Tuesday, November 26, 2019

அரசியல்_சாசனம்_70, #நமது_மண்வாசனையும்.

இன்றைய (26.11.2019) தினமணியில் நமது #அரசியல்_சாசனம்_70 வது ஆண்டு நிறைவையொட்டி என்னுடைய சிறப்பு பத்தி வெளிவந்துள்ளது அது வருமாறு .......

#அரசியல்_சாசனம்_70, 
#நமது_மண்வாசனையும்.
-வழக்கறிஞர். 
கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
————————————————-
நாடு விடுதலைப் பெற்று 72 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாக்கி 70 ஆண்டுகள் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் அரசியல் சாசனம் 124 முறை திருத்தப்பட்டுள்ளது. இன்னும் அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் மூன்று நிலுவையில் உள்ளது. காஷ்மீர் சிறப்பு அதிகாரம் 370ம் திரும்பப் பெறப்பட்டது. இதுவரை பிரிவு 356 கொண்டு 132 முறை மாநில அரசுகளும் மத்திய அரசால் கலைக்கப்பட்டது.
கடந்த 1999இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன 50வது நிறைவு விழாவை காண நேர்ந்தது. அதையொட்டி அரசியல் சாசனம் மூலப் பிரதியை அப்படியே அச்சிட்டு அந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் கையொப்பம் மூலப்பிரதியில் இருந்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த மு.சி.வீரபாகு என்று தமிழில் ஒரு கையொப்பம் இன்றும் இடம்பெற்றிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.



அரசியல் சட்டத்தில் சூழ்நிலைக்கேற்றவாறு திருத்தம் தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி, என்.டி.இராமாராவ், பி.கே.நேரு மற்றும் பல்வேறு அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், நாம் சந்தித்த பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்து பரிசீலனை செய்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது என குடியரசுத் தலைவராக இருந்தபொழுது நீலம் சஞ்சீவ ரெட்டி தமது சுதந்திர நாற் செய்தி ஒன்றில் தெளிவுபடுத்தினார்.
அரசியல் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஏற்ப திருத்தங்கள் செய்யலாம் என்று கூறினார். அரசியல் சட்டத்தைத் திருத்த முடியாது எனப் பழைமைவாதம் பேசுவது அர்த்தமற்றது எனக் கூறியுள்ளார் நீதிபதி கிருஷ்ணய்யர். இன்றுள்ள இந்தியாவின் நிலைக்கு ஏற்றவாறு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அல்லது தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைகி கொண்டு வருவது தேவையான, தலையாய பணியாக இருக்கிறது.
ஊழல், நிலையற்ற ஆட்சி, பொருளாதாரச் சீர்குலைவு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கின்ற வகையில் நாட்டின் அரசமைப்புப் பணிகள் இருக்க வேண்டும். அரசில் என்ன நடைபெறுகிறது என்பதை ஒளிவு மறைவின்றி மக்கள் தெரிந்து கொள்வதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். மக்களவை, சட்டமன்றத் தொகுதிகள் பல ஆண்டுகளாகியும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்படவில்லை. தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு தீர்வும், சீர்திருத்தங்களும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறித்தான விவாதம் நடத்தப்பட வேண்டும். மாநிலங்களவையில் இடஒதுக்கீடு ஆஸ்திரேலியாவைப் போல அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்ற நிலை, விலைவாசி ஏற்றம், அரசு நலப் பணிகளில் மெத்தனம், பல்வேறு தேசிய இனப் பிரச்சினைகள், தீவிரவாதம் போன்ற சிக்கல்களை இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் தற்சமயம் விவாதிக்கப்பட்டு வரும் ‘தேசிய அரசு’ போன்று இந்தியாவிற்கு அதிபர் ஆட்சி முறை வேண்டுமா? அல்லது இன்றைய நாடாளுமன்ற ஆட்சி முறையே நீடிக்கலாமா? என்று இந்தியாவின் அடிப்படை அமைப்புகளைப் பற்றி தினமும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கு விடை அளிக்கும் வகையில், இந்திய அரசியல் சாசனம் அமைய வேண்டும்.
இந்தியா கூட்டாட்சி அமைப்பா அல்லது கூட்டாட்சி கலந்த ஒற்றையாட்சி அமைப்பா என்பதைத் தெளிõவாக அரசியல் சாசனத்தில் தெரிவிக்க வேண்டும். இந்திய அரசியல் சாசனம் நெகிழாத தன்மை கொண்டதா அல்லது நெகிழும் தன்மையுடையதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் வழிகாட்டிக் கொள்கைகளை நீதிமன்றம் மூலம் எவ்வாறு நெறிப்படுத்தலாம் என்பதையும் அரசியல் சாசனம் திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை. மத்திய – மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர்ச் சிக்கல்களை விரைவில் தீர்க்கவும் அரசியல் சட்டம் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.மத்திய – மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரிய குழு, நீதிபதி ராஜமன்னார் குழு போன்ற சில குழுக்களின் பரிந்துரைகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
அரசியல் சட்ட 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பது குறித்தும் ஆரோக்கியமான விவாதம் தேவை. நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யவும், பிரதம அமைச்சரைக்கூட நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருந்தாலும் அவர் ஒரு சம்பிரதாயத் தலைவராகவே இருக்கிறார். பிரதம அமைச்சருக்கும், இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் உள்ள உறவை அரசியல் சாசனம் தெளிவுபடுத்தவில்லை. இதனால் பண்டித நேருவுக்கும், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராஜேந்திர பிரசாத்துக்கும் பல சமயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிடி ஆயோக் குறித்த விமர்சனங்கள் உள்ளன.
சிறையில் இருந்துகொண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், சிம்ரஞ்சித் சிங் மான் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் சிறையில் உள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவில் வாய்ப்பு இல்லை. சிறுபான்மையினர் நலன் வெறும் எழுத்துக்களில் இல்லாமல் திட்டங்களில் வரவேண்டும். உண்மையான மதச்சார்பின்மை நாட்டில் நிலவி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கின்ற நமது அரசியல் சாசனத்தில் பல தெளிவின்மைகள் இருக்கின்றன. ஒரு நாட்டின் ஜீவநாடியாக உள்ள அரசியல் சாசனம், நாட்டை நடத்திச் செல்லும் வழிகாட்டியாக விளங்க வேண்டும். 1946இல் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள், இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, வயது வந்தவர்கள் அனைவரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு, கல்வி கற்றோர் என்ற அடிப்படையில், அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே, இன்றைக்கு உள்ள இந்திய அரசியல் சட்டம் என்பது நாட்டின் அனைத்து மக்களின் பிரதிபலிப்பல்ல.
கடந்த 70 ஆண்டிற்குள்ளேயே 124க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரவேண்டிய காரணமே, இந்திய அரசியல் சட்டத்தில் சில தெளிவின்மைகள் இருப்பதால்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அமெரிக்க அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 210 ஆண்டுகள் ஆயினும், இதுவரை (1789லிருந்து) 27 சட்டத் திருத்தங்களே அதில் செய்யப்பட்டுள்ளன.
நமது அரசியல் சாசனம் உருவாகிய வரலாற்றையும் திரும்பி பார்க்க வேண்டி உள்ளது. மத்திய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 296 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கார் துவக்கத்தில் இடம்பெறவில்லை. கிழக்கு வங்கத்தை சார்ந்த யோகேந்திரநாத் மண்டல் கடைசி நிமிடத்தில் விலகியதால் அந்த இடத்தில் அம்பேத்கர் இடம்பெற்றார். ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். ஒடுக்கப்பட்ட வகுப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை எச்.பி.மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிறித்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர ஊமர் முகர்ஜி இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், பி.ஆர்.அம்பேத்கர், பெனகல் நர்சிங்ராவ் மற்றும் முன்ஷி, கணேஷ் மவுலன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண் உறுப்பினர்களாக இருந்தனர். கமலாபாய் சட்டோபாத்யாயா அவர்களை இந்த குழுவில் நியமனம் செய்ய சிலருக்கு விருப்பமில்லை. அரசமைப்பு மன்றத்தின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்கா ​​இருந்தார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.
1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
 
பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். சிலர் சில நேரங்களில் விலகினர் சிலர் சேர்ந்தனர்.இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.
அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற பிரிட்டிஷ் காலனி நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.
இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.
கவர்னர்கள் என்ற தேவையற்ற பதவியை அரசியல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குகின்ற கொடையும், இன்றைக்கு நமது அரசியல் சாசனத்தில் உள்ளது தேவைதானா? இப்படி பல்வேறு நமது அரசியல் சாசனங்களில் உள்ள குழப்பங்களை நீண்ட பட்டியலே இடலாம். இவ்வளவு பக்கங்களும், பிரிவுகளும் நமது அரசியல் சாசனத்தில் இருந்தும் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய வழிகாட்டியாக அரசியல் சாசனம் இல்லை என்பது தான் யதார்த்தம்.
வேர்ட்ஸ்வோர்த் சொல்வார், பழமைக்கும், புதுமைக்கும் இடம்விட்டுவிட வேண்டும். அதை இயற்கையோ, இறைவனோ நிரப்புவான் என்று. இயற்கையாகவே அதை நிரப்பக்கூடிய சூழல்கள் இந்தியாவில் அமையவும் இல்லை. பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் அனைவரின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய அரசியல் சாசனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் எடை 0.600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் இங்கிலாந்தில் உள்ள அரசியல் மரபுகளையும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் சாசன பிரிவுகளையும் பின்பற்றி உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் சாசனமும் ஒரு புரட்சி அல்லது போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகுதான் உருவாக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் விடுதலைப் போராட்ட உணர்வுகளால் ‘பன்மையில் ஒருமை’ என்ற தத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றை எல்லாம் ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பாகச் சேர்த்து வைக்கின்ற கருவியாக அரசியல் சாசனம் இருக்கவில்லை.
மாநில அரசு மீது மாற்றாந்தாய் மனப்போக்கோ, சட்டாம் பிள்ளைத்தனமோ இல்லாதவாறு மத்திய அரசின் அணுகுமுறை இருக்க அரசியல் சாசனம் உறுதி செய்ய வேண்டும். சமுதாய ஏற்றத்தாழ்வு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும். இந்தியாவினுடைய பிரச்சனைகள், கலாச்சாரம் மற்றும் மக்களின் தேவைகளை மனத்தில் கொண்டு மண்வாசனைகளையும் பிரதிபலிக்குமாறு நமது அரசியல் சாசனம் அமைய வேண்டும். நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாக அது இருக்க வேண்டும்.
நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க பி.என்.ராவ் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கருக்கு உதவியாக இருந்து முறைப்படுத்தினார்.
‘மற்ற நாடுகளின் அரசியல் சாசனப் பிரிவுகளை நாம் பயன்படுத்துவதைவிட, நமது கலாசாரம், நமது தேவைகளை அறிந்து நாம் நமக்கான அரசியல் சாசனத்தை வகுக்க வேண்டும்’ என மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கஷ்யப் கூறுகிறார். ‘அரசியல் சட்டம் மனிதகுலம் வளம் பெறுவதற்காக உருவாக்கப்படுவதாகும். அது அரசமைப்புக்கு மட்டுமே உருவாக்கப்படுவதல்ல’ என்று அரசியல் அறிஞர் பி.கே.நேரு கூறினார். இதைவிட எளிமையாக எப்படிச் சொல்ல முடியும். நாட்டின் உயிரோட்டமாகவும், ஜீவனாகவும் அரசியல் சாசனத்திற்கென்று புனிதத் தன்மைகள் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

#இந்திய_அரசியல்_சாசனம்70
#constitution70
#ksrpost
 கே எஸ் இராதாகிருஷ்ணன்
26.11.2019
#இந்திய_அரசியல்_சாசனம்70
#constitution70
-செய்தித்தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
பொதிகை – பொருநை – கரிசல்.


No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...