#மேலவை_பேரவை_குறிப்புகள்_3
———————————————————
சென்னை, வங்காளம், பம்பாய் மூன்று மாநிலங்கள் உட்பட, ஐக்கிய மாகாணங்கள், மத்திய மாகாணங்கள், ஒரிசா, பீகார், பஞ்சாப், அசாம் இரட்டை ஆட்சி என்ற முறையில் 16 ஆண்டுகாலம் மேலவை உருவாக்கப்பட்டு. 1935-ல் பல்வேறு அதிகாரங்களோடு மாகாண சுயாட்சி வழங்கப்பட்டு, 1937-ல் சட்டப் பேரவைகள் அமைக்கப்பட்டன. அதற்கு முன் சட்ட மேலவைகள் மட்டும் இருந்தது. மாகாண சுயாட்சி நடைமுறைக்கு வந்தது என வரலாறு கூறுகின்றன. மாகாண சுயாட்சி என்ற இந்த கருத்தை மேலும் வளியுரித்தி முதல் முதலாக, தமிழில் மாகாண சுயாட்சி என்று தினமணி ஆசிரியராக இருந்த என்.சிவராமன் எழுதிய நூலை தினமணி இதழ் வெளியிட்டது. இந்த நூல் வெளிவந்து ஏரத்தாழ 70 ஆண்டுகள் ஆகின்றன.
மிண்டோ மார்லி (1909) செம்ஸ் போர்டு(1919) சீர்த்திருத்தங்களின் படி பிரிட்டிஷார் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் நிர்வாகத்திற்கு இந்தியர்கள் ஆலோசனை கூற சில அரசியல் சாசன நீதியாக அமைப்புகள் உருவாக்கியது. இதன் பின், 1892-1909 காலகட்டங்களில் இந்திய பிரதிநிதிகள் உள்ளடங்கிய இந்த அரசியல் அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டன. செல்வந்தர்கள், பட்டதாரிகள், போன்றவர்கள் இந்த அவைக்கு வந்தனர். பின்பு 1919-ல் பிரிட்டிஷார் கொண்டுவந்த அரசியல் சட்டமும், இந்தியர்கள் நிர்வாகத்தில் பங்கேர்க்கும் அதிகாரத்தை வழங்கியது. 1921-ல், 9 மாநிலங்ளில் சட்ட மேலவைகள் இந்தியர்கள் பங்கேற்க கூடிய அளவில் பிரிட்டிஷார் நடைமுறைப்படுத்தினர்.
சென்னை ராஜதானியில்,1919 அரசியல் சட்ட சீர்த்திருத்தத்தின் படி சட்ட மேலவையில் 98 உறுபினர் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கபட்டனர். 25 உறுப்பினர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டனர். பதவிக்காலம் 3 ஆண்டுகாலமாக இருந்தாலும், அன்றைய மாகாண ஆளுநர் நினைத்தால் இந்த கவுன்சிலை கலைக்கவும், இன்றைக்கும் இருக்கின்ற பிரிவு 356 அன்றே வித்திடப்பட்டது. எவ்வளவு தான் மக்கள் பிரதிநிதி அவையாக இருந்தாலும் ஆங்கிலேய ஆளுநர் கவர்னர் தேர்தல் தான் வைத்தது சட்டம் என்ற நிலை அன்றைக்கு இருந்தது.
கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அன்றைய கவர்னர் மூலமாக கல்கத்தாவில் இருந்த கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தால்தான் சட்டங்கள் நிறைவேறும். இது இரட்டை ஆட்சியாக இருந்தது. பிரதிநிதிகள் அவை ஒப்புக்கு ஜனநாயகம் என்று சொல்லக்கூடிய வகையில்தான் அன்றைக்கு இருந்தது. அன்றைக்கு அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது.
இந்த கவுன்சிலில் முதல் கூட்டம் இன்றைய புனித ஜார்ஜ் கோட்டையில் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் முதல் முதலாக கூடியது. பிரிட்டிஷ் தாய் நாடளுமன்றம் என்று சொல்லகூடிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை பின்பற்றி (வெஸ்ட் மினிஸ்டர்) சொல்லக் கூடிய அளவில் இந்த அவையில் செயல்பாடுகள் இருந்தன.
புனித ஜார்ஜ் கோட்டை 1640-ல் கட்டப்பட்டு, இந்த அரங்கில் தான் முதல் முதலாக தமிழக சட்டபேரவை தொட்டில் அமைந்தது. இந்த தொட்டிலில் மூத்த குழந்தை வளர்ந்து, செழித்த மேலவை, எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கலைக்கப்பட்டது என்பது வேதனையான விடயம்.
அன்றைய கவுன்சிலில் சென்னை ராஜதானியின் ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, கோரிக்கை அழைப்பின் படி ஆங்கிலேய அரசகுடும்பத்தை சேர்ந்த கன்னாட்கோமகன் துவங்கிவைத்தார். 1920,1923,1930, ஆங்கிலேயர்களை எதிர்த்த தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அப்போது நீதிக்கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. 1926 ஆண்டு தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் குழப்பமான நிலை ஏற்பட்டது. பின்பு நடந்த 1934-ல் நீதிகட்சி வெற்றி வாய்பிழந்து சிறுபான்மை அரசு ஒன்றை அமைத்துக்கொண்டது. பின்பு அவையில் 127 உறுப்பினராக கூடுதலாக்கி 98 பேர், 61 தொகுதியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் சில தொகுதிகள் இரட்டை உறுப்பினர் கொண்டதாக இருந்தது. இதில் பல்வேறு வகுப்புவாரியாக இட ஒதுக்கீடும் இருந்தது. பெண்களுக்கு 5 பிரதநிதிகள், ஆளுநரால் 19 அரசு அதிகாரிகள், 5 பேர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
அன்றும் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. ஏரத்தாழ 15% மக்கள் மட்டுமே மெட்ராஸ் ராஜதானியில் வாக்குரிமை பெற்றிருந்தன. அந்நாட்களில் சென்னை ராஜதானியில் கன்னியாகுமரி மாவட்டம் இடம் பெறவில்லை. வடக்கே ஒரிசா எல்லை வரை ஆந்திரமும், கர்நாடகத்தின் தென்பகுதியும், இலட்சத்தீவு, கேரளத்தில் மலபார் பகுதிகள் உள்ளடங்கி இருந்தது.
இந்த சட்டப் பேரவையில் இருக்கும் பேரவை தலைவர் அமரும் இருக்கை அன்றைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவும் அவர் துணைவியாரும் அளித்த அன்பளிப்பாகும்.
சட்டமன்றம் நடைபெற்ற இடங்கள் :
1. மேலவை மண்டபம், புனித ஜார்ஜ் கோட்டை (1921 – 1937)
2. செனட் மண்டபம், சேப்பாக்கம், சென்னை (14.07.1937 – 21.12.1937)
3. விருந்தினர் மாளிகை (இராஜாஜி மண்டபம்) அரசினர் தோட்டம் (27.01.1938 – 26.10.1939)
4. பேரவை மண்டபம், புனித ஜார்ஜ் கோட்டை (24.05.1946 – 27.03.1952)
5. புதிய சட்டமன்றப் பேரவை மண்டபம் (பழைய சிறுவர் அரங்கம் – தற்போதைய கலைவாணர் அரங்கம்) (03.05.1952 – 27.12.1956)
6. சட்டமன்றப் பேரவை மண்டபம், புனித ஜார்ஜ் கோட்டை ( 29.04.1957 – 30.03.1959)
7. அரண்மூர் மாளிகை உதகமண்டலம் (20.04.1959 – 30.04.1959 – பேரவை 04.05.1959 – 09.05.1959 – மேலவை)
8. புனித ஜார்ஜ் கோட்டை (31.08.1959 முதல் – பேரவை மற்றும் மேலவை)
இங்கெல்லாம் தமிழக சட்டமன்ற கூட்டங்கள் நடந்தன. இங்கெல்லாம் பேரவைத் தலைவர் அமரும் இந்த இருக்கை எடுத்து செல்லப்பட்டது.
உதகமண்டலத்தில் இறுதியாக 1959-ல் சட்டப் பேரவை கூட்டம் கோடை காலத்தில் அரண்மூர் அரண்மனையில் நடந்தது. இந்த அரண்மூர் அரண்மனை தமிழக அரசினர் விடுதி என்ற பெயரில் இன்றைக்கும் இருக்கிறது. எப்படி உதகையில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது என்று பார்த்தால்; 1956-ல் எதிர்கட்சிகள் ஊட்டியில் கோடைகால சட்டமன்ற கூட்டத்தொடர் கூடவேண்டும் என்றத் தீர்மானம் கொண்டுவந்த போது சட்டமன்றத்தில் அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
நவம்பர் 1958-ல் சட்டமன்ற அலுவல் குழு ஊட்டியில் சட்டமன்றத்தை கூட்டலாம் என்ற பரிந்துறையின் படி சட்டமன்றத்தை கூட்ட காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதற்காக, அரண்மூர் அரண்மனை தேர்ந்தெடுக்கப்பட்டது. அது ஜோத்பூர் அரச குடும்பத்தை சார்ந்த அரண்மனை. பின்பு அதை தமிழக அரசு கையகப்படுத்தியது. அங்கே சட்டப் பேரவை நடத்தவேண்டும் என்ற ஏற்பாடுகளை கவனிக்க முதல்வர் காமராஜர் தலைமையில் சட்டமன்ற அலுவலர்கள் எல்லாம் உடன்சென்று உதகமண்டலத்தில் இந்த அரண்மனையை பார்வையிட்டனர். முதல்வர் காமராஜர் தலைமையில் அமைச்சர்கள் பக்தவச்சலம், வெங்கட்ராமன், பி.கக்கன், லூர்தம்மாள் சைமன் போன்ற அமைச்சர்கள் ஊட்டி சட்டப் பேரவையில் பங்கேற்றனர்.
தமிழகச் சட்டப் பேரவை வரலாறு என்பது மேலவையும் சட்டபேரவையும் இணைந்த ஈரங்க (Bicameral) அமைப்பு பண்டைய ரோமப் பேரரசில் அமைந்தது. பிளப்ஸ் (Plebs) என்று குறிப்பிடப்பட்ட அமைப்பில் ஆலோசனை சொல்லக்கூடிய சான்றோர்கள் இடம் பெற்றன. அது படிப்படியாக செனட் என்றும், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு ஈரங்க அவைகளான மேலவை இல்லாமல் செய்துவிட்டனர்.
இந்த சட்டமன்றப் பேரவையில் ஓமந்தூரார் முதல்வராக இருக்கும் போது அவையின் தலைவரும் நிதியமைச்சருமான பி.கோபால் ரெட்டி இன்றைய தமிழக அரசின் கோபுர சின்னத்தை பற்றி விவாதித்த போது, முதல்வர் ஓமந்தூரார் எதையும் நடுநிலையோடு முடிவெடுப்பார், இதை மத அடையாளமாக நினைக்க கூடாது, தென்னிந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், கட்டிடக்கலை, சிற்பங்களின் அமைப்பு என்பதெல்லாம், உள்வாங்கி கொண்டுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அடையாளப் படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டதென்று சட்டபேரவையில் விளக்கம் அளித்தார்.
சி.பா.ஆதித்தனார் காலத்தில் மார்ச் 1967-லிருந்து அவை தொடங்குமுன் பேரவை தலைவர் திருக்குறள் வாசித்து விட்டு அவை நடவடிக்கைகளை துவங்கும் மரபை ஏற்படுத்தினார்.
இந்த சட்டமன்றத்தில் இடம்பெற்ற நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன் போன்றவர் எல்லாம் இந்திய குடியரசு தலைவர்களாக பொறுப்பேற்றனர். வி.வி.கிரியும் இந்த அவையில் உறுப்பினராக இருந்தார் என்று நினைவு. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்,கிருஷ்ணய்யரும்(கேரளா) இந்த சட்டப் பேரவையில் உறுப்பினர் ஆவர். இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஆர்.கே.சண்முக செட்டியாரும் இந்த அவையில் அமர்ந்தவர் தான்.
பி.கே.மூக்கையா தேவர் பார்வோர்டு பிளாக் உறுப்பினராக இந்த அவையில் இடம்பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இயக்கத்தை சார்ந்த ஏ.பாலசுப்பிரமணியம், சங்கரய்யா, உமாநாத் போன்ற பலர் இருந்தனர். இந்திய கமியூனிஸ்ட் கட்சி சார்ந்த மனலி சி.கந்தசாமி, கே.டி.கே.தங்கமணி சோ.அழகிரிசாமி, முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த லத்தீப், வடபுலத்தில் இருந்த பி.எஸ்.பி. எஸ்.எஸ்.பி என்ற சோசலிஸ்டுகளும் ஆரம்ப காலகட்டத்தில் இடம்பெற்றனர். அந்த கட்சியின் ஈரோடு மாவட்ட நல்லசிவன் சட்டமன்ற உறுப்பினர் ஆவர்.
எதிர்கட்சி தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமன் (ஸ்தாபன காங்கிரஸ்), காரைக்குடி சா.கணேசன் ஆகிய இருவரும் கம்ப காவியத்தில் புலமை பெற்றவர்கள். இராஜாஜியின் சுதந்திராக் கட்சி சார்பில் முக்கூடல் டி.எஸ்.ஆதிமூலம், எச்.வி.ஹண்டே போன்றவர்கள் இடம்பெற்றனர்.
கே.ஏ.மதியழகன் 1972-ல் பேரவை தலைவராக இருந்தபோதும், பெ.சீனிவாசன் பேரவை தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு குழப்பமாக நடந்த பேரவை கூட்டங்கலெல்லாம் நினைவுக்கு வருகின்றன. கடந்த 1985-ல் பி.எச்.பாண்டியன் பேரவை தலைவராக இருந்த போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.என்.சிங்காரவேலு, விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை ஒரு கிரிமினல் வழக்கில் காரணமில்லாமலும், தேவையில்லாமலும், அவசியமில்லாமலும் அன்றைக்கு அளித்த தீர்ப்பு சட்டமன்றத்தில், மக்கள் மன்றம் என்ற நிலையில் திரும்ப பெற்று பாண்டியனின் சட்டமன்ற முடிவு பெறும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விசயத்தில் நானும் என்னுடைய சீனியர் ஆர்.காந்தியும் அப்போது தலையிட்டதெல்லாம் வேறு விடையம், இதை குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். விரிவாக பின் பதிவு செய்கின்றேன்.
பி.எச்.பாண்டியன் ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை சிறையில் அடைத்ததும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியல் சாசனத்தை எரித்தார்கள் என்ற காரணத்தை சொல்லி கலைஞர், பேராசிரியர் உட்பட எதிர்கட்சியில் அமர்ந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறித்தார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜானகி ஜெயலலிதா என்று அ.தி.மு.க பிரிவாகி, ஜானகி ராமச்சந்திரன் முதலவராகி நம்பிக்கை வாக்கு கூறும்பொழுது பி.எச்.பாண்டியன் பேரவை தலைவர். அன்றைக்கு நடந்த ரகளையில் குழப்பங்கள், அடிதடிகள், சட்டமன்ற மைக்குகளை கையில் பிடிங்கி கொண்டு வெளியே வந்ததெல்லாம் பத்திரிக்கைகளில் முதல் பக்க எட்டுகால் செய்திகளாக படங்களுடன் வந்தது. அன்றைக்கு சட்டமன்ற ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டது. பி.எச்.பாண்டியன் நெருங்கிய சக வழக்கறிஞர் என்பதால் ஆங்கிலத்தில் இந்த சம்பவம் குறித்தான அறிக்கையை தயார் செய்து அவருடன் ஆளுநர் குரானாவை சந்திக்க சென்றதெல்லாம் நினைவில் உள்ளது. அதன் சாட்சியாக என்னுடைய சீனியர் ஆர்.கந்தியும் வழக்கறிஞர் சி.சந்திரசேகர் இன்றைக்கும் இருக்கின்றனர். அப்போது நான் தி.மு.கவில் இல்லை.
ஜெயலலிதா 1995-ல் ஆட்சிக்கு வந்தவுடன் சேடப்பட்டி முத்தையா பேரவை தலைவர் பொறுப்பில் இருந்தார். அப்போது ஜெயலலிதாவின் தோழி, பேரவை உறுப்பினராக இல்லாத சசிகலாவை பேரவை துணை தலைவர் இருக்கையில் அமர வைத்தார். அதுமட்டும் இல்லாமால் பேரவை தலைவராக இருந்த சேடப்பட்டி முத்தையா மரபு மீறி பேரவைக்குள்ளேயே நெடுஞ்சானாக ஜெயலலித்தாவின் காலில் விழுந்ததெல்லாம் மிகவும் வருத்தத்தகு நிகழ்வுகளாகும்.
இதே காலகட்டத்தில் இல்லஸ்டிரேட் வீக்லி மற்றும் முரசொலி ஆசிரியர் மீதும் தண்டனை கொடுத்து, அதன் ஆசிரியராக பரிபுரிந்த செய்தியாளர் கே.பி.சுனில் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் சிறைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார் சேடபட்டி முத்தையா.
இல்லஸ்டிரேட் வீக்லி ஆசிரியர் பிரிடிஷ் நந்தி 1992-93 ல் சென்னை சிறப்பு செய்தியாளர் கே.பி.சுனிலுக்கு எழுப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அடியேன் ஆஜரானதெல்லாம் கடந்தகால நிகழ்வுகள்.
கடந்த நவம்பர் 2003-ல் காளிமுத்து பேரவை தலைவராக இருந்தபோது ஆங்கில இந்து ஏட்டில் ஆசிரியர் என்.ரவி மற்றும் மாலினி பார்த்தசாரதி மற்றும் முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் பத்திரிக்கையாளர் என்ற முறையில் சட்டமன்றத்தை விமர்சனம் செய்ததற்காக, 15 நாள் சிறைதண்டனை இவர்களுக்கு விதித்ததும் உண்டு.
பெரும்பான்மையோர் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்தவர்கள் சட்டப் பேரவை தலைவர்களாக பொறுப்பு வகித்தனர்.
இப்படி பல கடந்தகால செய்திகளை உள்ளடக்கியதே தமிழக சட்டபேரவை ஆகும்.
மேசையை தட்டுதல், தனிமனித தாக்குதல், புகழ்தல் இவைத்தாண்டி
கேள்வி கணைகளும் ஆரோக்கிய ஆக்கபூர்மான விவாதமும் நிறைந்த அவையாக,
பேரவை மாண்பு காக்கப்பட வேண்டும்.
#மாண்டேகசெம்ஸ்போர்டு
#தமிழகமேலவை
#பேரவை
#KSRadhakrishnanpostings
#KSRpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
2-08-2021.
No comments:
Post a Comment