Sunday, July 12, 2015

உப்பளத் தொழிலாளர்களின் உப்புக்கரிக்கும் வாழ்க்கை. - Salt Pan Workers





நேற்றைக்கு நண்பர்களோடு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பயணித்தபோது முள்ளக்காடு அருகே
உப்பளப் பணிகளுக்காகச் செல்லும் மக்களைக் காணமுடிந்தது. அதிகாலையிலே பணிக்குச் செல்லும் இந்த மக்களின்  வாழ்வின் துயரங்கள் எல்லாம் எழுதவேண்டும் என்று தோன்றியது.

ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் இந்த உப்பளப் பணிகளில் ஆண் பெண் என இருசாரர்களும் ஈடுபட்டாலும், கோடு போடுவது, உப்பு வாருவது, வரப்புகளில் உப்பைச் சுமந்து வந்து ஒன்றுகுவிப்பதென்று எல்லா பணிகளிலும் எண்ணிக்கையில் அதிக அளவில் உழைப்பவர்கள் பெண்களே.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உப்பள வேலையில் கோடை காலத்தில்  உப்பின் வீரியமும், வெயிலின் அனலும் இவர்களை வருத்தி எடுக்கத் தொடங்கி விடுவதால் அதிகாலை நேரத்திலே உப்பி பாத்திகளில் இறங்கியாக வேண்டிய கட்டாயம். இதனால் பகல் நேரங்களில் தங்கள் பிள்ளைகளைக் கூட கவனிக்க முடியாது. ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடக்கும் அரசு, மற்றும் தனியார் உப்பளங்களில் பணியாற்றும் இவர்களது நாளொன்றுக்கான வருமானமோ சொற்பம்.

இந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தபொழுது, உடன்வந்த நண்பர் இவ்வளவு உப்பையும் இங்கேயே விட்டுவிட்டு போகிறீர்களே என்று கேட்டதற்கு, “உப்பு என்னைக்குமே களவுப் பொருளா இருக்காது, அப்படி திருடிட்டுப் போனாலும் தரித்திரியம் வீட்டுக்கு வந்துரும். பரம்பரை பரம்பரையா உப்பை இப்படித்தான் அறுவடை பண்ணுறோம்”  என்று பதிலளித்தார்கள்.

கடல் நீரை தளங்களில் பாய்ச்சி சூரிய வெப்பத்தில் உப்பு தயாரிக்கப்படுகிறது. உப்பு காய்ச்சுவதற்கு இந்த தளங்கள் மிக முக்கியமான அடிப்படை. பாத்திகளைச் சீர் செய்து அமைக்கப்படும் தளங்களில் கடல் நீரை பம்ப் செய்து தெப்பம் உருவாக்கப்படும். இப்படி பம்ப் செய்யும் போது சூரிய வெப்பம் சரியான டிகிரி அளவில் இருக்கவேண்டும். 24டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கடல்நீர் பாய்ச்சினால் வெண்மை நிறத்திலான நல்ல உப்பு கிடைக்கும்.



 அதற்குக் குறைவான டிகிரி செல்சியஸில் கடல்நீர் பாய்ச்சப்படும் பொழுது கால்சியம் அல்லது  மெக்னீசியம் அளவு அதிகமாகும். மெக்னீசியம் அதிகரித்த உப்பு கழுவப்பட்டே வெண்மையாக்க வேண்டியிருக்கும்.

இரண்டு வாரம் முதல் மூன்று வாரங்களுக்கும் மேலாக பாத்திகளில் படியும் உப்பை வாரி கரையில் சேர்ப்பார்கள். பாத்தியில் எத்தனை நாட்கள் உப்பு படிகிறதோ அதனைப் பொறுத்து கிடைக்கும் உப்பின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். இப்படி வாசி முதல் சேர்த்த உப்பை தலைச்சுமையாகச் சுமந்து அம்பாரமாகக் குவிப்பார்கள்.

பம்பிங் செய்வது, நீர்பாய்ச்சுவது, சிவில் செக்சன், மேஸ்திரிகள் என்று பலதரப்பினரின் உழைப்பு அடங்கிய  போதும் பாரம் சுமப்பது, உப்புவாருவது, கோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் பெண்கள் தான் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இவர்களுக்குப் பதவி உயர்வுகளோ, சம்பள உயர்வோ அல்லது மாற்று வேலைகளோ தரப்படுவதில்லை. காலம் முழுக்க உப்புச் சுமக்கும் பெண்களின் வாழ்நிலை  கேட்போரையும் காண்போரையும் கண்ணீர் சுரக்கச் செய்யும்.

தட்டுமேடுகளைச் சரியாக பராமரிக்காதது, தட்டுமேடுகளில் வாரிக் குவிக்கும் டன் கணக்கான உப்பை அளவு குறைத்து கணக்கு எழுதுவது, அரசு அமுல் செய்த  மழைக்காலங்களில் பிழைப்பூதியம் வழங்கப் படாதது, பல ஆண்டுகள் தொடர்ந்து பணியிலிருந்தும் பணி நிரந்தரம் செய்யாமல் அதிகாரிகள் தங்களுக்குக் கமிசன் கிடைக்கும் என்ற காரணத்திற்காக ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஊக்குவிப்பது என்று பல பிரச்சனைகள் இன்னும் இவர்களை வாட்டுகிறது.

மிகவும் பின் தங்கிய மக்கள் நிறைந்த பகுதிகளில் பருவமழை பொய்த்தால் விவசாயம் செய்யமுடியாத சூழலில் உப்பளங்கள் மட்டுமே வாழ்வாதாரம் என்ற நிலையில் சம வேலை வாய்ப்பும், குறைந்தபட்ச ஊதிய உயர்வும், பெண்களுக்கான பதவி உயர்வும், தொழிலாளர்கள் கோரிக்கைகளும் நிறைவேற்றப் பட அரசுகள் கவனமெடுக்க வேண்டும்.  தனியார் உப்பள அதிபர்களிடம் வாங்கிய கடனுக்காக காலம் முழுக்க உப்புச் சுமக்கும் நாகரீக கொத்தடிமைத் தளைகள் களையப்பட உப்பளத் தொழிலாளர்கள் நலனில் அரசுகள் அக்கறை காட்டவேண்டிய நேரம் இது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-07-2015

#SaltPanWorkers

#KSR_Posts

#KsRadhakrishnan

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...