Thursday, August 5, 2021

சட்டமேலவை,#சட்டப்பேரவை #குறிப்புகள்_6

#சட்டமேலவை,#சட்டப்பேரவை #குறிப்புகள்_6
———————————————————
இந்திய அரசமைப்புச் சட்டம் இறுதியாக 1950 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பின்புதான் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களாகின. இதற்கு முன்பு வரை, சட்டம் இயற்ற தனி அமைப்பு என்றில்லாமல் சட்டமியற்றுதல், நிர்வாகம் மற்றும் நீதி வழங்குதல் அனைத்தும் மன்னர்கள்தான்.

ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் ஒழுங்கு முறைகள் இயற்றும் அதிகாரம் 1799-ல் தொடங்கப்பட்ட ஆளுநரின் நிர்வாக சபையோடு இணைந்திருந்ததாலும், சட்டமன்றம் என்ற அமைப்பு பிற்காலத்திலேயே தோன்றியது.



சட்டமன்றங்களின் தொடக்கத்திற்கு 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் வித்திட்டது, இதன் மூலம் முதன்முறையாக ஆளுநர் – ஜெனரலின் நிர்வாக சபையில் சட்டம் இயற்றுவதற்கு என்று ஒரு அறிஞர் தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அவருக்கு வாக்களிக்கும் அதிகாரம் தரப்படவில்லை.
அன்றைய காலகட்டத்தில், ஆளுநர் – ஜெனரலாக இருந்தவர் பெண்டிங்பிரபு. இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது மெக்காலே பிரபு. இவர்தான் நிருவாக சபைக்கு நான்காவது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். பிரதிநிதித்துவ அமைப்பு இந்தியாவிற்கு வேண்டும் என்றும் ஒரு சிறந்த அரசமைப்புச் சட்டம் வேண்டும் எனவும் அவர் விரும்பியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, 1853 ஆம் ஆண்டு சட்டம் மூலம் வங்கதேச  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை, பம்பாய், உத்திரப்பிரதேசம், வடமேற்கு மாகாணங்கள் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு பிரதிநிதி உட்பட 12 உறுப்பினர்களை கொண்டதாக ஆளுநர் – ஜெனரல் சபை அமைக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்து எலியட் என்பவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகே சட்டம் உறுப்பினர் சட்டமியற்றும் கூட்டங்களில் மட்டுமல்லாது இதர கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் முழு உறுப்பினர் என்ற உரிமையை பெற மெகா பெற வழிவகை செய்திருக்கிறார்.
1857 ஆம் ஆண்டில் விக்டோரிய மகாராணி பிரகடனத்தின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்திய நாட்டின் பகுதிகள் இங்கிலாந்து மகாராணியின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

கம்பெனியின் பொறுப்புகளை இங்கிலாந்து நாடாளுமன்றம் முழுமையாக அபகரித்துக் கொண்டது. இந்திய விவகாரங்களுக்கான அரசு செயலாளரும் அமர்த்தப்பட்டு அப்போது ஆளுநர் – ஜெனரலாக கானிங் பிரபு வைஸ்ராய் என்று அழைக்கப்பட்டு உள்ளார்.1861 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய சட்டமன்றங்கள் சட்டமே சட்டமன்றங்களின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம். இந்த சட்டத்தின் கீழ் அமைந்த மன்றத்திற்கு Madras legislative council (மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில்) மெட்ராஸ் சட்டமன்ற சபை என்று பெயரிட வேண்டும் என்று கூறப்பட்டாலும், புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் கவுன்சில் என்றே அழைக்கப்படும் என இந்திய அரசு முடிவெடுத்தது. 

அந்த அவைக்கு சி.சங்கரன் நாயர், வெங்கடகிரிராஜா, வி.பாஷ்யம் அய்யங்கார் போன்றோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, 1885 ஆம் ஆண்டு தமது நாட்டின் (இங்கிலாந்து) நிர்வாகத்தில் இந்திய மக்களுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றும் சபையில் பிரதிநிதித்துவம் கொள்கைப்படி (Principle of Representation) தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கின.
பொறுப்பாட்சியில், இந்திய மக்களுக்கு என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் விளைவாக உருவானது மிண்டோ – மார்லி சீர்த்திருத்தம். பிறகுதான் 1909 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு  மறைமுகத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கிடையில் நாட்டில் உருவான சுதந்திரப் போரட்ட எழுச்சி, ஆங்கிலேய ஆளுநர், அதிகாரிகளுக்குள் ஏற்பட்ட முட்டல், மோதல்களே மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் கொண்டுவர வழிகோலியது. 

பின்னர், 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கொண்டு வந்து, வரி அல்லாத தீர்வை செலுத்துவோருக்கு மட்டும் வாக்குரிமை என்கிற அடிப்படையில் முதன் முதலில் தேர்தல் நடைபெற இந்த சட்டம் வழிவகை செய்தது.
அதுவரை ஆளுநரின் நிர்வாக சபையின் நிழலாக இருந்த சட்டமன்றங்கள் தனித்து இயங்கும் ஒரு அமைப்பாக மாறியது. அதிகாரிகளின் மேல் ஆதிக்கம் குறைந்தது. மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இந்த மன்றமே தனித்தியங்கும்சட்டமன்றத்தின் தொடக்கம் என்றும் கருதப்படுகிறது.

அன்றைக்கு, சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை மெட்ராஸ் சட்டமன்றப் பேரவை என்று அழைக்கப்பட்ட சட்டமன்றம், 127 உறுப்பினர்கள் கொண்டதாகும். இதில் 98 உறுப்பினர்கள் மட்டுமே வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
29  பேர் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் அடங்குவர். இதோடு மட்டுமில்லாமல் 4 பேர் ஆளுநரின் நிர்வாக சபை உறுப்பினர்கள். இந்த 4 பேரும் சட்டமன்ற உருப்பினராக இருந்தும் அவர்கள் மீது சட்டமன்ற ஆளுமை செலுத்த இயலாது.

இந்த சட்ட மன்றங்களின் இரட்டை ஆட்சி முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றும் சிறப்பு நேர்வுகளில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும் சட்டம் வழிவகை செய்தது. பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து விவாதிப்பதற்கு ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வருவதற்கான உரிமை முதன்முதலாக வழங்கப்பட்டது எனினும் இது ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று வரையறுக்கப்பட்டது.
வரவு – செலவு திட்டத்தின் மீதும் வாக்கெடுப்பு நடத்தவும் வழிவகை ஏற்பட்டது. மானியக் கோரிக்கைகளின் தொகையை அதிகரிக்கவோ, குறைக்கவோ அதிகாரம் இருந்தாலும் அனைத்திற்கும் ஆளுநரின் ஒப்புதல் பெறவேண்டும். சட்டங்கள் இயற்றினாலும் அதை நிராகரிக்கும் உரிமையும் ஆளுநருக்கு இருந்தது. அந்தச் சட்டம் தேவை எனக் கருதினால் அன்றைக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி ஒப்புதல் தர வேண்டும்.ஆளுநரே சட்டமன்றத்தின் கூட்டங்களை நடத்தாமல் அதற்கென தலைவர் (முதலமைச்சர்) நான்காண்டுகளுக்கு நியமிக்கவும், தலைவர் தேர்தெடுக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. அதன் பிறகு, 1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி அல்ல) முதலாவது சட்டமன்ற தலைவராக ஆளுநரால் நியமிக்கப்பட்டார். திவான் பகதூர் கேசவபிள்ளை துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

1919-ல் மண்டேகு – செம்ஸ்போர்டு பரிந்துரைகளின்படி, இந்தியர்கள் தங்களை ஆண்டுகொள்வதற்கான மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் நியமன உறுப்பினர்கள் என்று இரட்டையாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அவை இது.

அதன்படி, 1920-ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சென்னை மாகாணத்தின் முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921, ஜனவரி 11-ல் நடைபெற்றது. அந்த முதல் தேர்தலில் வெறும் 3 சதவிகித மக்களுக்கே வாக்குரிமை கிடைத்தது. பெண்கள் வாக்களிக்க அனுமதி இல்லை. முதல் கூட்டத் தொடரிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையும் தேர்தலில் போட்டியிட உரிமையும் கிடைக்க சட்டம் இயற்றப்பட்டது. 1935-ல் சட்டமன்ற மேலவை, கீழவை என்னும் இரு அவைகளை உருவாக்குவதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது.

இப்படியாக இந்தியாவில் கட்சி ஆட்சி முறை நடைமுறைக்கு வர, 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் வழிவகை செய்தது. இச்சட்டத்தின்படி, முதல் தேர்தல் 30.11.1920, 01.12.1920 மற்றும் 02.12.1920 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. 98 இடங்களில் 63 இடங்களை வென்ற நீதிகட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் சர் பிட்டி. தியாகராய செட்டியார் முதலமைச்சராக பொறுப்பேற்க மறுத்ததை தொடர்ந்து 17.12.1920 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக சுப்புராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார்.

சட்டமன்ற வரலாற்றில், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் மற்றும் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்த போது சென்னை உட்பட சில மாகாணங்களில் சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை (Legislative assembly legislative council) என்று ஈரவைகள் (Bicameral legislatures) கொண்ட சட்டமன்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தின்படி மாகாணத்தில் சுயாட்சி முறைஅறிமுகப்படுத்தப்பட்டது.
மாகாண சட்டமன்றங்களுக்கு அதற்கு முன்பு இருந்ததைவிட அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. 

ஆங்கில கம்பனி  அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையே அதிகாரங்கள் பிரிக்கப்பட்டன. ஒன்றிய பட்டியல் (Federal list) மாகாண பட்டியல் (Provincial list), பொதுப் பட்டியல் (Concurrent list) என்று துறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டன.
மகாணப் பட்டியலில் வரும் பொருள் குறித்தும் பொதுப்பட்டியலில்  உள்ள பொருட்கள் குறித்தும் மாகாண சட்டமன்றங்கள் சட்டம் இயற்றலாம். எனினும் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருள் குறித்து மாகாண சட்ட மன்றம் சட்டம் இயற்றினாலும், அதே பொருள் குறித்து மத்திய சட்டமன்றம் சட்டம் இயற்றினால் அச்சட்டமே மேலாண்மை பொருள்.இதற்கு ஆளுநர் பின் கவர்னர் 
ஜெனரல் ஒப்புதலும் வேண்டும்.

இந்திய அரசு சட்டத்தின் 71 ஆவது பிரிவின்படி உறுப்பினர்களுக்கு சில சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன. அதன்படி சட்டமன்றத்தில் பேச்சு சுதந்திரம், சட்டமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு சட்டமன்ற நடவடிக்கையிலிருந்து காப்புரிமை அளிக்கப்பட்டன.
பிரிவு 93 இப்படி அவசர காலங்களில் அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து நிர்வாகத்தையும் சட்டமியற்றும் பணியையும் மேற்கொள்ள ஆளுநருக்கு உரிமை வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னரின் சார்பாக செயல்படும் ஆளுநரின் பெயரில் அனைத்து அரசாணைகள் வெளியிடப்பட்டன.
இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கேட்காமலேயே நாட்டின் நிர்வாகத்தை போரில் ஈடுபடுத்தியதை அடுத்து 1939 அக்டோபரில் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது.

கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. பிறகு அரசமைப்பின் படி ஆளுநர், மாநிலத்தின் தலைவரானார். அவரிடமிருந்த சட்டமியற்றும் அதிகாரம் நீக்கப்பட்டது. சட்டமன்றம் கூடாது நாட்களில் மட்டும் அவசர சட்டம் இயற்றலாம். ஒன்றியத்தில் இருந்து ஃபெடரல் சட்டமன்றத்தின் பொறுப்புகளை அரசமைப்பு அவை ஏற்றுக் கொண்டது.

இந்திய அரசுச் சட்டம் 1947-ன் படி பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரங்கள் மறைந்தன என்றாலும் இந்திய அரசுச் சட்டம் 1935 அடிப்படையில் உருவான மாகாண சட்டசபையில் தொடர்ந்து செயல்பட அதிகாரம் வழங்கப்பட்டது.
பின்னர் இந்திய அரசமைப்பு சட்டத்தை வடித்தளித்தது. 26.1.1950 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த அரசமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு, நிதி தன்னிறைவு, பொது அமைதி ஆகியவற்றுக்கு உட்பட்டு, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்களும், இறையாண்மை பெற்ற சட்ட மன்றங்களும் உருவாக்க வழிகோலியது. இச்சட்டம் அமலுக்கு வந்த போது இருந்த சட்டமன்றப் பேரவை 1952 வரை நீடித்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி 1952 ஆம் ஆண்டு முதல் பேரவை, மேலவை என இரு அவைகளும் கொண்டு சட்டமன்றம் அமைந்தது. பேரவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் சட்ட மேலவையின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. 

சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் ஆங்கிலோ இந்தியர் ஒருவரும் இல்லை எனில் அரசமைப்பு  சட்டப்பிரிவு 333 படி ஒருவரை ஆளுநர் நியமித்துக் கொள்ளலாம்.
1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் வயது வந்த குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. சென்னை, ஆந்திரா, கன்னடா, கேரளா பகுதிகளை உள்ளடக்கி சென்னையில் அமைந்த மாகாண சட்டமன்றப் பேரவைக்கு 309 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 375 உறுப்பினர்கள் என வரையறுக்கப்பட்டது. 243 தொகுதிகளில் ஓர் உறுப்பினர் கொண்டவை என்றும் 62 தொகுதிகள் இரு உறுப்பினர்கள் கொண்டவை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஓர் உறுப்பினர் தொகுதியில் ஆதிதிராவிடருக்கு ஒரு இடம், நான்கு தொகுதிகள் இரு உறுப்பினர்கள் கொண்ட ஒரு இடம் பழங்குடியினருக்கு என்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் மேலவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 72 என்றும் அதில் உள்ளாட்சி தொகுதியைச் சார்ந்தவர்கள் 24 பேர் சட்டமன்ற பேரவை தொகுதி உறுப்பினர்கள் 24 பேர், பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிகள் இரண்டும் முறையே 6 மீதமுள்ள 12 பேர் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

ஒன்றுபட்ட சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. இதனால் முந்தைய பெல்லாரி மாவட்டத்தில் கன்னடர்கள் வாழும் பகுதி மைசூரோடு இணைக்கப்பட்டது. இதனால் சென்னை மாகாணத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 231 ஆக குறைக்கப்பட்டது.
அதன் பிறகு 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி மாநிலங்கள் திருத்தி அமைக்கப்பட்ட பின்னர் தமிழகத்தில் சட்டமன்ற எண்ணிக்கை 190 ஆக குறைந்தது. 1956 ஆம் ஆண்டு தொகுதி வரையறைக்குப் பின் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது. இவற்றில் ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதிகள் 129. இரு உறுப்பினர் கொண்ட தொகுதிகள் 38. இவற்றில் 36 இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கும் ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது.
ஆந்திரா மற்றும் தமிழகத்தின் எல்லைகள் சீரமைக்கப்பட்ட பிறகு, 1961 ஆம் ஆண்டு இரு உறுப்பினர்கள் தொகுதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பிறகு, 38 உறுப்பினர்களின் தொகுதிகள் ஒழிக்கப்பட்டன. அந்த தொகுதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு ஒரு உறுப்பினர் தொகுதியாக ஒதுக்கப்பட்டது. 

கடந்த 1965-ஆம் ஆண்டு தொகுதி வரையறைக்கு பின்னர் ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர் நீங்களாக தேர்ந்தெடுக்கப்படும் இடங்கள் 234 ஆக உயர்ந்தது. அதில் 42 இடங்கள் ஆதிதிராவிடர்களுக்கும் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

நாடு விடுதலைக்குப் பிறகு இந்திய அரசமைப்பின் படி, 01.03.1952 ஆம் ஆண்டு அமைந்த முதல் சட்டமன்றப் பேரவையில் தற்போதைய தமிழ்நாடு மற்றும் தற்போதைய கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 375 ஆக இருந்துள்ளது.
சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தற்காலிக பேரவைத் தலைவராக பி.டி.ராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தேர்தலில் ஜே.சிவசண்முகம்பிள்ளை, எஸ்.ஸ்வயம் பிரகாசம் ஆகியோர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்துள்ளது. 206 வாக்குகள் பெற்ற சிவசண்முகம் பிள்ளை பேரவைத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். 162 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ஸ்வயம் பிரகாசம் தோல்வி அடந்துள்ளார். துணைத் தலைவருக்கும் தேர்தல் நடந்துள்ளது. இதில் 198 வாக்குகள் பெற்ற எம்.பக்தவத்சல நாயுடு துணைத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.ஆர்.விஸ்வநாதனுக்கு 164 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசண்முகம் பிள்ளை 1901 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்தவர். உத்தமர் காந்தி மீது தீவிர பக்தி கொண்டவர். சென்னை லயோலா மற்றும் மாநில கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை முடித்த அவர் 31 வயதிலேயே சென்னை மாநகராட்சி உருப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து 1937-ல் மாநகராட்சியின் மேயராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து என்.கோபால மேனன், டாக்டர்கிருஷ்ணராவ், எஸ்.செல்லப்பாண்டியன், சி.பா.ஆதித்தனார், புலவர் கா.கோவிந்தன், கே.ஏ.மதியழகன், முனுஆதி., பி.எச்.பாண்டியன், முனைவர் மு.தமிழ்குடிமகன், இரா.முத்தையா, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், டாக்டர்கா.காளிமுத்து, இரா.ஆவுடையப்பன், டி.ஜெயக்குமார், ப.தனபால், தற்போதைய மு.அப்பாவு வரை பேரவைத் தலைவர்கள் ஆவார்கள்.

ஸ்ரீபிரகாசா, ஏ.ஜே.ஜான் பிஷ்ணுராம் மேதி, மைசூர் மகாராஜா ஜெயசாமராஜ உடையார், சர்தார் உஜ்ஜல் சிங், கோதர்தாஸ் காளிதாஸ் (கே.கே.ஷா), மோகன்லால் சுகாதியா, பிரபுதாஸ் பட்வாரி, சாதிக் அலி, சுந்தர்லால் குரானா, டாக்டர் பி.சி.அலெக்சாண்டர், சுர்ஜித் சிங் பர்னாலா, பீஷ்ம நாராயண் சிங், டாக்டர் எம்.சென்னாரெட்டி, கிருஷ்ணகாந்த், எம் பாத்திமா பீவி, டாக்டர் ரங்கராஜன், பி.எஸ்.ராமமோகன் ராவ், கே ரோசையா, சி.வித்யாசாகர்ராவ் ஆகியோரைத் தொடர்ந்து பன்வாரிலால் புரோகித் ஆளுநராக உள்ளார்.

சென்னை மாகாணத்திற்கு சுப்பராயலு ரெட்டியார், பனகல் ராஜா, டாக்டர் பி.சுப்புராயன், முனுசாமி நாயுடு, பொப்பிலி ராஜா, பி.டி.ராசன், குர்மா வெங்கட ரெட்டி நாயுடு, சி.இராஜகோபாலச்சாரி, டி.பிரகாசம் ஆகியோர் முதல் அமைச்சர்களாக 1921 முதல் 47 வரை நாடு விடுதலைக்கு முன்பு முதலமைச்சராக இருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர்களாக ஓ.பி.ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசுவாமி ராஜா, சி.ராஜகோபாலச்சாரி, கே.காமராஜ், எம்.பக்தவத்சலம்,அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜானகி இராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா என பலர் தொடர்ந்து, முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் இன்றைய முதலமைச்சராக பொறுப்பில் உள்ளார்.

சுதந்திரத்திற்கு பிறகு, 1952-57 ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்த மாகாண முதல் சட்டமன்ற பேரவைக்கு தமிழகத்திலிருந்து நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், வி.வி.கிரி, உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்,கிருஷ்ணய்யரும் (கேரளா), இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஆர்.கே.சண்முக செட்டியார், பி.கே.மூக்கையா தேவர்  பார்வோர்டு பிளாக் உறுப்பினராக இந்த அவையில் இடம்பெற்றனர். முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த லத்தீப், வடபுலத்தில் இருந்த பி.எஸ்.பி. எஸ்.எஸ்.பி என்ற சோசலிஸ்டுகளும் ஆரம்ப காலகட்டத்தில் இடம்பெற்றனர். அந்த கட்சியின் ஈரோடு மாவட்ட நல்லசிவன் சட்டமன்ற உறுப்பினர் ஆவர். எதிர்கட்சி தலைவராக இருந்த பி.ஜி.கருத்திருமன் (ஸ்தாபன காங்கிரஸ்), காரைக்குடி சா.கணேசன் ஆகிய இருவரும் கம்ப காவியத்தில் புலமை பெற்றவர்கள். இராஜாஜியின் சுதந்திராக் கட்சி சார்பில்  முக்கூடல் டி.எஸ்.ஆதிமூலம், எச்.வி.ஹண்டே போன்றவர்கள் இடம்பெற்றனர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ராமமூர்த்தி மதுரை வடக்கு, டி.எஸ்.அர்த்தனாரி திருச்செங்கோடு (பொது), பி.ஜீவானந்தம் (ஜீவா) சென்னை வண்ணாரப்பேட்டை, கே.வி.ராமசாமி நாமக்கல் (பொது), எஸ்.ராமலிங்கம் தஞ்சாவூர் (பொது), எம்.கல்யாணசுந்திரம் திருச்சி வடக்கு, கந்தசாமி மன்னார்குடி (பொது), மருத்துவர் ஜி.சிற்றம்பலம் ஸ்ரீரங்கம், என்.சிவராஜ் நாகப்பட்டினம் (பொது), ஏ.கே.சுப்பையா மன்னார்குடி (தனி), வி.மதனகோபால் வேடசந்தூர், கே.டி.ராஜூ ஈரோடு, வடிவேலு நாகப்பட்டினம் (தனி), பி.வெங்கடேச ஷோலகர் ஆகிய 14 பேர் வெற்றி பெற்றனர். நாடு விடுதலைக்கு முன்பு 1946 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தோழர் கே.அனந்த நம்பியார் வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இயக்கத்தை சார்ந்த ஏ.பாலசுப்பிரமணியம், சங்கரய்யா, உமாநாத், இந்திய கமியூனிஸ்ட் கட்சி சார்ந்த மனலி சி.கந்தசாமி, கே.டி.கே.தங்கமணி சோ.அழகிரிசாமி என பலர். 

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலரான பிரான்சிஸ் டே என்பவர் தனது சொந்த செலவில், 1640 ஆம் ஆண்டு கோட்டையை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறார். புனித ஜார்ஜ் தினமான ஏப்ரல் 23 ஆம் தேதி கோட்டை கட்டி முடித்து அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயர் வைத்துள்ளார். இதன் மொத்தப் பரப்பளவு 107 ஏக்கராகும். தற்போது தலைமைச் செயலகம் செயல்படும் பிரதான கட்டடம் 1781 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்கு ஆளுநரின் இல்லமாகவும், அரசு விழாக்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
1910 ஆம் ஆண்டில் கோட்டை வளாகத்திற்குள் சட்டமன்ற மண்டபம் கட்டப்பட்டது. மக்கள் தொகை பேரவை உறுப்பினர்கள் துறைகளின் எண்ணிக்கை விரிவடைந்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத் துறைகள் இட நெருக்கடி இன்றி செயல்பட ஏதுவாக தரை தளம் மற்றும் 10 தளங்கள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை 1975 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டு தரைதட்டி உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்ற கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட தேக்கு மரத்தாலான கம்பம் கோட்டை கொத்தளத்தில் நிறுவப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட இக்கொடிக்கம்பம் தான் நாட்டிலேயே உயரமானதாகும். தேக்கு மரம் பழுதடைந்ததால் எஃகில் ஆன புதிய கொடிக்கம்பம் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1974 ஆம் ஆண்டு வரைக்கும் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமை ஆளுநர்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. அதை மாற்றி முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமை முதலமைச்சர் கலைஞர் உருவாக்கினார்.
பண்டைய தமிழகத்தை பல்வேறு பகுதிகளாக பிரித்து கொண்டு ஆண்டு வந்த பெருநில, குறுநில மன்னர்களின் காலத்தில் பொருளீட்டுவது மட்டுமன்றி, ஆலோசனைகள் பெற மற்றும் அரசு அலுவல்களை மேற்கொள்வதற்கான ஐம்பெரும் குழு, எண் பேராயம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களும், வாரியங்களும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அவற்றின் உறுப்பினர்களின் பணிகளும், நிருவாக விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டு செயல்முறைகளும் சீர்த்திருத்தங்களும் அமல்படுத்தப்பட்டன.
இத்தகைய பின்னணியில், வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நமது நாட்டில் அவர்களது ஆளுமையை நிறுவினர். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் மாநிலங்களை மதராஸ், பம்பாய், கல்கத்தா என மூன்று மாகாணங்களாக நிர்வாக வசதிக்காக பிடித்துக் கொண்டனர். ஆளுநர்களை நியமித்து செலுத்திய ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1952 ஆம் ஆண்டு முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அமைந்த சட்டப்பேரவை இப்பொழுது 69 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில், மாண்டெகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் 1921 ஆம் ஆண்டு மேலவை உருவான காலத்தில் சென்னை மாகாண சட்டப்பேரவையாக உருவான தமிழ்நாடு சட்டப்பேரவையின் 100 ஆண்டுகளை நிறைவு செய்வதை மக்கள் மன்றம் என்றென்றும் நினைத்து போற்றும்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...