Thursday, June 7, 2018

மதுரை மேலமாசி வீதி


மதுரை மேலமாசி வீதி
-------------------------
மதுரை மேலமாசி வீதி என்றால் நினைவிற்கு வருவது உத்தமர் காந்தி மதுரைக்கு வந்தபோது தங்கிய இடம். இப்போது அவர் நினைவாக அங்கு கதர் கடை அமைந்துள்ளது. 1960களில் இயங்கிய உடுப்பி சைவ ஓட்டல், தென் மாவட்டங்களில் தலைவலி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஆர்.எஸ்.பதி மருந்து, பழ. நெடுமாறனுடைய தந்தையார், அவருடைய மூதாதையர் அச்சிட்டு வெளியிட்ட விவேகானந்தா காலண்டர், மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திக்கும் இடத்தில் பாஞ்சாலங்குறிச்சி சரிதத்தை எழுதிய மதுரை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக இருந்த பண்டிதமணி ஜெகவீரப்பாண்டியனார் வீடு, மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதியில் ஆலமரத்தடி விநாயகர் கோவிலில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடக்கும் பட்டிமன்றங்கள், அரசியல் பொதுக்கூட்டங்கள், அதன் எதிரே உள்ள காபிக் கடையில் (பெயர் நினைவில்லை) நள்ளிரவிலும் கிடைக்கும் பனங்கற்கண்டு போட்ட ருசியான பால்.  இவையெல்லாம் 1960, 70களில் கண்ட காட்சிகள். 

ஆர். எஸ். பதி நிறுவனம் 1909இல் தொடங்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்தும் ஆர்.எஸ்.பதி மருந்து என்று தயாரித்து விற்பனை செய்கிறது. இது தென்மாவட்ட மக்கள் மத்தியில் பிரபலமான மருந்து. காய்ச்சல், ஜலதோசம், மண்டை வலி என்றாலும் இதைத்தான் கிராமத்து மக்கள் பயன்படுத்துவது வாடிக்கை. இருபது மில்லி அடங்கிய கண்ணாடி பாட்டிலில் அப்போது கார்க் பூட்டி விற்கப்படும். இப்போது பிளாஸ்டிக் மூடியை போட்டுள்ளார்கள். அந்த பாட்டில் அப்போது நீளமாக இருக்கும். இப்போது தட்டையாக மாற்றிவிட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆர்.எஸ்.பதி மருந்தும், மதுரையில் தயாரிக்கப்படும் புண்ணிற்கு போடும் சைபால் மருந்தும், மதுரையில் இருந்து விற்பனைக்கு வரும் கோபால் பல்பொடியும் அன்றாடம் பயன்படுத்துகின்ற நுகர்பொருள்களாகும்.

ஆர். சபாபதி என்பது ஆர்.எஸ்.பதி யாக சுருக்கப்பட்டு, பிரபலமான ஆயுர்வேத டாக்டர் ஆரம்பக் கட்டத்தில் தயாரித்தது தான் இந்த ஆர்.எஸ்.பதி மருந்து. கோட்டும், சூட்டும், தலையில்  தலைப்பாகையோடு (டர்பன்) அவர் படமும், ஆறுமுகமான முருகப்பெருமானின் படத்தினையும் அச்சடிக்கப்பட்டு தொடர்ந்து விற்பனைக்கு அனுப்புகின்றது இந்த ஆர்.எஸ்.பதி நிறுவனம்.

அதே  போன்றே, விவேகானந்தா காலண்டர் தென்மாவட்டங்களில் அனைத்து வீடுகளிலும் தென்படும். 1950களில் மங்கலான நினைவு. இளம் பச்சையோடு மற்றும் இளம் நீலம் கலந்த வடிவமைப்பில் வந்தது. இப்போது அதன் வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இதுவும் 100 ஆண்டுகளாக வெளிவந்துள்ளது. இந்த விவேகானந்தா அச்சகத்தில் தான் திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம் மஞ்சள் அட்டையில் சரஸ்வதி வீணை வாசிப்பது போன்ற படம் போட்டு ஆண்டாண்டு காலமாக வெளி வருகிறது.

நெடுமாறன் அவர்கள் நடத்திய குறிஞ்சி இதழும், 1960களில் இந்த அச்சகத்தில் தான் அச்சிடப்பட்டது. எங்களுக்கெல்லாம் ஆரம்பக் கட்டத்தில் அரசியல் கேந்திரமாக மதுரையில் இந்த அச்சகமும், வடக்குச் சித்திரை வீதியில் உள்ள சத்திய மூர்த்தி வாசகசாலையும் திகழ்ந்தது.

மேலமாசி வீதியில் நெடுமாறன், வேலுப்பிள்ளை பிரபாகரன், பெருந்தலைவர் காமராஜர், தமிழறிஞர். தெ.பொ.மீ, டாக்டர். பாலுசாமி, நெடுமாறன் நடத்திய செய்தி பத்திரிக்கை, அவருடைய தந்தையார் அறநெறி அண்ணல் பழனியப்பனார், திண்டுக்கல் அழகிரிசாமி, ஆ. ரத்னம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஏ.எஸ். பொன்னம்மாள், பாரமலை, முத்துக்கருப்பன் அம்பலம், வழக்கறிஞர் இராமகிருஷ்ணன், சபாபதி, எம்.ஆர்.மாணிக்கம், நெடுமாறனின் சகோதரர் ஆறுமுகம், நெடுமாறனின் உதவியாளர் லட்சுமணன், தமிழ் படைப்பாளி தி.சு. செல்லப்பா, நாகராஜன் என பலரின் நினைவுகள் கண்முன் படுகின்றன.
மதுரை புது மண்டபத்தில் நடனசுத்தர் சகோதரர்கள், பழனியாண்டி சேர்வை போன்ற புத்தகக் கடைகளும், புதுமண்டபக் கடைகளைக் குறித்த பதிவையும் செய்யவுள்ளேன்.

#Madurai
#Vivekananda_calendar
#Saibol
#Mela_maasi_street
#Tirunelveli_Vakkiya_panchangam
#Gopal_tooth_powder
#ஆர்_எஸ்_பதி_மருந்து
#மதுரை
#விவேகானந்தா காலண்டர்
#சைபால்
#மேலமாசி_வீதி
#திருநெல்வேலி_வாக்கியப்_பஞ்சாங்கம்
#கோபால்_பல்பொடி
#R_S_pathy
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்_
06-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...