Tuesday, November 19, 2019

மாவீரன்_ராணா_பிரதாப்_சிங் #மேவார்

#மாவீரன்_ராணா_பிரதாப்_சிங் 
#மேவார்
———————————————
மாவீரன் ராணா பிரதாப் சிங் அவர்கள் பயன்படுத்திய குதிரையின் பெயர் சேட்டக். அதன் வீரியத்தையும் வேகத்தையும் நினைவாகவே 60களில் பஜாஜ் நிறுவனம் தயாரித்த இரு சக்கர வாகனத்திற்கு பெயர் வைக்கப்பட்டது. மாவீரன் ராணா பிரதாப் சிங் பற்றிய குறிப்பு 

அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரைப் பார்த்து வணங்கினான். அக்பர் அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான்.அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்பிய அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில்  சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான்.

“சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணத்தை? “அப்துல்லின் குரல் மாளிகைச் சுவர்களில் எதிரொலிக்கிறது.

“ஒரு படையெடுப்பை நிகழ்த்தப் போகிறேன் அப்துல்.அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்! அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது.

“கட்டளையிடுங்கள்.
வெற்றிகனியைப் பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்! “

அக்பரின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை ஓடியது.

“ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் 
நீ வெல்ல வேண்டியது.
கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை! “கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவமாடியது.

“ராஜபுதனத்தின் சிங்கத்தை வெல்லச் சொல்கிறீர்கள்? “

“என் படைபலம் உமக்கு உண்டு.”

“ராணாவைத் தேடிப் பிடிப்பது வைக்கோலில் விழுந்த ஊசியைத் தேடுவது போன்றது.
ராணாவை குறி வைக்கக் காரணம்? “

“இந்துஸ்தானம் என் காலடியில் விழுந்து கிடக்கிறது அப்துல்.ராஜபுதனமும் கூட.
ஆனால் உதய்ப்பூர் என்னும் மேவார் விழ மறுக்கிறது.என்னைத் தொழவும் மறுக்கிறது.காரணம் ராணா.
அவனது வீரம்.என்னை அவமானம் செய்து மகிழ்கிறான் அவன்.
அவனது ஆணவத்தை போக்கியாக வேண்டும்.மொகல் ராஜ்ஜியத்தின் கரும்புள்ளியை கலைந்தாக வேண்டும்! 

“என்ன சொல்லி அவமானப்படுத்துகிறான் ராணா? “

“என்னை எதிர்க்கும் அரசர்களின் தங்கைகளையும், மகள்களையும் மணந்து அவர்களை அடக்குகிறேனாம். பெண்களின் பாவாடையால் விஸ்தரிக்கப்பட்டது மொகல் சாம்ராஜ்ஜியம் என்று அவமதிக்கிறான் ராணா! “

“அது மட்டுமா? தங்களுக்குப் பெண் கொடுத்த ராஜபுத்திர அரசர்களை, மதம் மாறியவர்களை ராணா சற்றும் மதிப்பதில்லை.சபை நடுவே கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறான்.  கூட்டிக் கொடுத்தவர்கள் என்று கேவலப்படுத்துகிறான். அவர்களை ராஜபுத்திர இனத்திலிருந்தே ஒதுக்கியும் வைக்கிறான்.!”

“எனக்கு இணங்காமல் ராணா இறுமாப்புடன் இருக்க என்ன காரணம்? “

“சித்தூரை நாம் கைப்பற்றிய போது நடந்தவற்றை ராணா இன்னமும் மறக்கவில்லை.அவன் நெஞ்சில் அணையாத நெருப்பாய் அந்த துயரம் எரிந்து கொண்டேயிருக்கிறது.!”

“சித்தூரை நாம் வெற்றி கொண்ட போது என்ன நடந்தது? “

“வென்ற நீங்கள் மறந்து விட்டீர்கள்.
பாதிக்கப்பட்ட அவன்  அதை மறக்கவேயில்லை.நம் கையில் அகப்படாதிருக்கும் பொருட்டு 25,000 பெண்கள் ஜஹர் என்னும் தீக்குளிப்பில் இறந்ததை ராணா இன்னமும் மறக்கவில்லை.தோற்றோடி ஆரவல்லி மலைக் குன்றுகளில்  ஒளிந்து வாழ்ந்ததை  மறக்கவில்லை.
உதய்பூர் என்னும் மேவாரை உருவாக்கி அரசாண்டதை மறக்கவில்லை.!”

“பயத்தில் அவர்கள் இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்.?”

“பயத்தை உருவாக்கியது நாம் தான்! “
“இருக்கலாம்!ஆனால் அவனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஜக்பல், சக்தி சிங், சரவ் சிங் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள்.சொந்த ரத்தங்களை எதிர்த்து ராணா யுத்தம் செய்கிறான்.அந்த துணிச்சல்? “

“மகாபாரதத்திலிருந்த கிருஷ்ணா உபதேசம் தரும் தைரியமது.
ஜக்பல் மேவாரின் அரசனாக வேண்டியவன்.மக்களும் அரசு பிரதானிகளும் அதை விரும்பாததால் ராணா மன்னனாக்கப்பட்டான். வெறுப்படைந்த ஜக்பல் உங்களோடு சேர்ந்து கொண்டான்.தன் உற்றார் உறவினர்களை பகைத்துக் கொண்டு சொந்த சகோதரர்களின் துரோகத்தை சகித்து கொண்டு காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து கொண்டு ஒற்றை  ஆளாக ரஜபுதன வீரத்தை  மெய்பித்துக் கொண்டிருக்கிறான் ராணா.”

“அந்த இனத்தின் பெருமைக்கு அவன் ஒருவன் போதும்.!”

“வீரன் வீழ்ந்தாலும் அவன் இனத்திற்கு பெருமை சேர்த்து விட்டே வீழ்கிறான்.
துரோகி நெடுநாள்  வாழ்ந்தாலும் இனத்தின்  பெயரை  சேதப்படுத்தி விடுகிறான்.”

“உண்மை தான்.
ராணாவின் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்.ஆனாலும் அவன் என் எதிரி.ஆகவே படையெடுப்பு துவங்கட்டும்.ராணாவை உயிரோடு பிடிக்க முயற்சி செய்.!”

“விசித்திரமான விசயம் என்னவென்றால் உங்களின் தாத்தா பாபரை ராணாவின் தாத்தாராணாசங்காஎதிர்த்தார்.
இப்போது அவர்களின் பேரர்கள் களத்தில் எதிரெதிராக நிற்கிறீர்கள்! “

“தலைமுறை எதிரி! “என்றான் அக்பர்.

மறுநாள் அப்துல் ரகுமான் தலைமையிலான படை ரஜபுதனத்தை நோக்கி பயணமானது.தன் படைகளுடன் நிலை கொண்ட அப்துல் ராணாவைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தான்.அதே நேரம் படையை பின்பற்றி  வந்து  கொண்டிருந்த அப்துல்லின் மனைவியும் மகளும் வழி தவறியிருந்தனர்.பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! நாம் வழி தவறி விட்டோம்.சரியான வழியை கண்டறிய முடியவில்லை! “என்றான்.

“அந்தி கவிழ்கிறது.
இனி என்ன செய்வது? “ஆயிசா குழம்பிக் கொண்டிருந்த போது அந்த குதிரை வீரர்கள் பல்லக்கு தூக்கிகளை சூழ்ந்தார்கள். பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! பயம் வேண்டாம்! வழிப்பறிகொள்ளையர்களாகஇருக்க
கூடும்.
தளபதியின் பெயரைக் கேட்டதும் விலகி விடுவார்கள்! “என்றதுடன் அதை சொல்லவும் செய்தான். முன்னணியில் இருந்த குதிரை வீரன் உரக்கச் சிரித்ததுடன் “நல்லது.நான் அமர்சிங்! ராணா பிரதாப் சிங்கின  மூத்த 
மகன்! “என்றான்.பேகத்தின் முகம் சவமாக வெளுத்தது.சேதியறிந்த அப்துல் எரிமலையானான்.

சற்று நேரத்தில் குதிரையில் வந்து இறங்கினான் ராணா பிரதாப்சிங்.

“வலிய வந்து மாட்டியிருக்கிறார்கள் எதிரியின் சொந்தங்கள்! “என்று அமர்சிங் ஆயிசாவையும் சாயீராவையும் சுட்டிக் காட்டினான்.

அருகே வந்து நின்ற ராணா “பயம் வேண்டாம் பெண்களே! என் பகை அப்துல்லோடு மட்டுமே! நீங்கள் என் விருந்தாளிகளே! இன்று இரவு பில் பழங்குடியினரோடு நீங்கள் தங்கலாம்.
நாளைக் காலை  உங்களின் படைமுகாமுக்கு நானே அனுப்பி வைப்பேன்! “

சாயீரா ,அமர்சிங் பல்லக்கை மடக்கிய உடனேயே சேலைத் தலைப்பைக் கிழித்து ஆபரணங்களைக் கோர்த்து அவசரமாக இரண்டு ராக்கிகளை தயாரித்திருந்தாள்.

“உங்களை சகோதரர்களாக ஏற்க விரும்புகிறோம்.கையை நீட்டுங்கள்! “
“அச்சம் வேண்டாம் பெண்ணே.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரிகளாக எண்ணுவது தான் எங்கள்  பண்பாடு.அதற்கு நாங்கள் விதி விலக்கல்ல.உன் மனசாந்திக்காக அதை கட்டி கொள்ளச் சம்மதிக்கிறேன்.இந்த நேரத்தில் இதே ராக்கியை வைத்து அக்பர் செய்த தீங்கை சொல்ல வேண்டியது என் கடமை! “

“சொல்லுங்கள்.இதே ராக்கியை அக்பரின் கரத்தில் கட்டினாள் ராணி துர்க்காதேவி.சகோதரியாக எண்ணாமல் அவளைக் கொன்றான்  அக்பர்.
பெண்களை கொல்லக் கூடாது என்ற மத விதிகளை அவன் மதிக்கவில்லை.
ஆனால் எங்களின் போர் விதிகள்! “

“அக்பரை போல் நீங்களும் வாக்கு தவறி? “

“நான் ராணா பிரதாப்சிங் பெண்களே! அக்பரை போல் நான் இருக்கமாட்டேன்.
இந்துஸ்தானத்தின் பெருமைக்கு ஒரு தீங்கும் என்னால் நேராது.பெண்களால் ஒரு வெற்றி கிட்டுமெனில் தோற்பதையே பெருமையாகக் கருதுவேன்.!”

அதே நேரம் தீக்கனவுகளைக் கண்டு தூக்கமிழந்து கொண்டிருந்தான் அப்துல்.விடியற்காலை வேளையில் முகாமிற்கு வெளியே சத்தத்தை கேட்டு எழுந்து வந்தவன் அதிர்ந்தான்.

வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ராணா.அவனுடன் அமர்சிங்கும் பில் பழங்குடியினரும் பேகமும் நின்றிருந்தனர்.

“இதோ! உனக்குச் சொந்தமானவைகள்.
எந்த  சேதமும்  இன்றி  திரும்ப ஒப்படைக்கிறேன். பெற்றுக் கொள் அப்துல்! “

பேகமும் மகளும்  முன்னேறி முகாமுக்குள் வர தாக்க முனைந்த வீரர்களை அப்துல்லின் சைகை நிறுத்தியது.

“போய் வருகிறேன் அப்துல்.களத்தில் சந்திப்போம்! “ராணா தன் குதிரையில் தாவி ஏறினான்.

“ராணா!ஒரு கேள்வி? “

“கேள்! “

“உன் இடையில் இரண்டு  வாள்கள் தொங்குகின்றனவே? எதற்காக? “

“நான்   நிராயுதபாணிகளைக் கொல்வதில்லை. அப்படி சந்தர்ப்பம் வாய்த்து விட்டால் இந்த வாளில் ஒன்றைப் பரிசளிப்பேன். போராடி வெல்வதே எனக்குப்   பிடிக்கும்! “

“உன் வீரத்திற்கும், பெருந்தன்மைக்கும் தலை வணங்குகிறேன் ராணா! “

“ஜெய் பவானி! “என்ற முழக்கத்தோடு ராணாவின் குழு அங்கிருந்து கிளம்பியது.

“அசல் ராஜபுதன ரத்தத்தைப் பார்த்து விட்டேன்! “என்ற அப்துல் பேகத்தையும் மகளையும் தழுவிக் கொண்டான்.

*அக்பரை இறுதி மூச்சுவரை எதிர்த்த பிரதாப் தன் 56 வது வயதில் மரணமடைந்தான்.

அவனுடைய மகன் அமர் சிங் மொகலாயப் படைகளை 13 முறை வென்று துரத்தியடித்தான்.

பிரதாப்பை எதிர்த்து போரிட முடியாது என்று பதவி விலகிய அப்துல்  ரகீம் அக்பரின்  மகன்  சலீமின்  மெய்க் காவலனாக நியமிக்கப்பட்டான்.

இழந்த மேவாரைத் திரும்ப பெறும் வரை ராணா வெறுந்தரையிலேயே உறங்கி சப்பாத்தியை மட்டுமே உண்டு வைராக்கியமாக வாழ்ந்து மேவாரை அக்பரிடமிருந்து கைப்பற்றினான்.

இதையெல்லாம் வரலாற்றில்.......


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...