கிராமத்திலுள்ள
என்னுடைய வீட்டினைப் பற்றி சிறு பதிவு.
நெல்லை மாவட்டம்,
கோவில்பட்டி அருகேயுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் உள்ள எனது பிறந்த வீட்டைக் குறித்து
பல மலரும் நினைவுகள். இந்த வீடு முற்றிலும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டவை. சிமெண்டை பயன்படுத்தாத கட்டிடம். சுண்ணாம்பை அரைத்து அக்காலத்தில் வீடுகளை கட்டுவது வாடிக்கை. அக்காலத்தில் செங்கல் இல்லாமல் கற்களால் தான் வீடுகளை கட்டுவார்கள்.
படம் 1. விவசாய
விளைச்சலில் கிடைத்த தானியங்களை மூட்டைகளாகக் கட்டி அதற்கென்று பிரத்யேகமான அறையில்
அடுக்கி வைப்பது உண்டு. நல்ல விலை கிடைத்தால் விற்பனை செய்யும் வரை பாதுகாப்பாக கவனிப்பது
வாடிக்கை.
அந்த கோணிச் சாக்கை
சனல் கயிறைக் கொண்டு ஊசியினால் குத்தி தைப்பது பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும். தானியங்களை
களத்தில் அளக்கும் போதும் மரக்காலை வைத்து அளப்பது வாடிக்கை.
படம் 2. முன்கதவு
பர்மா தேக்கில் கம்பீரமாக பெரிதாக செய்யப்பட்டிருக்கும்.
படம் 3. இந்த இரும்புப்
பெட்டி 1940, 50களில் பணத்தையும், நகைகளையும், ஆவணங்களையும் பாதுகாக்கும் பெட்டியாகும்.
அந்த காலத்தில் திண்டுக்கல்லிருந்து செய்து இதை கிராமங்களுக்கு கொண்டு வருவார்கள்.
அந்த பூட்டை திறப்பதற்கே இரண்டு, மூன்று பயன்படுத்தி திறக்க வேண்டும்.
படம் 4. என்னுடைய
கிராமத்திற்கு 1950களின் துவக்கத்திலேயே மின்சார வசதி வந்துவிட்டது. அப்போதுள்ள மின்
ஒயரும், சுவிட்சு போர்டும், அதனருகேயுள்ள ஜன்னலும் இரும்புக் கம்பிகளால் கம்பீரமாக
இருக்கும். அந்த ஜன்னலில் அந்தக்காலத்திலேயே கண்ணாடி பிரேம் மதுரைக்குச் சென்று வாங்கிவர
வேண்டும்.
படம் 5. இந்த தரை
வர்ணங்களும், பூக்களும் வடிக்கப்பட்ட பிரத்யேகமான செங்கல்களை தரையில் பதிப்பதுண்டு.
குறிப்பாக இவை சிவகாசி, இராஜபாளையத்தில் இதற்கு முன்கூட்டியே சொல்லி ஒரு மாதம் காத்திருந்து
வடிவமைக்கப்பட்ட இந்த கல் கையில் கிடைக்கும். இது செட்டிநாட்டில் பயன்படுத்தப்பட்ட
வகையாகும். ஆரம்பக் கட்டத்தில் எட்டையபுரம், புதுக்கோட்டை போன்ற சமஸ்தானத்தில், 19ஆம்
நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது என்று தகவல்.
படம் 6. இந்த அடுப்பு எனக்கு மங்கலான நினைவுகளில் இருந்து கடந்த
1995இல் எரிவாயு இணைப்பு (LPG) வரும் வரை எரிந்து கொண்டேயிருந்த நினைவு.
படம் 7. சமைலறைச்
சுவரில் இப்படி மரத்தினால் பதிக்கப்பட்ட கட்டைகளின் மேல் நீண்ட பலகையை கொண்டு பொருட்களை
வைப்பதுண்டு.
படம் 8. இது வீட்டின்
முன் ஓட்டு சாய்ப்பில் உள்ள பெரிய திண்ணை. இந்த திண்ணையில் ஓமந்தூரார், காமராஜர், குமாரசாமி
ராஜா போன்ற முதலமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன்,
முன்னாள் அமைச்சர்கள் மஜீத், லூர்தம்மாள் சைமன், காங்கிரஸ் தலைவர்களாக விளங்கிய எஸ்.ஆர்.நாயுடு,
என்.ஆர்.தியாகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இரா. கிருஷ்ணசாமி
நாயுடு, ஏ.பி.சி.வீரபாகு, இராஜபாளையம் ஸ்ரீரங்க ராஜா, மூத்த நாடாளுமன்ற உறுப்பினராகத்
திகழ்ந்த என்.ஜி.ரங்கா, சர்வோதய பூமிதானத் தலைவர்கள், விவசாயிகளின் தலைவர் சி.நாராயணசாமி நாயுடு
அவருடைய சகாக்கள் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கிருஷ்ணசாமி கவுண்டர், நாடாளுமன்ற முன்னாள்
உறுப்பினர் முத்துசாமிக் கவுண்டர், முத்துமல்லா ரெட்டியார், விடுதலைப் புலிகள் இயக்கத்
தலைவர் பிரபாகரன், பேபி சுப்பிரமணியம், படைப்பாளி கு. அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்,
பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் சோ. அழகிரிசாமி, லட்சுமி மில்ஸ் அதிபர், நாடாளுமன்ற
முன்னாள் உறுப்பினர் ஜி.கே. சுந்தரம் போன்ற பலர் தேர்தல் காலங்களிலோ அல்லது வேறு அரசியல்
பணிகளுக்கோ எங்கள் பகுதிக்கு வந்தால் இந்த தின்ணையில் அமர்ந்து, கலந்தாலோனை செய்துவிட்டு
செல்வது வாடிக்கை.
கரிசல் காட்டு புளிக்
குழம்பும், வத்தல் குழம்பும், மிளகும் பூண்டு ரசமும், நல்லெண்னையில் ஆக்கிய கோழிக்
குழம்பும், எருமை மாட்டுக் கட்டித் தயிரும், கடாரங்காய் ஊறுகாயும், எண்ணெயில் பொறித்த
வடகமும் (இது மிளகாய் வத்தல், சின்ன வெங்காயம், கடலைப் பருப்பும், பொழி நீக்கிய உளுந்து,
சீரகம் போன்றவற்றை உரலில் அரைத்து உருண்டை உருண்டையாக செய்து வெயிலில் காயவைத்து கடலெண்ணையில்
பொரிப்பது). இப்படியான உணவு முறைகளை கிராமத்திற்கு வருகின்ற விருந்தினர்களுக்கு வாடிக்கை.
பலரும் இதை உண்ட பின்பு சந்திக்கும் போதெல்லாம் இந்த உணவைப் பற்றிச் சொல்வது பலமுறை
கேட்டுள்ளேன். இந்த திண்ணையில் பாய்களை போட்டு அமர்வது வாடிக்கை.
படம் 9. இந்த இடத்தில்
ஒரு காலத்தில் மேஜை, நாற்காலி போட்டு கணக்கு எழுதும் உதவியாளர் இருப்பார். என்னுடைய
தகப்பனார் அப்போது கிராம அதிகாரியாக (கிராம முன்சீப்) இருந்தார். இந்த இடத்தில் அவருடைய
உதவியாளர் கணக்கு புத்தகங்களை வைத்து எழுதுவதும், கிராமத்து மக்கள் யாராவது வந்து குறைகளைச்
சொன்னால் கேட்டுவிட்டு மனுக்களை தயார் செய்து கொடுப்பதற்கும் வீட்டிற்கு முன்னால் இருந்த
ஓட்டு சாய்ப்பானும், அவருடைய கணக்கு ஆவணங்களை வைக்கும் அறையும் இருந்தது.
படம் 10. மடக்கு
கட்டில். ஜமுக்காளத்தினை தைத்து இரும்புக் கம்பிகளைச் சொருகி, பயன்படுத்தப்படும் கட்டில்.
இதோடு நார்க்கட்டில், கயிற்றுக் கட்டில் என பயன்பாட்டில் இருந்தது. பெரிய கட்டிலில்
தேக்கு மரத்தால் செய்யப்பட்டு கம்பீரமாக இருக்கும்.
படம் 11. சாய்வு
நாற்காலி (ஈசி சேர்). இந்த ஜமுக்காள வகைத் துணியை மரச்சட்டங்களுக்கு இடையில் பொருத்தி
சாய்ந்து அமரும் வகையிலான இருக்கையாகும்.
படம் 12. நூறாண்டுகளுக்கு
மேலான தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு கீழே அமர்ந்து எழுதும் பெட்டி வடிவிலான எழுதும் சிறு
மேசை.
படம் 13. வீட்டினுள்
புத்தகங்கள் வைக்கப்பட்ட அலமாரி.
இப்படியான மாவு
ஆட்டும் உரல், சட்னி, மசாலா அரைக்கும் அம்பி, குளிக்க வெந்நீர் போடும் பெரிய கொப்பரை
(இந்த கொப்பரையில் தான் நெல் அவித்து அரிசி ஆலைகளில் இருந்து அரிசியாக்கப்படும். இரண்டு
நாட்கள் நெல்லை அவித்து வெயிலில் காயவைத்த பிறகு அரிசி அலைக்கு அனுப்பப்படும்.), விறகுகள்
போடும் இடம், மாடுகளை கட்டி வைக்கும் தொழுவம், மாடுகளுக்கு பருத்திக் கொட்டையும், பிண்ணாக்கு
அரைக்கும் ஆட்டு உரலும், தண்ணீரை சேமித்து வைக்கும் மூன்று தொட்டிகள், மாடிப் படிகள்,
மாடி வெளி எனப் பல வகையான அமைப்புகள் இன்றும் நினைவில் உள்ளன.
அப்போதெல்லாம்,
சீலிங் காற்றாடி இல்லாமல் மேசை காற்றாடி தான் பயன்படுத்துவது வாடிக்கை.
வானொலி பிலிப்ஸ்,
மர்ஃபி ரேடியோக்கள் பயன்பாட்டில் இருந்தன. அந்த ரேடியோக்களின் மேல் இன்டிக்கேட்டர்
லைட் பல வடிவத்தில் எரிவது கவனத்தை ஈர்க்கும். குறிப்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன
செய்திகளை அதிகம் கேட்பது வாடிக்கை. மர நாற்காலிகள், மர மேசைகளின் காலகளில் கடசல் செய்யப்பட்டிருக்கும்.
இரும்பு நாற்காலிகள் 1950களிலேயே பழக்கத்திற்கு வந்துவிட்டது.
செய்தித் தாள்களைப்
பொறுத்தவரையில் மதுரை தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து அச்சடித்து எனது
கிராமத்திற்கு காலை 8 மணிக்கு வரும். அப்போது நெல்லையில் மட்டும் அச்சடிக்கப்பட்ட தினமலரும்
காலை 8 மணிக்கு வந்து சேரும். ஆங்கில இந்து ஏடு கோவில்பட்டியில் இருந்து பஸ்ஸில் வந்து
மதியம் 1 மணிக்கு தான் கைகளில் கிடைக்கும். தினத்தந்தி நாளிதழும் இதே நேரத்தில் தான்
வந்து சேரும். ஆனந்த விகடன், கல்கி, சோவியத் நாடு, அமெரிக்கன் வீக்லி, ஜெர்மன் வீக்லி,
கலைமகள் போன்ற ஏடுகளும் வாடிக்கையாக வருவதுண்டு.
ஊர் வெளியில் மிளகாயை
காயப்போடும்போது தரையே சிகப்பாக காட்சிய்யளிக்கும். ஒரு பக்கத்தில் ஆடுகள் நிறுத்த
மைதானமும், அதை அடைக்க கூண்டுகளும் இருக்கும். ஆடு, மாடுகளை அடைக்கும் பவுண்டுகளும்
இருக்கும். மேலும் வில் வண்டி, அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் எனப் பல கற்கருவிகள் இருந்தன. எனக்குத் தெரிந்தவரை கிராமத்து மக்கள் கடுகு, மிளகு, சீரகம், உப்பு, , தேநீர்
தூள், காபித் தூள், சர்க்கரை மட்டுமே கடைகளில் வாங்குவது வாடிக்கை. மற்ற அனைத்துமே
தாங்களே உற்பத்தி செய்யும் பொருட்களையே பயன்படுத்திக் கொள்வர். ஆனால் இன்றைக்கு நிலைமை
மாறிவிட்டது.
இப்படி பல செய்திகள் உண்டு. அனைத்தையிம் பதிவு செய்ய இடமும் இல்லை. அதற்கு மேல் பதிவு செய்தால் தனிப்பட்ட பதிவாகிவிடும். இந்த வாடிக்கைகள் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரிய வேண்டுமென்பதற்காகவே இந்த பதிவு.
இப்படி பல செய்திகள் உண்டு. அனைத்தையிம் பதிவு செய்ய இடமும் இல்லை. அதற்கு மேல் பதிவு செய்தால் தனிப்பட்ட பதிவாகிவிடும். இந்த வாடிக்கைகள் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரிய வேண்டுமென்பதற்காகவே இந்த பதிவு.
#சொந்த_கிராமத்து_வீடு
#native_home
#vintage_villages
அன்றைய_கிராமங்கள்
villages
கிராமங்கள்
#ஒன்றுபட்ட_நெல்லை_மாவட்டம்
#Integrated_Nellai_District
#Tirunelveli
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-06-2018
அருமை ஐயா ..
ReplyDeleteஉங்களது இளமைகாலங்கள் மிகவும் மறக்க முடியாத மகிழ்ச்சியை இன்று வரை கொடுத்துக்கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
அது ஒரு அழகிய பொற்காலம்.
ReplyDeleteVery Well narrated the village golden age.
ReplyDeleteHistorical record sir
ReplyDeleteஇளம் தலைமுறைக்கு இது தெரியாமலே போய் விடும் அண்ணா .நினைவு ஊட்டியமைக்கு நன்றிகள்
ReplyDeleteஎங்களை போன்ற தேடுதல் உள்ளவர்களுக்கு பொக்கிஷம்
ReplyDeleteபழைய நினைவுகளும், பயன்படுத்திய பொருட்களும் உடல் உழைப்பும்,ஆரோக்கியத்துடனும்.இயற்கையை சார்ந்தே இருந்தன.நினைவுகள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
ReplyDelete