Monday, June 21, 2021

*ரசிகமணி டி.கே.சி. சொல்கிறார்*:

*ரசிகமணி டி.கே.சி. சொல்கிறார்*:

எல்லாவற்றிலும் முக்கியமான விஷயம் ஒன்று. கம்பருடைய கவிகளைக் கற்க முன்வரும்போது விஷயம் எவ்வளவோ உயர்ந்ததாய் இருக்கும்; அருமையாய் இருக்கும். அவைகளை அனுபவிக்க வேண்டியதுதான். 'கம்பர் கல்வியில் பெரியவர்' அல்லவா-ஆனாலும் விஷயத்தைவிட, அந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும் முறைதான் முக்கியமானது. சொல்லும் முறை என்றால் செய்யுளில் உண்டாகும் பாவ உருவந்தான். விஷயத்திலுள்ள உணர்ச்சி விம்மியே செய்யுளுக்கு பாவ உருவம் கொடுக்கிறது. அப்படிக் கொடுத்து வந்த செய்யுளே கவி (கம்பர் தரும் ராமாயணம் முகவுரை).
'நம்முடைய வாழ்க்கையையும் பண்பாட்டையும் அடிக்கடி 'ஜடுதி' பார்க்க வேண்டும். பழைய காரியங்கள் உயிரற்றனவாய் நின்று இடையூறு செய்கின்றனவா என்று பார்க்க வேண்டும். வேண்டாதவைகளை களைந்தெறியக் கூசக்கூடாது. அப்போது தான் வாழ்க்கை வளம் பெறும். வாழ்க்கையில் வேறு எந்தத் துறையில் பேரம் பண்ணிக்கொண்டிருந்தாலும் கலை இலக்கியம் சம்பந்தமாகப் பேரம் பண்ணவே கூடாது.
பண்டை இலக்கியம் சம்பந்தமாக நம்முடைய மனோபாவத்தை மாற்றவும் கலை நோக்கோடு அதைப் பார்க்கவும் வற்புறுத்தி வந்தது டி.கே.சி.யின் சாதனை என்றே சொல்ல வேண்டும். இதை அவர் பிரக்ஞைபூர்வமாகச் செய்து வந்திருக்கிறார் என்பது தெளிவு. அவரே இதைச் சொல்லட்டும்:

'இனி தொன்மையைப் பற்றிப் பேசலாம். பழைய காரியங்கள் சிலவற்றை ரொம்பவும் மதிக்கிறோம் என்றால் ஏதோ பழையது என்ற பண்பு பற்றியல்ல. பழைய காலத்தில் உயிர் இருக்கும், பிரயோசனம் இருக்கும் என்ற நம்பிக்கை பற்றித்தான்....

'ஆயிரம் வருஷமாக வளர்ந்துவந்த மரத்தை மதிக்கிறோம் என்றால் அதில் உயிர் இருக்க வேண்டும். பட்டுப்போன மரத்தை ஆயிரம் வருஷத்தியது என்று கொத்திக்கொடுத்து நீர் வார்த்துக் கொண்டிருக்க முடியாது. சந்தனம் புஷ்பம் எல்லாம் போட்டு வழிபாடு செய்ய முடியாது. கோடாரிக்காரனை ஏவிவிட வேண்டியதுதான். அல்லாத பக்ஷம் கறையானும் உளுவானும் குடியிருந்துகொண்டு, பக்கத்து மரங்களுக்கும் நோய் உண்டு பண்ணிக் கொண்டிருக்கும். எப்படியும் மரம் புதிதாக அந்த இடத்தில் உண்டாகாது. நம்முடைய சமுதாய வாழ்க்கையிலே பட்டுப்போன மரங்கள் பழையன என்ற காரணத்தாலேயே வட்டம் போட்டு இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. கலைத் துறைகளைப் பார்த்தால் ஒரே காடு; பட்டுப்போன மரங்கள் அடர்ந்த காடுதான்…..
#Ksrpost
21-6-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...