மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் இயற்கைச் சூழலை பாதுகாக்கவும், அப்பகுதியின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்கவுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரானது குஜராத்தில் தொடங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழகம் என பல மாநிலங்களின் மலைத் தொடர்ச்சியாகும். இந்த மலைத் தொடர்களில் உள்ள பல இடங்களில் மரங்கள் வெட்டுதாலும், இயற்கை வளங்களை குவாரிகள் கொண்டு தோண்டி எடுக்கப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களாலும் மலைத் தொடரின் இயற்கைச் சூழல் சிதைந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
சமூக ஆர்வலர்களின் தொடர்ச்சியான புகார்களால், இதுதொடர்பாக ஆய்வு செய்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, மேற்கு தொடர்ச்சி மலையில் 13,108 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பகுதிகள் சூழலியல் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தது. இந்த நிலை தொடர்ந்தால் மலைத் தொடரின் வளங்கள் அழியக் கூடும் என்றும் அந்தக் குழு எச்சரித்தது. அபாயத்துக்குரியதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவை கேரளத்தில் அமைந்துள்ளவையாகும்.
இதையடுத்து மலைப் பகுதியை ஒட்டியுள்ள கேரளத்தின் 123 கிராமங்களில் கட்டடம் கட்டவும், குவாரிகள் தோண்டவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வேறு சில கட்டுப்பாடுகளும் அமலாக்கப்பட்டன. இதுதொடர்பான இரண்டு உத்தரவுகளை மத்திய அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு பிறப்பித்தது.
ஆனால், அதனை அமல்படுத்தாமல் கேரள அரசுக்கு அதற்கு எதிராக மாநில சட்டப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான இறுதி அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடப் போவதாக அறிவித்தது.
அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளை அரசு கேட்டது. அதன் அடிப்படையில், சில பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கேரளம் மத்திய அரசிடம் அளித்துள்ளது. விவசாய நிலங்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் தமிழகம் இதைப் பற்றி கவலைப்படாமல் எந்த அறிக்கையையும், கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.
மத்திய அரசு 2016 காலக்கட்டத்தின் இறுதியில் தமிழக அரசிடம் இதைக் குறித்தான விளக்கங்களைக் கேட்டும் தமிழக அரச இதை குறித்தான பதில்களை அளிக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தின் உரிமைகளை காப்பதற்கு அக்கறையும் ஆர்வமும் தமிழக அரசிடம் இல்லாத போது வேறென்ன செய்ய முடியும். இது குறித்தான விழிப்புணர்வு மக்களிடமும் இல்லை. கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, குஜராத் போன்ற மாநிலங்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. ஆனால் தமிழக அரசு இதில் அக்கறை காட்ட மறுக்கிறது.
இது குறித்தான எனது வலைப்பதிவு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-06-2018
No comments:
Post a Comment