Tuesday, June 19, 2018

பெருமாநல்லூரில் விவசாயிகள் மீது முதல் துப்பாக்கிச் சூடுநடந்து 48ஆண்டுகள்....*

*விவசாயிகள் போராட்டம்


-------------------------------------

அன்று ஒன்றுபட்ட கோவை மாவட்டம், இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் 19-06-1970 அன்று, ஏறத்தாழ 48 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் விடுதலைக்குப் பின் தங்களின் உரிமைகளுக்காக போராடிய விவசாயிகள் இராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண்டர் ஆகிய மூவரும் துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் தியாக சீலர்கள்.
இராமசாமி (அய்யாம்பாளையம் கிராமம்), மாரப்பன் (வாரணாசிப்பாளையம் - பள்ளிக்காடு கிராமம்), ஆயிக்கவுண்டர் (ஈச்சம்பள்ளம்-களத்தூர் தோட்டம் கிராமம்) தங்களின் இன்னுயிரை இழந்து சரியாக 48 ஆண்டுகள் கடந்துவிட்டன. 

விடுதலைக்கு முன்னரே ஆங்கிலேயர் ஆட்சியில் கடம்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரை தன்னுடைய உரிமைக்காக போராடிய போது நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இறுதியாக,கோவில்பட்டியில் 1992 கோவில்பட்டியில் வெங்கடாசலபுரம் எத்திராஜு நாயக்கர், அகிலாண்டபுரம் ஜோசப் இருதய ரெட்டியார் என்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுவரை தமிழகத்தில் ஏறத்தாழ போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 47 பேர் பாதிக்க பட்டனர் .(1981 ல் எடுத்த படம் )
*****************
#விவசாயிகள்போராட்டம்
#பெருமாநல்லூரில்துப்பாக்கிச்சூடு #விவசாயிகள்மீதுமுதல்துப்பாக்கிச்சூடு

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

மீள் பதிவு :

அன்றைக்கு நடந்த சம்பவம் குறித்து,
கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு, 31-12-1980அன்று, அந்த வருடத்தின் கடைசி நாள். நானும், தி.சு. கிள்ளிவளவனும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாளும் மாலை 5 மணியளவில் பழ. நெடுமாறன் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது நான் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்த 75159 என்ற தொலைபேசிக்கு என் பெயரைக் கேட்டு பிபி டெலிபோன் கால் வந்து கொண்டிருக்கிறது என்று அந்த இல்லத்தின் சொந்தக்காரர் மறைந்த மீனாட்சி அவர்கள், நெடுமாறனுடைய தொலைபேசி 7657க்கு அழைத்தார். கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ளவர்கள் பதட்டமாக உங்களைக் கேட்டு போன் செய்து கொண்டிருக்கின்றனர் என்று என்னிடம் சொன்னபோது மணி மாலை 6.30. எப்போதும் மாநிலச் செய்திகளை வானொலியில் கேட்பதுண்டு. அப்போது தூர்தர்சன் கருப்பு-வெள்ளை தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் செய்திகள் வரும். இதுவும் சென்னைக்கு மட்டும் தான். தமிழ்நாட்டிற்கு அப்போது இல்லை. 
மாநிலச் செய்திகளை செல்வராஜ் தனது கனீர் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தேன். திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள் என்று சொன்னவுடன் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்ன நடந்தது என்று விசாரிக்க முடியவில்லை. உடனே 07.05க்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் மதுரை வரை செல்லும். அதை பிடிக்கமுடியவில்லை. பேருந்தில் கோவில்பட்டி சென்றேன். அதற்குப் பிறகு எங்களுடைய பகுதி கலவரமாகி, மயான பூமியில் அவல நிலையில் இருந்தன. அன்றைக்கு 1981ஆம் வருட புத்தாண்டாகும். 
இப்போது பிரச்சனைக்கு வருகின்றேன். நாராயணசாமி நாயுடு தலைமையில் அன்றைக்கு வலுவாக இருந்த தமிழக விவசாயிகள் சங்கம், 31-12-1980 அன்று பந்த் போராட்டத்தினை அறிவித்தது. குறிப்பாக எங்களுடைய கோவில்பட்டி வட்டாரம் விவசாய சங்கங்களின் கேந்திரப் பகுதி. ஒவ்வொரு விவசாயிகள் போராட்டத்திலும் யாராவது ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாவது 1972லிருந்து ஒரு கொடுமையான வாடிக்கையாகிவிட்டது. 
அமைதியாக என்னுடைய குருஞ்சாக்குளம் கிராமத்தில் பந்த் நடத்தியபோது காவல்துறை கிராமத்தில் புகுந்து அத்துமீறி நடந்து கொண்டதன் விளைவாக போராடும் விவசாயிகள் கடுமையாக வாதிட்டும், 31-12-1980 காலை 11 மணியளவில் விவசாயிகளை கண் மண் தெரியாமல் அடித்துள்ளார்கள். இது திருவேங்கடம் நகரில் நடந்தது. அப்படி அடிபட்ட விவசாயிகளை அரவணைத்து ஆறுதல் சொல்லி அவரவர் கிராமங்களுக்கு திரும்ப்ச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ராமசுப்பு நாயக்கர் த/பெ, மல்லப்ப நாயக்கரை போலீசார் அழைத்து சென்று அடித்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். 
இந்நிலையில் விவசாயிகள் நெடுஞ்சாலையில் சோளம், உளுந்து போன்றவற்றை காயவைத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அடித்து காயப்படுத்திவிட்டனர். இப்படி திருவேங்கடம் வட்டாரம் முழுவதும் உள்ள விவசாய கிராமங்களை துவம்சம் செய்து வந்தனர். திருவேங்கடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எங்கள் கிராமத்தில் என்றைக்கும் விவசாயிகள் சங்கம் வலுவாக இருக்கும். எனவே இந்த கிராமத்தில் காவல்துறை அத்துமீறி விவசாயிகளை அடித்து துவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் காவல் துறையினர் மாலை 4 மணியளவில் குருஞ்சாக்குளம் கிராமத்திளை ஒரு பதற்றத்தை உருவாக்கியபோது சாத்துரப்ப நாயக்கர் இங்கே வரவேண்டாம், நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாத்துரப்ப நாயக்கரின் நெற்றிப் பொட்டுக்கு கீழேயே காவல் துறையினரின் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து அங்கேயே சிதறி பிணமாகி விழுந்து அந்த சாலையில் இரத்தம் பீறிட்டு ஓடியது. அவர் அருகேயிருந்த தம்பி ரவீந்திரன் இருபது வயது தான். அந்த பையனின் தொப்புளில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். அதே நேரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து போது அவர் பாய்ந்து சென்று காவலரின் துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தார். ஆனால் கன்னாபின்னாவென்று சுட்டனர். 
ஏற்கனவே சாத்துரப்ப நாயக்கரின் மீது பாய்ந்த துப்பாக்கி ரவைகளால் அதிர்ச்சியடைந்த மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால் மேலும் மேலும் கிராம மக்களின் மீது துப்பாக்கி ரவைகளை பாய்ச்சி அன்றைக்கு மனித வேட்டையை ஆடியது எம்.ஜி.ஆர் ஆட்சி. மாலை 5 மணி வரை ஒரே துப்பாக்கி ரவைகள் வெடித்த காற்றில் கலந்து புகை மண்டலமாக இருந்ததாகச் சொன்னார்கள். இந்த ரவீந்திரனுக்கு முதலுதவி கூட கொடுக்காமல் மாலையில் 3 மணி நேரம் கழித்து 7 மணிக்கு மாட்டு வண்டியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவீந்திரன், ராணுவ வீரர் ருத்திரப்பசாமி, அழகர்சாமி, ராமசாமி நாயக்கர், ரெங்கசாமி நாயக்கர், கணபதி ஆகியோர் பேருந்துகளில் இல்லாமல் மாட்டுவண்டியில் 3 மணிநேரம் இரவில் பயணித்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் முறையான சிகிச்சை பெற்றனர். அவர்களில் ரவீந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் அன்றிரவே இறந்தார். மற்றவர்களை பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். 
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட விவசாயிகளை அநாதைப் பிணங்கள் போல 03-01-1981அன்று பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி மயானத்தில் உறவினருக்கு கூட சொல்லாமல் காவல் துறையினரே அடக்கம் செய்து பிரேதங்களின் சொந்தக்காரர் இல்லாமல் எரியூட்டியது தான் கொடுமையிலும் கொடுமை. ஆனால் அன்றைக்கு ஆளுங்கட்சியான எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடப்பதை குறித்தான ஏற்பாடுகளிலும், அந்த மாநாட்டில் ஜெயலலிதா நாட்டியமாடும் நிகழ்விலும் அரசு நிர்வாகம் மும்முரமாக இருந்தது. 
இவருக்கு முன் சுடப்பட்டு நெடுஞ்சாலையில் சாகடிக்கப்பட்ட சாத்துரப்ப நாயக்கரின் பிரேதம் முதல் நாள் மாலை 4 மணியிலிருந்து மறுநாள் முன்பகல் வரை அப்படியே கிடந்தது. இடைப்பட்ட நேரத்தில் அந்த பிரேதத்தை எடுத்து ஊர் பொதுக் கட்டிடத்தில் வைத்திருந்தனர். அடக்கம் செய்ய யாருமில்லை. ஒரே குழப்பமான, வேதனையான, இருக்கமான நிலையில் அந்த கிராமம் இருந்தது. திரும்பவும் போலீசார் அவரின் பிரேதத்தை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் நடந்தது 31-12-1980. ஆனால், சாத்துரப்ப நாயக்கர், ரவீந்திரனுடைய பிரேதங்கள் 02-01-1981 அன்று (இரண்டு நாள் கழித்து) ரவீந்திரனுடைய தாயார் கேட்ட போது போலீசார் கொடுக்க மறுத்துவிட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் 
சாத்துரப்ப நாயக்கர் (55), 
ரவீந்திரன் (17) த/பெ பெருமாள் சாமி, 
இரா.வரதராசன் (30) த/பெ இராமசாமி நாயக்கர், 
ரெ.வெங்கடசாமி (22), 
ராமசாமி நாயக்கர் (60), 
ர. வெங்கடசாமி நாயக்கர் (50), 
பெ.இரவிச்சந்திரன் (),
என 8 விவசாயிகளை என்னுடைய கிராமத்தில் அன்றைக்கு எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் காவல் துறையினர் சுட்டுத் தள்ளினர். இப்படி அநாதைகளாக விவசாயிகளுடைய பிணங்கள் சாலைகளிலும் சுட்டுத் தள்ளப்பட்டுக் கிடந்தது எவராலும் சகிக்க முடியாத காட்டு மிராண்டித்தனமாக அன்றைக்கு நடந்து கொண்டது கொடுமையிலும் கொடுமை.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டில் சுட்ட மந்திரம் என்ற காவலரை அடக்க முடியாத ஆத்திரத்திலும், வேதனையிலும், துக்கத்திலும், பொறுக்க முடியாமல் விவசாயிகள் கல்லால் அடித்து சாகடித்தனர். காவலர் மந்திரம் அதே இடத்தில் இறந்தார். இந்நிலையில் கோவில்பட்டி – இராஜபாளையம் (வழி. திருவேங்கடம்), கோவில்பட்டி - சங்கரன்கோவில் (வழி. திருவேங்கடம்), திருவேங்கடம் – விருதுநகர் (வழி. சிவகாசி), திருவேங்கடம் – கழுகுமலை (வழி. குருஞ்சாக்குளம், குருவிக்குளம்) ஆகிய வழித்தடங்களில் பேருந்துகளே கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை இயக்கப்படவில்லை. அந்த காலக்கட்டத்தில் நாராயணசாமி நாயுடு தொலைப்பேசியில் இது குறித்து அடிக்கடி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
****

விவசாய போராட்டத்தில் 1972ல் சுட்டு கொல்லப்பட்ட தியாகி கந்தசாமி நாயக்கர் க்கு ஏற்பட்டஅவலம்.

கோவில்பட்டி அருகாமையில் இருக்கக்கூடிய பழைய அப்பநேரி கிராமத்தில் பிறந்த கந்த சாமி நாயக்கர் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டு தள்ளப்பட்டார்.. அன்னாரின் பேரில் வாசக சாலை ஒன்றை ஏற்படுத்த, பழைய அப்பநேரியில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு  கேட்பாரற்று கிடக்கிறது. விவசாயிகளின் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வழங்கப் பட்ட தொகையை கூட பெறுவதட்கு வாரிசு இல்லை கந்தசாமி நாயக்கர்க்கு . கட்டிய மனைவி ஒட்டிய வயிறோடு செத்து போனார்.. தியாகி கந்தசாமி நாயக்கர்க்கு நினைவு தூண் கோவில்பட்டி பயணியர் விடுதியில் நிறுவப்பட்டது. அதுவும் கேட்பாரற்று, அதிகாரிகளால் ஒரு ஓரமாக கிடத்தப் பட்டு உள்ளது.. வாரிசு அற்று, வம்சம்அற்று, தன் கட்டிய மனைவியை தவிக்க விட்டு சென்ற தியாகி கந்தசாமி நாயக்கர்க்கு  நாம் காட்டும் கைமாறு, அவர் நினைவாக உள்ள தூணை அகற்றுவது, காமராஜர் வந்து வாசகசாலை அமைக்க அடிக்கல் நடப்பட்டது. அந்த அடிக்கலை பிடிங்கி எரிந்து, சேதப்படுத்தி, மீண்டும் இடம் மாற்றி நட்டி, சேதப் படுத்தி கொண்டு இருப்பதுதான். இது தான் நாம் அவருக்கு காட்டும் பணிவு. ஒரு தியாக வரலாறை,மூடி மறைக்கும் செயலை வண்மையாக நாம் கண்டிக்க வேண்டும்.



No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...