Saturday, November 23, 2019

இலங்கை_அதிபர்_தேர்தலும், #தமிழர்_நலனும்

#இலங்கை_அதிபர்_தேர்தலும், 
#தமிழர்_நலனும்
வழக்கறிஞர் கே. எஸ். ராதாகிருஷ்ணன்

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றிபெற்றுள்ளார். மகிந்த ராஜபக்சேவும் பிரதமராக உள்ளார்.
மொத்தமாக 41 வேட்பாளர்கள் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தபோதும் அவர்களில் 35 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி தேர்தல் களத்தில் இருந்தனர். இவர்களில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து கோத்தபாய இராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியிலிருந்து அனுரகுமார திசாநாயக்க, மற்றும் மகேஸ் திசாநாயக்க ஆகியோரும் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியளாளர் அஜந்தா பெரேரா, தேசிய அபிவிருத்தி முன்னணியிலிருந்து றொகான் பலேவத்தே, முன்னிலை சோசலிச கட்சியிலிருந்து துமிந்த நாகமுவ, மக்கள் சக்தி கட்சியிலிருந்து சமன் பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஆரியவன்ச திசாநாயக்க, ஐக்கிய சோசலிச கட்சியிலிருந்து ஸ்ரீதங்க ஜெயசூர்ய நவசம, சமாஜ கட்சியஜலிருந்து வெட்டி கமகே, நந்திமித்ர சோசலிச சமத்துவக்கட்சியிலிருந்து வஜிரபனி ஸ்ரீவர்த்தனே, நவ சிங்கள உறுமய கட்சியிலிருந்து சரத் மன்னமேந்திரா, ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியிலிருந்து ஏ எஸ்பி லியனகே, ஜனசேத்தா பெரமுனவிலிருந்து பத்ரமுல்லே சீலாரத்ன தேரோ, மக்கட்தலைநாடு இயக்கத்திலிருந்து அருண டீ சொய்சா, ருகுண ஜனதா பெருமுனவிலிருந்து அஜந்தா டீ சொய்சா, தேசிய இனங்களின் ஜக்கியத்திற்கான அமைப்பிலிருந்து நாமல் ராஜபக்ச, எமது தேசிய முன்னணியிலிருந்து சுப்பிரமணியம் குணரத்னம், ஒக்கோம வசியோ ஒக்கோம ராஜவரு சண்வகானநயவிலிருந்து பிரிந்த எதிரிசிங்கே, ஆகியோருடன் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களாக ஜெயந்த கெற்றகொட, ஸ்ரீபால அமரசிங்கே அப்பரேக்கே புன்னாநந்த தேரர், மில்றோய் பெனாண்டோ, சமன்சிறி கேரத், சரத் கீர்த்திரத்ன, அனுருத்ர பொல்கம்பொல, சமரவீர வீரவன்னி, அசோக வடிகமன்கவ, இலியாஸ் ஐரூஸ், முகமட் பியசிறி, விஜயநாயக்க ரஜீவ வீரசிங்க, தமிழராகிய எம்.கே. சிவாஜிலிங்கம், எம்.எல்.ஏ.எம் கிஸ்புல்லா, கசன் முகமட் அலி, ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினர்.
இலங்கை மக்களிடையே எதிர்பார்ப்பினை எற்படுத்திய இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து போட்டியிட்ட கோட்டபாய இராஜபக்ச ஆகியோருக்கிடையில் போட்டி நிலவியது. இவர்களுக்கு அடுத்த நிலையில் அனுரகுமார திசாநாயக்க, சூழலியளாளர் அஜந்தா பெரேராவும் மக்களிடையே கவனம் பெற்றனர். இலங்கையில் சிங்களர்கள் வாழும் தென்பகுதி முழுவதும் கோத்தபாயவிற்கு வாக்களித்தது. தமிழரும் சிறுபான்மை முஸ்லிம்களும் சாஜிக்கு வாக்களித்தனர். தமிழர் தேசிய கூட்டமைப்பு சாஜிக்கு ஆதரவளித்தது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு தமிழ் மாணவர்கள் சாஜிக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மும்முரப்படுத்தினர். வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்ணேஸ்வரன் கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ரணில் விக்கிரமசிங்கேவும், சந்திரிகாவும் சாஜிக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்கள். தேர்தல் களத்தில் இறுதிப் போரில் சிறையிலிருக்கும் தமிழர்களை விடுவிப்பேன் என்று கோத்தபாய பொத்தாம் பொதுவாக உறுதியளித்தார்.
கடந்த காலத்தில் நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வர ரணில் அரசால் முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. தமிழர்களின் நலனுக்காக பரிந்துரைக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
இலங்கையில் 70 ஆண்டுகால அரசியல் நிகழ்வில் தமிழர்களுக்கு பல உத்தரவாதங்களும், ஒப்பந்தங்களும் அறிவித்து எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் இந்த தேர்தலிலும் வெறும் உறுதிமொழிகள் மட்டுமே தமிழர்களுக்கு இருக்கும் என்று சிலர் கருதினர். ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழர்களுக்கும் அதிகமாக ஏதாவது உறுதிமொழி கொடுத்துவிட்டால் பெரும்பான்மையான சிங்களர்கள் வாக்கு கிடைக்காதோ என்ற அச்சத்தில் இனப்பிரச்சனைகளை பேசாமல் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டுமே முன்வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளில் 25 இலட்சம் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி புலம்பெயர்ந்து விட்டனர்.
வேலைவாய்ப்புகளும் அதிகமாக இல்லை. தமிழர்களுடைய பிரச்சனை பேசாப் பொருளாகிவிட்டது. சம்பிரதாயத்திற்கு வாக்குகளை வாங்கவே தமிழர்களுக்கு போலியான வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் வழங்கப்பட்டது.
ஆனால் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் கீழ்க்குறிப்பிட்ட கோரிக்கைகளை யாரும் நிறைவேற்றக்கூடிய அளவில் தேர்தல் களத்தில் இருந்த வேட்பாளர்கள் எந்த அழுத்தமான உறுதிமொழியும் கொடுக்காதது வேதனையான விடயமாகும்.
1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார்.
சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும். இனி ராஜபக்சேவை எப்படி குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். தமிழர்களுடைய நிலை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப்ப் பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப் பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
தமிழர்களின் வாக்குகளைப் பெற கடந்த காலங்களில் சிங்களர்கள் பிரபாகரனையும், சம்மந்தனையும் யாழ்ப்பாணம் வரை வந்து சந்தித்து கையை, காலைப் பிடித்து பல உறுதிமொழிகளைக் கொடுத்து நம்பவைத்து எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை. இன்னும் இந்த இரண்டு வேட்பாளர்களும் பட்டும் படாமல் தமிழர்களுடைய வாக்குகளை பெற தங்களுடைய பிரச்சார யுக்திகளை வகுத்து வருகின்றனர். எந்த தீர்வும், வளர்ச்சித் திட்டங்களும் தமிழர்களுக்கு பொறுப்புக்கு வந்தவுடன் தட்டிக் கழிக்கத்தான் செய்வார்கள். தமிழர்களுடைய நிலை என்ன செய்யமுடியும்?
இலங்கையில் தமிழர்கள் யார் அதிகாரத்திற்கு ,வரக்கூடாது என்று நினைத்தார்களோ, அவர்கள் அதிகாரத்திற்கு வந்தவிட்டார்கள். கோத்தபாய அதிபர், ராஜபக்சே பிரதமர் என்று அமைவது வேதனையான விடயம். அது மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பு உள்ளடங்கிய புவியரசியலும் இருக்கிறது. சீனாவினுடைய வர்த்தக பட்டுவழி ஆதிக்கம் இனி வீரியமாக இருக்கலாம். ராஜபக்சேவின் தயவினால் திரிகோணமலை கடற்பகுதியை சீனா கைப்பற்றலாம். இனி தாராளமாக சீனாவின் போர்க்கப்பல்கள் இந்தியாவின் தெற்கு கடற்பகுதியில் காணலாம். ஏற்கனவே இந்தியப் பெருங்கடலில் டீகோ கார்சியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்கிறது. ஜப்பானும், பிரான்சின் நடமாட்டம் இந்து மகா சமுத்தரத்தில் காணப்படுகிறது. இதெல்லாம் இந்தியாவிற்கு அகப் புறச் பிரச்சனைகளை எதிர்காலத்தில் எழுப்பலாம் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராஜபக்சே தலைவலியா? அவருடைய வீரிய நர்த்தனம் என்பது போகப் போகத்தான் தெரியும்.

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...