Sunday, November 11, 2018

நீர்நிலைகளை பாதுகாக்க கரம் சேர்ப்போம்! வாரீர் !!!

நீர்நிலைகளை பாதுகாக்க கரம் சேர்ப்போம்! வாரீர்!!

---------------
சர்க்கார் சினிமா, மீடூ, மாட்டிறைச்சி, அந்த மதம், இந்த மதம் என்பதை போன்றவற்றை எல்லாம் விட்டுவிட்டு, அவசியமான பிரச்சனைகளுக்கு களம் காண்போம். (உயர்நீதிமன்ற வழக்கு)

---------------------------------------------

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏரி, கால்வாய், குளம், குட்டை, கண்மாய், கிணறு போன்ற பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய வழக்கு நிலுவையில் இருக்கின்றது. இந்த வழக்கில் மேலும் பல தரவுகளோடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது மாதிரியான வழக்குகள் பல வட்டாரத்திலிருந்து தாக்கல் செய்து இந்த பிரச்சனையில் நீதி கிடைக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். இதில் அக்கறையுள்ளவர்கள் கரம் சேருங்கள். நீதிமன்றத்திலும் பல மனுக்கள் இதுகுறித்து தாக்கல் செய்தால் இன்னும் வேகமாக நியாயங்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும். மந்தமாக இருக்கின்ற அரசு நிர்வாகத்திலும் அதிர்வை ஏற்படுத்தலாம். இது பொது நலன் கருதிதானே அன்றி விளம்பர நலன் கருதி தன்னுடைய சுயஇருப்பை வெளிச்சத்திற்கு கொண்டுவர செய்யும் நடவடிக்கை இல்லை. இதன்மேல் அக்கறையும், புரிதலும் உள்ளவர்கள் ஒன்று சேர வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்த பதிவு.

இந்த நீர்நிலைகளை இன்றைக்கு பாதுகாக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும்பாதகமான விளைவுகள் ஏற்படும். ஆயக்காட்டு, பொது மராமத்து நடைமுறையில் இருந்த காலத்தில் இந்த நீர்நிலைகள் பாதுகாப்பாக மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தன.
தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்றபோது 60,000 ஏரி, குளங்கள், நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்த குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதியளவு எண்ணிக்கையான நீர்நிலைகளே தற்போது உள்ளது. தமிழக அரசு பொதுப் பணித்துறை ஒப்புக்கு பராமரித்து வரும் ஏரிகள் 39,202 என கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கிறது.
அதன்பின்னர், நாயக்கர் மக்கள் காலத்திலும் இந்த பணிகள் தொடர்ந்தன. கிராமப்புறங்களில் மன்னராட்சி காலத்தில், விவாசாய ஆயக்காட்டுத்தாரர்கள் நீர்நிலைகளை பாதுகாக்கக் கூடிய அளவில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டார்கள். கூட்டுறவு முறையில் ஒற்றுமையாக கிராமப்புறங்களில் நீர் நிலைகளின் கரைகளை உயர்த்தவும், மதகுகளை அவ்வப்போது சரி செய்யவும், குளங்களை தூர்வார வேண்டும் என்று அடிப்படைப் பணிகளை திட்டமிட்டு செய்தனர். இந்த பழமையான பணிகளை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அதிக உணவு தானிய உற்பத்தி என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த திட்டத்தை அப்போதே விரிவுப்படுத்தப்பட்டது.
ஆனால், இவையாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்களுக்கு பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குடிமராமரத்துப் பணிகளும், கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பண்டைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இந்த நீர்நிலைப் பாதுகாப்பினை தங்களுடைய ஆட்சியின் முக்கியக் கடமை என்று எண்ணினார்கள். இந்த நிலையில் தான் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். வீராணம் ஏரி என்பதெல்லாம் இன்றைக்கு சான்றுகளாக உள்ளன. அறிவியல் ரீதியாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள மதுரையில் வண்டியூர் தெப்பகுளம், மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளம் என்பதெல்லாம் இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளன.
மேலும் 1846இல் குடிமராமத்து பணிகளை எழுத்துப்பூர்வமான நடவடிக்கையை கொண்டு வந்தது. 1930ல் மெட்ராஸ் வாட்டர் போர்டு ஆக்ட் என்ற சட்டத்தினைக் கொண்டுவந்து இந்த பணிகளை மேலும் வேகப்படுத்தினர். இதை முதன்முதலாக தஞ்சை மாவட்டத்தில் பிரிட்டிஷ் அரசு 1905ல் குடிமராமத்தை விழாக்கோலத்தில் துவக்கி வைத்தது. அப்போது இதை நீர்க்கட்டு என்று அழைப்பது உண்டு. பிற்காலத்தில் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தின் 12 மாவட்டங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் வளர்ச்சிக்காக 1940இல் பிரிட்டிஷ் அரசின் தலைமைப் பொறியாளர், நீர்ப்பாசனம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு 1940ல் நிர்வாக ரீதியாக மாற்றியதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். இப்படியான நீர் நிலைகள் பல காணாமல் போய்விட்டன. இருப்பவைகள் பாராமரிப்பில்லாமல் போய்விட்டன. இது தான் இன்றைய நிலை. இந்த அவலத்தை போக்கி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்பது அவசர, அவசியமாகும்.

படங்கள். -------- 1. வண்டியூர் தெப்பக்குளம், மதுரை (1930)

2. நாங்குநேரி, நெல்லை மாவட்டம் (1925)
3. ஆழ்வார்த்திருநகரி, தாமிரபரணி வரத்துக் கால்வாய் (1920)
4. பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் (1920)
5. தமிழகத்தின் மிகப்பெரிய பாசன ஏரிகள் பட்டியல்.
6. மாவட்டவாரியாக தமிழகத்தின் ஏரிகள்


#ஏரி #குளங்கள் #வாய்க்கால் #ஆறுகள் #நீர்நிலைகள் #Water_Storages #Lakes #Tanks #Ponds #Canals #Rivers #Writ_Petition_on_water_storage #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 11-11-2018

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...