———————————————————
கி.ரா சொல்வார், “என் பக்கத்தில் தான் தாமிரபரணியின் தீரா வாசம் இருக்கின்றது. ஆனால் என்னுடைய மண்ணோ வானம் பார்த்த பூமி. கரிசல் பூமி. இந்த மக்களுக்காக இந்த மக்களின் மொழியில் நான் பேசுகிறேன். சப்தமில்லாமல் என்னுடைய படைப்புகளை வாசித்தால் பல விஷயங்கள் புரியலாம் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று கோவில்பட்டி வட்டாரத்தினுடைய சம்சாரிகளின் பாடுகளைப் பற்றி சொல்லிக்கொண்டே வருவார்.
அதே போல கயத்தாரில் மாட்டுவண்டிகள் செய்வது பற்றியும் சிலாகித்துள்ளார்.
மே தினக் கொண்டாட்டங்கள் சிறப்பாக 1969-ல் கோவில்பட்டியில் திருவிழாவாகவும் பல்வேறு கலை நிகழ்வுகள் நடந்ததை வைத்தும் பாராட்டியுள்ளார்.
அதன்பின் தன்னுடைய ஊருக்கே அதே ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி கார்கியின் வில்லிசையை நடத்தியுள்ளார். மே தின விழாவில் கோவில்பட்டியில் ஜீவாவின் பேச்சைக் கேட்டுதான் ஜீவா மீது எனக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது என்றும் சொல்லுவார்.
வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி இவருக்கு நெருங்கிய தோழர். பிச்சைக்குட்டியும் இவரும் வாகைத்தாவு என்ற கிராமத்தில் சீனிவாசராவிடம் கம்யூனிசத்தை படித்தார்கள்.
பின்னர் கட்சியில் உறுப்பினர் அட்டையை சீனிவாசராவ் அம்பாசமுத்திரத்தில் வைத்து கி.ரா.வுக்கும் வில்லிசை வேந்தர் பிச்சை குட்டிக்கும் கொடுத்ததும் உண்டு.
பிச்சைக்குட்டி கோவில்பட்டியில் இருந்த காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர். ஒரு கட்டத்தில் அவர் சமூக விரோதிகளால் கோவில்பட்டியில் இருக்க முடியாமலேயே சாத்தூருக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடந்த கூட்டங்கள் பற்றியும் கிருஷ்ணன் கோவில் தெருவில் நடந்த பொதுக்கூட்டங்கள் பற்றியும் அடிக்கடி சிலாகித்துச் சொல்லியிருக்கிறார்.
கந்தசாமி செட்டியாருடைய வெத்தலைக் கடையில் கூடுவது பற்றியும், அவரது கடை அருகே பாலமுருகன் உணவகம், எதிரே இருந்த அன்றைய பேருந்துநிலையம் பற்றியெல்லாம் கூறினார்.
அதன்பின் அந்த பேருந்து நிலையம் மாறி, பின்னாளில் அதுவே புறவழிச் சாலையாக மாறியது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
கந்தசாமி செட்டியார் என்பவர் புத்தகங்களை அதிகமாக நேசிப்பவர் என்பதால் நிறைய புத்தகங்களை வாங்கி வைப்பார். ஆனால், அவற்றைப் படிக்கக் கொடுக்க மாட்டார் என்று சொல்வார்.
கந்தசாமியுடைய தாராள மனது குறித்தும் இவர் மீது அவர் கொண்டிருந்த நேசம் பற்றியும் கரிசல்காட்டு கடிதாசியில் விரிவான தொடராகவும் வந்தது. அவரது திருமணத்திற்கு அவரின் சொந்த ஊரான கோட்டை கழுகுமலை, கழுகுமலைக்கு கிரா சென்றது, அவரது மறைவுக்குப் பின் அவரது குடும்பம் அடைந்த இன்னல்கள் குறித்தும், அந்தக் குடும்பத்திற்காக நிதி சேகரித்த விஷயங்கள்பற்றியும்சொல்லியிருக்
கிறார்.
கந்தசாமி அவர்களின் கடை அன்றைக்கு பாலமுருகன் உணவகத்தில் கீழே உள்ள லட்சுமி மில் துணிக்கடை( ஷோ ரூம)இருந்த இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் ஆபிஸ் படியி்ல் கயிற்றை பிடித்து ஏறி சென்று அழகர் சாமி எம்எல்ஏ பார்க்க போவதும், அங்கு எஸ்.எஸ்.தியாகரஜன்,கோடாங்கால் கிருஷ்ணசாமி என பலர் இருப்பார்கள். மேலும்,பொய்யாழ் நாயக்கர் சைக்கிள் கடை, கல்யாணி லாட்ஜ், மனோராமா உணவகம், சாத்தூர் தேநீர் கடை, கிருஷ்ணன் கோவில் இதுபற்றியும் சொல்வதுண்டு.
தெற்கு பஜார், மூப்பனார் பேட்டை அவர் நடமாடியது குறித்தும் சொல்வதுண்டு. கோவில்பட்டி ரயில்வே நிலையம் எளிமையான நிலையமாக அன்று இருந்தது.ரயிலுக்காககாத்திருக்கும்போது கூட்டம் கூடாத அந்த இடத்தில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால் அங்குள்ள நிசப்தம் மனதிற்கு இதமாக இருக்கும் என்றும் அங்கு பல்வேறு மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது எனவும் பலருடைய அறிமுகமும் அங்கே கிடைத்தது எனவும் பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் இடைச்செவலுக்கு பேருந்து நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அப்போது தேர்தலில் நான் நின்றேன். தேர்தல் முடிந்தவுடன் திமுக ஆட்சியில் 1989-ம் ஆண்டு கண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
கி.ரா.வை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து கண்ணப்பனை சந்தித்து இடைசெவல் திருநெல்வேலி - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்ததும், அந்த கோரிக்கைபரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
அதேபோல ராமு, கௌரிசங்கர், தேவதச்சன், போத்தையா ஆகியோரை அடிக்கடி சந்திப்பதுண்டு. காலையில் கோவில்பட்டிக்கு வந்தால் மாலை 4 மணிக்கு இடைச்செவலுக்குத் திரும்புவது அவரது வாடிக்கை. போகும்முன் பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் மருத்துவரையும் பார்த்து விட்டு தான் செல்வார். உடன் மாரீஸ் இருப்பார்.
எப்போதும் 40 பக்க நோட்டில்தான் தனது கதைகளை எழுதுவார். அந்த நோட்டுகளை தெற்கு பஜாரில் உள்ள தினமணி சண்முகபிள்ளை கடையில் தான் வாங்குவது வழக்கம்.பின் நாளில்
கார்னர் புக்ஸ் ஸ்டால் அழைக்கப்பட்டு
இப்போது சித்திரா தேவி புத்தக கடையாக மாறிவிட்டது.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார், “ரஷ்ய மண் மஞ்சள் மண் என்பார்கள். லண்டனில் கார்ல்மார்க்ஸ் சமாதி இருந்த இடம் சாம்பல் மண் என்பார்கள். இதையெல்லாம் அங்கே சென்று வந்தவர்கள் என்னிடம் காட்டியபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். கோவில்பட்டிக்கு பொதுவுடைமைக் கட்சி தலைவர்கள் வரும்போது இதையெல்லாம் பார்த்துண்டு” என்று சொல்வதுண்டு.
இடைசெவல் என்றால் எப்படி பெயர் வந்தது என்று கேட்டால் இடைசேவல் என்பார்கள். ஆனால், இடைசெவல் என்பதே சரி. கரிசல் மண் கந்தக மண். அதற்கு இடையில் ஒரு பகுதியில் செவல் மண் இருந்ததால், அதன் குங்கும் இட்ட
மாதிரி இருக்கும் வண்ணத்திற்காக இடைசெவல் என பெயிரிடப்பட்டதாக அவர் சொல்வார்.
இதுபோன்ற பல விஷயங்கள் அவரோடு கிட்டத்தட்ட புதுவை வரும் வரை கோவில்பட்டியின் தாக்கம் அவர் மனதில் இருந்தன. அவர் குறித்து சொல்ல இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. நேரம் கருதி இந்த உரையை நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
19-6-2021.
No comments:
Post a Comment