Tuesday, November 26, 2019

விடுதலைப்புலிகள் #பிரபாகரன் Prabhakaran

#விடுதலைப்புலிகள் #பிரபாகரன் 
சில வரலாற்று நிகழ்வுகளும் விடயங்களும் இப்போது நையாண்டி ஆகிவிட்டன. என்ன சொல்ல... 

வாயாலேயே வடை சுடுகின்ற கதையாகிவிட்டது.

பயத்தை விடு...
இல்லையேல் லட்சியத்தை விடு...!
 #பிரபாகரன் 
#Prabhakaran65
-------------------------------------

அருமை சகோதரர், விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை 1979லிருந்து அறிந்தவன். அந்த காலக்கட்டத்தில் திரு. பழ.நெடுமாறன், புலவர் புலமைப்பித்தன் போன்ற பலர் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சற்று பின்னோக்கி பார்க்கின்றேன். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்கு பின் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், பிரபாகரன் அவர்களைப் பற்றியும் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதற்கு முன் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் தான் அறியப்பட்ட ஈழத் தலைவர்களாக விளங்கினார்கள். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கில் ஆஜர் ஆகி






வழக்கையும் நடத்தினேன்(வழக்கு எண்-
SC No 8/1983 on the file of 7Addl Court-High Court campus disposed on
Nov2012) இப்படி பல வழக்குகள்.

பாண்டி பஜார் சம்பவத்துக்கு பின் பிரபாகரனை கைது செய்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வைத்தனர். பிளாட் தலைவர் முகுந்தன் தப்பியோடிவிட்டார். இரண்டு நாட்கள் கழித்து 21-05-1982ம் தேதி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அப்போது எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வர். 

அந்த சமயத்தில் பாண்டி பஜார் காவல் நிலையத்தின் சிறைச்சாலையில் முதன்முறையாக பிரபாகரன் மற்றும் ரவீந்திரனை சந்தித்தது அடியேன் தான். அப்போது பிரபாகரனோடு பேபி. சுப்பிரமணியம், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் நேசன், செல்லக்கிளி மற்றும் தமிழகத்தை சேர்ந்த தங்கவேல் ஆகியோர் உடன் இருப்பார்கள்.




இதன்பின் பிரபாகரன், நான் குடியிருந்த மயிலாப்பூர் 39, சாலை தெரு வீட்டில் தான் என்னுடன் தங்கியிருந்தார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் நெடுமாறன் தங்கியிருந்த அந்த வீட்டை எனக்கு தங்க இடமளித்தார். 

பாண்டி பஜார் சம்பவத்துக்கு பின் நான் தங்கியிருந்த எனது வீடு 22-05-1982 அன்று காவல் துறையினரால் சோதனையிடப்பட்டு பிரபாகரனுடைய அனைத்து உடைமைகள் மற்றும் என்னுடைய வழக்கு மன்றத்தின் அனைத்து கோப்புகளையும் அள்ளிச் சென்றுவிட்டனர். அது வேறு பிரச்சனை. இதற்காக அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிலிருந்து டிஜிபி வரை முறையிட்டதெல்லாம் சொன்னால் விரிவாகப் போகும். 

பிரபாகரனையும் ஈழப் போராளிகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என்று அனைத்து கட்சி கூட்டத்தை 29-06-1982 இல் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்ல வளாகத்தில் (அரசினர் தோட்டம்) பழ. நெடுமாறன் கூட்டி தீர்மானத்தோடு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது அடியேன் உடன் சென்றேன். அது மட்டுமல்ல. முன்னாள் பிரதமர் சந்திரசேகர், எல். கே. அத்வானி, தேவிலால், ஃபரூக் அப்துல்லா (காஷ்மீர் முன்னாள் முதல்வர்), இராம்விலாஸ் பஸ்வான், தினேஸ் கோஸ்வாமி (ஏஜிபி – அஸ்ஸாம்), தீபன் கோஷ் (சிபிஎம்), சிட்டபாசு (பார்வார்டு பிளாக்), பனத்வாலா (முஸ்லிம் லீக்), சந்திரஜித் யாதவ், தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிர்லா, போன்ற தலைவர்களையும் இது குறித்து சந்தித்தோம்.

பிரபாகரனையும் மற்றவர்களையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று கூட பத்திரிக்கைகள் அப்போது எழுதியது. நான் மத்திய சிறையில் 10-07-1982இல் பிரபாகரனை சந்தித்தபொழுது பிரபாகரனும் முகுந்தனும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். 

இதற்கிடையில், வைகோ அவர்கள் சென்னை மத்திய சிறையில் இருந்த பிரபாகரனை பார்க்க வேண்டுமென்று சொன்ன போது அவரிடம் இது குறித்து நான் தெரிவித்தபோது பிரபாகரன், ‘வைகோ அண்ணனை வரச் சொல்லுங்க, நானும் பார்க்கனும்.’ என்றார். வைகோ அவர்கள் 24-06-1982 அன்று சென்னை மத்திய சிறையில் இருந்த பிரபாகரனை காலை 11 மணிக்கு சந்தித்தார். நானும் உடனிருந்தேன். 

அப்போது வைகோ, ‘திமுக சார்பில் ஈழ விடுதலை மாநாடு இராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன் நடத்துகின்றார். உங்களின் கருத்துக்களை அந்த மாநாட்டில் பிரதிபலிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அன்று மாலை இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் சென்று ஈழப் பிரச்சனை குறித்து உரையாற்றினார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். 

இதனிடையே பிரபாகரன் மற்றும் போராளிகளுக்கு 05-08-1982 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்தேன். நெடுமாறன் அவர்கள் இதற்கான முயற்சிகளிலும், மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்களை சந்திக்கவும் பணிகளை மேற்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 06-08-1982 அன்று பிரபாகரனுடன் சேர்ந்து அனைவருக்கும் பிணை கிடைத்தது. பிரபாகரன் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டார். அதனால் மதுரையில் உள்ள பழ.நெடுமாறனின் விவேகானந்தர் அச்சகத்தின் எதிரில் இருந்த அவரது இல்லத்தில் தங்கியிருந்தார். 

இதற்கிடையில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழப்பிரச்சனையில் தமிழர்களுக்கு ஆதரவாக அக்கறை காட்டினார். பயிற்சி முகாம் நடத்தவும் உரிய உதவிகளையும் அவர் செய்ததுண்டு. 

நெடுமாறனுடைய நண்பர் திண்டுக்கல் அழகிரிசாமி தன்னுடைய சிறுமலை எஸ்டேட் இடத்தை பயிற்சி முகாமுக்காக தந்தார். நெடுமாறனும் நானும் சில மத்திய அரசு அதிகாரிகள் கூட தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை பயிற்சிக்காக தேடினோம். இதற்காக அந்த வட்டாரத்தில் இரண்டு நாட்கள் முகாமிட்டதெல்லாம் உண்டு. இப்படியெல்லாம் கடந்து போன செய்திகள். 

இதற்கிடையில் துவக்கத்தில் பாலசிங்கம் தமிழகத்துக்கு வந்தபொழுது உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கும் அறைகளை என் பெயரிலேயே பதிவு செய்தேன். பாலசிங்கமும் அவருடைய மனைவி அடேல் பாலசிங்கமும் சில நாட்கள் தங்கிய பின் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் அருகில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர். அங்கும் சில நாட்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. 

அந்த காலகட்டத்தில், பிரபாகரனை தினமும், வாரத்துக்கு அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்தவன் அடியேன். இந்த வாடிக்கை அவர் டெல்லியிலிருந்து 04-08-1987ம் தேதியில் நடைபெற்ற சுதுமலை கூட்டத்துக்கு செல்லும் வரை தொடர்ந்தது. இந்த சுதுமலை கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது திராவிடர் கழத் தலைவர் வீரமணி மற்றும் எனது தலைமையில் கூடி நேப்பியர் பாலம் அருகில் உள்ள பெரியார் சிலையின் கீழ் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினை எரித்தோம். 

இதற்கு பிறகு 12-09-1988ல் கிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போதும் பிரபாகரன், ‘அவரை போய் உடனே சந்தியுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். இப்படி பல சம்பவங்கள் மற்றும் நிகழ்வுகளை கூறமுடியும்.

இப்போது சிலர் பேசிக்கொண்டிருக்கும் வெட்டிப் பேச்சுகளை எல்லாம் கவனிக்கும்போது வேதனையாக உள்ளது. அந்த காலக்கட்டத்தில் இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள் என்றே தெரியாது. காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன. 

இதையும் ஒரு பொருட்டாக கொண்டு விவாதங்கள் நடக்கின்றது என்று நினைக்கும்போது என்றோ ஒரு நாள் வாய்மை வெல்லும் என்ற கூற்றின்படி என் நினைவுத் தொகுப்புகளில் இது குறித்து விரிவாக பதிவு செய்து வருகிறேன். பிரபாகரன் அவர்களை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் எல்லாம் தங்களை மாவீரர்கள் போல போலியாக கர்ஜித்து ஒரு பிம்பத்தை உருவாக்குவது பொது தளத்திற்கு ஆரோக்கியமானதல்ல. 

இவ்வளவு உழைத்தும் எங்களைப் போன்றவர்களை பலர் முதுகில் குத்தியதால் உண்மைகள் அரங்கேறுவதில்லை.

நல்லவர்கள், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்படுவதால் வேடிக்கை மனிதர்கள் தலை தூக்குகின்றனர்.

இப்படி பேசுவதற்கு அந்த மனிதர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது. மனசாட்சி எப்படி இடம் கொடுக்கிறது. 

இப்படி களப்பணி ஆற்றியவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றோம்.

(படம்- பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு (19-05-1982) நிகழ்விற்க்கு பின் பிரபாகரன் கைது செய்ய போது. பின்னாள் அடியேன் இருந்தேன்)

#விடுதலைப்புலிகள்
#பிரபாகரன்
#ஈழப்பிரச்சனை
#பாண்டிபஜார்சம்பவம்
#EElamissue
#Prabhakaran
#LTTE
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
26-11-2019


1 comment:

  1. சில வியாக்கியான வெட்டிப் பேச்சாளர்கள் தோன்றும்போது களப்பணி வீரர்களின் தியாகம் போலி பிம்பங்களால் மறைக்கப்படுவது வேதனையில் வேதனையே!

    வரலாற்று திரிபுபவர்களின் போலிமுகம் வெளிச்சத்துக்கு வரும்போது களப்பணி தியாகிகளின் அர்ப்பணிப்பு நல்லுலகத்துக்கு தெரிந்தே தீரும்.

    நீதி வெல்லும்; அதை காலம் சொல்லும்.

    கிரேட் சல்யூட் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சார்!

    ReplyDelete

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...