Wednesday, November 20, 2019

தமிழக_நீர்நிலைகள்

#தமிழக_நீர்நிலைகள்
----------------------
தமிழகத்தில் ஏரிகள், குளங்கள், வாய்க்கால், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் வழக்கும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கருத்தரங்கங்களும் நடத்தி வருகின்றேன். 

தமிழகத்தில் 1947ல் நாடு விடுதலை பெற்ற போது 60,000 ஏரி, குளங்கள், நீர் நிலைகள் இருந்தன. சுயநலப் போக்கோடு இந்த குளங்களை சமூக விரோதிகள் கபளீகரம் செய்துவிட்டனர். இதில் பாதியளவு எண்ணிக்கையான நீர்நிலைகளே தற்போது உள்ளது. தமிழக அரசு பொதுப் பணித் துறை ஒப்புக்கு பராமரித்து வரும் ஏரிகள் 39,202 என கணக்கில் உள்ளது. 18,789 நீர்நிலைகள் நூறு ஏக்கர் பரப்பில் அப்போது அமைந்திருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் 20,413 ஏரிகள், குளங்கள், நீர் நிலைகளை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கிறது.

ஆனால், இவையாவும் கணக்கில் மட்டுமே உள்ளதே அன்றி ஆயக்காட்டுதாரர்களுக்கு பயன்படுத்தும் அளவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குடிமராமரத்துப் பணிகளும், கடந்த 40 ஆண்டுகளில் சரியாக நடத்தப்படவில்லை. இயற்கை வழங்கிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கான மேலாண்மை கொள்கையும் இன்றைக்குள்ள சூழ்நிலையில் வகுக்க வேண்டும்.




தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏரி, குளங்கள் இல்லை. மீதமுள்ள 31 மாவட்டங்களிலும் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் தற்போது 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்) நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239-ம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217-ம் நிரம்பியிருக்கின்றன அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரிகூட நிரம்பவில்லை.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழக பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,098 ஏரி, குளங்களில் நவம்பர் 8-ம் தேதி (நேற்று) நிலவரப்படி 1,379 ஏரி, குளங்கள் நிரம்பிவிட்டன. 1,325 ஏரிகளில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளது. 1,831 ஏரி, குளங்களில் 50 முதல் 75 சதவீதம் வரையும் 4,705 ஏரி, குளங்களில் 25 முதல் 50 சதவீதம் வரையும் நீர்இருப்பு உள்ளது. 4,858 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் உள்ளது’’ என்றார்.  இந்த புள்ளிவிவரங்களும் சரியானதா என்று தெரியவில்லை.

#ஏரி
#குளங்கள்
#வாய்க்கால்
#ஆறுகள்
#நீர்நிலைகள்
#Water_Storages
#Lakes
#Tanks
#Ponds
#Canals
#Rivers
#Writ_Petition_on_water_storage
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-11-2019.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...