Wednesday, June 6, 2018

ஆழியாறு – பரம்பிக்குளம் (பி.ஏ.பி) திட்டம்.

ஆழியாறு – பரம்பிக்குளம் (பி.ஏ.பி) திட்டம்
---------------------------

கொங்கு மண்டலத்தில் 1961ஆம் ஆண்டு சென்னை – கேரள அரசுகள் இணைந்து பி.ஏ.பி (பரம்பிக்குளம் - ஆழியாறு) திட்டத்தை இறுதிப்படுத்தியது. தமிழக முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் நம்பூதரிபாட் காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு தமிழகத்தின் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.இராமமூர்த்தி உறுதுணையாக இருந்ததை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.


பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சார்பில் இரண்டு அணைகள் இன்னும் கட்டவில்லை. தமிழக – கேரள அரசுகளின் சார்பில் 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் இந்த அணையின் கட்டுமானத்திற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது அப்பகுதி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி கேரளாவில் இருந்து மேற்கு நோக்கி பாய்ந்து இறுதியில் அரபிக் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை கிழக்கு நோக்கி தமிழகத்திற்கு திருப்பினால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி அடையும் என்று அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அன்றைய கேரள முதல்வரும், கம்யூனிச தலைவருமான நம்பூதரிபாட் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பி.ஏ.பி பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி மற்றும் உப்பாறு ஆகிய ஒன்பது அணைகள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி கேரள அரசு இடமலையாறு என்ற பகுதியில் ஒரு அணையைக் கட்டி முடித்தபிறகு ஆனைமலையாறு மற்றும் நல்லாறு ஆகிய அணைகளை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 1985ஆம் ஆண்டு கேரள அரசு இடமலையாற்றில் அணையை கட்டிமுடித்துவிட்டது. அதன்பின், தமிழக அரசு இந்த இரண்டு அணைகளை கட்டாமல் காலந்தாழ்த்தி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி விவசாயிகள் குரலெழுப்பினாலும், ஆட்சி தான் மாறுகிறதே அன்றி காட்சிகள் மாறுவதில்லை.
இந்த பி.ஏ.பி திட்டத்தில் 6 ஆறுகள் மலையின் மீதும், 3 ஆறுகள் மலை அடிவாரத்தில் உள்ள சமவெளிப் பகுதியிலும் உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டியும், கால்வாய்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் மூலமாக தண்ணீர் பெறப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் மூலம் 32 டி.எம்.சி., வரை தண்ணீர் கிடைத்தது. மழைப்பொழிவு குறைந்துவிட்டதால் 13 டி.எம்.சி., மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.

கேரளாவின் இடமலையாறு அணைக்கு இட்டலியாற்றில் இருந்து செல்லும் தண்ணீரை நாம் ஆனைமலையாறு அணை மூலம் தேக்கினால் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும்.
கடந்த 40 ஆண்டுகளில் மேல்நீராறு பகுதியிலிருந்து சராசரியாக 9 டி.எம்.சி., தண்ணீர் வருகிறது. இந்த நீரானது சோலையாறு வழியாக பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி மின்நிலையம் போன்ற பகுதிகள் வழியாக திருமூர்த்தி அணையை சென்றடைவதற்கு 3 நாட்கள் ஆகிறது. இதில் 2.5 டி.எம்.சி., தண்ணீர் வீணாவது மட்டுமல்லாமல், காண்டூர் கால்வாயின் அளவு 1,150 கனஅடி தான். இதனால் நீர்வரத்து அதிகமாகும் காலங்களில் உபரி நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நீரை நாம் பெற நல்லாறு அணையை கட்டியாக வேண்டும்.

மேல்நீராறு அணையிலிருந்து நல்லாறு அணைக்கு சுரங்கம் மூலமாக 7.25 டி.ம்.சி., தண்ணீரை கொண்டுவர முடியும். அப்படி பெறும் நீர் சில மணி நேரத்தில் திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும்.
இந்த இரண்டு அணைகளை கட்ட தமிழகத்திற்கு பூரண உரிமையுண்டு. ஆனால் என்ன காரணமோ, தமிழக அரசு இப்பகுதி விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறது. கடந்த ஆண்டில் இந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகி, குடிநீருக்கு வழியில்லாமல் போய்விட்டது. இந்த அணைகள் கட்டப்படாவிட்டால் கோவை, திருப்பூர் பகுதியில் விவசாயம் முற்றிலுமாக சிதைந்துவிடும்.

இப்பகுதி விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை இணைத்து ஒரு இயக்கமாக உருவாக்கி விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி தொடர் போராட்டங்களை கட்டமைத்தாக வேண்டும்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


06-06-2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...