Saturday, November 17, 2018

கஜா புயல்

கஜா புயல் 
———————
கஜா புயல் உள்மாவட்டங்களை பாதித்துவிட்டது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் 10 பேர் பலி என்று செய்தி. சில பத்திரிக்கைகளில் 36 பேர் என்றும், தினத்தந்தி 46 பேர் என்றும் தெரிவிக்கிறது. உண்மையான களப்பலி கணக்கு தெரியவில்லை. புயலின் சீற்றம் இப்போது ஆண்டுக்காண்டு உயர்ந்து 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல். தலைமுறைகளாக இருந்த பெரிய விருட்சங்கள் எல்லாம் அடியோடு சாய்ந்துவிட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட பழமையான இரயில் நிலையத்தின் மேற்கூரைகள் எல்லாம் சூறாவளியால் பெயர்ந்து பறந்துவிட்டன. நாகை மாவட்டத்தில் இதுபோன்ற புயலின் கோரத்தாண்டவம் 1950க்கு முன்னும் பல சம்பவங்கள் உண்டு. அதன்பின், 1952, 1963, 1977, 1991 ஆகிய நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்கள் பெரும் பாதிப்பை நாகை மாவட்டத்தில் ஏற்படுத்தியது. 1952, டிசம்பரில் ஏற்பட்ட புயலால் பெரும் சேதங்கள் ஏற்பட்டது. கடந்த 11/11/1977இல் ஏற்பட்ட பெரும்புயல் அங்கு பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கஜா புயலால் காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், பாம்பன் முதல் வடக்கே கடலூர், புதுவை வரை பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்பனில் 100 மீட்டர் வரை கடல் உள்வாங்கியதும் மக்கள் அங்கே அச்சமடைந்தனர். இத்தகைய புயலால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் தான். வாழைத் தோப்புகள் முழுமையாக நாசமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஆடு, மாடுகள் போன்ற கால்நடைகள் எல்லாம் இப்புயலால் மரணித்தது. காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்றிருந்த கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்ததால் அதில் இருந்த ஊழியர்கள் கலக்கம் அடைந்தனர்.
கடந்த 1994 அக்டோபரில் சென்னையில் ஏற்பட்ட புயலால் சென்னை பலமாக பாதிக்கப்பட்டது, 2000இல் கடலூரில் ஏற்பட்ட புயலும் பெரியளவில் பாதிப்பை உண்டாக்கியது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ஆம் ஆண்டில் தான் உருவானது. கடந்த 2010ஆம் ஆண்டில் உருவான ஜல் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது. ஆனால், 2008இல் நிஷா புயலும் தமிழகத்தை கடுமையாக பாதித்துள்ளது. 2011ஆம் ஆண்டு கடலூரை தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்றும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. 2012இல் உருவான நீலம் புயலால் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. கடந்த 2016இல் ஏற்பட்ட வர்தா புயலால் சென்னை கடுமையான பாதிப்புக்குள்ளானது. வருடாவருடம் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்படும் புயல் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-11-2018









No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...