Saturday, June 22, 2019

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே 200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன், கொல்லங்குடி காளிராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவில்பட்டி அருகே உள்ள குளத்தில் ஒரு கல்வெட்டு இருந்ததை ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. குளம், கண்மாய்களில் உள்ள நீரை நிலங்களுக்கு திறந்துவிடுவதற்காக அமைக்கப்படும் அமைப்பும் மடை என்பதாகும். இது உறுதியான கருங்கல்லினால் அமைக்கப்படும் போது நீண்டநாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். மழைக்காலங்களில் நீர்நிலைகளில் உள்ள நீரை தேவையின்றி வெளிவராத வகையில் மூடுவதற்கும், இந்த மடைகள் உதவுகின்றன.
முழுவதும் கல்லினால் அமைக்கப்படும் மடைகளை கல்மடை என்று அழைப்பார்கள். அப்படி கிராமத்திலுள்ள குளத்தின் கரையில் உள்ள ஒரு மடையில் 10 அடி உயரமுள்ள இரண்டு தூண்கள் உள்ளன. இதில் கிழக்கு பகுதியில் உள்ள தூணில் ஒரு பக்கத்தில் நாலரை அடி உயரத்திற்கு மொத்தம் 25 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டு எட்டயபுரம் சமஸ்தானத்தில் சேர்ந்த மன்னர் ராஜராஜ வாணியர் ஜெகவீரராம எட்டப்பராசர் முடுக்குமீண்டான்பட்டியில் உள்ள தன் மாப்பிள்ளைக்கு இந்த ஊரை தானமாக கொடுத்து இந்த ஊர் குளத்தில் ஒரு கல் மடையை செய்து வைத்த செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
கல்வெட்டு முழுவதும் தமிழில் இருந்தாலும் சோமவாரமு, உத்தர நட்சத்திரமு ஆகிய தெலுங்கு சொற்களும் உள்ளன. மேலும் மன்னரை அய்யர் எனக் சேர்த்து அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது. ஆனால் இந்த கல்வெட்டில் அய்யர் என பன்மை விகுதியில் மன்னர் குறிப்பிடப்பட்டுள்ளார். இதனால் மன்னரை பற்றிய பொதுவான தகவல்களை அறிய முடியவில்லை. மன்னரின் மாப்பிள்ளை இந்த ஊரை சேர்ந்தவராக இருக்கலாம். இந்த கல்மடை உத்திர நட்சத்திரத்தில், சுபதினத்தில் நடப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு 5021 என ஆண்டு தொடங்கும் பெருமாள் துணை என்று முடிகிறது. இதில் 5021லேயே விய ஆண்டு ஆனி மாதம் 28ம் நாள் திங்கட்கிழமை என வரும் ஆண்டு, கலியுகம், சக ஆண்டு எதிலும் பொருந்தவில்லை. எனவே இதில் உள்ள விய என்னும் தமிழ் ஆண்டு, மாதம், கிழமை மற்றும் எழுத்தமைப்பு கொண்டு இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1826 என கணிக்க முடிகிறது. இந்த கல்வெட்டு உருவான காலத்தில் தமிழ்நாட்டில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நடந்துவந்தது.
ஆனால் ஆங்கிலேயரின் ஆண்டு உள்ளிட்ட விவரத்தை இந்த கல்வெட்டில் காண முடியவில்லை. இதில் தமிழர்களையும் தமிழையும் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அமைந்த கல்மடை மூலம் எட்டையபுரம் சமஸ்தானத்தின் எல்லை முடுக்குமீண்டான்பட்டி வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-06-2019.

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...