Tuesday, November 12, 2019

துள்ளித் திரிந்த பள்ளிப்பொழுதுகள்*

இந்த வார புதிய தலைமுறை இதழில் எனது பள்ளிப் பருவ நிகழ்வுகளைக் குறித்து வெளிவந்துள்ள தொகுப்பு

*துள்ளித் திரிந்த பள்ளிப்பொழுதுகள்*
————————————————-
”உங்கள் பையனா… சுறுசுறுப்பா பேசறான்யா…” என்றார் காமராசர்
- வழக்குரைஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் பள்ளி நினைவுகள்
***********

பிறந்து வளர்ந்தது கோவில்பட்டிக்கும் சங்கரன்கோயிலுக்கும் இடையிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமம் கரிசல் பூமி. அப்பா கே.வி. சீனிவாசன் கிராம முன்சீப்பாக இருந்தார். சிறுபிராயத்தின் நினைவுகள் வெண்பனியாக மனதில் படர்ந்திருக்கிறது. மீண்டும் அந்த நாட்களுக்குச் சென்றுவிடமாட்டோமா என்ற ஏக்கம் அவ்வப்போது வந்துபோகும். எப்போதும் ஞாபகங்களில் மெல்லிய மழையாக பெய்துக் கொண்டே இருக்கிறது.




என்னை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தார்கள். அங்குள்ள கண்டிப்புகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் கூட அங்கே செல்ல பிடிக்காமல் வீட்டில் போகமாட்டேன் என்று அடம்பிடித்தேன். ஏதோ எனக்கு கட்டுப்பாடுகள் ரணமாக தெரிந்தன. என்னைப் புரிந்துகொண்ட பெற்றோர், பிறகு உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் சேர்த்தார்கள்.

இங்கு எட்டாம் வகுப்பு வரை இருந்தது. பள்ளியைப் பற்றி நினைத்துப் பார்த்தால் சுவையான சம்பவங்கள் பல வரிசையில் நிற்கின்றன. ஒன்றாம் வகுப்பில் வாப்பாடு கற்றுக் கொடுப்பார்கள். அ, ஆ, இ என அட்சரம் பழகுவோம். அப்பா கிராம முன்சீப்பாக இருந்ததால், எனக்கு மட்டும் அட்சரம் பழக அட்டை வாங்கிக்கொடுத்தார். மற்ற மாணவர்கள் எளிதாக வாங்கமுடியாத காலம். நான் மட்டுமே அதை வைத்திருப்பது கஷ்டமாக இருந்தது.

பள்ளிக்கு எடுத்துச்செல்லாமல் வீட்டிலேயே வைத்துவிட்டேன். பென்சில் கிடையாது. சிலேட்டில்தான் எழுதிப் பழகவேண்டும். வீட்டில் நல்ல பையை வாங்கிக்கொடுத்தாலும், அதை எடுத்துச் செல்லாமல் மற்ற மாணவர்களின் பையைப் போன்றே கேட்டு வாங்கிக்கொள்வேன். வித்தியாசமாக இருக்கக்கூடாது என்ற தயக்கம். சிலேட்டுக் குச்சிகளை மதுரையில் இருந்து வாங்கிவருவார்கள்.
நீதிபோதனை வகுப்பும், விளையாட்டு வகுப்பும் கட்டாயம் இருக்கும்.

ஒவ்வொரு வகுப்பும் நாற்பது நிமிடங்கள். வாழ்க்கையில் கடைபிடிக்க நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கநெறிகளை ஆசிரியர்கள் சொல்வார்கள். மூன்றாம் வகுப்பில் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்தார்கள். அப்பாவுக்கு உதவியாளராக இருந்த அயன்ராஜ்தான் ஆங்கிலப் பாடம் நடத்துவார். மதிய உணவு வீட்டுக்கு  வந்து சாப்பிட்டுச்செல்வேன். அப்போது பேரி சாக்லெட் வந்திருந்தது. வீட்டில் கடலை மிட்டா, முறுக்கு, சீடை, அதிரசம் வைத்திருப்பார்கள். பள்ளியில் குச்சி ஐஸ், பஞ்சுமிட்டா வாங்கிச் சாப்பிடுவோம். 

நாங்கள் புதிய புத்தகங்களை வாங்க போட்டியிடுவோம். அதிலிருந்து புதுவித வாசனை வரும். அதை நுகர்ந்துபார்ப்பதில் ஆர்வம். பிரபலமான திருநெல்வேலி எஸ்ஆர் சுப்ரமணியம் பிள்ளை பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் வாங்கி வருவார்கள். ஐந்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், வரலாறு, கணிதம், பொது விஞ்ஞானம் எனப் பாடங்கள் வந்தன. எல்லா பாடங்களுக்கும் தனி நோட்புக் கொடுத்திருந்தார்கள். தொடக்கப்பள்ளி காலங்களில், எங்கள் பள்ளிக்கு முதல்வர் காமராசர் வந்திருந்தார். மாணவர்களிடம் கேள்விகள் கேட்டார். நானும் பதில் சொன்னேன். எங்கள் வீட்டில்தான் அவருக்கு மதிய சாப்பாடு. காமராசரின் நண்பராக இருந்தார் அப்பா. வீட்டுக்கு வந்துபோது காமராசர், ”உங்கள் பையனா சுறுசுறுப்பா பேசுறேன்யா... நல்லா படிக்கட்டும்” என்றார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை சென்னை வீட்டில் பத்திரமாக வைத்திருந்தேன். 

பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு தொடர்பாக புலிகள் தலைவர் பிரபாகரன், என்னுடன் தங்கியிருந்த நாட்களில் கைது செயப்பட்டார். அப்போது, மயிலாப்பூரில் நான் இருந்த வீட்டில் காவல்துறையால் சோதனை செயப்பட்டு பழைய படங்களை எல்லாம் எடுத்துச்செல்லப்பட்டன. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சமூக அறிவியலில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பேன். கணிதம் மட்டும் கஷ்டமாக இருக்கும். உலக வரைபடத்தில் எந்த நாடு எங்கே இருக்கும் என்று எளிதாக அடையாளம் காட்டுவேன். வரலாற்றில் அதிக ஆர்வம் இருந்தது.

அப்போதெல்லாம் ஆசிரியர்களிடம் பிரம்பும் புளிய விளாரும் இருக்கும். ஏதாவது தவறு செதால், தயவுதாட்சண்யம் பார்க்காமல் அடிப்பார்கள். எங்கள் காலத்தில்தான் மாணவர்களுக்குள் வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளியில் யூனிபார்ம் முறை அரசால் கொண்டுவரப்பட்டது.
வெள்ளைச் சட்டை, ஊதா கலர் டவுசர். அந்த காலகட்டத்தில்தான் எங்கள் பள்ளிக்கு வினோபா பாவேயின் சீடரான குட்டிஜி வந்திருந்தார். எங்கள் ஊருக்கு அருகிலுள்ள கழுகுமலையில் அகில இந்திய சர்வோதய மாநாடு நடைபெற்றது ஜெயப்பிரகாஷ் நாராயண் வந்திருந்தார். நாங்கள் யூனிபார்ம் அணிந்துகொண்டு மாநாட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். என்னைத் தட்டிக்கொடுத்தார். அவருக்கு கொடுக்கப்பட்ட எலுமிச்சைப் பழத்தையும் மாலையையும் என்னிடம் வழங்கினார். அந்த புகைப்படமும்கூட கிடைக்கவில்லை.

அப்போது எங்கள் வீட்டுக்கு தி ஹிந்து, தினத்தந்தி, தினமணி, சோவியத் நாடு, அமெரிக்கன் ரிப்போர்ட்டர், ஜெர்மன் வீக்லி, கலைமகள், மஞ்சரி, ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகளும் ஏடுகளும் வரும். தி ஹிந்து பத்திரிகை மட்டும் ஊருக்கு மதியம் இரண்டு மணிக்குத்தான் வரும். பள்ளிப்பிராயத்திலேயே பத்திரிகைகளைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்திருந்தது. ஊரில் கே.வி. சீனிவாச நாயுடு ஹோம் லைப்ரரி இருந்தது. தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய இருக்கும். மார்க் ட்வைன் நூல்கள், இந்திய வரலாறு போன்றவை படிக்கக் கிடைக்கும். கல்லூரி மாணவர்கள் விடுமுறை தினங்களில் வந்து படித்துச் செல்வார்கள். எங்கள் அம்மா, படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க உதவி செய்வார்கள். அப்படி படித்த பலரும் சேலம் மாவட்டத்தில் பணியில் இருந்தார்கள். 

பள்ளியில் படிக்கும்போது திருநெல்வேலி, திருவனந்தபுரம், கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். எங்க அப்பாவுடன் ரயிலில் திருவனந்தபுரம் சென்று வந்ததை மறக்க முடியாது. குகை வழியாக செல்லும் ரயில் பயணம் உற்சாகத்தைக் கொடுக்கும். பத்மநாபசாமி கோயில், கோவளம் பீச் என முக்கிய இடங்களுக்குப் போய் வருவோம்.

ஆறாம் வகுப்புப் படிக்கும்போது, சென்னைக்கு அம்மாவுடன் வந்த நினைவும் உண்டு. மெரினா கடற்கரை, எழும்பூர் மியூசியம், பர்மா பஜாருக்குப் போய் வந்தோம். எட்டாம் வகுப்பில் பாடப்புத்தகங்களைத் தாண்டி படிக்கும் ஒரு மெச்சூரிட்டி வந்திருந்தது. ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன் எழுத்துகளை ஆர்வத்துடன் படிப்பேன். திருவேங்கடம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன். அங்கே பதினோராம் வகுப்பு வரை படித்தேன். புவியியல் பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவேன். என் ஆசிரியர்கள் சிலரது பெயர்கள் மறந்துவிட்டன. வையாபுரிப் பிள்ளை, சீனி வெங்கடேசன், செண்பகராமன், பாலசுப்ரமணியம், முனுசாமி, கந்தசாமி போன்ற நல்லாசிரியர்கள்தான் எங்களை உருவாக்கினார்கள். 

லிப்கோ பதிப்பகம் பத்து ரூபாக்கு திருக்குறளை வெளியிட்டிருந்தது. அதை எல்லோரையும் வாங்கச் சொல்வார் சேவகப் பெருமாள் செட்டியார். அதில் உரை இருக்காது.  குறள் மட்டுமே இருக்கும். தினமும் ஒரு குறளை மனப்பாடம் செயச் சொல்வார். இன்னொரு பள்ளிக்கூடமாக எனக்கு அப்பா இருந்தார். ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக்கொள்வதற்காகவும் வார்த்தைகளை எழுதிப்பார்க்கவும் வொர்க்புக் வாங்கித்தருவார். கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, தினமும் அவரிடம் எழுதிக் காட்டவேண்டும். எனக்கு தெரியாமல் பயிற்சியின் வழியாக எனக்குள் ஓர் அறிவுலகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

#பள்ளிப் பருவம்
#காமராசர்
#KSRPostings
#KSRadhakrishnanPostings

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*



No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...