பிரணாப் முகர்ஜி;தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை. ஏன் காதலும் இல்லை என்றும் சொல்லலாமே?
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். நானறிந்த வரையில் இப்படியொரு கடிதத்தை இதற்கு முன் எந்த குடியரசு தலைவருக்கும் எந்த பிரதமரும் எழுதியதில்லை. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் இதோ உங்கள் பார்வைக்கு,
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லிக்கு நான் ஒரு அன்னியனாகத்தான் வந்தேன். என் முன்னால் இருந்த பணி மிகப்பெரியது; சவாலானது. இந்த காலகட்டத்தில், நீங்கள் எப்போதும் எனக்கு தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளர்கள். உங்கள் விவேகம், வழிகாட்டுதல், தனிப்பட்ட அரவணைப்பு, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், பலத்தையும் அளித்திருக்கிறது.
நீங்கள் மிகவும் இதமாகவும், பாசமாகவும், என்னை கவனித்துக்கொண்டீர்கள். தொடர் பொதுக்கூட்டங்கள், பிரசார பயணங்களை முடித்துவிட்டு வரும்போது என்னை நீங்கள் தொலைபேசியில் அழைத்து “உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்கிறீர்கள் என நம்புகிறேன்” என்று கூறுவதே, என்னை புதிய ஆற்றலால் நிரப்பும்.
நமது அரசியல் பயணங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகள் மூலம் வடிவமைக்கப்பட்டவை. நமது கொள்கைகள், சில நேரங்களில் மாறுபட்டவை. நமது அனுபவங்களும் வெவ்வேறானவை. ஆனால் உங்கள் அறிவாற்றலும், விவேகமும்தான் நாம் இருவரும் இணைந்து பணியாற்றச்செய்தன.
இந்திய மக்களுக்கு நீங்கள் மிகப்பெரிய ஆதார சுருதியாக விளங்குகிறீர்கள். இந்தியா உங்களை எண்ணி எப்போதும் பெருமிதம் கொள்ளும். நீங்கள் எளிமையான, விதிவிலக்கான தலைவர். உங்கள் மரபு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டும்.
- பிரதமர் மோடி-
பிரணாப் முகர்ஜி திறமையானவர் , மெத்த படித்தவர் , 1973 வரை கல்லூரி பேராசிரியர், மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ காங்கிரசை நடத்தியவர். நாற்பது ஆண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர். குடியரசு தலைவர் . ஆனால் யாரிடம் அதிகம் ஒட்டமாட்டார். மேல்தட்டு மக்களை போலவே நடந்துக் கொள்வார்.
மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி மூன்று அணிகளாக செயல்பட்ட போது மத்திய முன்னாள் அமைச்சர் கனி கான் செளத்திரி தலைமையில் ஒரு அணியும், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் சித்தார்த் சங்கர் ரே தலைமையில் ஒரு அணியும், மத்திய முன்னாள் அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முனிஷி தலமையில் ஒரு அணியும் செயல்பட்டது. சித்தார்த் சங்கர் ரே பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்திரா காந்திக்கு
எமர்ஜென்சியை அறிவிக்க
அறிவுறுத்தியவர் இவர் தான். பிரணாப் பங்களா காங்கிரஸ் என்ற மாநில கட்சியில் இருந்தார். பிரணாப் முகர்ஜி, கனிகாண் செளத்திரி, சித்தார்த் சங்கர் ரே, பிரிய ரஞ்சன் தாஸ் முனிஷி
ஆகிய நால்வருமே பழ.நெடுமாறன் அவர்களின் நண்பர்கள். பிரிய ரஞ்சன் தாஸ் முனிஷி தற்போது அரசியல்
நடவடிக்கைகளில் எதிலும் கலந்துக் கொள்வதில்லை. நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இருக்கின்றார். அவரது மனைவி மாநிலத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
பங்களா காங்கிரஸ் எனும் மாநிலக் கட்சியில் பிரணாப் இருந்த போது தலைவர் கலைஞர் அவர்கள் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை அனைத்து இந்தியா தலைவர்களையும் அழைத்து சென்னையில் நடத்தினார். இந்திராவின் விருப்பத்திற்கு மாறாக பிரணாப் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்.
இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது இவரும் ராஜிவ்காந்தியும் கல்கத்தாவில் இருந்து ஒரே விமாணத்தில் வந்தனர். இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு தம்மை பிரதமராக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டுப் பார்த்தார். இதில் ராஜீவ்காந்தி கடும் கோபமடைந்தார். இதனால் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த பிரணாப் முகர்ஜி காங்கிரஸை விட்டு வெளியேறி, ராஷ்டிரிய சமாஜ்வாதி காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். .
தண்ணீரிலேயே தாமரை வளர்ந்தாலும் அதன் இலை மீது நீர் ஒட்டுவதில்லை. இந்நிலை தான் பிரனாப்புக்கும் காங்கிரசுக்கும் இடையே இருந்திருக்குமோ என கருதுகின்றேன்.
சமீபத்தில் ஜி.எஸ்.டி அறிவித்த போது ," நான் நிதியமைச்சராக இருந்த போதே அறிவிக்க நினைத்தேன்" என வெகுவாக பாராட்டியதும் , மோடியின் கடிதத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மனதில் சில யூகங்களுக்கு இடம் அளிக்கின்றது.
1970s :: West Bengal CM Siddhartha Shankar Ray Doing 'Namaste' to Rahul Gandhi.( First one)
#indianhistorypictures
#பிரணாப்முகர்ஜி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-08-2017
No comments:
Post a Comment