______________________________________
தெரு முனையிலிருந்து பஸ்ஸ்டாப் நூறு அடி இருக்கும். தெருவிலிருந்து ரதவீதிக்குள் வந்ததும் பஸ்ஸ்டாண்டைப் பார்த்தேன்.பார்வையால் மேய்ந்தேன் என்பதே சரி. அங்கன நின்று கொண்டிருப்பது கண்ணம்மா சித்தியா. அவள் வெளியே வருவதில்லை என்றார்களே. பார்த்து மூன்று வருடங்களுக்கு மேல் இருக்கும். ஆள் அப்படியேதான் இருக்கிறாள். சேலை மட்டும் பின் கொசுவம் வைத்துக் கட்டி இருக்கிறாள். இப்போதும் சுருண்ட முடியைப் பின்னித் தொங்க விடாமல் இறுக்கமாகக் கொண்டை போட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அது கொஞ்ச நேரம்தான் கட்டுப்பாட்டில் இருக்கும். லேசாகத் தலையைச் சொறிந்து விட்டால் அல்லது காற்று பலமாக அடித்து விட்டால் நெற்றிப் பக்கமெல்லாம் கலைந்து ஸ்பிரிங் மாதிரி அலையாடும். அதுவும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் அவளுக்கு அது ஒரு வேசடை. எரிச்சலோடு, ச்சேய் பாருப்பா, நடராசர் சிலை மாதிரி இருக்கு, இப்ப யாரு முடி சுருட்டையா இல்லைன்னு அழுதா என்பாள். என்ன சித்தி எத்தனை பேர் அழுதாங்க தெரியுமா, கணவதியே சொல்லுவான் எங்க சித்தி மாதிரி முடி இருக்கணும்லேன்னு என்றால், ஆமா நீங்கதான் ஆயிரத்தைக் கண்டுட்டீங்க. சரீ, எங்க கணவதி யாரையோ பாக்காணாமே அந்தப் புள்ளைக்கி முடி எப்படி இருக்கும்டே, கரெக்டு சித்தி, உங்களைக் கணக்காதான் இருக்கும். ஆனா உங்களுக்குத் தான் அடர்த்தி ஜாஸ்தி. அந்த போட்டோல இருக்கீங்க பாருங்க, அச்சசல் அழகா அப்படி இருக்கு அந்தப் பொண்ணுக்கு என்று சுவரில் தொங்கும், அவள் படிக்கிற சமயத்தில் எடுத்ததோ என்னவோ ஒரு படத்தைக் காண்பிப்பேன்.
அப்ப முடி குறைச்சலால்லாடே இருக்கு. ஆனா அதைப் பேணறதுக்கே எங்க அம்மா பட்ட பாடு, யாத்தா, ஞாயித்துக் கிழமை ஆனாப் போதும், ஒரு பக்கா சோறு வடிச்ச கஞ்சித்தண்ணிய என் தலையில கவுத்திருவா. கஞ்சித்தண்ணி, சீயக்காய் எல்லாத்தையும் தலை தோள் பட்டை கையி பூராவும் வலிக்க வலிக்கத் தேச்சு விடுவா. சொல்லும் போதே தலை, தோள், புஜம் என்று எல்லாப் பகுதிகளையும் தடவிக் கொண்டு, உடலை நளுக்கிக் கொள்ளுவாள். கைகளால எதிரெதிர் புஜங்களைத் தேய்க்கிறப்ப மார்பு பிதுங்கும். எப்பா என்ன கலர் மஞ்சமஞ்சேர்ன்னு. கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ள மாட்டாள்.
சேலையைத் திருத்திக் கொண்டு, பேச்சை மாற்றுவாள், இப்ப எந்த அம்மை வந்து தேச்சு விடுவா. அது சரிடே என்னமோ அழகுன்னு சொன்னியே யாரைச் சொல்லுதே அந்தப் புள்ளையவா என்னையவா. ரெண்டு பேரையும்தான். நான் என்ன அழகாவாடே இருக்கேன். இல்லையா சித்தி, இப்ப நீங்க காலேஜ்ல படிச்சா உங்களைத்தான் நான்…. நிறுத்திக் கொண்டேன். சொல்லு சொல்லு என்னையத்தான் பாப்பியோ… சித்திட்ட பேசற பேச்சா இது. ஒங்க சின்னம்மைட்ட இப்படில்லாம் பேசுவியாக்கும். எங்க அம்மாவுக்கு ஒடப்பிறந்தவங்க யாருமே இல்லேல்லா. அதான் தெரியுமே. அவுகளை நான் பாத்திருக்கனே. உங்க அப்பா அம்மாவையெல்லாம் இவுகளுக்கு தெரியுமாம்லா. யாருக்கு, துரை அண்ணாச்சிக்கா. ஆமா எங்க வீட்டு துரைக்கித்தான். பொல்லாத, சீமையில இல்லாத துரை, கரியா கரி மொழுகாருக்காக இவுகதான் துரையாக்கும் என்பாள். அது காணாததுக்கு சுருட்டு நாத்தம் வேற. மூன்று நான்கு வருடத்திற்கு முந்திய கணங்கள் எல்லாம் ஞாவகம் வந்தது.
பஸ் ஸ்டாண்டில் வேறு யாரும் இல்லை. சித்தி மட்டுமே நின்று கொண்டிருந்தாள். அவள் உண்மையில் என் சினேகிதன் கணபதி என்கிற கணவதிக்குத்தான் சித்தி. அவன் ரெண்டு வருஷம் சீனியர். ஒரு வருடம் ஃபெயிலாகி நான் பி.யு.சி சேரும் போது அவன் முதலாண்டு பி.ஏ சேர்ந்திருந்தான். சினிமாப் பத்திரிகை ஒன்று விடாமல் வாங்குவான், நிறைய பாட்டுப் புத்தகமும் வைத்திருப்பான், அதனால் அவன் வீட்டிலேயே இருப்பேன். அவன் வீடு, வேறு தெருவில் இருந்தது. பக்கத்தில்தான் சித்தி வீடு. சில சமயம் இப்படி அடுத்த தெரு சினேகிதம் வாய்க்கும். அப்புறம் அது எப்படியோ விட்டுப் போகும். சமீபமாய் அவன் வீட்டுக்குப் போவதில்லை. அதனால் சித்தியைக் கிட்ட முட்டப் பார்க்கவே இல்லை. ஆனால் அவளைப் பற்றிய சங்கதி ஒன்றைக் கேள்விப் பட்டிருந்தேன். அதனாலும் அவளைக் கண்டும் காணாமல் கடந்தேன்.
நான் சித்தியைப் பார்த்தும் பார்க்காத மாதிரிக் கடந்து போகையில். அவளாகத்தான் மெதுவாகக் கூப்பிட்டாள், ஏய் சோமு ஒரு நிமிசம் இங்க வா. போனேன். இந்தா, எதிர்த்த லாலாக் கடையில கால் கிலோ மைசூர்பாகும் கால்கிலோ மிச்சரும் வாங்கித்தாயேன், கொஞ்சம் சீக்கிரம், பொட்டல் பஸ் வந்திரும், ஒரு ஐந்து ரூபாய்த் தாளைக் கையில் திணித்தாள். கடையை அப்போதுதான் திறந்திருந்தான் பானா என்கிற பரமசிவம். தினமும் காலையில், கடை திறந்ததும், நாலைந்து குத்து மிக்சரை எடுத்து, கடை வாசலில் விசிறுவான் பானா. காத்திருக்கும் காக்கைகள் பறந்து பறந்து வந்து கொத்தித் தின்னும். அதுவரை அவை கடைக்கு மேல் அமைதியாய் உட்கார்ந்திருக்கும். காக்கைகள் எழுந்து பறந்து மறுபடி கொத்த ஆரம்பிக்க நான் அவைகளுக்கு ஊடாக நடந்து போனேன். வே வாரும் என்று வரவேற்றான் பானா. எனக்கும் சின்னவன் தான். ஆனால் கல்யாணமெல்லாம் ஆகி சின்ன முதலாளி என்று கல்லாவில் உட்கார்ந்து விட்டான். வே, சொல்லும் என்ன வேணும். காக்கால் கிலோ மைசூர்பாவும் மிக்சரும் சீக்கிரம் குடு, சித்திக்கு நேரமாச்சாம். சித்தியா யாருவே. அந்தா, பஸ் ஸ்டாண்டில் நிக்கிறாகளே அதா. ஆமா. அவன் கடை திறக்கும் போதே இங்கே ஒருகண்ணாகத்தான் இருந்தான். அது முத்தப்பாவோட மதினில்லா, உமக்கு எங்கன கூடி சித்தி. அதான் நீயே சொல்லுதேல்லாலே முத்துச் சித்தப்பாவை முத்தப்பான்னு, அங்கன கூடித்தான் சித்தி. நான் குடுத்துட்டு வந்து உங்கூடப் பேசுதேன், முதல்ல பொட்டலம் போடுரா. மிச்சரு கடைசியாய்ட்டு உப்பும் உரைப்புமா தூளா இருக்கு. முத்தப்பாவைத்தான் உமக்குத் தெரியும்லா, அவரே ஒரு கடையில சரக்கு மாஸ்டரு அவரு மதினிட்ட இதைக் குடுத்தா அது நல்லால்லைவே. முதல்ல இதை நீ குடு, நான் கேட்டுட்டு வாரேன், அதுக்குள்ள ஓமப்பொடி கட்டி வையி. பஸ் வரலைன்னா வந்து வாங்கிட்டுப் போறேன். அதெல்லாம் ரெடி, பஸ் நம்ம சொல்லாம கிளம்பிருமாவே, அதுக்கா சந்திப் புள்ளையருக்கு எதித்தாப்ல கடை போட்டுட்டு உக்காந்திருக்கோம், என்று இன்னொரு பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தான்.
மிச்சர் சுமாரா இருக்காம், ஓமப்பொடி வாங்கட்டுமா. எம்மா, எம்மா ஓமப்பொடி வாங்கித்தாம்மா என்று பின்னாலிருந்து குரல் கேட்டது. சப்பை மூக்கு இங்கதான் நிக்காளா, ஏட்டி வள்ளி, எப்படி இருக்க. அது விழித்தது. மறந்திருப்பா சோமு, நீ போயி ஓமப்பொடியும் வாங்கிட்டு வா, பஸ் வந்திராம. வந்தா நிக்கும் சித்தி. மறுபடிப் போய் வாங்கிக் கொண்டாந்து கொடுத்தேன். அவள் காதுக்குப் பின்னால் இருந்த சிறிய கட்டி இப்போது நல்ல திரட்சியாக உருண்டு பளீரெனத் தெரிந்தது. அது குறித்தும் அப்போதே அவளுக்கு கவலைகள் உண்டு. இது என்ன எழவு புறப்பாடு மாதிரி இருக்கு, பெருசாயிருமோ என்பாள். அவளை சித்தி என்று சொல்லும் போது பழைய ஒட்டுதல் இல்லை என்று எனக்கே தெரிந்தது. சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு பானாவை நோகிப் போனேன். பஸ் இன்னும் வரவில்லை.
வே, இப்ப இவங்க முத்தப்பா கூடவா இருக்காங்க, பானா கேட்டான். கேள்விப்பட்ட சங்கதிதான் ஆனால், எனக்குத் தெரியலையே என்றேன். என்னவே துரை அண்ணாச்சியைத்தான் உமக்கு நல்லாத் தெரியுமே, நீரு அப்பல்லாம் உம்ம ஃப்ரெண்டு வீட்லதானே இருப்பேரு.
அவன் கேட்டது கூட சரியாகக் காதில் விழவில்லை. கருத்த உருவமாய் துரை அண்ணாச்சி ஞாவகத்துக்கு வந்தார். அவர் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட மேனேஜர் மாதிரித்தான். ரொம்ப நாளாக வேலை பார்த்தும் மேனேஜர் ஆகவில்லை. பெஞ்சு டிக்கெட்டிலிருந்து ஹை கிளாஸ் டிக்கெட் கொடுக்கறவரா ப்ரமோஷன் ஆனார் அவ்வளவுதான். ஆனால் எல்லா வேலையும் அவர்தான் பொறுப்பாகப் பார்ப்பார். கணவதி கூடப் படம் பார்க்கப் போனால் அவர் எங்களுக்கு ஃப்ரீபாஸ் கொடுத்து விடுவார். சில சமயம் செகண்ட் ஷோவுக்கு அவனுடன் போவேன். அவர் அவனை இரு கணவதி போகலாம். இன்னக்கி நிறைய ரூவாயை எடுத்துட்டுப் போறேன்ல்லா துணைக்கி வா என்பார். நிற்போம். பத்துப் பதினைந்து நிமிஷத்தில் தியேட்டர் முழுவதும் இருட்டாகி விடும். கிளம்புவோம்.
இரண்டாம் பிளே ஆட்டம் முடிந்து ஆப்பரேட்டர் ரூம் பூட்டி சாவி வாங்கி, தியேட்டருக்குள் போய் ஒரு பார்வை பார்த்து விட்டு வருவார். மேலோட்டமாகப் பார்ப்பது போல இருக்கும் ஆனால் அவர் கண்ணில் ஏதாவது பட்டு விடும். வேய் கிட்டுப் பிள்ளை அந்தா, சேர் டிக்கெட் ரெண்டாம் வரிசைக்கு கீழ என்னமோ கிடக்கு பாரும் என்பார். கிட்டுப் பிள்ளை பார்த்து எடுத்து வருவார். பீடிங் பாட்டில் அண்ணாச்சி. இதையெல்லாம் நாளைக்கு கொட்டகை பெருக்க வர்ரவங்க பாக்க மாட்டாங்களா, நேரம் என்னாச்சு என்று கிட்டு சலிப்பார். யோவ் அன்னைக்கி நீருதானெ ஒரு மணிப்பர்ஸ் எடுத்துட்டு வந்தேரு, நூறோ இரநூறோ இருந்துதுல்லாவே. அய்யோ பாவம் எவனாவது தொலைச்சிட்டு திண்டாடுவான். வந்து கேட்டா குடுப்போம், அதுவும் நடந்திருக்கில்லா. ஆமா போங்க, எவனாவது பொண்டாட்டியவா விட்டுட்டுப் போகப் போறான். ஒமக்கு எதுக்குவே அடுத்தவன் பொண்டாட்டி.,சரி கிரில் கதவை இழும் அந்தக் கோணக்கதவை இழுக்க நீருதான் சரியான ஆளு. ஆபீஸ் ரூமைப் பூட்டியாச்சா. சில்லரைக் காசை எடுத்திக்கிட்டானா விஸ்வம். கொஞ்சம் மிச்சம் இருக்கட்டும், நாளைக்கி சங்கடப்படும். இந்த 26 பைசா டிக்கெட்டுக்கு முப்பது பைசா தந்துட்டு மிச்சம் நாலு பைசா தரலைன்னா நாப்பது கேள்வி கேப்பானுவ. காலையில போத்தி கடையில குடுத்து ரவா தோசை சாப்பிடணும்வே விசுவம். வசூலான சில்லரைக் காசுகளைப் பூராவும் போத்தி ஓட்டலில் வாங்கிக் கொள்வார்கள். அதற்குப் பிரதியுபகாரமாய் ரவா தோசை காப்பி எனக் காலை அஞ்சரை மணிக்கே சாப்பிட்ருவாரு விஸ்வம். துரையண்ணாச்சி போனாலும் இந்த உபசாரமெல்லாம் உண்டும். அடிக்கடி போக மாட்டார். அவர் ஏழு மணிக்கு முன்னால் எழுந்திரிக்க மாட்டார். அந்நேரத்துக்கு ரவா தோசை காலியாகிரும்.
அவர் காலையில் ஆத்துக்கு குளிக்க வரும் போது, ஆதிச்சநல்லூர் பாண்டியன் கடையில், நாங்கள் சோப்போ பல்பொடியோ வாங்கிக் கொண்டிருப்போம், இல்லை சைக்கிளை நிறுத்துவோம். அப்போது சுருட்டு பிடித்துக் கொண்டே முந்தின இரவு தியேட்டரில் நடந்த கதை எதையவது சொல்லுவார். என்னைப் பார்த்தும் சொல்லுவார். அவருக்கென்று ஒரு ஆத்துக் குளியல் சேக்காளிகள் உண்டு, அவர்களிடமும் சொல்லுவார். எங்களுடன் பானாவும் அடக்கம். அவனுக்கு நீச்சல் தெரியாது. அவன் படியருகேதான் குளிப்பான். திடீர் கிறுக்கு வந்தால் நாங்கள் கொஞ்ச நாளைக்கு, தொடர்ந்து ஆற்றில் போய் குளிப்போம். அப்புறம் திடீரென்று போவது நின்று விடும். அவர் அப்படி இல்லை தினமும் ஆற்றுக் குளியல்தான். பாதி சுருட்டு புகையப் புகைய, படித்துறை இசக்கியம்மன் கோயில் படிக்கட்டில் இறங்கி, பாதியிலேயே வலது பக்கமாகப் பிரிந்து, வேட்டியை பின்னுக்கு உயர்த்திக் கொண்டே ஒதுங்கி விடுவார்.
நாங்கள் இன்னும் கொஞ்சம் நடந்து முன்னடித்துறைக்கு நேராகப் போவோம். அங்கே சுழித்தோடும் தண்ணிக்குள் முங்கியிருக்கும் வட்டப் பாறையைக் குறி வைத்துப் பாய்ந்து நீச்சல் அடித்து, விழுந்து எழுந்து குளிக்கையில் அவர் கரையோரமாக நின்று குளிப்பார். உடம்பை ஊறப்போடுவார் என்றுதான் சொல்ல வேண்டும். யாராவது பெருசுகள் அவரிடம் கேட்பார்கள், அண்ணாச்சி இன்னக்கி எப்படி சுகப் பிரசவமா. எங்க தம்பி, சுத்திப் பாத்தா பொறாமையா இருக்கு. அவனவன் அல்வாவும் ஜாங்கிரியுமா இருந்து வச்சிருக்கான், தாயோளி நமக்கு ரெண்டு சுருட்டு குடிச்சும் ஆட்டுப் புழுக்கை மாதிரிக்கூட வர மாட்டேங்கு… அம்புட்டும் சூடு. ராத்தூக்கமே கிடையாது. அதுக்குத்தான் இங்க தாமிரவரணில உடம்பை ஊறப்போடுதீகள்ளா குளுந்திரும். என்னத்தவே குளிர, என்று நாக்கை வழித்து வழித்துக் கொப்பளிப்பார், சப்பை மூக்கைச் சிந்துவார். என்ன மூதி சுருட்டு நாத்தம் போகவா செய்யிது, உங்க சித்தி வாணால வாங்குதா, என்ன நாத்தம்ன்னு, என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுவார்
நாங்கள் ஏழரை, எட்டு மணிக்குள் குளித்துக் கரையேறினாலும் அவர் கிடப்பார். அவர் சினேகிதர்கள் கூடக் கரையேறி விடுவார்கள். ஒருத்தர் ரெண்டு பேர் நின்னு பேச்சுக் குடுப்பார்கள் அல்லது புதுசா வந்தவங்க, இது எதுக்கு அண்ணாச்சி, மேனேஜரே கொட்டகையை விட்டு வீட்டுக்குப் போன பொறவும் நீங்க ஏன் விருதாவாக் கண்ணு முழிக்கணும், ஒங்க முதலாளி என்னத்தை தூக்கிக் குடுக்கப் போறாரு. புதுக் கொட்டகையில் மேனேஜராகப் போறேன்னு சொன்னீக. வேற எவனோ ஒருத்தன் வந்தான். கேட்டா அவன் மேனேஜர் வேலை மட்டுமா பாக்கான், எல்லா சப்ளை சர்வீஸும்லா பாக்கான்னீங்க. இல்லை தம்பி, இப்ப வெளியூர்ல இன்னொரு கொட்டகை கட்ட பிளான் வச்சிருக்காக மக பேர்ல. அதுக்கு நான்தான் மேனேஜர்ன்னு உறுதலா சொல்லிருக்காக, வெளியவும் விசாரிச்சிட்டேன், எம்பேருதான் அடி படுது. அது எங்க அண்ணாச்சி புது கொட்டகை வருது. ஏய், அதெல்லாம் இப்பவே சொல்லக் கூடாது, அப்புறம் உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணான்னு ஆயிரும். இந்தப் பேச்சையெல்லாம் மறந்து கொள்ளைக் காலம் ஆயிட்டு. ஆற்றுக்குப் போகவே இப்ப நேரமில்லை. நெனைச்சா எப்பாவாவது ஞாயித்துக் கிழமை போவேன்.
அதுவும் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த காலத்து ஞாயித்துக் கிழமைதான். துரை அண்ணாச்சி எப்பவும் முன்னடியில, படி கிட்ட நின்னே குளிச்சு முடிச்சிருவாரு, நடு ஆத்துக்கே வர மாட்டாரு. அன்னக்கி நானும் ஆத்துல முன்னடிலதான் நின்னேன். டேம் திறந்து விட்டு தண்ணி நிறைய வந்துது. வட்டப்பாறைக்கு மேலா அரை ஆள் ஆழம் ஓடுச்சு. நன்றாக நீச்சல் தெரிஞ்ச பசங்களே காக்கா முங்கு போட்டுகிட்டு இருந்தாங்க. இவரு சடார்ன்னு வட்டப்பாறைக்கு பாஞ்சுட்டாரு. அண்ணாச்ச்சி, அண்ணாச்சி, துரை துரைன்னு படித்துறை பூரா ஒரே சத்தம் கிழக்க ஓடுதாங்க மேக்க ஓடுதாங்க ஆளையே காணும்.கோயில் படித்துறை வரை தேடிட்டு திரும்பி வந்துட்டாங்க. சிக்கிலிங்கிராமம் வரை கூடத் தேடிட்டு வந்தாங்க. ஒரு வேளை எந்திரிச்சு வீட்டுக்குப் போயிருப்பாரோ, ஆளுக்கொன்றைப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அதுக்குள்ள என்னன்னு தாக்கல் போச்சோ சித்தி தலை விரி கோலமா வந்து படித்துறையில நின்னு குய்யோ முறையோன்னு அழுதாள். எய்யா நான் ஒன்னும் தப்பு பண்ணலையய்யா, ஏங்கூட புள்ளையவும்லா கூட்டிட்டுப் போனேன், முத்தப்பா சம்சாரமும் கூட வந்திருந்தாள். அவள், சித்தியின் வாயைப் பொத்தி இழுத்துப் போனாள். கணவதியும் வந்து விட்டான். அவனுடன் நானும் அவர்கள் பின்னால் போனேன். திடீரென்று அவளிடமிருந்து விடு பட்டு படித்துறை இசக்கியை நோக்கி ஓடினாள். மரத்தடி இசக்கியைப் பார்த்து, என்னவோ முண்டை தண்டைன்னு ஏசி தலையைப் பிய்த்துக் கொண்டாள். சுருட்டை முடி கன்னாபின்னவென்று கலைந்து அசல் நீலி மாதிரி மாரிலடித்துக் கொண்டு அழுதவளை, கணவதி, சித்தி வாங்க சித்தி, தேடிக் கண்டு புடிச்சிருவாங்க என்று கூப்பிட்டான். ஏய் கணவதி, இவுக புலப்பம் பொறுக்காமத்தானே என்னன்னு கேட்டுட்டு வாரேன்னு போனேன், அவனை தொடக்கூட விடலியே, மேனேசராக்கினா என்னய்யான்னு மட்டும்தான் திருப்பித் திருப்பிக் கேட்டேன் கணவதி, என்று அழுதாள்.
மேட்டில் அவர்கள் வந்த டாக்ஸி நின்று கொண்டிருந்தது. கணவதியின் அப்பாவுக்குத் தெரிஞ்ச டாக்ஸி. படியில் ஏற்ற மாட்டாமல் ஏற்றி அவளை இழுத்துக் கொண்டு போய் டாக்ஸியில் ஏற்றினார்கள். நான் வீட்டுக்கெல்லாம் போய் விட்டு சாயந்தரமாக கணவதி தெருவுக்குப் போனேன். மத்தியானம் வரை தேடி கடைசீல உடல் ரயில் பாலத்துக்கு அடியில் கிடந்ததுன்னு, ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருந்தார்கள். கணவதியும் அங்கேதான் போயிருப்பதாக தெருவில் சொன்னார்கள். நான் இரண்டு வீட்டுக்குள்ளும், உள்ளே போகாமல் திரும்பி விட்டேன். அப்புறம் தெருவுக்கே போகவில்லை.
ஒரு வழியாக பஸ் அப்போதுதான் வந்தது. வே கேட்டம்லா இப்ப முத்தப்பா கூடத்தான் இருக்காகளா. தெரியலைப்பா, அவரு சம்சாரம் இவங்களுக்கு ஒன்னு விட்ட தங்கச்சின்னு ஞாவகம், எல்லாரும் ஒன்னாவே இருப்பாங்களா இருக்கும், அதுல என்ன தப்பு, என்றேன். தப்பு ஒன்னுமில்லை. அவரு முத்தப்பாவும் நல்ல மனுஷந்தான், எங்க கடையில் வேலைக்கு நின்னவருதானே. அவரு சம்சாரம் கோவிச்சுகிட்டுப் புள்ளையக் கூட்டிகிட்டுப் போயிட்டுன்னாங்க, அதுக்குப் பொறந்த ஊரு பொட்டல்தான் என்றான். அவங்களை எனக்குப் பழக்கம் கிடையாதுப்பா.
பஸ்ஸில் ஏறி பஸ்ஸில் நேராகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். வலது பக்கம் கடையையோ எங்களையோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பஸ் கிளம்பியது சப்பை மூக்கு வள்ளி, ஜன்னல் எட்டி கையை அசைத்தது, சித்தி கையைத் தடுத்து மடக்கி தன் கைக்குள் வைத்துக் கொண்டாள். என்னவே கோவம் ஒம்ம மேல என்றான் பானா. ஏம் மேல என்ன கோவம், பஸ்ஸுக்கு வெளிய கைய நீட்ட வேண்டாம்ன்னு தடுத்திருப்பா என்றவனுக்கு, உண்மையிலேயே வருத்தமா இருக்குமோ, பார்த்தும் பார்க்காத மாதிரி கடந்து போயிருந்திருக்காமல், லேசாகச் சிரித்து அவளிடம் இயல்பாக பேசி இருந்திருக்கலாம், என்று தோன்றியது.
No comments:
Post a Comment