---------------------------------------
இன்றைய(1-8-2017) " தி இந்து " - தமிழ் நாளிதழில் 'இப்படிக்கு இவர்கள்' என்ற பகுதியில் 'குடியரசும், ஜனநாயகமும் - ஒரு சிறு விளக்கம்' என்ற தலைப்பில் எனது பதிவு வெளியாகி உள்ளது. இதன் பொருள் என்ன; வரலாறு குறித்த விளக்கம் இடம் பெற்றுள்ளது.
வரலாற்று ரீதியாக ஜனநாயகம் என்ற சொல் கிரேக்கச் சொல். Democracy
(demo -kraits;demokratia)கிரேக்க நகர அரசுகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால். ஏதென்ஸ் நகரத்தில் முதன்முதலாக இச்சொல் பிறந்த்து. சாக்ரடீஸ் போன்றவர்கள் இதற்கு காரணகர்த்தா ஆவார்கள்.
குடியரசு என்பது ரோம் நகரில் பிறப்பெடுத்து பிளாட்டோவால் கொண்டாடப்பட்ட சொல்லாகும். இடைப்பட்ட காலங்களில் இந்த சொற்கள் ஐரோப்பா முழுவதும் பரவியது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த ஜனநாயகம் என்ற சொல்லுக்கான இயல்பு இல்லாமல் குடியரசு என்ற நிலையில் அங்கு ஆட்சி அமைப்புகள் நடக்கின்றன. ரோமத்தில் பப்ளியுஸ் (Publius) என்பது ரிப்பப்ளிக் (Republic) ஆனது. அலெக்ஸாண்டர் ஹெமில்டன், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோர் இதை ஏற்றுக்கொண்டு ரிப்பப்ளிக் அரசாக அமெரிக்காவை 1787ல் நிர்மாணித்தனர்.
பிரிட்டனில் மரபும், சம்பிரதாயங்களை கொண்டு எழுதப்படாத அரசியல்மைப்புச் சட்டப்படி ஆட்சிகள் நடக்கின்றன. ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு பிரிட்டன் இயங்குகிறது. ஆனால் குடியரசு என்ற நிலைப்பாடு கிடையாது. எழுதப்படாத அரசியல் சட்டங்கள் அதாவது, மரபு, வாடிக்கை, பழக்கவழக்கங்கள் கொண்டு இயங்குகின்ற நாடுகள் பிரிட்டன், இஸ்ரேல், நியூஸ்லாந்து ஆகும். இந்த நாடுகளுக்கு என்று தனியாக அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதப்பட்ட சாசனம் கிடையாது. பிரிட்டனில் ‘மகா சாசனம்’ (Magna Carta) என்ற வரலாற்று ரீதியான மனித மற்றும் அடிப்படை உரிமையான பிரகரடனம் 1215ம் ஆண்டில் ரன்னிமேட்டில் ஜான் அரசரால் மக்களின் கடுமையான வலியுறுத்தலில் பேரில் நிறைவேற்றப்பட்டது. இந்த சாசனமே சட்டத்தின் ஆட்சிக்கு அடிப்படை.
இது ஒன்று தான் பிரிட்டனில் எழுதப்பட்ட சாசனம் ஆகும். ஜனநாயகம் என்ற முறை கிரேக்கத்தில் இருந்து பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளர்ந்தோங்கியது. ரோமில் உதித்த குடியரசுத் தத்துவம், பிரான்சில் வளர்ந்தது. இந்தியா பிரிட்டனை பின்பற்றி நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் இருந்தாலும் உண்மையில் இந்தியா குடியரசுத் தத்துவத்தை எழுத்தில் தான் வைத்துள்ளதே ஒழிய நடைமுறையில் தவிர்த்துவிட்டது. இதனால் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும், பண்டித நேருவுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்து உச்ச நீதிமன்றம் ஆலோசனை சொல்லி குடியரசாக சொல்லிக் கொள்ளுகிற வகையில் இயங்குகிறது.
இரண்டுங்க்கெட்டான் நிலையில் தான் நம்முடைய அமைப்பு முறைகள் இருக்கின்றன. குடியரசா? ஜனநாயக நாடா? அடுத்து கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? அல்லது இரண்டும் கலந்த கலவை முறையா? நமது அரசியலமைப்பு சட்டம் நெகிழும் தன்மையானதா? அல்லது திடமானதா? என்றும் சொல்ல முடியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் குடியரசு முறையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படியான பல நிகழ்வுகளும் விடைகாண முடியாத வினாக்களும் நமது அரசியலமைப்பில் உள்ளன.
உலகத்திலேயே அதிக பக்கங்களுடைய நம் அரசியல் சாசனம். அதிகமான திருத்தங்களை 70 ஆண்டுகளில் பெற்ற அரசியல் சாசனமும் கூட. இந்தியஅரசியல்அமைப்பு சாசனத்தில் கடந்த 16/09/2016 வரை 102 மேல் சட்டதிருத்தங்களை கடந்த 69ஆண்டுகளில்(சாசனம் ஏற்றக்பட்ட ஆண்டுகள்)கொண்டுவந்துள்ளோம் !
சுதந்திர அமெரிக்காவின் அரசியல் சாசனம் 240 ஆண்டுகள்; வெறும் 25 பக்கங்களில்அடங்கிவிடும் .அமெரிக்காவில் இதுவரை ஒரு 20 க்கும் மேலான திருத்தங்கள் தான் என்பதும் குறிப்பிடதக்கது .
அப்படி என்றால் நமது அமைப்பு முறையில் இன்னும் தெளிவு ஏற்பட முடியவில்லை என்பது தான் புலனாகிறது.
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/11/constitution-day.html?m=1
#குடியரசு
#ஜனநாயகம்
#democracy
#republic
#KSRadhakrishnanpostings
#KSRpostings
K.S.Radhkakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-08-2017
No comments:
Post a Comment