Tuesday, June 19, 2018

வெள்ளந்திகள்.....

முந்தா நாள் ஒரு கல்யாணம்,ஒரு கெடா வெட்டு இதோட ஊருக்கு ஒரு எட்டு.......
திருவண்ணாமலையில தென் திருப்பதின்னும் சொல்வாக.அது ஒரு மலைக்கோவில் பெருமாள்சாமி மலைன்னும் ஒரு பேரு இருக்கு.

மேலே மலையேற ஆசை ஆனா ஓடினாத்தான் இன்னைக்கி நிகழ்வ சரியா முடிக்க முடியும்ன்ற நிலை.

அதனால மலையடிவாரத்துலயே 
கல்யாண மண்டபத்துல கல்யாணத்துல
கலந்துட்டு நம்மூரு ஊருக்கு பயணம்.

ஊருக்கு போறப்ப ஆளுயுரத்துக்கு புதராய் மஞ்சனத்தி வழிநெடுகிலும் மண்டி கிடக்க பசுமையாய் அதோடு வரிசையாய் ஆவாராம் செடிகள் காய்த்தும், பூத்தும்
இடைவிடாது மஞ்சளும் பச்சையுமாய் வரிசையாய் வரவேற்க, அந்த மண்ணோடும்,மக்களோடும்,மரம்
செடிகளோடும் தவழ்ந்து வந்த தென்றல்
என்னையும் தழுவி வருடிச்சென்றது ஒரு
அலாதி சுகம்.

ஊரின் நுழைவாயிலில் வலது பக்கம்
அந்த இராணுவ வீரன் நாகராஜ் நினைவாய் கட்டப்பட்ட அந்த வீடு உரிமைக்காக நாகராஜ் உறவுகள் போட்ட வழக்கில் நீதிமன்றத்தில்
இருக்க இயற்கை தனக்கே உரிமையென
வாசல், மாடிப்படிகள் என்றும் பாராமல்
மரங்களாய், செடிகளாய் தன்னுரிமை 
ஆக்கி கொண்டிருந்தன.அநேகமாய் இந்த சிவில் வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அந்த வீடு ஒரு வழியாகிவிடும் என்றே நினைக்கிறேன்.

குதுகளமாய் இருந்த ஒரு குடும்பம் அற்று போனதே ஏன்.வெள்ளந்தியான செக்கண்ணா மாமா,வெனயமில்லா 
ஜெயாக்கா தம்பதிக்கு இரண்டு ஆண்
சிங்கங்களாய் பிள்ளைகள்.மூத்தவன்
நாகராஜ் படித்து முடித்ததும் பட்டாளத்தில்
வேலை.மகிழ்ச்சியில் குடும்பமே இருவருமே சேர்ந்து சந்தோசமாய் சொன்னது நாகராஜ் 
பட்டாளத்துக்கு போய்ட்டான் சேகரு சொன்னபோது நானுமே ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.காலமெல்லாம் விவசாயத்தோட மல்லுக்கட்டும் குடும்பத்தில் 
ஒருவருக்கு அரசு உத்தியோகம்  தேசத்திற்கே சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிட்டியதே எனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினேன்.

எனது சின்னவன் அம்மோவோட இருந்த
இளம்பருவத்தில் ஊரில் ஜெயாக்காவின்
இடுப்பிலிருந்து இறங்காமல் ஊர்வலம் 
வருவான்.கடைக்கு கடை அவன் கை நீட்டி கேட்பதெல்லாம் வாங்கி கொடுப்பாள்.என் பிள்ளை என்று இல்லை. ஜெயாக்காவுக்கு பிள்ளைகள் என்றாலே கொள்ளைப்ரியம் தான்.இவன் கொஞ்சம் கூடுதலாய் ஒட்டிக்கொண்டான் அவ்வளவுதான்.

நாகராஜ் பட்டாளத்தில் பயிற்சி முடிந்து
ஒரு மாத விடுப்பில் வந்து பயிற்சியின்
கடுமையும் பட்டாள அனுபவங்களையும்
பகிர்ந்து கொண்டதை எங்களோட சிலாகித்து பேசிக்கொண்டு இந்த சின்னக்காளையையும் பட்டாளத்துல
சேர்த்துறனும் என என் சின்னவனிடம் ஜெயாக்கா சொல்லிக் கொஞ்சிய போது இவனும் மண்டையை வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தான்.பட்டாளத்துக்கு
போறாறாம்.

நாகராஜ் தம்பி சுப்புராஜ் இறுதி வகுப்பில்
இவனையும் அடுத்த வருசம் பட்டாளத்துக்கு அனுப்பிடனும்னு நெனைச்சிக்கிட்டு இருக்கிறேன்.மண்ணோடு மல்லுக்கட்டுனுத நம்மளோட போதும்னு ஜெயாக்கா சொன்னப்ப யாருக்குத் தெரியும்.இந்த மண்ணு யாரையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுறாது என்பது.

மகிழ்ச்சியை கெடுக்க வந்து சேர்ந்தது
தந்தி. கார்கில் போரில் காயத்தோடு 
மருத்துவமனையில் நாகராஜ் என்கிற தகவலோடு அழுது அலறி ஓய்ந்த செக்கண்ணா மாமாவும்,
ஜெயாக்காவும் தொணைக்கு ஒரு 
எகஸ்சர்வீஸ் மேனேடோ நாகராஜ் இருந்த
ஆஸ்பத்திரிக்கு ஓடுனாங்க பாவம்.

சிகிச்சை பலனிக்கவில்லை வீரமரணம்
தழுவினான் நாட்டின் பாதுகாப்பு படையின் சேவையில் நாகராஜ் .இராணுவ 
வாகனத்தில் ஊர் வந்து சேர்ந்தது உயிரற்ற உடல்.

ஊரே திரண்டது நாகராஜின் இறுதி
பயணத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்த இருபத்தோரு 
குண்டுகள் முழங்க நாகராஜ்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.செக்கண்ணா மாமா சிதைக்கு தீ வைக்க காற்றோடு கரைந்து போனான்.இராணுவ வீரன் நாகராஜ்.

இடிந்து போனது குடும்பம்.ஊர் மக்கள்
தைரியத்தையும், நம்பிக்கையும் ஊட்டினர்.பண இழப்பீடு மாநில அரசிடம் இருந்தும்,இராணுவத்திடமிருந்தும் வந்து சேர்ந்தது.நாகராஜ்  நினைவாய் புது இல்லம் கட்டப்பட்டு நாகராஜ் நினைவு இல்லம் பெயர் சூட்டப்பட்டது.

உதடு சிரித்தது.மனம் வலித்தது ஒப்புக்காய் உயிரோடு நடமாடினர் அதோடு இளையவன் 
சுப்புராஜ்க்குமாக.தேய்ந்தே வந்தார் செக்கண்ண மாமா.மிகவும் பாதிப்புக்குள்ளானார்.ஒருவருக்கொருவர் குடும்பத்திற்குள் சொல்லிக்கொண்ட தைரியம் மனதை சரிசெய்யவும் இல்லை.மீளவும் முடியவில்லை.

நோய்வாய்ப்பட்ட செக்கண்ணா மாமா
இறந்தே போனார்.இளையவனுக்காக
வேறு வழியில்லாது வாழ்க்கையோடு
போராடிக்கொண்டிருந்தாள் ஜெயாக்கா.

ஏதோ பாலைவனத்தில் ஒரு செடி போல்
பசுமையாய் துளிர்க்க சுப்புராஜ்க்கு திருமண ஏற்பாடு ஒரு மாற்றம் ஏற்படட்டும்.அந்த குடும்பத்தில் என ஊராரும் உறவினரும் கருதினர்.

ஆனால் காலதேவனின் கணக்கு வேறாய் 
இருந்தது விடிந்தால் கல்யாணம்.மாப்பிள்ளை பையன் சுப்புராஜ் ஆளை காணவில்லை.எங்கு
தேடியும் கல்யாண நாளில் கண்டுபிடிக்கவே முடியவில்லை.ஊரே அதிர்ந்தது எங்கே போனான் தெரியவில்லை.இரண்டு நாளுக்கு பின் விடை கிடைத்தது.

அவர்களுக்கு சொந்தமான காட்டில் விஷ
மருந்தி இறந்து கிடக்கிறான் என்று.
ஆகவேண்டியதை வேறு வழியற்ற 
நிலையில் செய்து முடித்தாள் ஜெயாக்கா.

வேதனையின் உச்சத்தில் மன வலி மரண வலியில் துடித்து குழப்ப நிலையில்.யாருக்கும் வரக்கூடாத 
வேதனையும் துன்பமும் அது.எந்த நம்பிக்கை வார்த்தைகளும் பயனற்று போயின.நாட்கள் கடந்தன வெகு விரைவாக ஜெயாக்காவுக்கும் அந்த கடைசி நாள் வந்து சேர்ந்தது விரைவிலேயே . ஜெயக்காவும் மண்ணோடும் காற்றோடும் கரைந்தே போனாள்.

நாகராஜ் நினைவு இல்லம் பூட்டியே 
கெடக்குறது.இயற்கை அந்த வீட்டை
ஆட்க்கொண்டு செடிகளாய், பூக்களாய்
நாளை மரங்களாயும்.புதர் மண்ட 
ஆரம்பிக்கிறது.ஒரு பாவமறியா அந்தக்
குடும்பமும் அந்த வீடும் எல்லோருக்கும்
சொல்லிச் செல்கிறது.இந்த உலகில்
நிலையானது என்று ஒன்றுமில்லை என்றே.




No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...