Tuesday, July 14, 2015

ஈழப் பிரச்சனையில் திம்பு பேச்சுவார்த்தையும் இன்றும். - Thimpu Talks - Struggle for Tamil Eelam.







ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு பூட்டான் தலைநகர் திம்புவில் 1985ம் ஆண்டு ஜூலை 8ம் நாள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. அதில்  இலங்கை அரசும்  EPRLF, EROS, PLOT, LTTE, TELO , TULF ஆகிய போராளி அமைப்புக்களும் பங்கேற்றன.

திம்புப் பேச்சுவார்த்தை என்றழைக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை குறித்து நண்பர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே  இந்தப் பதிவு பார்வையில் பட்டது. அத்தோடு முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஈழப்பிரச்சனையின் நிலையையும் பதிவு செய்ய நினைத்தபோது..

                                                                      ****

அந்தப் பதிவு :


” 1980 களில் நிலவிய‌ பனிப்போர் மற்றும் புவிசார் உலக அரசியலை அப்போதைய போராளித்தலைமைகள் சரியாகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் கையாண்டதால், எமக்கான ஒரு மிக முக்கியமான வரலாற்று பிரகடனம் ஒன்றிற்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

1976 இல் வட்டுக்கோட்டை பிரகடனம் செய்து , விஞ்ஞாபனத்தில் அதற்கு 1977 இல் ஆணை கேட்டுவிட்டு, பின்னர் அரசியல் தலைமைகள் இணங்கிபோய் விட , எனைய போராளித்தலைமைகள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றமையினால், திம்பு பிரகடனத்திற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டி வந்திருந்தது.

13.07.1985 இல் திம்பு பேச்சுவார்த்தையில் EPRLF, EROS, PLOT, LTTE, TELO , TULF ஆகிய அமைப்புக்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் வருமாறு...

1)சிறிலங்காவில் தமிழர்கள் தனியான ஒரு தேசம் என்பதை அங்கீகரித்தல்.

2) சிறிலங்காவில் தமிழர்களுக்கான அடையாளப்படுத்தப்பட்ட தாயகத்தின் இருப்பை அங்கீகரித்தல்.

3)சிறிலங்காவில் தமிழ் தேசத்திற்கான‌ சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

4)இந்த தீவை தமது நாடாக கருதுவோர் அனைவருக்குமான அடிப்படை உரிமையை அங்கீகரித்தலும் , அவர்களுக்கான‌ குடியுரிமையை அங்கீகரித்தலும்.

திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும்.

இப்பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 8இல் ஆரம்பமாகியது. இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்கு பற்றிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.”


                                            *****


இவை நடந்து முப்பதாண்டுகள் மிகச் சரியாக கடந்துவிட்டன. திம்பு பேச்சுவாத்தைக்குப் போகும் முன் தம்பி பிரபாகரனும், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியம் ஆகியோர்,  இந்திராகாந்தி பிரதமராக இருந்தபொழுது  மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய அமைத்த  சர்க்காரியா குழுவின் பரிந்துரைகளையும்,

 திமுக ஆட்சியில் அமைத்த, நீதிபதி இராஜமன்னார் குழுவின் மாநில சுயாட்சி குறித்த பரிந்துரைகளையும்  என்னிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு, திலகரிடம் திம்பு பேச்சுவார்த்தைக்கு கொடுத்தனுப்பினார்கள்



அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் மறைந்த ஆ. அமிர்தலிங்கமும், அதன் தலைவர் சிவ சிதம்பரமும் இதே பரிந்துரைகளை என்னிடம் கேட்டுப் பெற்றுச் சென்றார்கள். இதன் அடிப்படையிலே அங்கு பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றன. இந்திய அரசின் மேற்பார்வையில் பேச்சுவார்த்தை நடந்தாலும் இதன்  முடிவுகளின் விளைவாக எவ்வித தீர்வுகளும் ஏற்படவில்லை.

இன்றைக்கு  இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் வலம் வருகின்றது.
கடந்த 10-07-2015 முதல் சீனாவின் போர்க்கப்பல்கள் ரோந்து செய்வது வேதனை அளிக்கிறது. நாலாயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பல் சக்திமிகுந்த ஏவுகணைகள் தாங்கியது. மேலும் மணிக்கு 30 நாட்டிக் மைல் வேகத்தில் செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது.

இது எதற்காக இந்தியப் பெருங்கடலில் வலம் வர வேண்டும். இந்தியாவை மிரட்டவா? இந்தியப் பெருங்கடலின் அமைதியை பாழ்படுத்தவா? இதற்கும் இராஜபக்‌ஷே போல மைத்ரி சிரிசேனா துணைபோகிறாரா?

இலங்கையில் நடக்கும் பொதுத்தேர்தலிலும் சீனாவின் கைகோர்ப்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழர்களுக்காக பேசுவது போல இயங்கும் சம்பந்தத்தின் குரலும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
அடுத்தமாதம் நடக்கும் இந்த பொதுத்தேர்தலில் இராஜபக்‌ஷே பதவியைப் பிடித்துவிடவேண்டுமென்று சீனாவின் நடவடிக்கைகள் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

சீனாவின் கடந்தகால ஒப்பந்தங்கள் நிறைவேற வேண்டுமென்றால் மைத்ரியும், ராஜபக்‌ஷேவும் பதவிகளில் இணைந்தால் தான் சீனாவிற்க்கு இந்தியப் பெருங்கடலில் வாழ்வு என்று நினைக்கின்றது. சீனாவின் சில்க் வணிக வழிப்பாதைக்கு ஆபத்து ஏற்படாமல் காக்க இலங்கையை முக்கிய தளமாகச் சீனா கருதுகின்றது.

சீனாவின் ட்ராகன் இந்தியாவை விழுங்கவேண்டுமென்பதில் அருணாச்சல பிரதேசத்திலும், ஆப்கன் வழியாகவும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கேற்ப மியான்மரில் பிரச்சனை. வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில சக்திகளைக் கையில் போட்டுக்கொண்டு சீனா தன்னுடைய ஆட்டத்தைத் துவங்கியுள்ளது.

இதற்கு மத்தியில் திரிகோணமலையில் நமது ஆதிச்சநல்லூர் போல தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் வந்துகொண்டிருக்கின்றன. திரிகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டுத் திடலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றபோது இவ்வாறு மனித எலும்புக்கூடுகள் தோண்டத் தோண்ட கிடைப்பது வேதனையைத் தருகின்றது.

திரிகோணமலை கீழாண்மை நிதிமன்ற நடுவர். டி.சரவணராஜா முன்னிலையிலே இந்தக் கொடுமைகளை பார்க்கமுடிகிறது.  இப்படியான இடியாப்பச் சிக்கலில் உள்ள ஈழத் தமிழர் பிரச்சனைகளுக்குத் தீர்வு எப்போதோ? விடிவுகாலம் எப்போதோ?

பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள், போர்கள் என்று சந்தித்த பின்னும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வில் நிம்மதி இல்லையே? திம்புவில் துவங்கி நார்வே தலையிட்டும், ஐ.நாவில் பேசப்பட்டும், உலகில் பல நாடுகள் குரல்கொடுத்தும் கட்டுப்படாத இனவெறி சிங்கள பாசிச அரசு சர்வதேச புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டாமா?

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2015.

See also :

http://tamilnation.co/conflictresolution/tamileelam/85thimpu/thimpu_introduction.htm

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...