#மாவீரன்_அலெக்சாண்டர்
#செங்கிஸ்கான்
#அசோகன்
•••••••
இதயமற்றவர்களின் இருப்பிடத்தில், இடம் பெறவேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
————————————————
மாவீரன் அலெக்சாண்டர் இந்தப் பூமிப்பந்தைத் தனது சுண்டு விரலில் சுழற்றிக் காட்டிய கால கட்டத்தில் - கல்லறைகளின் அருகில் மக்கிப் போன மண்டை ஓடுகளைத் தரம் பிரித்துக் கொண்டிருந்த கிரேக்க ஞானி அரிஸ்டாட்டிலைப் பார்த்துத் தனது போர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்ததாக வரலாறு சொல்லுகிறது.
பாமீர் முடிச்சினைத் தனது பாதந்தாங்குகிற படிக்கல்லாக நினைத்து தான் கொய்தெறிந்த மனிதத் தலைகளால் கொலுமண்டபங்களை அமைத்துக் கொண்டிருந்த செங்கிஸ்கான் பலுசிஸ்தானத்தில் தனது காட்டுமிராண்டிப் படைகளால் சாதாரண மக்களுக்கு நிகழ்ந்ததை நினைத்துக் கலங்கிப் போனதாக வரலாறு சொல்கிறது.
மெளரியப்பேரரசின் மாளாதபுகழை மானிட சமுதாயம் மறத்தலாகாது என்கிற பாரம்பரியப் பற்றால் சுழலும் வாளுடன் அக்கினிப் பிரவேசம் செய்த அசோகன் கலிங்கத்திலே கண்ணீர் வடித்தானென்று வரலாறு சொல்கிறது.
கல்லூரிக் குன்றிலே- கழுமரத்திலே மாசற்ற போதகனை மாபாவிகள் அறைந்திட நாந்தானே காரணனென்று முப்பது வெள்ளிக் காசுகளை முகத்திலே எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றிலே தொங்கி மடிந்தான் யூதாஸ் என்று வரலாறு சொல்லுகிறது.
அதே வரலாறு வேறொன்றும் சொல்கிறது ,
இரண்டு லட்சம் யூதர்கலைக் கொன்றுவிட்டு - ஈவாபிரானைச் சுட்டபோதும் கொலைவெறி இட்லரிடம் கோரத்தாண்டவாடியது என்று வரலாறு சொல்கிறது.
நிராயுதபாணிகளான மக்கள் சிதறி ஓடிக்கொண்டிருந்த போதும் ஈவிரக்கமின்றி அவர்களைச் சுட்டுச் சூறையாடிக் கொண்டிருந்தான் ஓடயர் என்கிற பரங்கித் தளகர்த்தன் என்று வரலாறு சொல்கிறது.
நப்பாம் குண்டுகளால் ஊனமுற்ற குழந்தைகளைத் தங்களை கருப்பைகளில் சுமந்து கொண்டு உயிருக்காக ஓடோடிக் கொண்டிருந்த வியட்நாமியப் பெண்களின் பொன்னுடல்களை துப்பாக்கி முனைகளில் கூறு போட்டு ரசித்தார்கள் கொடிய அமெரிக்கத் துருப்புகள் என்று வரலாறு சொல்கிறது.
மான மரியாதைக்காக மாடிப்படிகளிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட வங்கத்து இளம் பெண்களில் கட்டுக்குலைந்த உடல்களின் மேல் தனது காவல் நாய்களை ஏவிக் களிப்படைந்தான் திக்காகானென்று பல வரலாற்று செய்திகள சொல்கிறது.
அந்த கொடியவர்களின் கூடாரத்தில் இதயமற்றவர்களின் இருப்பிடத்தில் இடம் பெறவேண்டியவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
04.07.2020
No comments:
Post a Comment