Friday, August 25, 2017

மதுரை சத்தியமூர்த்தி வாசகர் சாலை. நெஞ்சுக்குள் எழுந்த நினைவலைகள்.









நான் மதுரையில் தங்கிருந்தால், மதுரை மேல மாசி வீதி, கோவிலை சுற்றி  உள்ள நான்கு சித்திரை வீதி மற்றும் திண்டுக்கல் சாலை(போஸ் ரோடு) வழியாக  நடைபயிற்சி செய்வதுண்டு. மேல சித்திர வீதியும், வடக்கு சித்திர வீதியும்  சந்திக்கும் முனையில் தீரர் சத்தியமூர்த்தி வாசகர் சாலை என்ற பழைய கட்டிடம் உள்ளது. 

இன்றைக்கும் அந்த கட்டிடம் புராதான சின்னம் போன்று பாதுகாப்புடன் அப்படியே  இருக்கின்றது.  அந்த கட்டிட்டத்தின் பக்கத்தில்கோபு அய்யங்கார் சைவஉணவுகடைஇருக்கும்.வெள்ளையப்பம்,
மணமான காஃபியும்  அருமையான உணவுவகை களுக்கும் அக்கடை ப்ரசித்தம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு  பின்னர்   இன்று
(25/8/2017) உள்ளே சென்றேன். 

நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட மிகப்பழமையான கட்டிடம் தான் ஆனாலும் புதுப்பித்தல் என பழமைகளை காவு கொடுக்காமல் மர ஏணி மற்றும் தளவாடங்கள் அப்படியே காப்பாற்றப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மரப்படிகட்டுகளும்  எத்தனை தலைவர்களை உயர்த்தி இருக்கும் தெரியுமா? உயர்த்திய அந்த படிகட்டுகளே பலருக்கு நினைவு சின்னங்கள் தான்.அந்த ஏணியில் ஏற கயிறு தொங்கும்.இந்த காட்சிகளை பார்க்கும் போது நெஞ்சினில் சில நினைவுகள் நிழற்படங்களாக மின்னி மறைந்தன. நினைவுகள் நிரந்தரமாக்க இருக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் இதனை  பதிவு செய்கின்றேன். 

நாடாளுமன்றம்,  சட்டமன்றம் சந்திக்காத பல தலைவர்களை தன்னகத்தே வைத்திருந்த சந்தித்த கட்டிடம் இது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்பொதுச்செயலாளராகவும்,
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராக ( மதுரை, தேனி, திண்டுக்கல்) பழ.நெடுமாறன் இருந்த போது ஒருங்கிணைந்த  மாவட்டத்தின்  மைய  அலுவலகமாக செயல்பட்டது.  சுதேசி மித்திரன், தினமணி, ஆங்கில செய்தித்தாள் ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய நாளேடுகளை இங்கு வந்து ஆதியில் 1930-40களில் வாசித்தோர் மதுரை வாசிகள பலர். 

அங்கே வந்து சென்றவர்கள் பட்டியலைப் பார்த்தால் கட்டிடத்தின் சிறப்பு  உங்களுக்கும் புரியும். 

உத்தமர் காந்தி வந்த சென்ற இடம்.
முன்னாள் பிரதமர்கள்  நேரு,  இந்திராகாந்தி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் வந்த போது இந்த கட்டிடத்திற்கு வந்து சென்றதாக தகவல். 

பால கங்காதர திலகர் வந்து சென்ற தகவல் உண்டு.  சிறிய வினாயகர் அங்கு கோவிலும் உண்டு. வினாயகருக்கும் திலகருக்கும் நெருக்கம் உண்டு. வேறொரு பதிவில் சொல்கின்றேன். கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்கள் மதுரை வந்தால் இங்கு வராமல் போக மாட்டாராம். 

காமராஜர் ஆரம்ப காலத்தில் இங்கு தங்கி பனியற்றியதுண்டு

கதர் சுமந்து வந்த தந்தை பெரியாரை இந்தக் கட்டிடம் பெருமையுடன் சுமந்த வரலாறு உண்டு. முன்னால் முதல்வர் குமாரசாமி ராஜா வந்து சென்றுள்ளார். 

'சிவம் பேசினால் சவம் எழும்' என்ற வாக்கியத்திற்கு சொந்தகாரர் , 
தேச பக்த கனலை மூட்டிய சிவா ( சுப்பையா என்பது இயற்பெயர்) அவர்கள் வந்து சென்ற வரலாறு  தற்பெருமைக்கு பயந்து  ஒட்டடைக்குள் ஒலித்து  வைத்திருக்கின்றது இக்கட்டிடம். சத்தியமூர்த்தி, முதுபெரும் தியாகி சோமையாஜுலு, தமிழ்வேள் பி.டி.இராஜன், எளிமையின் சின்னம் கக்கன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு, தேனி என்.ஆர்.தியாகராஜன், மதுரை ஜோசப், காந்தியின் ஆலோசகர் -பொருளாதர நிபுணர் ஜோசப் குமரப்பா, கோவை அய்யாக்கண்ணு, தினமணி ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம், நாவலர் சோமசுந்தர பாரதி, சுத்தானந்தபாரதி, மதுரை தியாகி சிதம்பரம் முதலியார் போன்ற பலர் இன்றைய இளம் தலை
முறையினர் அறியாத பல பிரபலங்கள் வந்து தங்கிய கட்டிடம்.  

ஒடுக்கப்பட்ட மக்களும்ஆலயப்பிரவேசம் செய்யவேண்டும் என வைத்தியநாதய்யர்,
கக்கன் இங்கிருந்து ஆயுத்த பனிகளை
மேற்கொண்டனர் .

தமிழ் படைப்பாளி தி.சு.செல்லப்பா புகழ்தேடி தந்த 'சுந்தந்திர தாகம்'எனும் மூன்று தொகுப்புகளிலும் இக்கட்டிடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 

கவிஞர் கண்ணதாசன், படைப்பாளி நா.பார்த்தசாரதி இங்கு வருவது உண்டு. 1972 ல் அங்கு ஜெயகாந்தனை சந்தித்த நினைவும் உண்டு. 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், ஈழ தலைவர் அமிர்தலிங்கம்,
விவசாயகளின் தலைவர் நாராயணசாமி நாயுடு ஆகியோர் வந்துள்ளனர். 

1986ஆம் ஆண்டு டெசோ அமைப்பு மாநாடு  நடத்திய சமயம், அந்த அலுவலகம் வந்த திமுகவின் தென்
மண்டல அமைப்பு செயலாளர், சிறுகதை மன்னர்  எஸ்.எஸ்.தென்னரசு அவர்களை நான் தான் அலுவலகத்தின் முதல்தளத்திற்கு அழைத்து சென்றேன். இந்த கயிறை பிடித்துக் கொண்டு மேலே வர கஷ்டமாக இருக்கே. நீங்க சின்னப்பசங்க ,எளிதாகஏறிவிடுகின்றீர்கள் என சிரித்தவாறு கூறியது நினைவில் உள்ளது. 

இந்த கட்டிடத்திற்கும் எனக்கும் உள்ள உறவையும் சொல்வது அடியேனுக்கும் மகிழ்ச்சியானது என்பதால் சிலவற்றை மட்டும் சொல்கின்றேன்.

1972ல் அரசியலில் ஆர்வத்தில் நான் முதன்முதலாக நுழைந்த அரசியல் கட்சி அலுவலகம் இது தான். சட்டக்கல்லூரியில் படித்த போது கிராமத்தில் இருந்து மதுரை வந்து விடுவேன், மதுரையில் இருந்து திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் பயணம் மேற்கொண்டு சென்னை செல்வேன்.  பெரும்பாலும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் பயணிப்பது வழக்கம். பயண நேரம் சற்று குறைவு. இந்த இரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்ய இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த நண்பர்கள் உதவி செய்வார்கள்.  இங்கு வரும் போதெல்லாம்  கோபு அய்யங்கார்கடையில் பஞ்சுபோன்ற, மல்லிகைப்பூ போன்ற இட்லி என்பார்களே அப்படிப்பட்ட இட்லியும், காஃபியும் தவறாமல் சாப்பிடுவது வழக்கம். இது குறித்து  என் பிளாக்கரில் பதிவு செய்திருக்கின்றேன். 
நடிகர் விஜயகாந்த் அவர்களின் தந்தை அழகிரிசாமி மதுரை நகரமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடன் எனக்கு பழக்கம் அங்கிருந்துதான் ஏற்பட்டது.கமல் தந்தையார் பரமக்குடி வக்கில் சீனிவாசன் இங்கே வருவதும்யுன்டு.

மறைந்த சின்னக்குத்தூசி, அன்று
திருவாரூர் தியாகராஜன்  மதுரையில் நெடுமாறனின் செய்தி ஏட்டில்
வேலையில் இருந்து போது இங்கு இருப்பார்,

இங்கே இன்னொரு கூடுதல் தகவலை குறிப்பிட வேண்டும். இதே வடக்கு சித்திர வீதியில் " கோபாலகிருஷ்ண கோன்" எனும் பழமை வாய்ந்த பதிப்பகமும் அப்படியே பழமை மாறாமல்  உள்ளது. இந்த பதிப்பகத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.  மதுரை பேரகராதியை இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டது அவர்களின் சாதனை எனப்படுகின்றது.

எனது நினைவுக்கு வந்த பெருந்தகை பெயர்களையும், யாருடைய பெயரும் விடுபட்டு விடக்க்கூடாது என்பதால் கால அவகாசம் எடுத்து நினைவுபடுத்தி சில பெயர்களையும்  இப்பதிவில்
குறிப்பிட்டுள்ளேன்.பழையநிகழ்வுகள்,
யாருடைய பெயராவது விடுபட்டு
இருப்பின் அதற்காக  வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றேன். 
#மதுரை
#சத்தியமூர்த்திவாசகர்சாலை
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
25-08-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...