Sunday, August 6, 2017

விவசாயிகள் தற்கொலையை வறட்சியோடு ஒப்பிடக்கூடாது என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.




------------------------------------------------

விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையை மாநில அரசு காரணம் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீரின்றி பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கு வாங்கிய கடன் சுமையாலும் பல விவசாயிகள் சேதனைப்பட்டு தற்கொலை செய்து கொண்டனர். தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி 82 விவசாயிகள் மட்டுமே இறந்ததாகவும் அவர்ளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரன நிதி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசோ தமிழக விவசாயிகள் பிரச்சனையை முழுவதுமாக கண்டு கொள்ளாமல் மெத்தனம் காட்டி வந்தது. இதை கண்டித்து தமிழக விவசாயிகள் மாநிலம் முதல் டெல்லி வரை தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விவசாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவாயிகள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவது அதிர்ச்சி அளிப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தது. 
அப்போது தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது. அதில், தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு வறட்சி காரணமில்லை அவர்களின் சொந்த காரணங்களினால் தான் உயிரிழந்தததாக தெரிவித்தனர். இதனை கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக கண்டித்து, உண்மையான விளக்கத்தை தருமாறு உத்தவிட்டது. பிறகு மீண்டும் வழக்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வில்கர் மற்றும் சந்தான கவுடர் ஆகியோர் முன்னிலையில் விசாரனைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பாக மத்திய அரசின் கூடுதல் ஜெனரல் நரசிம்மா விளக்கமளித்தார். அதில், வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்ட பிறகு தமிழக மக்களின் நலன் கருதி அரசு சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை, உழவர் சந்தை போன்ற பல்வேறு நல்ல திட்டங்கள் நடைமுறைப்படத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் "இந்த காரணங்கள் தான் தமிழக அரசு சார்பாக பலமுறை தெரிவிக்கப்பட்டது. அதனால் இதுவரை தமிழக விவசாயிகளின் நலன்கள் மற்றும் அவர்களின் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சர்பில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை தமிழக வேளாண் சட்டத்துறை அலுவலர்கள் மூலம் எழுத்து பூர்வமாக கொண்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதைத்தவிர விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் வெகுவிரைவில் அரசு சார்ந்த இணையதள்த்தில் கண்டிப்பாக வெளியிடப்பட்ட வேண்டும்" எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் கண்ட அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறுகையில், "தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து வாதங்களை முன்வைக்க இரண்டு நாள் அவகாசம் வேண்டும்" என தெரிவித்தார். இதேப்போ தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் ஜெனரல் நரசிம்மாவும் வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என நீதிபதிகளிடம் தெரிவித்தார். 

இதுகுறித்து நீதிபதிகள் உத்தரவிடுகையில், "தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொள்வது என்பது ஏற்க முடியாத மற்றும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். மேலும் விவாயிகளின் தற்கொலைக்கு மாநிலத்தில் நிலவும் வறட்சியையும், தண்ணீர் பிரச்சனையும் தமிழக அரசு ஒப்பிட்டு கூறக்கூடாது. உயிரிழப்பு வேறு, மாநில பிரச்சனைகள் வேறு. அதனால் விவசாயிகளின் தற்கொலைக்கு உண்மை காரணத்தை கண்டறிய இதுவரை தவறி வந்த தமிழக அரசு இனி அதற்குண்டான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு குறித்த அடுத்த விசாரனையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர்.

#வறட்சி
#விவசாயிகள்தற்கொலை
#விவசாயிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-08-2017

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...