Friday, November 15, 2019

தென்பெண்ணை_ஆற்றின்_சிக்கல்

#தென்பெண்ணை_ஆற்றின்_சிக்கல்
———————————————-
தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பு அணை கட்டலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு (I.A. No. 95384 of 2019) நேற்று, 14-11-2019 தள்ளுபடி செய்யப்பட்டது. இதுஅதிர்ச்சி அளிக்கிறது! இந்த சிக்கலுக்கு மத்திய அரசு தீர்ப்பாயம் உடன் அமைக்க வேண்டும்

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாக விளங்கும் தென்பெண்ணை ஆறு ஆகும்.

கர்நாடக மாநிலம், சிக்கப்பல்லூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க்கம் - நந்தி மலையில் உற்பத்தியாகும் நீர், ஒசகோட்டம், ஒரத்தூர், தட்சிணப் பினாசினி ஓடை வழியாக கொடியாளம் பகுதியில் தமிழகத்தைத் தொட்டு, தென்பெண்ணை ஆறாக தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைகின்றது.

தமிழகத்தில் 320 கி.மீ. தொலைவு பாயும் இந்த ஆறு, கொடியாளம் தடுப்பு அணையைத் தாண்டி, ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை, பாடூர் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு வந்து சேருகிறது. பின்னர் விழுப்புரம் மாவட்டம் வழியாகப் பாய்ந்து கடலூரில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. 

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தமிழக எல்லை ஓரத்தில், 50 மீட்டர் உயரத்திற்கு தடுப்பு அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநிலம் முனைந்துள்ளது.

1892 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும் - மைசூர் சமஸ்தானத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டும் திட்டங்கள் மற்றும் பாசனத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் கர்நாடக அரசு, தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதி பெற்று அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. இதனைத் தடை செய்யக் கோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

விசாரணை முடிந்து, நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “1956 ஆம் ஆண்டு நதிநீர் தவா சட்டப்படி தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு மற்றும் நதிநீர் சிக்கல் குறித்து மத்திய அரசிடம் தீர்ப்பாயம் அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடக அரசு 2012-ம் ஆண்டு பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தென்பெண்ணை ஆற்றின் முக்கிய கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட முடிவெடுத்து அதற்கு மத்திய நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து 2013-ம் ஆண்டு தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் இடைக்கால தாக்கல் செய்த மனுவில், “தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு தமிழகத்தில் சுமார் 10 லட்சம் ஏக்கர் அளவில் பாசனமும், 5 மாவட்ட குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படு கிறது. இந்த ஆறு கர்நாடகாவை விட, தமிழகத்தில் அதிக நீளம் பாய்வதால் கர்நாடகாவில் புதிய அணைக்கட்ட கூடாது. ஆனால் கர்நாடக அரசு 1892-ம் ஆண்டு மேற்கொண்ட நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, அணைக்கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. மத்திய நீர்வளத் துறையில் குடிநீர் தேவைக்காக எனக்கூறி அனுமதி பெற்றுள்ள கர்நாடகா, அங்கு 50 மீட்டர் உயரத்தில் பெரிய அணையாக கட்டுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்போக்கு மாறும் நிலை ஏற் பட்டுள்ளது. ஏற்கெனவே தென் பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டில் கர்நாடகா தமிழகம் இடையே சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது அணைக் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டு வழக்கையும், இந்த மனுவையும் இணைத்து விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தது.

இதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணைக் கட்டினால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் கர்நாடகா மார்க்கண்டேய ஆற்றில், குடிநீர் தேவைக்காக அணை கட்டுகிறது. இதற்கு தமிழக அரசின் அனுமதி பெற தேவையில்லை. மார்க்கண்டேய ஆற்றை தமிழகம் உரிமை கொண்டாட முடியாது” என பதிலளித்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடை பெற்றுவந்த நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில் நேற்று நீதிபதிகள் யூ.யூ.லலித், வினித் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்றம் கூடியதும் நீதிபதி யூ.யூ.லலித், “தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் அணைகட்ட கர்நாடகாவுக்கு தடையில்லை” எனக்கூறி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக விவசாய அமைப் பினரும் அரசியல் கட்சியினரும், “கர்நாடகா அணை கட்டினால் தென்பெண்ணையில் தமிழகத்துக்கு வரக்கூடிய நீரின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றுநீர் பிரச்சனை - தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/10/blog-post_5.html

தென்பெண்ணை_ஆற்று_நீர்
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2019/11/blog-post_14.html

பெண்ணாறு - பாலாறு இணைப்பு - II
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/08/blog-post_31.html

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

#தென்பெண்ணை

#KSR_Posts
#KsRadhakrishnan
15-11-2019.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...