் இருவர் இருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி வீர சக்கம்மாள் ஆவார். கட்டபொம்மன் தமது முப்பதாம் வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரசர் ஆனார். தம்பியர் இருவரை இளவரசர்களாகவும், தனக்கு அமைச்சராகச் சிவசுப்பிரமணியம் பிள்ளை, தளபதியாக வெள்ளையத்தேவனை நியமித்தார். வீரர் சுந்தரலிங்கம் கட்டபொம்மனின் அணியில் இருந்து சாதனைகள் படைத்தார்.
கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் முதலில் 96 ஊர்கள் இருந்தன. அவை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அவை கவுனகிரி, பசுவந்தனை, புதியம்புத்தூர், ஆதனூர், வேடநத்தம், பட்டணமருதூர் என்பனவாகும்.
இவைகளைக் காக்க தளக்காவல், திசைக்காவல் படைகளைக் கட்டபொம்மன் திறம்பட அமைத்து செயல்பட்டார்.
இதனால் வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய குற்றங்கள் குறைந்தன. மதுரை நாயக்கர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட எழுபத்திரண்டு பாளையங்களில் திருநெல்வேலிச் சீமையில் மட்டும் முப்பது பாளையங்கள் இருந்தன. அவையும், மற்ற பாளையங்களும் இவரிடம் தொடர்பு கொண்டு இவருக்கு இணங்கி நடந்தன. பாளையங்களுக்குள் ஏற்படும் குழப்பங்களையும், பிறங்கடையுரிமைப் போர்களையும் கட்டபொம்மன் தீர்த்து வைப்பார். நாயக்க மன்னர்களும் கட்டபொம்மன் மரபினருக்கு மதிப்பளித்தனர்.
இக்கால முறைப்படி இவரிடமிருந்த வீரர்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். இவரிடம் 6,000 நாயக்க வீரர்களும், 5,000 மறவர்களும், 3,000 பிறவினத்தவரும் பட்டாணியர், கவுண்டர், கவரையர், வலையர் முதலிய இனத்தைச் சேர்ந்த வீரர்களும் இருந்தனர். வாள், வேல், வல்லயங்கள், கம்புகள் ஆகிய படைகள் வகைக்கு ஆறாயிரம் வில், கவண் தலிய படைகளுமாக மொத்தம் இருபதாயிரத்திற்கும் மேலிருந்தன. குதிரைகளும், யானைகளும், ஒட்டகங்களும், காளைகளும், செம்மறிக் கிடாய்களும், வேட்டை நாய்களும் கூட இவர் படையில் இருந்தன. எண்பது கோட்டைகள் இவருடைய ஆளுமையிலிருந்தன.
ஆங்கிலேயர் கி.பி.1792 –இல் ஆர்க்காட்டு நவாபுக்கு உட்பட்டிருந்த திருச்சி, திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்த ஊர்களில் வரித்தண்டல் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றனர். தண்டலுக்கு ஏற்ற வகையில் இப்பகுதிகளிலிருந்த நிலங்கள் முழுவதும் அளக்கப்பட்டதோடு, தரம் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் ஆங்கிலேயருக்கு அடங்கி நடப்பவர்கள் பெரிதும் நன்மையடைந்தனர். இப்பணியை மேற்கொண்ட படைத்தளபதி லெப்டினென்ட் கர்னல் மேச்சுவல் என்பவர் பாஞ்சாலங்குறிச்சிக்கு உட்பட்டிருந்த ஆதனூர் பகுதியிலிருந்த அருங்குளம், சுப்பலாபுரம் ஆகிய இரண்டு ஊர்களை எட்டயபுரத்து எட்டையப்பனுக்குக் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சியிலிருந்தே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் பகைமை மூண்டது. மேலும், கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் ஆங்கிலேயர்களைக் கண்டு வணங்காமலும், ஆறு ஆண்டுகள் வரி கொடாமலும் இருந்து வந்தார். இது பகையை மேலும் வளர்த்தது. ஆங்கிலேயர்கள் மைசூர்ப் போர்களிலும், வங்காளப் போர்களிலும், கருநாடகத்திலும், மராட்டியத்திலும் எந்த எதிர்ப்புமின்றி வளர்ச்சியடைந்தனர். மூன்றாம் மைசூர்ப் போருக்குப் பின் 1792 - இல் சீரங்கப்பட்டணத்தில் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பின்னரே ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் மீது ஆளுமை பெற்றனர். 1785 - இல் இராமநாதபுரமும் வேறு சில இடங்களும் இவர்களின்கீழ் வந்தன. மணப்பாறையை ஆண்ட இலக்குமண நாயக்கருடைய பாளையமும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. பழநி பாளையக்காரர் திண்டுக்கல் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். 1796 – இல் சங்கம்பட்டி, மடூர், ஏற்றி வடூர் முதலிய ஊர்களையும் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இவ்வாறு ஏதாவதொரு குற்றம்சாட்டப் பெற்றுப் பாளையங்கள் பலவற்றையும் ஆங்கிலேயர் கம்பெனி ஒடுக்கும் ஆணைகளை இட்டதோடு ஒடுக்கி, அடக்கும் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டது. பாளையக்காரருக்கு முதுகெலும்பாக விருந்த மைசூரும் (ஐதரும், திப்புவும்) கடைசியாக நான்காம் மைசூர்ப் போரில் (1799) ஒடுக்கப்பட்டுவிட்டது.
கட்டபொம்மன் கிஸ்தி வசூலிக்க வந்த மாக்ஸ்வெல், ஆலன் ஆங்கிலேயரை எதிர்த்தது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.
ஆங்கிலேயருக்கு ஆதரவாகவும் கட்டபொம்மனுக்கு எதிராகவும் இருந்த எட்டயபுரம் எட்டப்பனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1798 - இல் நெல்லைக்கு கலெக்டராக வந்த ஜாக்ஸன் தன்னைச் சந்திக்க கட்டபொம்மனைக் கேட்டபொழுது, கலெக்டருடைய உத்தரவைக் கட்டபொம்மன் தூக்கி எறிந்தார்.
கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வதே தன் பிறப்புரிமை என்றார். வானம் பொழி கிறது; வையகம் விளைகிறது; உனக்கேன் திறை செலுத்துவது என்பதே அவருடைய வினா. ஆனால், ஆங்கிலேயர்கள் 1792லிருந்து 1798 வரை தங்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் 3,300 பகோடா கிஸ்தி  செலுத்த வேண்டுமென்று பல நினைவூட்டல் அறிக்கைகளையும், மடல்களையும், தூதுவர்களையும் அனுப்பிக் கேட்டனர். ஆலன், பெயருக்காவது சிறு தொகையைக் கொடுக்குமாறு கேட்டும் கட்டபொம்மன் மறுத்தார்.
1799 - இல் நான்காம் மைசூர்ப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயப் படைகள் அப்போருக்கு அனுப்பப்பட்டிருந்தன.
திருநெல்வேலியில் கலெக்டராக இருந்தவர் ஜாக்ஸன். 1798 - ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வீரபாண்டியனைத் தன்னைக் காணுமாறு ஜாக்ஸன் கூறினார். கட்டபொம்மன் தன் பரிவாரம் சூழ ஜாக்சனைக் காணச் சென்றார். ஆனால், ஜாக்சன் அவருக்கு நேர்காணல் (பேட்டி) கொடுக்க மறுத்து, காலந்தாழ்த்தம் செய்தவண்ணம் குற்றாலம், சொக்கம்பட்டி ஆகியவிடங்களைப் பார்வையிட்டு, இராமநாதபுரம் சேர்ந்தார். கட்டபொம்மனும் தம்பியர் ஊமைத்துரையும், துரைசிங்கமும் அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையும் படையில் ஒரு பகுதியும் ஜாக்சனைப் பின்தொடர்ந்து 23 நாட்கள் நடந்து, 400 கல் தொலைவைக் கடந்து இராமநாதபுரத்தை அடைந்தனர். கட்டபொம்மன் கடைசியாக ஜாக்சனைச் சந்திக்க நேரும்போது திடீரென அவரைச் சிறைபிடிக்க ஜாக்சன் முயன்றார். வீரபாண்டியன் தப்பினார். ஆனால், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளை மட்டுமே சிறைப்பட்டார். சென்னை ஆங்கிலேயக் கம்பெனியினர் அமைச்சர் பிள்ளையைப் பின்னர் விடுதலை செய்து, ஜாக்சனை வேலை நீக்கம் செய்தனர். லூசிங்டன் திருநெல்வேலி கலெக்டராக அமர்த்தப்பட்டார்.
நான்காம் மைசூர்ப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. கட்டபொம்மனின் நிலையைப் பிற பாளையக்காரர்கள் நோக்கினர். ஆங்கிலப் படைகள் தென்பாண்டி நாட்டிலிருந்து மைசூர்ப் போரில் ஈடுபட்டிருக்கும் இந்தச் சமயத்தில் பாளையக்காரர்களின் கூட்டணிப் படைகளைத் திரட்டித் தமிழகத்திலிருந்து ஆங்கிலேயரை அடியோடு விரட்டத் திட்டமிட்டனர். இதில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள் சிவகங்கை மருதுபாண்டியரும் திண்டுக்கல் கோபால நாயக்கரும் ஆனைமலையை ஆளும் நாயக்கரும் ஆவர். 1797- இலேயே மருதுபாண்டிய ரால் பல பாளையங்களின் கூட்டணிப் படைகள் அமைக்கப்பட்டு விட்டன. நாகலாபுரம், மன்னார்கோட்டை, கோலார்பட்டி, செந்நெல் குடி ஆகியவை ஒன்றுகூடி ஒரு கூட்டணி அமைத்திருந்தன. கட்டபொம்மன் இவ்வணிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.
கள்ளர்களும் இவர் கீழ் ஒன்று கூடினர். சென்னையில் ஆங்கிலேயக் கம்பெனியின் நடவடிக்கைகளைக் கவனித்து செய்தியனுப்ப கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியரின் தம்பி, பாண்டியப் பிள்ளை அனுப்பப்பட்டார். கட்டபொம்மன் இத்தகைய மறைமுகக் கூட்டணி செயல் படுவதற்கு பாஞ்சாலங்குறிச்சியை விட, மேற்குமலைத் தொடர்ச்சியின் அடியிலுள்ள சிவகிரியே சிறந்ததெனக் கொண்டு அதனையும் தன் கூட்டணியில் சேர்த்தார். ஆங்கிலேயரிடமிருந்து சிவகிரி புரட்சிக்காரருக்குத் தலைமை இருக்கையாகப் போவதை எப்படியோ ஆங்கிலேயர் உணர்ந்து கொண்டனர்.
அதனை முதலில் கைப்பற்றி அங்கு தங்களின் தலைமையிடத்தை அமைக்கப் புரட்சிக்காரர்களின் கூட்டணிப் படைகள் புறப்பட்டன.
இதனையறிந்த வெல்லெசுலி, தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களிலிருந்த ஆங்கிலப் படைகளைத் திருநெல்வேலி நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி ஆணை யிட்டார். தளபதி பானர்மேன் தலைமையில் ஆங்கிலப்படையினர் 1799 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 - ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்ட னர். 300 அடி அகலமும் 500 அடி நீளமுள்ள அக்கோட்டையை ஆங்கிலப் படைகள் முற்றுகையிட்ட பின்பு இராமலிங்க முதலியார் என்பவர் தூது செல்வதுபோல் உளவு அறியச் சென்றார். கட்டபொம்மனைக் கண்ட பின், பானர்மேனுக்குக் கோட்டையின் உள்ளமைப்பையும் மற்ற ரகசியங்களையும் கூறிவிட்டார். எட்டப்பனும் திருவிதாங் கூராரும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டனர். பாளையக்காரர் படைகளுக்கு ஊமைத்துரை தலைமை தாங்கினார்.
ஆங்கிலப்படைகளைத் துச்சமெனக் கருதி ஊமைத்துரை போரிட்டார். ஊமைத்துரையிடம் இராமசாமி என்பவரைத் தூதனாக அனுப்ப ஆங்கில படைக்குத் தலைமையேற்ற அக்கனியூ மேஜர் முயற்சி எடுத்தபொழுது ராமசாமி, “ஊமைத்துரையிடம் சென்றால் திரும்பி வர முடியாது. வீரம் கொண்ட ஊமைத்துரையிடம் மாட்டினால் எனக்கு ஆபத்து  ” என்று எடுத்துச் சொன்னார். கட்டபொம்மனுடைய வீரத் தளபதி வெள்ளையத்தேவன் போர்க்களத்தில் காட்டிய வீரம் வெள்ளையர்களைத் திக்குமுக்காடச் செய்தது.
கடைசியில் கடுந்தாக்குதலுக்குப் பின்பு கோட்டை சரிந்தது. பாளையங்கோட்டையிலிருந்து மேலும் ஆங்கிலப் படைகள் வந்தன. கோளார்பட்டி, நாகலாபுரம் முதலிய இடங்களில் போர்கள் நடந்தன. சிவசுப்பிரமணியப் பிள்ளை சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் தப்பினார். கோளார்பட்டி பாளையக்காரர் ராஜகோபால் மாளிகையில் தங்கினார்.
அங்கு எட்டப்பன் படைகள் சூழ்ந்து கொண்டன. புதுக்கோட்டையில் தன்னுடைய நண்பர் தொண்டைமானிடம் அடைக்கலமாகச் சென்றார். அவரை விஜயரகுநாத தொண்டைமான் தன் ஆட்கள் மூலம் பிடித்துப் பானர்மேனிடம் திருக்களம்பூர் காட்டில் ஒப்படைத்தார். இதனையறிந்த பிற புரட்சிக்காரர்கள் சிவகங்கை திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு ஓடி மறைந்தனர்.
ஆங்கிலேயர் கட்டபொம்மனையும் பிற புரட்சி வீரர்களையும் சிறை செய்தனர். சிவசுப்பிரமணியப் பிள்ளையை நாகலாபுரத்தில் தூக்கிலிட்டனர். பின்பு சிவகிரி மீது படையெடுத்தது, ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டது, மக்களைக் கொள்ளையடித்தது, தீயிட்டது, கொலை செய்தது போன்ற குற்றங்களுக்காகச் சூழ்ச்சியாகக் கைது செய்து 16.10.1799 அன்று கயத்தாறில் விசாரணை நடைபெற்றது. பின்பு 39 வயதில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.
கட்டபொம்மன் ஆங்கிலேயரைக் கண்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டார்.
பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலையெழுச்சியும் வீரவுணர்வும் நாட்டுப்பற்றும் ஏற்பட வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவர் இட்ட வித்து இவருக்குப் பின் இவருடைய தம்பிகளால் பயிராக்கப்பட்டு, வெள்ளையனை வெளியேற்றும் ஒரு நீண்ட போர்க்களமாக மாறியதைக் காண்கிறோம்.

கறந்த பாலையும் காகம் குடியாது
கட்ட பொம்முதுரை பேரு சொன்னால்
என்ற பாடலும், பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்த கட்டபொம்மன் கதைப்பாடல்,

பஞ்ச நாட்டுக்கு ஆத்த மாட்டாமல்
படைக்கருவிகள் வந்திருக்கு
படைக்கருவிகள் வந்திருக்கு
பரத்தி வைக்கிறேன் பாரும் இப்போ
அரும் கருவிகள் வந்திருக்கு

சம்பத்தூள் சக்கை ஆனது போல
காத்துவாக்கிலே தூத்திடுவேன்
கண்ணுக்கு இதுதான் காணுது பட்டாளம்
காலாலே எத்துவேன் பாரும் என்றார்
அதோடு,
காகம் பறவாத பாஞ்சால நாட்டிலே
கருப்பு சட்டைகள் காணுதையா
சிட்டுப் பறக்காத பாஞ்சால நாட்டில்
சிவப்பு சட்டைகள் தோணுதையா

குண்டுசட்டி போலத் தலையுமாக
குழிதாழி போல வயிறிருக்கும்
தின்ன நிலையிலே மாடு ஒன்று அவன்
ஒத்தையிலே ஒருவன் தின்றிடுவான்
முந்திரி சாராயம் மூணுபுட்டி
கோதுமை ரொட்டி முந்நூறு தின்றிடுவான்

வெள்ளிப்பிடி அருவா
வெள்ளையத் தேவன் வீச்சருவா
சங்குப்பிடி அருவா-தங்கமே
சந்தனத் தேவன் சாய்ப்பருவா
- நாட்டுப்புறப்பாடல்.

கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், மற்ற உறவினர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையிலிருந்து ஊமைத்துரை தப்பி, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைக் கைப்பற்றி னார். திரும்பவும் போர் நடைபெற்றது. சிவகங்கைக்குத் தப்பிச் சென்ற ஊமைத்துரை பிடிக்கப்பட்டு 1801 -ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி
பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியில் யாரும் வாழக்கூடாது என்பதற்காக ஆங்கிலேயக் கேப்டன் புரூஸ் அந்தக் கோட்டையைத் தரைமட்டமாக்கி, ஆமணக்கு விதைகளை விதைத்தான். பாஞ்சாலங்குறிச்சி மண் வீரமண் என்று தமிழக மக்கள் இந்த மண்ணைக் கையில் அள்ளிச் சென்றார்கள். 
நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கோளார்பட்டி, குளத்தூர், காடல்குடி பாளையக்காரர்களும் சிறையில் வாடினர். கட்டபொம்மனுக்கு ஆதரவாக இருந்த நாகலாபுரம் அரசர் சௌந்தர பாண்டிய நாயக்கர், அவருடைய திவான் கோபாலசாமி நாயக்கர் ஆகியோர் ஆங்கிலேயரால் மிகவும் பாதிப்புக்குள்ளாயினர். கட்டபொம்மனை அழிப்பதில் ஆங்கிலேயருக்குத் துணைபுரிந்த எட்டயபுரம் எட்டப்பனுக்கு, அருங்குளம் என்ற ஊரும் பல்வேறு பொருள்களும் பரிசளிக்கப்பட்டன. கட்டபொம்மன் சிலை குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்: 
“மதுரையிலிருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நான் அவசியம் பார்க்கும் இடம் கயத்தாறு. சாலையை ஒட்டிய சிறிய ஊர் அது. கோவில்பட்டிக்கு அடுத்ததாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பயணிகள் கடந்து செல்லும் அந்தச் சாலையின் மேற்கில், சரித்திரத்தின் நீளும் நினைவாக நின்றிருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை.

ஆம், அந்த இடத்தில்தான் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். அவனது நினைவாக அங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டு, நினைவு ஸ்தூபியும் எழுப்பப்பட்டுள்ளது.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவாக கோட்டையும், சிறிய காப்பகமும் உள்ளது.  அந்தப் புளிய மரம் இருந்த இடத்தில்தான் இப்போது நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி  செல்லும் நெடுஞ்சாலை முழுவதும் மருத மரங்களும் புளிய மரங்களும் ஆதியில் இருந்திருக்கின்றன. அப்படியொரு புளிய மரத்தில் மக்கள் முன்னிலை யில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். சில மாதங்களிலே அந்தப் புளியமரம் புனித மரமானது என்று மக்களால் வழிபடப்பட்டி ருக்கிறது. ஆனால், அதைச் சகித்துக் கொள்ள முடியாத வெள்ளைக்காரர் கள் அப்புளிய மரத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டார்கள். பிற்காலத்தில் அந்த இடம் அப்படியே மறந்துபோனது.'
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட உருவாக்கக் காலத்தில் அதைப்பற்றி ஆராய்ந்த ம.பொ.சி. போன்ற தமிழ் அறிஞர்கள், அந்தப் புளிய மரம் எங்கே இருந்திருக்கக்கூடும் என்ற ஆய்வை நிகழ்த்தினார்கள். அந்தப் படம் அடைந்த வெற்றியின் காரணமாக சிவாஜிகணேசன் கயத்தாறில் உள்ள அந்த இடத்தை விலைக்கு வாங்கி, தனது சொந்தச் செலவில் கட்டபொம்மனுக்கு சிலை எடுத்து நினைவு ஸ்தூபியும் அமைத்து, அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி திறந்துவைத்தார். இப்போது அந்த இடம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது (வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் எடுப்பதற்கு தமிழகத்தில் கோட்டைகளும், பழைய அரண்மனைகளும் இல்லை என்பதால், அந்தப் படம் முழுவதும் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டிருக்கிறது. நமது சரித்திரச் சான்றுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இது).
வீரம் செறிந்த எங்களின் தெற்குச் சீமையான நெல்லை மண் உயிரோட்டமானது; உணர்ச்சிகரமானது. அதன் அசைவுகள் யாவும் வரலாற்று அசைவுகளாகும். அந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமல்லாமல், பூலித்தேவர், தீரர் சுந்தரலிங்கம், அழகு முத்துக்கோன், ஒண்டிவீரன், முண்டாசுக்கவி பாரதி, வ.உ.சிதம்பரனார் என தியாக தீபங்கள் பிறந்த மண். வீரமானாலும் இலக்கியமானாலும் மத நல்லிணக்கமானாலும் இசை, நாகரிகமானாலும் இவை அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பூமிதான் எங்களின் நிமிர வைக்கும் நெல்லை.

என்னைப் பிரசவித்த பூர்வீக மண்ணில் தோன்றிய மூத்த குடிகளைத் தொழ வேண்டும் என்ற ரீதியில் 'நிமிர வைக்கும் நெல்லை' என்ற நூலை ஆக்கினேன். அதன் அடுத்த கட்டமாக கட்டபொம்மன் புகழ் சொல்லும் இந்தப் பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் வெளிவருகிறது. இதை கண்டு இதயசுத்தியோடு பெருமை அடைகிறன். 
எங்கள் மண்ணுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்ற பெருமை நெல்லை வட்டார மக்களுக்கு என்றும் உண்டு.

#K_S_Radhakrishnan #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்
#கேஎஸ்ஆர்


#ksrpost
3-1-2023


SEP 12