Thursday, August 10, 2017

கும்பகோண மகாபாரத பதிப்பு


மகாபாரதத்தை 1888 ல் சிவகங்கை சிறுவயல் ஜமீன்தார் உதவியில் பதிப்பித்த நல்லாப்பிள்ளை பாரதம் மற்றும் ராஜாஜியில் இருந்து நா. பார்த்தசாரதி, சோ என்று இன்றைக்கு பிரபஞ்சன் வரை பலர் படைத்த பதிப்புகளை படிக்க கூடிய அளவில் வாய்ப்புகள் கிட்டின. ஆனால் தமிழில் மகாபாரதம் என்றவுடனே கும்பகோணம் பதிப்பு நினைவுக்கு வரும். பெரும் உழைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வந்த மகாபாரதம் கவனத்திற்குரியது.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன. மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். 


இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவரே சரி பார்ப்பது, பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் வெளியிடப்பட்டது.

இதன் பிறகு மகாபாரத மூலநூலை வாசிக்க முயல வேண்டுமெனில், அதற்கு சிறந்த புத்தகம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு, இது நேரடியாக சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது, இதை கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் மறு பதிப்புரிமை பெற்று வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன;

ஆதி பர்வம், ஸபா பர்வம், வன பருவம், விராட பருவம், உத்யோக பருவம், பீஷ்ம பர்வம், துரோண பருவம், கர்ண பர்வம், சல்ய பருவம், சாந்தி பருவம், அனுசாஸன பர்வம், ஸ்த்ரீ பர்வம், ஆச்வதிக பர்வம், மௌஸலை பர்வம், சௌப்திக பர்வம், மஹாப்ரஸ்தானிக பர்வம், ஆச்ரமவாஸிக பர்வம் மற்றும் ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.

இந்த பதிப்பை அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த மு.கதிரேசன் செட்டியார், தருமபுர ஆதினம், திருவாடுதுறை பரமசிவ தம்பூரான் போன்ற பலரால் ஆதரிக்கப்பட்டு 1932ல் இறுதிபடுத்தப்பட்டது.
மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்.

அப்போது வட்டியும் முதலுமாக 1,35,000/- செலவு செய்து இந்த பதிப்பை கொண்டு வந்தார். தற்போது 2002, 2007, 2016 என மூன்று பதிப்புகளாக வெளியாகி உள்ளது என்று தகவல். தமிழில் படிக்கக் கூடிய விரிவான மகாபாரதம் நல்லாப்பிள்ளை பாரதமும், கும்பகோண பதிப்பும் ஆகும். இதில் சொல்லப்படுகிற சில கருத்துகளில் உடன்பாடு இல்லையென்றாலும், இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கும், வாழ்க்கைக்கும் பொருந்திப் போகின்ற சில நிகழ்வுகள் மனதில்படுகின்றன. அதனால் இதை வாசிப்பதும் உண்டு.

மகாபாரதத்தில் பாஞ்சாலி ஏன் சிரித்தாள் என்ற காட்சி.
-------------------------------------------------------------------------------------------

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, தட்சிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன்பு, அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார்.

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க, பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள். அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ???" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ?

தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா???

இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது ? "என்று சொல்ல பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள்.
பீஷ்மர் பேசினார். "பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும்.
துரியோதனன், அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான். ஆனால், அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல.

சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியன் ஓர் உதாரணம்.

"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டுவிட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்."

"ஆனால் இப்போது, பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப் படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது.
அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன.

இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது.

எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன். கேளுங்கள்" என்று சொல்லி... பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள்...!!!

#திரௌபதி
#பாஞ்சாலி
#மகாபாரத காட்சிகள்
#மகாபாரதம்
#Mahabharatham
#Draupathi
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

09-08-2017

2 comments:

  1. நல்ல தகவல் இந்த புத்தகம் கிடைக்கும் இடம் பகிர்ந்து கொண்டால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. New bookland chennai புத்தகத்தின் விலை 6000 ரூபாய்

      Delete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...