Thursday, August 3, 2017

பேரறிஞர் அண்ணாவும், அண்ணாமலை பல்கலைக்கழகமும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கடைசியாக நடந்த தேர்தலும்.

பேரறிஞர் அண்ணாவும், அண்ணாமலை பல்கலைக்கழகமும். 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கடைசியாக நடந்த தேர்தலும்.
----------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கிய மூத்த படைப்பாளி கி.ரா. அவர்களின் 95வது பிறந்தநாள் விழா புதுவையில் நடக்க இருக்கின்றது. இது குறித்து, என்னை இளமைப் பருவத்தில் அரசியலில் வார்ப்பித்த திரு. பழ.நெடுமாறன் அவர்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. உடன் மூத்த பத்திரிக்கையாளர் கல்கி ப்ரியன் உடன் வந்தார். கடந்த காலத்தில் அவர்களுடன் அரசியல் களத்தில் இருந்த நிகழ்வுகள் பலவற்றை பின்நோக்கி பார்த்தேன். பேசக்கூடிய வாய்ப்பும் கிட்டியது. 

1950களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திரு. நெடுமாறன் அவர்கள் முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திமுக. அந்த காலக் கட்டத்தில் மறைந்த நாராயணசாமி பிள்ளை துணைவேந்தர். 

பேரறிஞர் அண்ணாவை அழைத்து முதன்முதலாக அங்குள்ள சாஸ்திரி ஹாலில் சொற்பொழிவாற்ற முயற்சிகளை நெடுமாறன் மேற்கொண்டார். ஆனால் துணைவேந்தர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பல நாள் முயற்சிகளுக்கு பின் நாளை வந்து என்னை சந்தியுங்கள் என்று நாராயணசாமி பிள்ளை நெடுமாறனிடம் கூறினார். ஆனால் அவரோ அன்றிரவே புறப்பட்டு சென்னைக்கு செல்வதாக இருந்தது. இதை அவருடைய உதவியாளர் மூலம் தெரிந்து கொண்ட நெடுமாறன் அவருடைய சகாவான திண்டுக்கல் அழகர்சாமியை (இவர் காமராஜர், அண்ணா, பாரதிதாசன் முதலியோரோடு நெருக்கமானவர்) அழைத்துக் கொண்டு சென்னைக்கு புகைவண்டி ஏறிவிட்டனர். சென்னை வந்தவுடன் துணைவேந்தர் நாராயணசாமி பிள்ளை தங்கியிருந்த காஸ்மோபாலிட்டன் கிளப் விடுதியின் அறையின் கதவை தட்டியவுடன் நாராயணசாமி பிள்ளை, 
“இங்கு எங்கப்பா?” என்று கேட்டுள்ளார். 

நெடுமாறன் உடனே, “நீங்க தானே இன்று காலை 9 மணிக்கு பார்க்க சொல்லி நேற்று சொன்னீங்க இல்லையா. அதான் பார்க்க வந்தோம்.” என்றவுடன் 
துணைவேந்தர் “அதுக்கு சென்னைக்கா வரச்சொன்னேன்?” சரி என்று நெடுமாறனையும் அழகிரிசாமியையும் அழைத்துக் கொண்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மணைக்கு சென்றார். அங்கு பல்கலைக்கழக இணைவேந்தர் ராஜா சர். முத்தையா செட்டியாரிடம் அண்ணாவினுடைய நிகழ்ச்சி ஒப்புதலை இறுதியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு நெடுமாறன் அவர்கள் பெற்றார் என்றும் சொன்னார்.

அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் ஆங்கிலத்தில் ‘சில்வர் டங்’ வி.சீனிவாச சாஸ்திரி பாகிஸ்தான் அதிபர் ஜின்னாவுக்கு நெருங்கிய நண்பர். அவர் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த காலத்தில் தான் எழுதிய “Wither Pakistan” நூலினை ஜின்னாவே கையெழுத்திட்டு சாஸ்திரிக்கு அனுப்பியிருந்தார். அப்போது மாணவராக இருக்கும் போது அந்த நூலை பிரித்து படித்துள்ளேன். அப்போது பல்கலைக்கழக நூலகம், நிர்வாக அலுவலகமான சாஸ்திரி ஹாலிலேயே இருந்தது. அது எதிர்புரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் தனியாக நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த நூலினை திரும்பவும் பார்க்க வேண்டுமென்று நீண்டநாள் மனதில் இருந்த ஆசை சமீபத்தில் அங்கு ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது நீண்ட தேடுதலுக்குப்பின் அந்த நூல் திரும்பவும் பார்க்க முடிந்தது என்ற செய்தியை நெகிழ்வோடு நெடுமாறன் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல், திமுக ஆங்கிலத்தில் வழக்கறிஞர். வி.பி. ராமனை ஆசிரியராக கொண்டு அண்ணா “Home Land”என்ற ஏட்டினை துவக்குவதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களிடம் நன்கொடையாக திரட்டி அப்போதே 4000 ரூபாய் கொடுத்தோம். எங்கள் அறையிலேயே வந்து அண்ணா தங்கினார். எங்களோடு உண்டு களித்து ஒரு நாள் விடுதியிலேயே இருந்தது மறக்க முடியாத நிகழ்வாகும். இது போன்ற பல சுவாரஸ்யமான செய்திகளை பகிர்ந்தார்.
..............................................................................................................
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் 1978 காலக்கட்டத்தில் சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கல்யாண மண்டபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் நெடுமாறன், ஜி.கே.மூப்பனார், தஞ்சை ராமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 10 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே மூப்பனார் வெற்றி பெற்றார். மூன்றாவது வேட்பாளர் தஞ்சை ராமமூர்த்தி 18 வாக்குகளே பெற்றார். தஞ்சை ராமமூர்த்தி பெற்ற வாக்குகளும் உறுதியளித்தபடி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் மறைந்த செல்லப்பாண்டியன் வாக்களித்திருந்தால் அன்றைக்கு நெடுமாறன் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மூப்பனாரை விட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வெற்றி பெற்றிருப்பார். இன்றைய தமிழக அரசியல் நிலைமையே வேறு நிலையில் அமைந்திருக்கும்.

இந்த தேர்தலின் அதிகாரியாக முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் ஆவார். இந்த தேர்தலில் எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. ஆனால் தவறாக எம்.எல்.ஏக்களை வாக்களிக்க அனுமதியளிக்க முடியாது என்று ஆர்.வெங்கட்ராமன் மறுத்தும் அன்றைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் இந்திரா காந்திக்கு தெரியாமலேயே தொலைபேசியில் தேர்தல் நாளன்று எம்.எல்.ஏக்களை வாக்களிக்க அனுமதியுங்கள் என்று சொன்னதால் தேர்தல் முடிவு வேறு விதமானது. நன்றாக நினைவில் உள்ளது. வாழப்பாடி இராமமூர்த்தி, மதுரை ஆ.ரத்திணம், கிள்ளிவளவன், எம்.கே.டி.சுப்ரமணியம் ஆகியேரோடு தேர்தல் பொழுதெல்லாம் மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு முன் தேர்தல் பணிகளை அடியேனும் சேர்ந்து கவனித்து மதியம் மயிலாப்பூர் கிளப்பில் சாப்பிட்டதெல்லாம் இன்றும் மங்கா நினைவாக மனதில் உள்ளது. 

இது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இறுதியாக நடந்த தேர்தலாகும். அதற்கு பிறகு தலைவர் பதவிகள் எல்லாம் நியமனங்கள் தான். தஞ்சை ராமமூர்த்தி, தேர்தல் முடிந்தவுடன் நான் போட்டியிட்டிருக்க கூடாது என்று நெடுமாறன் அணியில் எங்களோடு காங்கிரசில் பணியாற்றினார். செல்லப்பாண்டியன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோவில்பட்டி ஓ.எஸ். வேலுச்சாமி உடன் நெல்லையில் சந்தித்த போது, அப்போது நான் நெடுமாறனுக்கு உறுதி அளித்தவாறு வாக்களிக்காதது பின்னாளில் வேதனை அளித்தது என்று என் செவிபட வருந்தினார்.

அப்போது நெடுமாறன், மூப்பனார் என்ற இரு அணிகளும் கொள்கையளவு மோதல்களாக காங்கிரஸில் செயல்பட்டனர். 

இந்த செய்திகளை எல்லாம் என்னுடைய நினைவுகள் தொகுதியில் விரிவாக எழுதி வருகின்றேன்.

#தமிழ்நாடு_காங்கிரஸ்
#பழ_நெடுமாறன்
#தமிழ்நாடு_காங்கிரஸ்_தேர்தல்
#Tncc_elections
#Tamil_nadu_Congress
#National_congress
#pazha_nedumaran
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-08-2017





No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...