Sunday, June 3, 2018

தலைவர் கலைஞர் 95

தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் குறித்து எனது  கட்டுரை  இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது 
...............................................................
தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள். சட்டசபை வரலாற்றில் அறுபது ஆண்டுகள் நிறைவுற்று வைரவிழா.

தாய், அண்ணன், தலைவர், முன்னோடி என நிலையில் பொருத்திப் பார்த்தாலும் பொருந்துகின்றார். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சம்பவங்கள் நெஞ்சினில் நிழலாடுகின்றன. சமூகநீதி பார்வையில் உலகின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்கள். அவரது நடவடிக்கைகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. கலைஞர் என்ற தனிநபரின் வரலாற்றை வாசிக்க முயன்றால் அது தமிழக அரசியல் வரலாற்றை தன்னகத்தில் கொண்டுள்ளது. இந்திய அரசியலின் பெரும்பகுதியை உள்ளடக்கியது தான் தலைவர் கலைஞரின் வரலாறு. 

நான் சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட  கலைஞர் அவர்கள் தி.மு.க. மாநில கட்சியாக இல்லாமல் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும், இந்திய நாட்டினுடைய அரசியல் ஜாதகத்தை கணிக்கக் கூடிய இடத்தில் கழகம் இடம் பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார். இந்த அறிவிப்பு  மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் பெரும் பேறாகவும் உள்ளது. மறுமலர்ச்சி என்று மாயாஜால வித்தையை காட்டிக் கொண்டிருந்த ஒரு பொய் தளத்திலிருந்து உண்மையான மறுமலர்ச்சியை அன்றுதான் பெற்றோம். இந்த எளியவனையும் ஒரு பொருட்டாக கருதி தலைவர் கலைஞர் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு கோடி வணக்கங்களை தலைவரின் பொற்பாதங்களில் வைக்கின்றேன்.

கலைஞர் தி.மு.கழகம் தேசிய இயக்கமாக நிலைக்கும் என்றும் இந்தியாவின் அரசியல் ஜாதகத்தை இந்த இயக்கம் கணிக்கும் என்று தலைவர் கலைஞர் அறிவிப்பு செய்ததை பல பத்திரிகையாளர்களும் நண்பர்களும் என்னிடம் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டனர். அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வது எல்லாம், இதற்கு முன்னும் பேரறிஞர் அண்ணாவோ, தலைவர் கலைஞரோ அகில இந்திய அளவில் பிரச்னைகள் ஏற்பட்டபொழுது முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளனர். சீனா இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்தபொழுது அண்ணா அவர்கள் திராவிட நாடு கோரிக்கையை தளர்த்தினார். அண்ணாவின் கொள்கைகளை அண்ணாவிற்கு பிறகு கழகத்தை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தலைமையேற்று பீடுநடைப் போட்டு நடத்துகின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய பார்வையும் அகில இந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இதற்கு பல நிகழ்வுகளும், சம்பவங்களும் உண்டு. காங்கிரஸ் பிளவுண்டு இந்திரா தலைமையில் ஆளும் காங்கிரஸ் என்றும், நிஜலிங்கப்பா தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் 60களின் இறுதியில் ஏற்பட்ட பொழுது இந்திரா காந்தி அவர்களுடைய ஆட்சியை காக்க தலைவர் கலைஞர் அவர்கள் ஆதரவு கரம் நீட்டி ஆதரவை தெரிவித்ததனால்தான் அன்றைக்கு மன்னர் மான்ய ஒழிப்பு, பொதுவுடைமை தத்துவத்திற்கு ஏற்ற வகையில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. இதற்கு கலைஞர் அவர்களின் ஆதரவே காரணம். அவை அன்றைய பிரதமர் இந்திராவின் ஆளுமைக்கு வலு சேர்க்கும் வகையில் அச்சாரம் போட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நடந்த பெரும்பாலான நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.கழகம் தோழமை கொண்டுள்ள கட்சிகள்தான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்திரா காந்தி காலத்திலும், ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமரான போதும், அதன்பின் 80ல் இந்திரா மீண்டும் பிரதமரான போதும், 90ல் வி.பி.சிங் பொறுப்பேற்ற போதும், தேவகவுடா, குஜ்ரால் ஆட்சி காலத்திலும், 99இல் வாஜ்பாய் பிரதமரானபோதும், 2004ல் தொடங்கி இன்றைக்கு வரை மன்மோகன் சிங் பிரதமராக நீடிப்பதற்கு கலைஞர் அவர்களின் பங்களிப்பும் தோழமையும் இதில் பிரதானமாகும். இதுமாதிரி மற்ற அகில இந்திய தலைவர்களின் பங்களிப்பு இல்லை, நாட்டில் நிலையான ஆட்சி அமைத்திட வேண்டிய முன்முயற்சிக்கு கலைஞருடைய அணுகுமுறையே காரணமாகும்.

மற்றொரு முக்கிய நிகழ்வு; டில்லியில் பத்திரிகையாளர்களிடம் 1969 மார்ச் 17ம் நாள், மத்திய – மாநில அரசுகள் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். இந்த அறிவிப்பால் அகில இந்திய அளவில் ஒரு ஆரோக்கியமான விவாதம் நீண்டகாலமாக நடந்தது. இந்த அதிகாரப் பகிர்வு வெறும் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இதுபற்றி ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் டாக்டர் ஏ.லட்சுமண சாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு மத்திய – மாநில உறவுகளும் அதனிடையே அதிகார பகிர்வு குறித்து ஆராய்ந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலம் இதுகுறித்து கருத்துகளை அகில இந்திய அளவில் பல தரப்பினரிடம் கேட்கப்பட்டு ஒரு அற்புதமான அறிக்கையை 27.5.1977இல் தலைவர் கலைஞரிடம் அந்த குழுவினர் வழங்கினர். 383 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்றைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற அரிய ஆவணமாகும். மத்திய – மாநில பிரச்சனைகள் எழும்போதெல்லாம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரு மகாசாசனமாக  உள்ளது. இந்த ஆவணத்தை அகில இந்திய அளவில் அனைவரும் விரும்பி படித்து அதுகுறித்தான விவாதங்களும் நடந்தன. அதற்கு பின் இந்திரா அம்மையார் பிரதமராக இருந்தபொழுது 1984வாக்கில் நீதிபதி சர்க்காரியா தலைமையில் மத்திய – மாநில உறவுகளை ஆராய குழு அமைக்கப்பட்டு அதற்கு அடிப்படை காரணமே கலைஞர் அவர்கள் அறிவித்த ராஜமன்னார் குழுவே ஆகும். சர்க்காரியா குழுவும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளையும் ஆய்ந்து இரண்டு தொகுதிகள் அடங்கிய விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சனையில் 80களில் திம்பு பேச்சுவார்த்தைக்கும் இந்த ராஜமன்னார் குழு அறிக்கை அடிப்படை ஆவணமாகத் திகழ்ந்தது. அன்றைக்கு இந்த அறிக்கையின் நகல் கிடைக்காமல், அமிர்தலிங்கத்திற்கும் பாலசிங்கத்துக்கும் இந்த அறிக்கையை நகல் எடுத்து அடியேன் கொடுத்தேன்.

இந்த அறிக்கையும் திம்பு பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதோடு நார்வே பேச்சுவார்த்தையிலும் ஒரு ஆவணமாக இருந்தது என்ற செய்திகள் வந்தது. இப்படிப்பட்ட அறிய பணிக்கு கர்த்தா தலைவர் கலைஞர் அவர்களே. அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த அறிக்கை 80களில் மறைக்கப்பட்டது. சட்டப்பேரவை நூலகத்தில்கூட இந்த அறிக்கை கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் கலைஞர் அவர்களின் ராஜமன்னார் குழு அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் அழியா சிரஞ்ஜீவியாக இருக்கும். இதுமட்டும் இல்லாமல் அனைவரின் நினைவில் வாழும் அண்ணன் முரசொலி மாறனின் ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற நூல் இந்த தத்துவத்திற்கே வேதமாகும்.

மாநில உரிமைகளை வென்றெடுப்பதில் அக்கறையும் ஆவலும் கலைஞருக்கு இருந்தாலும் இந்தியாவின் ஒன்றுபட்ட ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்ற நோக்கமே இந்த அறிவிப்பாகும். ராஜ மன்னார் குழுவின் அறிக்கை வழங்கப்பட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு என்.டி.ராமாராவ் ஐதாராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து நடத்திய மாநாடும், அம்மமாதிரியே அசாம் கன பரிஷத் ஷில்லாங்கில் நடத்திய மாநாடும், அதற்குப் பிறகு ஸ்ரீநகரில் பரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில் மத்திய அரசிடம் வெளியுறவு, பாதுகாப்பு, தொலைதொடர்பு, நிதி போன்ற துறைகள் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அரசும் ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையை அனுப்பியது. பெங்களூருவில் அன்றைய கர்நாடக முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை இதுகுறித்து பேச கூட்டினார். இந்த நிகழ்வுகள் யாவும் தலைவர் கலைஞருடைய தொலைநோக்கு பார்வையில் ஏற்பட்ட பின் விளைவுகளாகும்.

மாநில சுயாட்சி என்பது விடுதலைக்கு முன்பே விவாதிக்கப்பட்ட பிரச்சனையாகும். 1916ல் மதன்மோகன் மாளவியா, சாப்ரூ, ஜின்னா போன்றோர் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அறிக்கை லக்னோவில் வெளியிடப்பட்டது. அதில் மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுவே ‘லக்னோ ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. 3.4.1946ஆம் ஆண்டு அப்துல் கலாம் ஆசாத் போக்குவரத்து, வெளியுறவு, பாதுகாப்பு போன்ற துறைகள் மத்திய அரசிடம் வைத்துக் கொண்டு மற்ற துறைகளை மாநிலங்களுக்கு வழங்கி தன்னாட்சியாக தரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். 11.12.1944ல் காங்கிரஸ் கட்சி அறிக்கையிலும் மாநிலங்களின் தன்னாட்சி என்று அறிவிப்பு செய்தது. அதற்கு பிறகு இதுகுறித்து பல காலம் விவாதிக்காமல் இருந்து, அறிஞர் அண்ணா 1967ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தினார். இந்த அரிய தொடர் பணியை தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பலம் சேர்க்கவே இக்கோரிக்கை ஆகும். இதில் வெற்றியும் பெற்று வருகிறார்.
ஆகஸ்டு 15, இந்திய விடுதலை நாளில் அந்தந்த மாநில முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமை, ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது தேவகவுடா காலத்தில் மாநிலங்களிலிருந்து பெறுகின்ற வரிகளில் பங்கு சதவிகிதத்தை கூடுதலாகப் பெற்றது கலைஞருடைய சாதனை ஆகும். சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கொடி பரிவாரங்கள் இருந்தாலும் ஒருமைப்பாடு திகழ்கிறது. உலக நாடுகளில் பலவற்றிலும் அங்குள்ள மாநிலங்களுடைய உரிமைகள் சிறப்பாக கவனிக்கப்பட்டுள்ளன. அந்த உலக நாடுகளில் அரசியல் சட்டங்களின் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலமும் தன்னிறைவு அடைய வேண்டும். அப்படி அடைந்தால் ஒரு வளமான உறுதியான இந்தியாவாக அமையும். அதற்கு தலைவர் கலைஞர் அவர்களும், கழகமும் வழி காட்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் உள்ளது.
இந்திய – பாகிஸ்தான் போரிலும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக தலைவர் கலைஞர் அவர்கள் போர் நிதி திரட்டி கொடுத்தது வரலாற்று செய்தியாகும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுதும் கார்கில் போரின் போதும் கலைஞர் அவர்கள் நிதி திரட்டி அனுப்பியதை அன்றைய பிரதமர் வாஜ்பாய் பாராட்டினார். இவ்வாறு பல நிகழ்வுகள் பல சம்பவங்கள். அதுவே நீண்ட கட்டுரை ஆகிவிடும். இன்றைக்கு இந்தியாவில் கலைஞருடைய வயதையொத்த மூத்தத் தலைவர் வாஜ்பாய்  உள்ளார். இந்திய வரலாற்றில் கலைஞர் போன்று இந்திரா காந்தியிலிருந்து இன்றைக்கு இருக்கின்ற டாக்டம் மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் ஆனாலும் சரி, குடியரசுத் தலைவர்கள் ஆனாலும் கடந்த 40 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் மதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் தவிர வேறு எவரும் இல்லை. அந்த அளவில் தலைவர் கலைஞர் அறிவித்த கழகம் மாநில கட்சியாக இல்லாமல் தேசிய இயக்கமாக அமைவது காலத்தின் கட்டாயமும், அரசியல் சூழ்நிலையும் ஆகும்.

தேசிய பார்வையோடு தமிழகத்தின் நலனையும் உரிமைகளையும் பெற தலைவர் கலைஞர் அவர்கள் சிந்தனை, மாபெரும் அரசியல் தத்துவமே. குளோபல் வில்லேஜ் என்று சொல்லக்கூடிய அளவில் உலகமே ஒரு கிராமமாக மாறிவிட்டது. தாராளமயமாக்கல், புதிய பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் தலைவர் கலைஞர் அறிவித்த அறிவிப்பு ஒரு முக்கியத்துவம் பெற்ற செய்தியாகும். அந்த அளவில் மாநிலங்களுக்குள் ஒரு சகோதர பாசத்தோடு பிரச்சனைகளை தீர்ப்பது இன்றியமையாதது. அந்த அளவில் கலைஞர் அவர்களின் சமயோசிதத்தால் 19 ஆண்டுகள் பெங்களூரூவில் திறக்க முடியாத ஐயன் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அதுபோன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது. இதுவே தலைவர் கலைஞர் அவர்களுடைய ராஜதந்திரத்திற்கும் பெருந்தன்மைக்கும் சான்று ஆகும்.

தலைவர் கலைஞர் விரும்பியபடி எதிர்காலத்திலும் இந்திய அரசியலில் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் உலகத்திற்கு வழிகாட்டும் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா அமையும். இதற்காகவாவது அவர் நல்ல ஆரோக்கியம்  பெற்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்திய மதவாத அரசியல் ஆரோக்கியம் அடைய கலைஞர் கையாண்ட  வழியே  கரை சேர வழி. 

#HBDKalaignar95
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
03-06-2018

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...