அரசியலில் வெற்றி , தோல்வி என்பது தேர்தலில் வெற்றி தோல்வி என்றே கருதுகின்றார்கள். ஆனால் அப்படி இல்லை என்பது தான் உண்மை. அரசியல் மக்கள், மண் சார்ந்த அணுகுமுறையாகும். தனிநபர் நலன், ஆதாயப் போக்கு, விளம்பரப்போக்கு என்ற சூழலில் அரசியலுடைய கண்ணியம் திசைமாறிவிட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தான் அரசியல் தலைமைக்கு உரியவர்கள் என்ற மனப்போக்கு ஒரு தவறான பிம்பத்தை மக்களிடம் காட்டிவிட்டது. ஆளுமை கொண்டவர்கள் தேர்தலில் தோற்றால் அவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்று போலியான போக்கும் உள்ளது. மக்களுக்கும் மண்ணுக்கும் பொது வாழ்வில் என்ன செய்தோம், சமுதாய சிக்கல்களை கலைந்தோம் என்று சிந்திப்பவர்கள் மட்டுமே அரசியல் களத்தில் உள்ள உண்மையான போராளிகள்.
தேர்தலை மனதில் வைத்து எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று உழைப்பில்லாமல் பதவிகளையே குறியாக கொண்டிருப்பவர்கள் அரசியல் வியாபாரிகள்தான்.
தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சருக்கு நம் நீராதாரங்கள் குறித்து எதுவும் தெரிவதில்லை. எத்தனை ஏரி, ஆறு, குளம், பாசனமுறைகள் என்னென்ன என்பதும் தெரியாது. இன்று தமிழகத்தின் அமைச்சர்களுக்கு தமிழ்நாட்டின் பிரச்சனைகள் குறித்தும்,பொருளாதாரம் குறித்தும், வரலாற்று ரீதியாக புரிதலும் கிடையாது. இதை மக்களிடம் விளக்கும் சிந்தனை படைத்தவர்களா?
இவர்கள் பெற்றது தேர்தல் வெற்றி; அரசியல் வெற்றி அல்ல.
அரசியல் வெற்றி என்பது பொதுநல இலட்சியம் கொண்டது.
உதாரணமாக பெரியார் அவர்களை சொல்லலாம். நேதாஜி அவர்களை குறிப்பிடலாம்.
விவசாய முதல்வர், சமூக நீதிக்காவலர், தமிழில் கலைக் களஞ்சியத்தை கொண்டுவந்தவர்,தமிழ்போதனாமொழிக்கு குரல் கொடுத்த ஊழலற்ற அரசியல் அடையாளம் கொண்ட ஓமந்தூரார் அவர்களை முதலமைச்சர் பொறுப்பை தொடர முடியாமல் விரட்டவும் செய்தனர். ஆனாலும் அவர் அரசியலில் வெற்றியாளர் என்பதை வரலாறு இன்றளவும் பறைசாற்றுகின்றது.
தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று தொழிற்சங்கத்தையும்
சுதேசகப்பல்நிறுவனத்தைஆங்கிலேயருக்கு எதிராக நிறுவிய வ.உ.சி., இறுதி நாட்களில்என்ணெயும்,பருத்திக்கொட்டையும்,பிண்ணாக்கையும் விற்று கிழிந்த அங்கியோடு கோவில்பட்டியில் காலில்செருப்பில்லாமல் வக்கீல் தொழில் தான் அவருக்கு
இறுதி நாட்களில் கைகொடுத்தது.
சுதந்திர போராட்ட காலம் மட்டுமில்லாமல் காமராஜருடைய அரசியலுக்கு உதவிய இராஜாஜிக்கு தோழராகவும் வ.உ.சியுடைய திருநெல்வேலி சதி வழக்கையும் நடத்திய செல்வந்தர் சேலம் வரதராஜ நாயுடுவின் இறுதி காலம் தன்னுடைய வாழ்க்கையை அன்றாடம் தள்ளுவதே ரணக்களமாக இருந்தது.
இன்றைக்கும் இதே நிலைமை தான் பலருக்கும் தொடருகிறது.
பல ஆங்கில எழுத்துக்களின் பெயர்களையும், தலைப்பெழுத்தையும் போட்டுக் கொண்டு எந்தவிதமான அரசியல் புரிதலும், உழைப்பும் இல்லாமல் ஆட்சியில் அமர நினைக்கும் வணிக பேர அரசியல் வேறு. மக்கள் மண் சார்ந்த அரசியல் வேறு. பிம்பங்களும் போலிகளும் காட்சிப் பிழைகள் தான்.
தகுதியே தடை;தங்களுடைய நிலைப்பாட்டில் நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், போர் குணமான செயற்பாட்டாளர்கள் தான் அரசியலில் ஆதர்ச புருசர்கள்.
இந்த பிம்ப ஞானசூனியங்களுக்கு தேசிய கொடி, வெட்டி பந்தாக்கள் எல்லாம் வரும் போகும். நிரந்தரம் கிடையாது.இதையேஅன்டிகிடப்பவர்கள்
வருமானப் பொருள் வாதத்தை நம்புபவர்கள், மந்திரியாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால், நேர்மையான மானிடராக இருக்க முடியாது.
இன்று மந்திரி நாளை எந்திரி என்பதெல்லாம் அரசியல் ஆளுமைப் பட்டியலில் இடம்பெறாது. பேரம், பதவி வெறி, கையை கட்டி, கூனிக்குருவி, காலை நக்கும் இயல்புள்ளவர்கள், மானங்கெட்டவர்கள் தானே.
இனியும் தேர்தல் வெற்றி தான் அரசியல் வெற்றி என சொல்வார்களேயானால் புரிதல் இல்லாமல் முதிர்ச்சியற்றவர்கள்.
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
#politics
#public_life
#அரசியல்
#பொது_வாழ்வு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-08-2017
No comments:
Post a Comment