Wednesday, June 16, 2021

#பூம்புகாரின்_தொன்மையை_மீட்டெடுக்க_வேண்டும்.

#பூம்புகாரின்_தொன்மையை_மீட்டெடுக்க_வேண்டும்.
———————————————————-
குடகு மலையில் தோன்றும் தலைக்காவேரி, எனபல பகுதிகளைக் கடந்து வங்கக் கடலில் முத்தமிட்டுக் கொள்ளும் இடம் தான் 'பூம்புகார்'. இது ஒரு காலத்தில் மருவூர்ப் பாக்கம் என்றும் பட்டினப்பாக்கம், சோழ பட்டினம் எனவும் காவிரிப் பூம்பட்டினம், பூம்புகார் பட்டினம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது”.

பூம்புகாரின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். அங்கு ஒருகப்பல் துறைமுகமும் இருந்திருக்கிறது. அதைசரியாக பயன்படுத்தவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 2500 வருடங்களாக தமிழர்களின் ஒரு அடையாளம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரமாகவும் பன்னாட்டு துறைமுகமாகவும் மிகச்சிறந்த வணிக நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பட்டினம் கடலுக்கு அடியில் மூழ்கியதை தமிழ்ச் சான்றோர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

பண்டைய தமிழர்களின் தொன்மை நகரத்துக்கான அடையாளங்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா தலமான பூம்புகார் நகருக்கு மயிலாடுதுறையிலிருந்து செல்லும் வழி எங்கும் அமைதியாக தான் இருந்தது. தேர்தல் கால சாலைகள் நன்றாக போடப்பட்டு வாகனம் செல்வதற்கு மிகவும் அருமையாகஇருந்தது. சாலையின் இரண்டுபுறமும் மரங்களும், உளுந்து பயிர், பருந்தி செடிகளும் பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்ததால் கோடை வெயிலின் தாக்கத்தை தணித்தது.

தமிழ்க்குடியின் தொன்மை சிறப்புகளை பறை சாற்றும் பழமையான ஊர் என்பதாலும் சிலப்பதிகாரகாப்பிய நாயகன் கோவலனும் நாயகி கண்ணகியும் வாழ்ந்த ஊர் என்பதாலும் மிகவும் எதிர்பார்ப்புடன் பூம்புகாரை நெருங்கினோம். நுழைவுத் தூண்கள் அனைத்திலும் அரசமரச் செடிகள் வளர்ந்து கற்கால மனிதர்கள் வாழும் குகைபோல் பாழடைந்து சிதிலமடைந்த அலங்கோலக் காட்சி ரசிக்கும்படி இல்லை.

கடற்கரைக்கு செல்லும் பகுதிகள் ளங்கும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. அனைத்தும் மக்காத பிளாஸ்டிக். தூய்மையாக வைத்திருக்க வேண்டிய கடற்கரை 'மாசு நரகமாய்' காட்சியளிக்கிறது. சிறுநீர் நாற்றம் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவலம். சுற்றுலா பயணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

சுற்றுலா துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையே கிளப்புகிறது.

அடுத்ததாக, குழந்தைகளுடன் சிறுவர் பூங்காவுக்கு சென்றபோது அந்த பூங்கா இருந்த அடையாளமே தெரியவில்லை! சறுக்குமரம், ராட்டினம் இருக்கைகளை செடி, கொடிகள் ஆக்கிரமித்து காடுபோல் உள்ளது. மறுபுறத்தில், சீமைக் கருவேல மரங்கள் ஓங்கி வளர்ந்து இருக்கின்றன. விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் மாறியிருக்கிறது. எங்கு நோக்கினும் மது பாட்டில்களும் மனித கழிவுகளும் காணப்படுகின்றன.
இது மட்டுமல்ல, தமிழர்களின் பெருமையை போற்றும் வகையில் வடிக்கப்பட்ட சிற்பங்களும் கட்டிடங்களும் பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்த அவலக் காட்சியைக் கண்ட பிறகு தான். கடற்கரையை நோக்கி பயணித்தோம். வரலாற்றுச் சான்றுகளை சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிலப்பதிகார கலைக்கூடத்தை பார்வையிடச் சென்றபோது செயல்படாத செயற்கை நீரூற்றுகளையே பார்க்க முடிந்தது.

சிற்பக்கலைக்கு சான்றாக கடற்கரையோரம் ஒரே கல் தூணில் வடிவமைக்கப்பட்டிருந்த நெடுங்கால் மண்டபமும் போதிய பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த கொண்டு வருவதை பார்க்க முடிந்தது. கதவுகளை காணவில்லை.

பாவை மன்றத்தின் வளாகமும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியிருக்கிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் கிணறு போன்ற அமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அதிலிருந்தும் துர்நாற்றம் வீசுகிறது.

இவை தான் இப்படி என்றால்? சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கவேண்டிய கோவலன்-கண்ணகி நுழைவுவாயில் வளைவில் அரச மரச் செடிகள் முளைத்துள்ளன. வளைவு பெரும்பாலும் கான்கிரீட் கலவைகள் உதிர்ந்து கம்பிகள் -தொங்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

பூம்புகாரின் வரலாற்றைப் பறைசாற்றும் எந்த விஷயத்தையும் சுற்றுலாப்பயணிகள் அறிந்து கொள்ள முடியாத அவலநிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதை கண்டு மனம் நொந்து நூலாகி செல்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள்.

இந்தியாவில் இருக்கும் ஒரே கடலடி அருங்காட்சியகம் இதுதான் என்ற அருங்காட்சியகத்துக்கு உண்டு. பூம்புகார் நகரின் பெருமை இங்குள்ள பெருமையை வெளிக்கொணர கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதும் மத்திய அரசிடம் இருந்து ஒத்துழைப்பும் போதிய நிதியும் கிடைக்காததால் அவை அனைத்தும் கைவிடப்பட்டு இருப்பதை உள்ளூர்வாசிகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இத்தனைக்கும் கடந்த 10 ஆண்டு காலமாக இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவை சேர்ந்த பவுன்ராஜ் தான்.

பூம்புகார் என்ற ஒரு நகரம் பண்டையகாலத்தில் இருந்தது என்பதனை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும் சான்றாகவும் இருப்பது தான் தற்போது பூம்புகார் என்ற பெயரில் இருக்கும் இந்த நகரம்.

தமிழ்நாடு சுற்றுலா மையத்தின் வலைதளத்தில் சென்று பார்க்கும் புகைப்படங்களை நம்பி உலகெங்கிலும் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள். நேரில் வந்து பார்க்கும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முகம் சுளிக்கிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவு செய்து அரும்பாடு பட்டு உருவாக்கிய நகரம் இப்படி சிதிலமடைந்து கிடக்கலாமா?
பழைய பூம்புகார்நகரம் கடலில் மூழ்கியது; இந்த புதிய பூம்புகார் நகரம் குப்பைகளில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. இது தான் தற்போதைய பூம்புகார் நகரின் உண்மையான நிலை. இது தமிழின் பெருமையை எடுத்துக் கூறாமல் தமிழர்களின் அவல நிலைமையை பிரதிபலிக்கிறது.
"பூம்புகார் நகரின் பெருமையும் புகழும் யாராலும் மூழ்கடிக்க முடியாதவை. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் இருக்கும் வரையில் பூம்புகாரின் புகழும் மதுரையின் மாண்பும், வஞ்சியின் வீரமும் தமிழகத்தின் பெருமையும், சிறப்பும் தாழாது தாழாது தாழாது... என பூம்புகார் திரைப் படத்தில் முன்னுரையாக தனது எண்ண ஓட்டங்களை திரைக்காவியமாக படைத்த தலைவர கலைஞர் 98 ஆவது பிறந்த நாளை மிக எளிய முறையில் கொண்டாடி  அவரது வழியில் பயணித்துக்கொண்டிருக்கும் முதல மைச்சர் நிச்சயம் நிறைவேற்று வார் என்று பூம்புகார் மக்கள் மட்டுமல்ல தமிழகமும் எதிர்பார்க்கிறது.





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...