Monday, November 30, 2020

 


#தமிழுக்கு_நெல்லை_வழங்கி_கொடை!
#பாஸ்கரத்_தொண்டைமான்
————————————————


நாற்பத்தைந்து ரூபாய் எழுத்தராக வருவாய்த் துறையில் நுழைந்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர் பாஸ்கரத் தொண்டைமான். தான் பணியாற்றிய பகுதிகளில் கலை ஆய்வு மேற்கொண்டவர். கோயிற்கலையில் இவருக்கு இருந்த ஈடுபாடும், இவரது பெருமுயற்சியும் தான் தஞ்சைக் கலைக்கூடத்தை உருவாக்கியது.
திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

அரசுப் பணியில் இருந்தவண்ணம் அருந்தமிழ்ப் பணியும் ஆற்றிய அறிஞர் பெருமக்களின் வரிசையில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்குச் சிறப்பிடம் உண்டு. இப்போதெல்லாம் தினசரிகளும் சரி, வார சஞ்சிகைகளும் சரி போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு ஆலயங்களைப் பற்றியும், சரித்திரப் பிரசித்தி பெற்ற தலங்களைப் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் "கலைமணி' தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்தான்.

நெல்லை மாவட்டம் தமிழுக்கு அளித்திருக்கும் கொடைகள் ஏராளம் ஏராளம். பல தமிழறிஞர்கள் நெல்லைத் தரணியில் தோன்றி மொழிப் பணியாற்றி இருக்கின்றனர். அந்த வரிசையில் 1904-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி நெல்லையில், தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்....

இவரது தந்தை வழிப் பாட்டனார் சிதம்பரத் தொண்டைமான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடம் முறையாகத் தமிழ் பயின்றவர் என்றால், தகப்பனார் முத்தையாவோ தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற அறிஞர். இப்படிப்பட்ட மொழி ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்த பாஸ்கரத் தொண்டைமானுக்கு இயற்கையிலேயே தமிழில் நாட்டமும், கலைகளில் ஈடுபாடும் ஏற்பட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

அன்றைய வழக்கப்படி, கல்லூரியில் படிக்கும்போதே முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மூத்த இருவரும் உள்ளனர்.
பாஸ்கரத் தொண்டமானின் மாணவர் பருவம் திருநெல்வேலியில் கழிந்தது. கல்லூரி நாள்களில் பாஸ்கரத் தொண்டைமானிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் தொண்டைமான் படித்த இந்துக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர். இன்னொருவர், "சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை.

ரா.பி.சேதுப்பிள்ளையின் தூண்டுதலின் பேரில்தான் பாஸ்கரத் தொண்டைமான் தனது கல்லூரி நாள்களிலேயே "ஆனந்தபோதினி' பத்திரிகையில் கம்பராமாயணக் கட்டுரைகளை எழுதினார். கம்பனின் கவிதையில் காதல் வசப்பட்டவர்கள் ரசிகமணியின் ரசனை வட்டத்திற்குள் இழுக்கப்படுவது என்பது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே? "ரசிகமணி' டி.கே. சிதம்பரநாத முதலியாரின் பரிச்சயமும், அவருடன் அமர்ந்து கம்பனை வரிவரியாக ரசித்துப் படிக்கும் அனுபவமும் பாஸ்கரத் தொண்டைமானின் தமிழ்ப் பித்துக்கு மெருகும் உரமும் ஊட்டின.

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற கையோடு, அரசு உத்தியோகம் அவரைத் தேடி வந்தது. இன்றைய வனவளத் துறைக்கு அப்போது காட்டிலாகா என்று பெயர். காட்டிலாகாவில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே, பாஸ்கரத் தொண்டைமான் வருவாய்த் துறை ஆய்வாளரானார். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், மாவட்ட உதவி ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்தார் அவர். இவரது சேவையைக் கருதி, அரசு இவரை இந்திய அரசுப் பணி (ஐ.ஏ.எஸ்.) தகுதியை அளித்து வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்தது.

1959-ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பாஸ்கரத் தொண்டைமான் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்பிவிட்டார். தமது பாரம்பரியமான வீட்டில் தங்கி தமது இலக்கியப் பணியைக் கடைசிக் காலம்வரை தொடர்ந்தார் என்பது மட்டுமல்ல, அவர் எழுதிக் குவித்ததும் ஏராளம் ஏராளம்.

பாஸ்கரத் தொண்டைமான் எங்கெல்லாம் பணியாற்றினாரோ அங்கெல்லாம் அரசுப் பணியுடன் தமிழ்ப் பணியும் ஆற்றினார் என்பதுதான் அவரது தனிச் சிறப்பு. தஞ்சையில் அவர் பணி புரிந்தபோது அங்கே கிடைத்தற்கரிய கலைச் செல்வங்களும், சிற்பப் படிவங்களும், சரித்திரத்தின் அடிச்சுவடுகளும் கேள்வி கேட்பாரற்று வீணாகிப் போவதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவைகளை எல்லாம் முறையாக சேமித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்துத் தமிழரின் சரித்திரத்துக்கு வலு சேர்த்த பெருமை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுடையது!

நெல்லை வண்ணாரப்பேட்டையில் அப்போதெல்லாம் தமிழகமெங்கும் உள்ள தேர்ந்தெடுத்த இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றுகூடுவார்கள். அவர்கள் ஒன்றுகூடும் இடம் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீடு. சாரல் பருவம் வந்துவிட்டால், இவர்கள் குற்றாலத்தில் இருக்கும் ரசிகமணியின் வீட்டிற்குச் சென்று விடுவார்கள்.

சிதம்பரநாத முதலியாரின் வீட்டில் நடு முற்றமாக வட்டவடிவில் அமைந்த தொட்டிக்கட்டு அமைப்பில்தான் மாலை வேளையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரசிகமணியின் நண்பர் வட்டம் கூடும். அவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவர், சங்க இலக்கியம் என்று இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்தில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் தனது நண்பர் வட்டத்தைக் கூட்டி இலக்கியக் கழகம் (கண்ற்ங்ழ்ஹழ்ஹ் இப்ன்க்ஷ) என்ற பெயரில் இலக்கிய ஆய்வுகள் நடத்துவாராம். அதேபோல, இலக்கிய ஆய்வு நடத்தும் திருநெல்வேலியிலுள்ள ரசிகமணியின் நண்பர் வட்டம், "வட்டத் தொட்டி' என்று வழங்கலாயிற்று.

வட்டத் தொட்டியின் தலைவர் ரசிகமணி டி.கே.சி. என்றால் அதன் தூண்களில் ஒருவராகச் செயல்பட்டவர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். "கம்பர் அடிப்பொடி' சா.கணேசன், மு.அருணாசலப் பிள்ளை, நீதிபதி மகாராஜன், மீ.ப.சோமு, நாமக்கல் கவிஞர், "கவிமணி' தேசிக விநாயகம் பிள்ளை, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முதல்வரும், ஆங்கிலப் பேராசிரியருமான ஆ.சீனிவாச ராகவன், ஏ.சி. பால் நாடார் மற்றும் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போன்ற பல தமிழறிஞர்கள் "வட்டத் தொட்டி'யில் அடிக்கடி பங்கு பெறும் தமிழார்வலர்கள்.

மூதறிஞர் ராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி ஆகிய இருவரும் சற்று ஓய்வு கிடைத்தாலும் நெல்லையிலுள்ள ரசிகமணியின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து விடுவார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டால், வட்டத் தொட்டியின் கலகலப்புக்கும், இலக்கிய சர்ச்சைக்கும் கேட்கவே வேண்டாம். இந்த இலக்கிய சர்ச்சைகளில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் பங்களிப்பு மிகவும் அதிகம்.

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியாரின் எண்பதாவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று நெல்லையிலுள்ள நண்பர்கள் முடிவெடுத்து ஒரு விழா எடுப்பது என்று தீர்மானித்தனர். "வெள்ளைக்காலை வாழ்த்த உத்தமதானபுரத்திற்குத்தான் தகுதியுண்டு' என்பது ரசிகமணியின் கருத்து. அவரே "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாத அய்யரவர்களுக்குக் கடிதம் எழுதி அவரது இசைவையும் பெற்று விட்டார்.

இந்துக் கல்லூரி மாடியில் நடந்த விழாவுக்கு அறிஞர்களும், தமிழன்பர்களும் திரண்டு வந்திருந்தனர். விழாத் தலைவரான மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு முதிர்ந்த பருவம். அவரை அழைத்துக் கொண்டு, வழிநடத்திச் சென்று தலைமைப் பீடத்தில் அமரவைத்த இளைஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். விழாத் தலைவர் உ.வே.சா. பேசும்போது அவர் குறிப்பிட்டதை அப்படியே தருகிறோம்:

""என்னைப் பலகாலும் வற்புறுத்தி நீ மேலேற வேண்டும். எனவே, படி, படி என்று தூண்டி உற்சாகப்படுத்தி வந்தவர் எனது ஆசிரியர் பெருமானாகிய திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். இப்பொழுது என்னை அப்படி ஊக்குவிப்பார் ஒருவரையும் காணேன். நான் நிரம்பக் கற்றவன் என்று நீங்களெல்லாம் என்னை மதித்து மரியாதை செய்யத் தொடங்கிவிட்டீர்கள்.

நெல்லைக்கு வந்தபின் நான் கற்க வேண்டியவை பல உள்ளன என்பதையும், அவற்றை எல்லாம் கற்றுத்தான் மேனிலை எய்த வேண்டும் என்பதையும் உணர்ந்தேன். மேலும் படி, படி என்று சொல்ல ஆசிரியப் பெருமானாகிய பிள்ளை அவர்கள் இல்லாத குறையும் இன்று தீர்ந்தது.

என்னை அழைத்து வந்தானே ஒரு பிள்ளையாண்டான். அவன் வயதிலும் உருவத்திலும் சிறியவன்தான். ஆனால், அவன்தான் என் ஆசிரியப் பெருமானின் ஸ்தானத்தை இன்று வகித்தவன். ரெயிலடியில் இறங்கியது முதல் இங்கு வந்து அமரும் வரை என் கூடவே வந்து, படி, படி என்று கூறி வழியும் காட்டி, மேலேற வேண்டும் என்று சொன்னதுடன் அமையாது, மேனிலைக்கே கொண்டு வந்து தலைமைப் பீடத்திலும் அமர்த்திச் சென்றுவிட்டான்.

பிள்ளையவர்கள் ஸ்தானத்தை வகித்து என்னை ஆண்டான் என்ற பொருள்பட இந்தத் தம்பியைப் பிள்ளையாண்டான் என்று குறிப்பிட்டேன். இந்தத் தம்பி பல்லாண்டு நல்வாழ்வு வாழ்க!''

இதைக் கேட்ட வெள்ளக்கால் எண்பதாண்டு விழாக் குழுவில் செயலாளராக இருந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானுக்கு நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சி. "தமிழ்த் தாத்தா' தன்னைத் தம்பி என்று அழைத்ததால் பிற்காலத்தில் "தம்பி' என்ற புனைப்பெயரில் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் தொ.மு.பா. எழுதினார். "தமிழ்த் தாயின் தவப் புதல்வர் திருவாயால் வாழ்த்துப் பெறவும், "தம்பி' என்று அவர் அமுதூர அழைக்கவும் என்ன பாக்கியம் செய்தேன்!' என்று பாஸ்கரத் தொண்டைமான் அடிக்கடி நினைவு கூர்ந்து நெகிழ்வாராம்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், நெல்லைக்குத் திரும்பினாலும், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றில் வரலாற்றுச் சிறப்பு, கலைநயம் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் நுணுகி ஆராய்ந்து கட்டுரைகளாக வடித்தார் பாஸ்கரத் தொண்டைமான். இந்தக் கட்டுரைகள் "வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தலைப்பில் "கல்கி' வார இதழில் தொடராக வந்தது.

"வேங்கடத்துக்கு அப்பால்', பிள்ளைவாள், தமிழறிஞர் முதலியார், ரசிகமணி டி.கே.சி., கலைஞன் கண்ட கடவுள், கல்லும் சொல்லாதோ கவி, அமர காதலர், தென்றல் தந்த கவிதை, தமிழர் கோயில்களும் பண்பாடும், கம்பன் கண்ட இராமன், அன்றும் இன்றும் என்று தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் எழுதிக் குவித்தவை ஏராளம் ஏராளம். இவரது நூல்கள் சமீபத்தில் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய இளைய சகோதரர். நீதிபதி மகாராஜன் தொகுத்தது போல, பாஸ்கரத் தொண்டைமானுக்கு ரசிகமணி எழுதிய கடிதங்களும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. காரைக்குடி கம்பன் விழா என்றால், தவறாமல் ஆஜராகி விடுவார்கள் தொண்டைமான், மகாராஜன், ஆ.சி.ரா. போன்ற வட்டத்தொட்டி நண்பர்கள். இவர்களது உரையைக் கேட்பதற்காகவே இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் காரைக்குடி நோக்கிப் படையெடுக்கும். அது ஒரு காலம்!

இவர் எழுதிய பல நூல்களுள் குறிப்பிடத்தக்கவை

வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன)
வேங்கடத்துக்கு அப்பால்
பிள்ளைவாள்
தமிழறிஞர் முதலியார்
ரசிகமணி டி.கே.சி.
கலைஞன் கண்ட கடவுள்
கல்லும் சொல்லாதோ கவி
அமர காதலர்
தென்றல் தந்த கவிதை
இந்தியக் கலைச் செல்வம்
தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்)
மதுரை மீனாட்சி
ஆறுமுகமான பொருள்
பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையார்
கம்பன் சுயசரிதம்
கம்பன் கண்ட இராமன்
அன்றும் இன்றும்
சீதா கல்யாணம்
பட்டி மண்டபப் பேருரைகள்

தமிழும், கலையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 1965-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ல் மறைந்தார். ஆனால், வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பகுதி வாழும் வரை, இவரது நூலும் வாழும். இவரது புகழும் வாழும்!

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...