Thursday, June 28, 2018

#பி_வி_நரசிம்மராவ்

*முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட அவமானம், அவமரியாதை, புறக்கணிப்பு.......
நாமெல்லாம் எங்கே?*
-------------------------------------
இன்று (28/06/2018) முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் பிறந்த தினம். இந்தியாவில் புதிய பொருளாதராக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, தாராளமயமாக்கலுக்கு சிகப்புக் கம்பளம் விரித்தவர். நரசிம்மராவுக்கு துணையாக இருந்தவர் அன்றைய நிதியமைச்சர் மன்மோகன் சிங். இந்த தாராளமயமாக்கல் கொள்கை இந்திய மண்வாசனைக்கு உகந்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை. 

இந்திராவின் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அவருடன் மிகவும் நெருக்கமானவராக இருந்தவர். தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பிரதமராவார். இவரின் மரணத்திற்கு பின் ஏற்பட்ட அவமானம் இன்றளவும் நினைவில் உள்ளது.

நரசிம்ம ராவ் அவர்கள், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணித்தார். இந்திய முன்னாள் பிரதமரான அவரது உடலை, மற்ற முன்னாள் பிரதமர்களைப் போல புது டில்லியில் நல்லடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் விரும்பினர். அந்த கோரிக்கை அன்றைக்கு ஏற்கப்படவில்லை. காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இராணுவ வண்டியில் கொண்டு செல்லப்பட்ட உடலைக் கூட அனுமதிக்கப்படாமல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தில் நுழைய மறுக்கப்பட்டு அதன் கேட் பூட்டப்பட்டதால் வாசலிலேயே அவருடைய உடலுக்கு ஒப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் ஐதராபாத் எடுத்து செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்குக்கு முன் பார்வைக்கு வைக்கப்பட்டது. அங்கு தான் அவரது உடல் அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது. 

ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி அங்கு அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அளித்த உறுதிமொழி கூட காற்றில் பறந்துவிட்டது.

இவர் இந்திராவிற்கு நெருக்கமானவராக இருந்தாலும் ஏனோ ராஜீவ் காந்தியால் புறக்கணிக்கப்பட்டார். ஆனால், ராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு பிரதமரான நரசிம்மராவ் ராஜீவிற்கு நெருக்கமான சகாக்களுக்ளும் அமைச்சரவையில் இடம் வழங்கினார். 

அரசியலில் என்ன தான் களப்பணிகள் செய்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்காத போது, #*தகுதியே தடை* என்பது சரிதானே......




நரசிம்மராவ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திரா காந்தியிடம், ஜி. பார்த்தசாரதியோடு இணைந்து ஈழத்தமிழர் நலனில் ஆலோசனைகளை எல்லாம் பிரதமர் இந்திராவுக்கு வழங்கியவர். 

1979, 80 என்று நினைவு. காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முடிவுகளை இந்திரா அவர்கள் எடுத்த போது, அந்த முடிவு உகந்ததல்ல என்று பழ. நெடுமாறன் டெல்லியில் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் துளசி அய்யா வாண்டையார், அன்றைய எம்.எல்.சி தம்பி தோட்டம் சுந்தரேச  தேவர் போன்றவர்கள்ளோடு
இந்திராவைச் சந்தித்து கூறிவிட்டு தொடர்ந்து அதற்காக குரலெழுப்பிக் கொண்டிருந்த போது, நெடுமாறனை சமாதானம் செய்ய நரசிம்மராவை சென்னைக்கு அனுப்பினார். அப்போது நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த நரசிம்மராவைச் சந்திக்க பழ. நெடுமாறனோடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தூத்துக்குடி ஏ.பி.சி. வீரபாகுவுடன் சென்றபோது பழ. நெடுமாறனின் கருத்துக்களை அமைதியாக நரசிம்மராவ் கேட்டு பல விளக்கங்களை அளித்து, காங்கிரசில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சரிபாதி வேட்பாளர்களை நெடுமாறனே முடிவு செய்யலாம் என்ற வாக்குறுதியை அளித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரசில் நெடுமாறன், மூப்பனார் என்ற  பிரச்சனைகளும் இருந்தன. ஆனால், நெடுமாறன் நரசிம்மராவிடம் எனக்கு 50% வேட்பாளர்களை தேர்வு செய்யும் உரிமையை கொடுத்தது நன்றிதான். ஆனால், எனக்கு அது முக்கியமல்ல. எதிர்கால சில அரசியல் நலன்களை மனதில் கொண்டு நான் சொல்லும் விசயத்தை பரிசீலனை செய்யுங்கள் என்று தொடர்ந்து வாதிட்டார். இதை கண் முன்னால் இருந்து பார்த்தவன் என்ற நிலையில் இங்கு பதிவு செய்கின்றேன். 

அதன்பின்னர், 1984இல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மருத்துவமனைக்கு ஒரு மாலைப் பொழுதில் 7 மணியளவில் வந்தார். அப்போது, நெடுமாறன், பாரமலை அடியேன் போன்றவர்கள் எல்லாம் இருந்தோம். ஜெயலலிதா, சத்தியவாணி முத்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அன்றைய அமைச்சர்கள் கே.ஏ. கிருஷ்ணசாமி, எச். வி. ஹன்டே போன்றோர்களெல்லாம் இருந்தோம். சோர்வாக எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டு வெளியே வந்து நெடுமாறனைப் பார்த்து அருகே வந்து, "How are you Mr. Nedumaran? After a long time." என்று கேட்டுவிட்டு தனக்கே உரித்தான இயல்பான சிரிப்போடு சென்றார். 

தனது புத்தகமான *The Insider* இல் ஆந்திர அரசியலைப் பற்றியும், மூத்த காங்கிரஸ் தலைவர்களான பிரகாசம், நீலம் சஞ்சீவரெட்டி, பிரம்மானந்த ரெட்டி, லட்சுமிகாந்தம்மாள், சென்னா ரெட்டி, வெங்கல் ராவ், தென்னட்டி விஸ்வநாதன் போன்ற பல தலைவர்களுடைய பாத்திரங்களை வைத்து ஒரு புதினமாக ஆங்கிலத்தில் படைத்து 1998இல் வெளியிட்டுள்ளதை படிக்க சுவாரசியமாக இருக்கும்.



#ஆந்திர_அரசியல்
#ஆந்திர_பிரதேசம்
#தெலுங்கானா
#பிரதம_மந்திரி
#தகுதியே_தடை
#p_v_narasimha_rao
#Andhra_Politics
#Andhra_Pradesh
#Telengana
#Prime_Minister
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-06-2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...