Sunday, June 3, 2018

விளைபொருள் மக்களிடம் தானே வரவேண்டும்.

விளைபொருள் மக்களிடம் தானே வரவேண்டும். 
தினமணி கலாரசிகனின் இந்த வாரப் பதிவு.
--------------------------------------
இன்றைய (03-06-2018) தினமணியில் ‘இந்த வாரம்’ கலாரசிகன் என்ற புனைப் பெயரில் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன் அவர்கள் நான் எழுதிய அழகர் அணை என்ற நூலைக் குறித்து அருமையாக பதிவு செய்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி.

#தகுதியே_தடை என்ற நிலையில் பொதுத் தளத்தில் களப்பணி ஆற்றுபவர்களுக்கு மறைமுகமான எதிர்வினைகள் இருப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அதையும் தாண்டி தினமணியில் கலாரசிகன் என்னைக் குறித்து எழுதிய வார்த்தைகள் உற்சாகத்தையும், மேலும் செயல்பட வேகத்தையும் தருகின்றது. பொது வாழ்வில் பதவிகள் வரலாம். ஆனால், அந்த பதவிகள் போனபின், அவர்கள் யாரென்று தெரியாத நிலை. அப்படியொரு நிலை தேவையில்லை. நாம் செய்த பணிகளையும், நம்மைக் குறித்தான மதிப்பீடுகளையும் வரலாறு மெச்சினால் போதும். அதுவே அங்கீகாரமும், நமக்கான கௌரவமாகும். இதைத் தான் நான் எதிர்ப்பார்க்கிறேன். 48 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் இருந்தும், பதவிகள் மறுக்கப்பட்டும், நம்முடைய பணிகள் மறைக்கப்பட்டாலும், வரலாறு நம்மைத் தூக்கிப் பிடிக்கும் என்பதை நன்றாக உணர்ந்தவன். யார், யார் எப்படி என்று ஒருநாள் மதிப்பீடுக்கு உட்பட்டுதான் ஆகவேண்டும். விளைபொருள் மக்களிடம் தானே வரவேண்டும். இதுதான் யதார்த்தம்....

தினமணி ‘கலாரசிகனின்’ இந்தவார பதிவு.
---------------------------

கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தனிமனிதப் போராளியாக வலம் வருபவர் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். மக்கள் பிரச்சனைக்காக பொதுநல வழக்குகளைத் தொடுப்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம். மனித உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு, விவசாயிகள் பிரச்சனை என்று உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும், மனித உரிமை ஆணையத்திலும் பொதுநல வழக்குகளைத் தொடுத்து, தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

என்னிடம் ஆலோசனை கேட்டால், வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனை தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக்கும்படி பரிந்துரைப்பேன். தமிழ்நாட்டின் நதிநீர் பிரச்சனைகள் குறித்த அத்தனை விவரங்களையும் தனது நுனிவிரலில் வைத்துக்கொண்டிருக்கும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், தமிழக அரசியல் குறித்த நடமாடும் நூலகம். இவரது வீட்டில் சுவர்களே கிடையாது. அத்தனை சுவர்களையும் புத்தக அலமாரிகள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இவருடன் சக வழக்குரைஞர்களாக இருந்தவர்கள் அனைவருமே உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாகிவிட்டனர். ஆனால், கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இப்போதும் தமிழகத்தின் பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.
கடந்த 17-06-2016இல் தினமணியில் ‘அழகர் அணைத் திட்டம் எப்போது?’ என்ற தலைப்பில் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரை, பல்வேறு தரவுகளையும், தொடர்பான செய்திகளையும் இணைத்து இப்போது ‘அழகர் அணை’ என்கிற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
“ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகேயுள்ள செண்பகத் தோப்பின் பின்புறமுள்ள அழகர் மலைப்பகுதியில் ஓர் அணையைக் கட்ட வேண்டும். அந்த அணையின் நீளம் 3,200 அடியாக இருக்கும். உயரம் 225 அடியாக இருக்கும். இதில் 30 டி.எம்.சி நீரைத் தேக்கி வைக்கலாம். ஒரு முறை அணை நிரம்பினால், அதன் மூலம் 2.5 லட்சம் ஏக்கரில் தொடர்ந்து 10 மாதங்கள் விவசாயம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை வழியாகப் பரமக்குடி வரை அந்தத் தண்ணீரை எடுத்துச் செல்லலாம்”, என்று அழகர் அணை குறித்த அத்தனை விவரங்களையும் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.


1974இல் இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ. 7.96 கோடி. 1991இல் மறுமதிப்பீடு செய்தபோது அது ரூ. 157 கோடியானது. இப்போது இதற்கான மதிப்பீடு கிட்டத்தட்ட ரூ. 280 கோடிக்கும் மேல். ஆனால், இன்னமும் அழகர் அணை என்பது திட்டமாக மட்டுமே இருக்கிறதே தவிர, செயல்வடிவம் பெறவில்லை. இந்தப் புத்தகத்தை படிக்கும் போதாவது தமிழக அரசின் பொதுப்பணித்துறை சுறுசுறுப்பாகி, அழகர் அணை திட்டத்துக்கான முயற்சியைத் தொடங்கினால், வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் இத்தனை ஆண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் வெற்றியாகவும் இருக்கும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
03-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...