Monday, November 30, 2020

 


இந்திய விடுதலைப் போராட்ட தியாக சிலர் #சுப்பிரமணிய_சிவா
நினைவு நாள் - (23-7-1925)
————————————————-


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக்டோபர் 4-ம் நாள் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி). பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியம். இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாளென்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.
இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.
தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார். 1904- 1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷியாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. 1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.
நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தே மாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன. அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார்.
சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு. சுதந்திர போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்டபோது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.
உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார். இந்நிலையில், 15.5.1915-ல் எலும்புருக்கி நோயால் சிவாவின் மனைவி இறந்தார். இதன் பின்னர், சற்றும் சளைக்காமல் முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான கூட்டங்களில் பங்கேற்று சுதந்திர தீயை வளர்த்தார்.
முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிரமும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு பணியை செய்து வந்தனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தனர்.
பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த அவர், தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது.
இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார். 22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அடுத்த நாள் 23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார். 

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...