#கல்கி- #ஒரு_சகாப்தம்!
கல்கியின் அச்சு இதழ் நிறுத்தப்பட்டது குறித்த என்னுடைய ஆதங்கத்தை, வேதனை.....
கல்கி மின்னிதழாக பீடு நடை போட கல்கி இதழுக்கு என் வாழ்த்துகள்!
கல்கி வார இதழ் கடந்த 79 ஆண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகை உலகில் தனக்கென தனிப் பாதை அமைத்து பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடித்து தமக்கென வாசகர்கள் குழாமை குறிப்பிட்ட அளவு வைத்துக்கொண்டு நடை போட்டு வந்தது. ஆனால் கல்கி இதழ் 16/ 8 / 2020 முதல் அச்சிதழ் கால நிர்ணயம் குறிப்பிடப்படாமல் நிறுத்தப்படுவதாக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது நீங்கள் அறிந்ததே.
கல்கி தம் பயணத்தில் ஒரு ஆண்டு இதழ் வராமல் நின்று பின் தன் நடையைத் தொடங்கி தற்போது 79 ஆண்டுகள் நடந்துவந்தது என்பதும் நீங்கள் அறிந்ததே. அது தன் அச்சிதழ் பயணத்தை முடித்துக்கொண்டு ஆன்லைனில் மின்னிதழாக அதே புத்தக வடிவில் புரட்டிப் படிக்கும் வகையில் அதே அழகுடன் பயணப்பட இருக்கிறது. கல்கியின், கல்கி இதழின் வாசகர்கள், நேசர்கள், இலக்கியவாதிகள். படைப்பாளிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அச்சிதழுக்கு அளித்துவந்த அதே ஆதரவை மின்னிதழுக்கும் www.kalkionline.com வழங்கவேண்டுகிறோம். இது தன் பயணத்தை வேகமாகத் தொடங்கிவிட்டது.
கல்கி என்கிற பத்திரிகையுலக சாம்பவானின் குழந்தை கல்கி வார இதழ் பிறந்து வளர்ந்து செழித்து வாழ்ந்த வளர்ச்சியில் முதல் பதின்மூன்று ஆண்டுகளின் கதையை ‘பொன்னியின் புதல்வர்’ நூலில் திரு. சுந்தா எழுதிய குறிப்பு இது.
கல்கி என்ற பத்திரிகை கல்கி என்ற மனிதரின் தனிப்பட்ட ஆளுமையையும் அந்த ஆளுமையின் விதவிதப் பான்மைகளையும் பதித்துப் பரப்பும் சாதனமாய் விளங்கலாயிற்று. அரசியலில் ஒரு சக்தியாகவும் கலைகளில் ஒரு செல்வாக்காகவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு பண்ணையாகவும் கல்கிப் பத்திரிகை உருவாகி நிலை பெறுவதற்கு வேண்டிய அடிப்படையை ஆரம்ப இதழ்களிலேயே அதன் ஆசிரியர் அமைத்தார். கல்கிப் பத்திரிகை பற்றிய இரண்டு சிறு குறிப்புகள், திருச்சி சிறையிலிருந்து தமது குடும்பத்தாருக்கு ராஜாஜி எழுதிய கடிதங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒன்று கல்கி பத்திரிகை தொடங்கி கஷ்டப்பட வேண்டாம் என்பது. பத்திரிகை வந்தபின் எழுதிய கடிதம் இங்கே.
(12 / 8 / 41) புதுப் பத்திரிகை ‘கல்கி’ பார்த்தேன். நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருக்கிறது. நடைத் தமிழ் சுத்தப்பட்டு அழுகும் ஓட்டமும் கொண்டு எல்லோரும் அனுபவிக்கும் தன்மை அடையச் செய்வது இந்தப் பத்திரிகை யின் சிறப்பான சேவையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ண மூர்த்திக்கு சொல்ல வேண்டும்.
ராஜாஜி போலவே டி.கே.சி.யும் சொந்தப் பத்திரிகை போடுவதன் மூலம் கஷ்ட நஷ்டங்களுக்குக் கல்கி உள்ளாகக் கூடும் என்று கவலைப் பட்டார். அந்த எண்ணத்தை விடுத்து ஏதாவது ஒரு பத்திரிகையில் சம்பளத்துக்கு ஆசிரியராய் அமர்வதற்கு முயலும்படி கல்கிக்கு யோசனை கூறினார். ஆனால் “கஷ்டமோ நஷ்டமோ சுயேச்சையாய் எழுதுவதற்கு வாய்ப்பாக சொந்தப் பத்திரிகை தொடங்கத்தான் போகிறேன்” என்று ஒரே மனஉறுதியுடன் கல்கி நிற்கவே அந்த உறுதியை ரசிகமணி மெச்சி அதற்கு ஊக்கம் ஊட்டினார்.
கல்கிப் பத்திரிகை எடுத்த எடுப்பிலேயே அடைந்த வெற்றி கண்டு மகிழ்ச்சி அடைந்த டி.கே.சி. நாலாவது இதழ் வெளியானதும் அது பற்றி உற்சாகமாய் (அப்போது சிறையிலிருந்த) ராஜாஜிக்கு 19.9.41 அன்று ஒரு கடிதம் எழுதினார்.
சந்தோஷமான சமாசாரம் ஒன்று. எதிர்பாராதபடி கல்கிப் பத்திரிகைக்கு தமிழ் உலகில் தேவை ஏற்பட்டு 21,000 பிரதிகள் வெளியிட்டாலும் போது மானதாக இல்லை. ஐந்து நிமிஷத்தில் ஏஜெண்டுகளிடமிருந்த பிரதிகள் காலி யாகிப் போய்விடுகின்றன. படங்களும் கட்டுரைகளும் ரொம்ப வாய்ப்பாய் இருக்கின்றன. எல்லாம் எளிமையாய் நளினமாய் இருக்கின்றன. (நான் எழுதும்) கம்பராமாயணம்கூட ஒன்றாகச் சேர்ந்து ஒப்பேறி விடுகிறது. தமிழ்நாட்டில் புகார் எல்லாம், பிரதிகள் போதவில்லை, ஏன் இன்னும் வாரப் பத்திரிகையாய் ஆகவில்லை என்பதுதான். தமிழர்களுக்குத் திடீரென்று உணர்ச்சியும் அறிவும் திருந்திவிட்டது.
விவாதப் புயல்கள் போட்டிகள், பொறாமைகள், யுத்த கால அபாயங்கள், தணிக்கை இடையூறுகள், தட்டுப்பாடுகள், விலை ஏற்றங்கள் - இவற்றை எல்லாம் சமாளித்துக்கொண்ட கல்கிப் பத்திரிகை முன்னேறியது. முதல் இதழில் வெளியான வெண்பா ஒன்றில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வாழ்த்தியபடியே பசுந்தமிழ்ச் சோலையாம் கல்கி நித்தமும் பல்கி வளர்ந்தது.
மாதம் இருமுறை சஞ்சிகையாகத் தொடங்கிய கல்கி, 13ஆம் மாதத்திலி ருந்து மாதம் மூம்முறையாகவும், 33ஆம் மாதத்திலிருந்து அதாவது 1944 ஏப்ரலிலிருந்து வாரம் ஒரு முறையாகவும் வெளிவரலாயிற்று.
முதல் இரண்டு இதழ்களையும் பன்னிரண்டு ஆயிரம் பிரதிகள் வீதம் அச்சடித்து வெளியிட்டார்கள். இரண்டணா விலை கொண்ட அந்த இதழ்கள், நாலணா, எட்டணா என்றெல்லாம் பல ஊர்களில் கறுப்புச் சந்தைச் சரக்கைப் போல் விற்பனை ஆயிற்று. மூன்றாவது இதழ் 20 ஆயிரம், நாலாவது 21 ஆயிரம், அவைகளும் பற்றாக்குறை நிலையில் அவ்வாறே விலை போயின. ஐந்தாவது இதழிலிருந்து 35 ஆயிரம் வெளியானபோது, ஓரளவு பற்றாக்குறை தீர்ந்தது. அப்போதும் அநேக ஊர்களில் க்யூ நின்று கல்கியை வாங்க வேண்டியதாய் இருந்தது.
பிறகு காகித நிலைமை திருந்தியதும் ஆயிரம் ஆயிரமாய்ச் செலா வணி கூடிக்கொண்டே போய், ‘பொன்னியின் செல்வன்’ தொடர் கதை வெளி யான சமயத்தில் 71 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டிற்று. பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோரின் தகவலுக்காக அவற்றின் விற்பனைக் கணக்கைத் தணிக்கை செய்யும் ஏ.பி.சி. நிறுவனம் 1953ல் கல்கி இதழ் ஒன்றின் சராசரிச் செலாவணி 71,366 பிரதிகள் என்பதாகச் சான்றிதழ் வழங்கிற்று.
இந்தியாவில் ஆங்கிலத்திலும் சரி, நாட்டு மொழிகளிலும் சரி, வேறெந்த வாரப் பத்திரிகையோ, நாளிதழோ, அந்தக் காலத்தில் எட்டியிராத விற்பனைத் தொகை அது.
பந்தயப் பரிசுகள், அதிர்ஷ்ட எண் வெகுமதிகள், சோதிடப் பலன்கள், காமக் கதைகள், கவர்ச்சிப் படங்கள் ஏதுமின்றி அவ்வளவு பெரிய செலா வணியை கல்கி அடைந்தது சிறப்பாய்க் குறிப்பிடத்தக்கது. 1956ல் ஒரு லட்சத்துக்கும் மேல் அதன் விற்பனைத் தொகை பெருகிற்று.
இதுதான் கல்கி பத்திரிகையின் வளர்ச்சியில் முதல் பதின்மூன்று ஆண்டுகளின் கதை. அதன் ஆசிரியரின் உயிருடனும் உணர்வுடனும் இணைந்த கதை. அவருடைய எழுத்தும் புகழும் ஓங்கிய கதை. வாழ்க கல்கி. அதன் வாசகர்கள் வாழ்க.
No comments:
Post a Comment