Tuesday, June 22, 2021

#கோதாவரி குமரியை தொடட்டும்….

இன்றைய (22-6-2021) தினமணியில் நதி நீர் இணைப்பு குறித்த எனது பத்தி…..



--------------------------------------
 
கோதாவரி - காவிரி இணைப்பு செயல்படுத்த மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. தமிழகத்திற்கு 125 டி.எம்.சி இதன் மூலம் கிடைக்கும் என்றும் மொத்தம் 1100 டி.எம்.சி நீரை கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு, காவிரி வரை கடலுக்கு செல்லும் நீரை சேமிக்கலாம் என தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகம், ஆந்திரம், தெலுங்கானா பயனடையும் என்றும் தமிழகத்தில் மொத்தம் ஆண்டுக்கு 925 மி.மீ மழை பொழிகிறது. அத்தோடு இந்த நீரும் சேர்ந்தால் தமிழகம் பயன்பெறும் என்றும் கூறுகின்றனர்.
வடபுலத்தில் வெள்ளமும், தென்புலத்தில் வறட்சியும் அடிக்கடி இந்தியாவில் ஏற்படுகிறது. நதிநீரினை இணைக்க வேண்டுமென்று ஆங்கிலேயர் காலத்திலேயே ரயில்வே பாதைகளை அமைத்தது போல நதிநீரை இணைத்து நீர்வழிச்சாலை திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று அப்போது விவாதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பாசன பொறியாளர் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் 1858இல் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் என்று நதிகளை இணைப்பதை குறித்தான சாத்தியக்கூறுகளை அறிய முற்பட்டார். ஆனால் நீர்வழிப்பாதையும், நதிநீர் இணைப்பும் நடைமுறைக்கு வரவில்லை.
அதன்பின், இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1972இல் கே.எல்.ராவ் கங்கை – பிரம்மபுத்திரா – மகாநதி – கிருஷ்ணா – காவிரி என்ற 14 நதிகளை இணைக்கலாம் என்றும் அதோடு இணைந்து சிறு ஆறுகளையும் சேர்த்து மொத்தம் 30 நதிகளை இணைத்தும், அதன் மூலம் 30 கால்வாய்கள் மூலம் 300அணைகளை கட்டி நீரை சேமிக்கலாம் என்று திட்டமிட்டு இந்த இணைப்புத் திட்டத்தை முன்னெடுத்தார். பீகார் மாநிலம் பாட்னா அருகே வெள்ளமாக செல்லும் கங்கை தீரத்து நதியை தென்னிந்தியாவிற்கு திருப்பலாம் என்று அவர் அப்போது கூறினார். ஆனால், இந்த திட்டம் சத்புரா - விந்திய மலைகளில் ராட்சத பம்புகள் மூலமாக தண்ணீரை கொண்டு செல்ல மின் சக்தியும், திட்ட செலவுகளும் அதிகமாகும் என்று விவாதம் நடைபெற்ற காலத்தில் இந்திரா அரசாங்கம் கலைந்து மொரர்ஜி தேசாய் அரசு ஆட்சிக்கு வந்தது.
அப்போது கேப்டன் தஸ்தூர் பூமாலை திட்டம் என்ற பெயரில் மாலை போன்று நதிகளை இணைக்கலாம் என்று 1997இல் பரிந்துரைத்தார்.
ஐ.நாவும் இதை ஆதரித்தது. அந்த திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை. அதன்பின், இமாலய நதிகளை மேம்படுத்தவும், தீபகற்ப நதிகளை மேம்படுத்தவும் என இரண்டு சிறப்புத் திட்டங்கள் துவக்கப்பட்டன. இந்த பணிக்காக 1982இல் நீர்வள ஆணையமும் அமைக்கப்பட்டது. அந்த வகையில் நீர்வளம் அதிகமுள்ள பகுதிகளில் வீணாகும் தண்ணீரை வறட்சியான பகுதிகளுக்கு இணைப்புக் கால்வாய்களாக கொண்டு செல்லலாம் என்ற கருத்தை இந்த ஆணையம் பரிந்துரைத்தது. இந்த அறிக்கையின்படி மகாநதியிலிருந்து உபரியாகும் 8000 டி.எம்.சி நீரை கோதாவரிக்கு திருப்ப ஹிராகுட் அணை அருகே மணிப்பந்தராவில் ஒரு அணை கட்டி தவுலேஸ்வரம் அணைக்கு நீர் எடுத்து வந்து கோதாவரி நதியின் குறுக்கே உள்ள போலவரம் அணையின் அருகே ஒரு புதிய அணை கட்டி 21,550 டி.எம்.சி நீரை கிருஷ்ணா நதிக்கு எடுத்துச் செல்வது இந்த திட்டத்தின் ஒருபகுதி. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் சுரேஷ் பிரபு தலைமையில் அமைந்த நதிநீர் இணைப்புக் குழுவும் இதைகுறித்து ஆராய்ந்து அறிக்கை இறுதி செய்யும் நிலையில் அன்றைய வாஜ்பாய் அரசாங்கம் நிறைவடைந்துவிட்டது.
அடுத்தபடியாக, பிரகாசம் அணை அருகே அணையின் பக்கத்தில் 1200 டி.எம்.சி நீரை கொண்டு செல்ல போலாவரம், விஜயவாடா இடையே இணைப்புக் கால்வாயோடு 4370டி.எம்.சி நீரை கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா நீர் செல்லும் இணைப்புக் கால்வாய்கள் வெட்டப்பட்டு இறுதியாக இச்சம்பள்ளி - நாகார்ஜூனா இணைப்புக் கால்வாய் மூலமாக நாகார்ஜூனா சாகர் அணையை அடையும். அடுத்த கட்டமாக 12,000 டி.எம்.சி நீரை பென்னாற்றில் கட்டப்பட்ட சோமசீலா அணைக்கு திருப்பப்பட்டு அதிலிருந்து 9,200டி.எம்.சி நீரை பாலற்றின் வழியாக கொண்டுசென்று காவிரியில் இணைக்கலாம். ஆனால், இந்த பாலாறு இணைப்புத் திட்டம் குறித்தான விடயம் கேள்விக்குறியாக உள்ளது. அதை மத்திய அரசு தான் தெளிவுப்படுத்தவேண்டும்.
இதை இணைத்தால் அனந்தபூர் மாவட்டத்தில் ஓடும் துங்கபத்ரை நதியோடு கிருஷ்ணாவையும் இணைத்தால் சித்ரதுர்கா, கோலார் மாவட்டத்தின் வழியாக பாலாற்றின் பேத்தமங்கலா அணைக்கு கால்வாய் அமைத்தால் 10 டி.எம்.சி தண்ணீர் கூடுதலாக வரத்து வரும். இது பாலாற்று பாசன விவசாயிகளுக்கு பயன்படும். அதுமட்டுமல்லாமல், நேத்ராவதி -  பாலாறு மற்றும் ஹந்திரி - நீவா திட்டத்தையும் நிறைவேற்றினால் வேலூர் மாவட்டம் மேலும் பாசன வசதி பெறும். இப்படியான நிலையில் மத்திய அரசு கோதாவரி - காவிரி நீர் இணைப்பை ஏன் குமரி மாவட்ட நெய்யாறோடு இணைத்து திட்டத்தை விரிவுப்படுத்தலாமே.
இந்த நதிநீர் இணைப்பில் முதற்கட்டமாக தீபகற்ப நதிகள் அதாவது தக்கான பீடபூமி, ஆந்திராவின் தென்பகுதி, கர்நாடகத்தின் தென்பகுதி, தமிழகம், கேரளம், விந்திய - சத்புரா மலைகள், சோட்டா நாகபூர் பீடபூமிக்கு தென்புரம் அதாவது மகாநதி தீரத்திலிருந்து குமரி வரை உள்ள தென்னக நதிகளை இணைக்கப்பட வேண்டுமென்று முதற்கட்டமாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின் வடபுலத்தில் இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகளோடு மகாநதியை இணைத்தால் நதிநீர் இணைப்பு தேசியளவில் முழுமையாகிவிடும். அந்த வகையில் தான் கோதாவரி - காவிரி வரை இணைப்பு என்று சொல்லும்போது மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி முதல் வைப்பாறு வரை இணைத்தால் மட்டுமே இது பலனளிக்கும்.
இதுகுறித்து, நாட்டில் பாயும் நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, தாமிரபரணி, குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைக்க வேண்டும். அதாவது கங்கை குமரியைத் தொட வேண்டும்; கேரளாவில் உள்ள அச்சன்கோவில் - பம்பை படுகைகளை தமிழகத்தினுடைய சாத்தூர் அருகே வைப்பாறோடு இணைக்க வேண்டும். கேரளாவில் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக கடலுக்குச் செல்லும் நீரின் ஒரு பகுதியை தமிழகத்திற்கு திருப்ப வேண்டுமென்று 1983லிருந்து வழக்குகளை தொடுத்தபோது என்னை பரிகாசம் செய்தவர்கள் பலர் உண்டு.
 
அன்றைக்கு மூத்த வழக்கறிஞராக இருந்த வி.பி.இராமன் கூட இதெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது என்று கூறினார். அவர் இன்றைக்கு இல்லை. அவரைப் போலவே மூத்த வழக்கறிஞரும், அரசு வழக்குகளை எல்லாம் நடத்திய என்.ஆர்.சந்திரன் (பாம்பே சகோதரிகளில் ஒருவருடையகணவராவார்) இந்த வழக்குகள் எல்லாம் சாத்தியமில்லை என்று கிண்டலடித்து அப்போது லா வீக்லி என்று சட்டத் தீர்ப்புகளை வெளியிட்டுவரும் வார ஏட்டிலும் விரிவாக எழுதியிருந்தார்.
ஆனால் இதையெல்லாம் கேட்டு சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து 30 ஆண்டுகள் வழக்கை நடத்தி உச்சநீதிமன்றத்தில் கடந்த 27-02-2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தீர்ப்பு வந்தது. தேர்தல் பணியின் காரணமாக தீர்ப்பு வந்த அன்றைக்கு டெல்லிக்கு கூட செல்லமுடியாத நிலை.
இந்த வழக்கை நடத்தி உரிய உத்தரவைப் பெறுவதற்காக டெல்லிக்கும், தமிழகத்திற்கும் இடையே நூற்றுக்கும் அதிகமான விமான பயணங்கள். இந்த வழக்கின் தீர்ப்புக்கான உத்தரவை பெற்ற பின்னர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு நகலை வழங்கினேன். அவர் மகிழ்ந்தார்.அந்த தீர்ப்பு நகலை குறித்து கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு எழுதியபோது தேவையில்லாமல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா விமர்சனத்தை வைத்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பில் மத்திய அரசு நதிநீர் இணைப்புகளைப் பற்றி ஆராய ஒரு ஆக்கப்பூர்வமான குழுவை அமைத்து, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூடி, இந்த முக்கிய பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணவேண்டும்.
தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், சுவந்திரகுமார்அடங்கிய நீதிபதிகள் குழு நதிநீர் இணைப்பைக் குறித்து முதல் தடவையாக தெளிவான தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பு வந்தவுடன் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவூத்தை மூன்று முறை சந்தித்தேன். அதன்பிறகு அதுகுறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது. அதுவும் ஆமை வேகத்தில் செயல்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கமும் முடிவுக்கு வந்துவிட்டது.
அதன்பின், 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் துவக்கத்தில் அன்றைய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்துங்கள். இந்த தீர்ப்பு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இனியும் அதுகுறித்தான மேல்நடவடிக்கை இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தான் தொடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தபின்னர் பல நாட்கள் கழித்து இன்றைக்கு கோதாவரி - காவிரி இணைப்பு நடக்கவுள்ளது என்பது ஒரு சின்ன ஆறுதல்.
இதைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு தொடர்பாக பி.என். நவலவாலா தலைமையில் மத்திய அரசின் குழு அமைக்கப்பட்டு இந்த ஐந்தாவது கூட்டம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நவலவாலா குழுவின் துணைக்குழுக்கலான இரண்டு குழுக்களின் காலத்தையும் மத்திய அரசு நீட்டிக்கவேண்டும்.
நதிநீர் இணைப்பு வழக்கு தொடுத்ததோடு மட்டுமல்லாமல் இது தொடர்பாக நான் தனிப்பட்ட வகையில் எடுத்த முயற்சிகள் ஏராளம். நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமர்களாக இருந்த வி.பி.சிங் (1990), பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
இப்படி நதிநீர் இணைப்பில் பல்வேறு காலக்கட்டங்களில் இவ்வளவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்புலத்தில் நடந்த சேதிகளையும், சங்கதிகளையும் சொல்லக்கூடிய தகுதி இருக்கிறது. மக்கள் மன்றத்தில் பதிவு செய்வது என்னுடைய கடமையாகும். இந்த நிலையில் நமது வினா.
கோதாவரி - காவிரி இணைப்போடு நிறுத்தாமல் வைகை, தாமிரபரணி, குமரி நெய்யாறோடு இணைத்தால் தான் தமிழகம் பயன்படும். தற்போது மத்திய அரசு இந்த இணைப்பிற்கான 1.19 இலட்சம் ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்த திட்டச் செலவு 67,000 கோடிக்கு மேல் ஆகும். சம்மந்தப்பட்ட மாநிலங்களின் பங்கு 14,000கோடிகளுக்கு மேலாகும். மற்றொரு பக்கம் காவிரிக்கு தண்ணீர் வந்தால் காவிரி-வைகை-குண்டாறு, தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு மற்றும் வடபென்னை-தென்பென்னை-பாலாறு என்று மூன்று மாநில இணைப்பும் முக்கியமான அம்சங்களாகும்.
இந்த இணைப்பில் கேன்டூர் கேனல்ஸ் தொழில்நுட்ப முறையை முன்னெடுக்கப்படும். நதிநீர் கால்வாய்கள் மூலமாக இணைக்கப்படும்போது, சமவெளியிலும் கால்வாய்களும், வாய்க்கால்களும் வெட்டப்பட்டு நீர் தங்குதடை இல்லாமல் செல்லக்கூடிய வகையில் முன்னெடுப்பது தான் கேன்டூர் கேனல்ஸ் முறையாகும். இந்த வழிமுறையை ஆழியாறு - பரம்பிக்குளம் இணைப்புத் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகத்தின் நேத்ராவதி திட்டத்தையும் மத்திய அரசு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள். ராட்சத மோட்டார் பம்புகளை எல்லாம் மேட்டுப் பகுதிகளுக்கு தண்ணீரை ஏற்றி பெங்களூரு, கோலார், சிக்பெல்லப்பூர், தும்கூர் போன்ற பகுதிகளுக்கு 1.6 டி.எம்.சி நீரை கொண்டு செல்லலாம். இந்த திட்டத்தின் துணைத் திட்டமாக அனந்தபூர், கடப்பா, சித்தூர், நெல்லூர், ராயலசீமா மாவட்டங்கள் பயன்பெறும் ஹந்த்ரா - நீவா திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
இவையெல்லாம் பரிசீலனையில் இருக்கும்போது, கோதாவரி தமிழகத்தின் குமரி முனையைத் தொட்டால் என்ன?
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் 86 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு இதற்காக ஒப்புதல் வழங்கி, அதற்கான திட்ட அறிக்கைகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.  தெலுங்கானா மாநிலம் ஈச்சம்பள்ளியிலிருந்து தமிழகம் வரை 1211 கிலோ மீட்டர் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், தெலுங்கானா மாநிலம் இத்திட்டத்தை செயல்படுத்த எதிர்வினை ஆற்றியது. நாகர்ஜுனா அணை மற்றும் ஆந்திராவில் உள்ள சோமசீலா அணை வழியாக தமிழகத்தின் கல்லணைக்கு கோதாவரி நீர் வந்து சேர வேண்டும்.
 
தெலுங்கானாவைப் பொருத்தவரையில் அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தார். அவருடைய மருமகன் ஹரீஸ் ராவ் தான்  அன்றைக்கு நீர்வளத்துறை அமைச்சர். அவர் இதை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். சில அணைகள் கட்ட வேண்டி இருப்பதால் இந்தத் திட்டத்தால் தெலுங்கானாவுக்கு பாதிப்பு வரும் என்று அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், ஆந்திரா, தமிழகம் தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஓரளவு முயற்சி மேற்கொள்கிறது. மற்ற மாநிலங்கள் எதிர்வினை ஆற்றுகின்றன.
 
இந்திய ஒருமைப்பாடு எங்கே போனது? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லாம் ஒரே நாடு என்ற நீண்ட காலமாக சொல்கின்றார்கள். ஆனால், அந்த உயிரோட்டமான வார்த்தைக்கு இங்கே மதிப்பு இல்லை. இப்படியான நிலையில், 1211 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் தோண்டி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
விவசாயத்திற்கு மட்டுமல்ல குடிநீருக்கும் இந்த இணைப்புத் திட்டம் பயனுள்ளதாகும். கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து ஒப்புதல் வழங்கியும் தேவை இல்லாமல் மற்ற மாநிலங்கள் சண்டித்தனம் பண்ணுவது எந்த வகையில் நியாயம்.
 
கடந்த  சில நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுகுறித்து தாக்கீதும் அனுப்பியது. தெலுங்கானா மாநிலம் பூலாம்பள்ளி மாவட்டம் மஹாதேவபுரம் மண்டலத்திலுள்ள ஈச்சம்பள்ளியில் உள்ள கோதாவரி மீது அணைகட்டி, தமிழகத்திற்கு வந்து சேர வேண்டிய காவிரி நீரை குறுக்கே கல்லணை கொண்டுவருவதே இந்தத் திட்டம் ஆகும்.
 
இதில் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுரங்கம் வழியாக தண்ணீர் கொண்டு கொண்டுவரப்பட வேண்டும். 1088 சைபர் கால்வாயில் கட்டப்பட்டு, ஈச்சம்பள்ளியிலிருந்து தெலுங்கானா மாநிலம் நாகர்ஜுனா அணைக்கட்டு வரை இந்த நதிநீர் மூன்று இடங்களில் மேல்நோக்கி லிஃப்ட் செய்து தண்ணீரை கொண்டு வர வேண்டும்.
 
இதைக் கட்ட 3845 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான திட்ட மதிப்பீடு 269 கோடி ரூபாய். 386 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின்சக்தி மையங்களும் கட்டப்படலாம். ஈச்சம்பள்ளி அருகே கட்டப்படும் அணைக்கட்டால் அந்தப் பகுதியில் உள்ள நிலங்கள் தாழ்வான பகுதியாக மாற்றப்பட்டு தண்ணீர் சூழும் அபாயம்  உள்ளதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது. இது கூடப் பிரச்சனை இல்லை, ஆனால் மாநில அரசு அரசுகள் கொடுக்கும் ஒப்புதல் தான் இன்றைக்குப் பிரச்சனையாக உள்ளது.
இதில் தமிழ்நாடு எழுத்துபூர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஆந்திரம் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் இதுவரை எழுத்துபூர்வமாக சம்மதம் தெரிவிக்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களும் இதற்கு எதிர்வினையாற்றுகின்றன. அதையும்மீறி இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்திதான். என்னுடைய உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்பின்படி கோதாவரி இணைப்பு காவிரி வரை மட்டுமல்லாமல் வைகை, தாமிரபரணி, குமரி மாவட்ட நெய்யாறோடு இணைக்கவில்லையே என்பது என்னுடைய வருத்தம். அதற்கு பட்டபாடு அந்த வழக்கில் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்ற நிலையில் என் கவலையை பதிவு செய்கிறேன். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.. பார்ப்போம்... இதற்கும் ஒரு காலம் வரும்.
-​செய்தித் தொடர்பு செயலாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com
#KSR_Posts
22-6-2021.

https://bit.ly/2Uu4BRb

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...